தொழில்நுட்பத்தில் தொலைந்த வாழ்க்கை

ஆகஸ்ட் 16-31

இப்போதெல்லாம் குழந்தைகள் பிறக்கும்போதே கையில் செல்போனுடன் பிறக்கின்றன என்கிற அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து யாரும் செய்தித் தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தும் அளவிற்கு எளிதாகக் கிடைக்கிறது. அதே நேரத்தில் அந்தக் கருவிகளை நாம் இயக்குகிறோமா அல்லது அந்தக் கருவிகள் நம்மை இயக்குகின்றனவா என்கிற அளவிற்கு எந்திரங்களின் அடிமைகளாக மனிதர்கள் மாறிவருகின்றனர்.

 

-1990களின் பிற்பகுதியில் பிறந்தவர்கள் எல்லோரும் இயந்திரத்தின் வழியாகவே எதையும் செய்யப் பழகியவர்களாக இருக்கிறார்கள். சிறிய வேலையைக்கூட – வீட்டில் துவையல் அரைப்பது, புளி கரைப்பது, வீடு சுத்தம் செய்வது என ஆரம்பித்து, அருகில் உள்ள கடைக்குப் போகவும் மோட்டார் சைக்கிள், சிறிய கணக்குப் போடவும் கால்குலேட்டர், கணினி, காற்று வாங்க மின் விசிறி, ஏ.சி., மாடியேற லிஃப்ட் என ஒவ்வொரு அசைவும் எந்திரங்களின் உதவியால் மட்டுமே செய்ய முடியும் என்கிற அளவிற்கு மாறிவிட்டிருக்கிறது. அதிலும் மின்னணு எந்திரங்களான கணினி, தொலைக்காட்சி, டேப்லெட் எனப்படும் சிறிய கணினி, டச் ஸ்க்ரீன் போன் ஆகியவை நம்முடைய வாழ்க்கையைப் பெருமளவிற்குக் கட்டுப்படுத்தும் இயந்திரங்களாகிவிட்டது தெளிவாகத்  தெரிகிறது.

 

தொலைக்காட்சிகளில் தொலைத்த நேரம் போக இணையதளம், சமூக வலைத்தளம், செல்பேசி அரட்டை ஆகியவற்றில் மிக அதிகமான நேரத்தைச் செலவிடுகிறோம். இந்த இயந்திரங்களே அதிக நேரத்தை விழுங்கி விடுவதால் மற்ற வேலைகளுக்குத் தேவையான நேரத்தை ஒதுக்க முடிவதில்லை. ஒவ்வொரு வேலைக்கும் அந்த வேலையைச் சரியாகவும் பதற்றமில்லாமலும் செய்து முடிக்க குறிப்பிட்ட நேரத்தைக் கண்டிப்பாக ஒதுக்க வேண்டும். அதற்கு, தரமான நேரம் (quality time) என்று பெயர்.

எல்லாவற்றுக்கும் இரண்டு பக்க நியாயங்கள் உண்டு. மின்னணுச் சாதனங்கள் மூலமாக செய்திப் பரிமாற்றம் நடைபெறுவதால் நாடுவிட்டு நாடு கூட விரைவாக, சிக்கனமாக,  செய்தி சென்றடையும் என்பது உண்மை என்றாலும் எப்போதும் அப்படியே இருந்துவிட முடியாது. நேருக்கு நேர் சந்தித்து செய்தியைப் பரிமாறிக் கொள்ளும்போது செய்தியின் அழுத்தம் நம் உடல், முகபாவனைகள் மூலம் வெளிப்படும். அதற்கு விளைவும் அழுத்தமானதாக இருக்கும். இன்னொரு பக்கம் இந்த செல்பேசி, இணையம் ஆகியவற்றைப் பயன்படுத்திய பிறகு அவற்றை அணைத்து வைக்கக்கூட நமக்கு உரிமை இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஏன்  சுவிச் ஆஃப் செய்தாய் என்ற கேள்வியை எதிர்கொள்ள வேண்டும். 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட புள்ளிவிவரக் கணக்கெடுப்பில், ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பணியாளர்கள் ஒரு நாளைக்கு 13.5 மணிநேரம் பணியிடத்துடன் தொடர்பில் இருக்க வேண்டியிருக்கிறது. வார ஓய்வு நாட்களிலும் 5 மணிநேரம் பணியிடத்துடன் தொடர்பு கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். (கட்டுரையாளருக்கும் அதே நிலைதான்) குட் டெக்னாலஜி என்ற மொபைல் மென்பொருள் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் 68% பணியாளர்கள் காலை 8 மணிக்குள் இ_மெயிலைத் திறக்க வேண்டும்.

அதில் 50% நபர்கள் படுக்கையிலேயே அதைச் செய்ய வேண்டும். இரவு உணவு மேசையில் கூட நிறுவனப் பணிகளைச் செய்து கொண்டிருப்பவர்கள் 38% நபர்கள். அமெரிக்க உளவியல் கழகம்  நடத்திய ஆய்வில் 44% பணியாளர்கள் கோடை விடுமுறையிலும் நிறுவனத்துடன் இணையத் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்களில் பத்தில் ஒருவர் ஒரு மணிக்கொரு முறை தொடர்பு கொள்கிறார்கள். ஓய்வு நேரத்திலும் நிறுவன அதிகாரிகளுடனும் மற்ற பணியாளர்களுடனும் தொடர்பு கொண்டு செய்தி பரிமாறிக் கொள்வதும் வேலையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இது நம்முடைய சொந்த வாழ்க்கையிலும் பணிச் சுமை ஆக்கிரமித்துள்ளதை உணர்த்துகிறது. படைப்பாக்கத் தலைவர்களுக்கான மய்யம் என்ற நிறுவனம் நடத்திய சர்வேயில், ஸ்மார்ட் போன் பயன்படுத்தாத பணியாளர்கள் நாள் முழுவதும் மின்னணுக் கருவிகள் மூலம் தொடர்பிலிருப்பவர்கள் செய்யும் அதே அளவு வேலையை இயல்பான வேலை நேரத்திலேயே முடித்து விடுகிறார்களாம்.

இது முதலாளிகளும் மேலாளர்களும் பணியாளர்களின் சொந்த நேரத்தைத் திருடுவதாகத் தெரியலாம். ஆனால் வேறொரு நிறுவனத்தின் ஆய்வின்படி, உயர் நிலையில் உள்ளவர்களும் பாதிக்கத்தான் படுகிறார்கள்.  சில நிறுவனங்கள் முழுநேர வேலை என்றால் 24/7 எனப்படுகின்ற வாரத்தின் ஏழு நாளும் இருபத்துநான்கு மணி நேரமும் இணைப்பில் இருக்க வேண்டும் என்றே உறுதிப்படுத்துகின்றன.  இதனால் பணியாளர்களுக்கு ஏற்படும் நச்சுப் பணி நோய்க்குறி (ஷீஜ்வீநீ ஷ்ஷீக்ஷீளீ ஹ்ஸீபீக்ஷீஷீனீமீ) என்ற பாதிப்பிலிருந்து மீட்க ஒரே வழி அளவான வேலை நேரம். வேலை/குடும்பம் என்கிற விகிதம் சரியாக இருந்தால், பணியாளர்கள்  வேலையில் இயல்பாகவும் புத்தாக்கத்துடனும் வேலை செய்வதாகவும் உற்பத்தித் திறன் அதிகரிப்பதாகவும் தீணீஸீபீஷ்வீலீ என்ற நிறுவனத்தின் அதிகாரி டேவிட் மார்கன் தெரிவிக்கிறார். எல்லா நிறுவன அதிகாரிகளும் இது போன்ற சோதனைகளையெல்லாம் முயற்சிக்க மாட்டார்கள். நமக்குக் கிடைத்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள் என்று முடிந்த அளவிற்குப் பிழிந்து எடுத்துவிடுவார்கள். இந்தத் தொழில்நுட்பக் கொடுங்கோன்மையிலிருந்து உங்களை நீங்களேதான் விடுவித்துக் கொள்ள வேண்டும்.

1. உண்மையைச் சொல்லுங்கள்: மின்னணுச் சாதனங்கள்  உங்களுடைய வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்திய மாற்றங்களினால் உண்டான நன்மை தீமை என்ன? இதனால் உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லையென்றால் மேற்கொண்டு இதைப் படிக்கத் தேவையில்லை. ஆனால் பாதிப்புகள் உண்டு என்றால் அதை வெளிப்படையாகச் சொல்லுங்கள். மின்னணுச் சாதனங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க முயற்சி  செய்யுங்கள்.

2. தயக்கமின்றிச் சொல்லுங்கள்: மின்னணுச் சாதனங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வேலை செய்வதால் உங்களுக்கு ஏற்படும் உடல்/மனம் சார்ந்த பிரச்சனைகளை உங்கள் அதிகாரிகளுடன் தயக்கமின்றிப் பேசுங்கள். உங்கள் வேலை நேரத்தை வரையறுக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நீங்கள் பணிபுரிய முடியும் என்பதையும் புரிய வையுங்கள். நீங்கள் அதிகாலையிலோ, விடுமுறை நாளிலோ தொடர்பில் இருக்க இயலாது என்று தெரிவியுங்கள்.

3. மின்னணுச் சாதனங்களுக்கான இடங்கள்: நம்மூரில் செருப்பை விடுகின்ற இடத்தில் விடவேண்டும் என்று சொல்வது போல் தொடர்புச் சாதனங்களையும் தொலைவாக வைக்க வேண்டும். உங்கள் வீடு உங்கள் அதிகாரத்திற்குட்பட்ட இடம். படுக்கையறை, உணவு மேசை, அந்தரங்க உரையாடல் நடக்குமிடம் போன்ற இடங்களில் தொடர்புச் சாதனங்களை அணைத்து வையுங்கள். எவ்வளவு குறைவாக மின்னணுக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது உங்கள் சுதந்திரம்.

4. தொடர்பு நேரத்தைத் தெரிவியுங்கள்: அடிக்கடி உங்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய முக்கிய நபர்களிடம் உங்களை  எந்த நேரத்திலெல்லாம் தொடர்பு கொள்ள முடியும் அல்லது முடியாது என்பதைத் தெரிவித்து விடுங்கள். இந்த முடிவு உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காகவே தவிர யாரையும் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் அல்ல என்பதைத் தெளிவுபடுத்துங்கள். அதே நேரத்தில் மிக அவசரமாகத்  தொடர்பு கொண்டே ஆகவேண்டிய நேரத்தில் எப்படித் தொடர்பு கொள்வது என்பதையும் சொல்லி விடுங்கள்.

5. நண்பர்களுடன் நேருக்கு நேர்: உங்கள் அன்புக்குரியவர்களுடன் மின்னணுச் சாதனங்கள் வழியாகத் தொடர்பு கொள்வதை விட நேருக்கு நேர் முகம் பார்த்துப் பேசும் நேரத்தை அதிகப்படுத்துங்கள். அது இருவருக்கும் மன நிறைவைத் தருவதோடு உணர்வுப் பிணைப்பை அதிகப்படுத்தும். அதை நீங்களே முந்திக் கொண்டு செயல்படுத்துங்கள்.

6. எடுத்துக்காட்டாக இருங்கள்: மின்னணுக் கருவிகளின் வலையில் சிக்கித் தவிக்கும் மக்களிடையே அதிலிருந்து விடுபட்ட மனிதர்களை எடுத்துக்காட்டுவது கடினம். கருவிகள் நம்மைச் சிறைப்படுத்துவது ஒருபுறம். போதை அடிமை போல்  நாமே அதில் விழுவது ஒருபுறம். இதிலிருந்து விடுபட்ட முன்மாதிரி மனிதராக நீங்களே இருங்கள்.

7. வளமுடன் இருங்கள்: உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும், பொழுதுபோக்கும், வேடிக்கை விருந்தாகும், புத்தொளியுண்டாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். முடிந்தவரை அதிலெல்லாம் மின்னணுக்  கருவிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

8. தொடர்பும் இணைப்பும்: அலுவலகமோ தனி வாழ்க்கையோ மின்னணுக் கருவிகளை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது. நேரடித் தொடர்பு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு மின்னணுக் கருவிகளின் வழியாகத் தொடர்பு கொள்வதும் முக்கியம். நேரடித் தொடர்பு கொள்வது கடினமாக உள்ள நபர்களிடம் கருவிகள் மூலமாகத் தொடர்பு கொள்ளுங்கள். அருகில் உள்ளவர்களுடன் பெரும்பாலும் நேரடித் தொடர்பை ஏற்படுத்துங்கள்.

கணிப்பொறி உலகில் அதைப் பற்றிய அறிவு இல்லாதவன்; அதைப் பயன்படுத்திக் கொள்ளாதவன், மூடன். அந்தப் பொறியில் சிக்கிக் கொண்டவன் இயந்திரங்களின் அடிமை. கருவிகளைத் திறமையாகப் பயன்படுத்திக் கொள்பவன் அறிவாளி. நாம் அறிவைப் பயன்படுத்துவோம்.

– க.அருள்மொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *