தற்போது ஈராக்கில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?
அய்எஸ்அய்எஸ் (Islamic State of Iraq and Syria) எனும் அமைப்பு, பாக்தாத்திற்கு வடமேற்கே உள்ள மோசுல் நகரத்தைப் பிடித்துவிட்டது. சிரிய எல்லைப்பகுதியில் உள்ள அன்பர் மாகாணத்தின் தலைநகர் திக்ரித்-தையும் பிடித்துவிட்டது. பகுபா, பைஜி நகரங்களில் கடும் சண்டை நடைபெறுகிறது. ஈராக்கியர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், அபுபக்கர் அல்-பாக்தாதி என்று புனைபெயர் சூட்டிக்கொண்ட, இப்ராஹிம் அவ்வாத் இப்ராஹிம் அலி அல்-பட்ரி தலைமையில், மேற்கு ஈராக்கிலிருந்து, வடஆப்பிரிக்கா வரை இஸ்லாமியப் பேரரசை நிறுவப் போகிறோம் என்று கூறிக்கொண்டே இந்தச் சண்டையில் இறங்கியுள்ளது, அய்எஸ்அய்எஸ்; ஆயுதங்கள் முழுவதும் அமெரிக்காவும், அந்நாட்டு ஆயுதக் கம்பெனிகளும் வழங்கியவை.
மற்றொருபுறம் ஈராக் பிரதமர் நூரி அல்-மாலிக்கிற்கு அந்நாட்டு அமைச்சரவை முழு அதிகாரம் வழங்கியுள்ளது. ஈராக்கின் அதிகாரப்பூர்வ (அமெரிக்க வளர்ப்பு) ராணுவம் முழுவீச்சில் சண்டையில் இறங்கியுள்ளது. அவசர அவசரமாக படைகளுக்கு ஆளெடுப்பு நடைபெறுகிறது. பழங்குடியின இளைஞர்களும் ஆயுதங்களுடன் தயாராகிவிட்டனர். அந்த ஆயுதங்களும் அமெரிக்கா வழங்கியவையே.
ஆக, மேலும் ஒரு பேரழிவில் தள்ளிவிடக்கூடிய உள்நாட்டுப் போர் என்ற படுகுழிக்குள் மீண்டும் ஈராக் விழுந்து கொண்டிருக்கிறது.
2003ஆம் ஆண்டில் அமெரிக்கா மேற்கொண்ட படையெடுப்பின் அவசியமான தொடர்ச்சிதான் இந்தப் பேரபாயம்…
இந்தியாவிற்கு என்ன பாதிப்பு?
ஓபெக் (OPEC – Organization of Petroleum Exporting Countries) எனப்படும், பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் 12 நாடுகளின் கூட்டமைப்பில், ஈராக் இரண்டாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடு. நாள் ஒன்றுக்கு 35 லட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஈராக்கில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு உலக அளவில் கடுமையான பொருளாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. மிகமுக்கியமாக கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயரக்கூடிய அபாயம் உள்ளது. இந்தியா ஆண்டுக்கு 2.5 கோடி டன் கச்சா எண்ணெயை ஈராக்கிலிருந்து இறக்குமதி செய்கிறது என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்தியாவின் பொருளாதாரத்தின் மீதும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், உள்நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயரும். எரிபொருள் விலை உயர்ந்தால், சரக்குப்போக்குவரத்திற்கான செலவு அதிகரித்து, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும். இதனால் பணவீக்கம் அதிகரித்து, அதைக் கட்டுப்படுத்துவதற்காக, வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு தொழில்துறை வளர்ச்சியும் உற்பத்தியும் முடங்கும். உற்பத்தி முடங்கினால், ஏற்றுமதி குறைந்து, வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து, அன்னியச் செலாவணி கையிருப்பில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்குப் பணம் செலுத்த வேண்டும். அன்னியச் செலாவணி கையிருப்புக் குறைதல், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைதல் என பொருளாதாரம் நச்சுச்சுழலில் சிக்கிக் கொள்ளும். இது நேரடியாக பொருளாதாரத்தின் மீது ஏற்படும் பாதிப்பு. (இப்படிப்பட்ட பாதிப்பை, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு அனுபவித்தது. தற்போது பா.ஜ.க. அரசும் அதே நெருக்கடியைச் சந்திக்க வாய்ப்பு உண்டு).
வடஆப்பிரிக்கா, -மேற்கு ஆசியா, -மத்தியக் கிழக்கு என்ற எண்ணெய் வளம் கொண்ட இந்தப் புவிப்பரப்பைத்தான் கச்சா எண்ணெய்க்காக (பெட்ரோலியம்) இந்தியா சார்ந்திருக்கிறது. இந்தியாவின் எண்ணெய்த் தேவையில் 70 விழுக்காடு இங்கிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. அதுமட்டுமல்ல, இந்தப் புவிப்பரப்பில் அமைந்துள்ள நாடுகளில் சுமார் 70 லட்சம் இந்தியர்கள் பணி, தொழில், -வர்த்தக நோக்கங்களின் அடிப்படையில் வாழ்கின்றனர். இதில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இவர்கள் ஆண்டுதோறும் 3.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் (65 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அன்னியச் செலாவணி ஈட்டித் தருகின்றனர். ஆக வடஆப்பிரிக்கா, -மேற்கு ஆசியா, -மத்தியக் கிழக்குப் பகுதியில் ஏற்படக்கூடிய அரசியல் குழப்பம் அன்னியச் செலாவணி வடிவில் பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், ஏராளமானோர் வேலையிழந்து தாயகம் திரும்பும் நிலை ஏற்படும்.
ஈராக்கின் மோசுல் நகரத்தில் 40 இந்தியத் தொழிலாளர்களும், திக்ரித் நகரில் 46 இந்தியச் செவிலியர்களும் (தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 6 பேர்) சிக்கிக்கொண்டது ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. உண்மையில், ஈராக்கில் தற்போது 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் இந்தியர்கள் வரை உள்ளனர். உள்நாட்டுப் போர் முழுவீச்சில் முற்றும்போது இவர்கள் அனைவரும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
வடஆப்பிரிக்கா, -மேற்கு ஆசியா, -மத்தியக் கிழக்கு என்ற புவிப்பரப்போடு, இந்தியாவின் நலன்கள் இவ்வளவு தூரம் பிணைக்கப்பட்டிருந்தும், அந்த நாடுகள் இந்தியாவின் மீது பாரம்பரியமாக மிகுந்த நேசம் பாராட்டக்கூடிய நாடுகள் என்றபோதிலும், அமெரிக்கச்சார்பு வெளியுறவுக் கொள்கைகளால் இந்தியா படிப்படியாக நட்புறவை இழந்து வருகிறது என்பதும் வேதனையான உண்மை.
– ப.ரகுமான்