எது தமிழர் திருமணம்? (2)

ஆகஸ்ட் 16-31

நாளாம்! நாளாம்! திருநாளாம்!

– சு.அறிவுக்கரசு

பெண்ணுடன் உடல்உறவு கொள்வதற்கும் திருமணம் செய்து கொள்வதற்கும் தேவைப்பட்டால் பொய் சொல்வது குற்றமல்ல என்பது ஆரியர் பண்பாடு. ஆகவேதான் ஆயிரம் பொய் சொல்லியாவது கல்யாணம் செய் என்றே எழுதி வைத்திருக்கிறார்கள். இப்பேர்ப்பட்ட கேவலப் பண்பாடு தமிழர்க்கும் உடையதானது என்று ஆக்கிவைத்து விட்டார்கள். அவர்களது திருமண முறையையும் தமிழர் திருமணம் என்றாக்கி விட்டார்கள்.

வேங்கை மரம் பூக்கின்ற காலமாகிய இளவேனில் காலம்தான் மணம் செய்துகொள்ளச் சிறந்த காலம் என்கிறது வேங்கை தந்த வெற்பணி நன்னாள் என்கிற நற்றிணைப் பாடல் 369. அக்காலத்தே விடியற்காலைப் பொழுது நல்லதாம். திங்கள் ரோகினி நட்சத்திரத்துடன் சேர்ந்த நாளாக இருப்பது சிறப்பாம். இந்த நிபந்தனையை அகநானூறு பாடல் 86 கூறுகிறது. இவை எவையும் இன்று காணோம். கொங்குநாட்டு வேளாளர் சித்திரை மாதத்தில் திருமணம் நடத்துவது கிடையாது. பெரும்பாலோர் வைகாசி, ஆனி, ஆவணி மாதங்களில்தான் வைத்துக் கொள்கிறார்கள். பல்வேறு பார்ப்பனச் சடங்குகள் தமிழர் திருமணத்தில்  நுழைக்கப்பட்டன. அவை தமிழர் திருமணம் என்றே அழைக்கப்படுவதுதான் கொடுமையான விந்தை! மனுஸ்மிருதிப்படி 32 வயது ஆண் 12 வயதுப் பெண்ணை மணக்க வேண்டும். 24 வயது ஆண் 8 வயதுப் பெண்ணை மணக்க வேண்டும். இந்த வயதுக்குமுன் மணம் செய்து கொள்ள அவசரப்பட்டால், வேதம் ஓதல் முதலிய தர்ம காரியம் கெடும். அதனால் பின்பு துக்கப்படுவான் என்று மனுஸ்மிருதி 9_94 விதித்துள்ளது.

12 வயதுக்கு முன் பெண் திருமணம் சட்டப்படி பொ.ஆ.(கி.பி.) 1891இல் தடுக்கப்பட்டது. பொ.ஆ. 1925இல் பெண்ணின் மணவயது 13 ஆக்கப்பட்டது. 1929இல் வந்த சாரதா சட்டப்படி வயது 14ஆக உயர்த்தப்பட்டது. இதை ஏற்க மறுத்த பார்ப்பனத் தலைவர் சத்யமூர்த்தி என்பாரும் எம்.கே.ஆச்சார்யா என்பாரும் இந்தச் சட்டத்திற்கு எதிராக எட்டு வயதுப் பெண்ணுக்குத் திருமணம் செய்வித்து சிறைக்குப் போகத் தயார் என்றும் மனு சாத்திரத்திற்கு விரோதமாகத் திருமணம் செய்வித்து நரகத்திற்குப் போகத் தயாரில்லை என்றும் பேசினார்கள் சட்டமன்றத்திலேயே! இவர்களின் சாத்திரத்தின்படி அஷ்ட வருஷா பலேத் கன்யா என்கிற கன்னிகை என்பவள் 8 வயது உள்ள பெண்தான். எட்டு வயதுக்குப் பிறகு திருமணம் செய்து வைக்கும் தந்தைக்குத் தண்டனை சாத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. என்ன தண்டனை தெரியுமா? மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா

பிதா பிபதிகோனிதம் பஹிஷ்டை என்கிறது தண்டனை விவரம்! இதற்கு என்ன பொருள் தெரியுமா? அக்னிகோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய இந்துமதம் எங்கே போகிறது? என்கிற நூலில் எழுதியிருக்கிறார். (பக்கம் 158இல்) இப்பெண்ணின் ருது ரத்தத்தைப் பிதா புசிக்க வேண்டுமாம்! எவ்வளவு ஆபாசமான, அசிங்கமான தண்டனை? இதற்காகத்தான் ஜெயிலேமேல் என்றார்களோ, பார்ப்பனத் தலைவர்கள்?

அதன்படிப் பார்த்தால் இன்றைக்கு எல்லாப் பார்ப்பனத் தந்தைகளும் இந்தத் தண்டனைக்கு ஆளாகிறவர்கள் என்று ஆகிறதே! இன்றைய சட்டத்தின்படி பெண்ணின் திருமண வயது 18 என்றாகியுள்ள நிலையில் எல்லாத் திருமணங்களும் அந்த வயதுக்கு மேல்தானே நடக்கின்றன! சட்டம் வந்தபின்னர், சாத்திரங்கள் ஓடிவிட்டன.

பறையும் சங்கும் முழங்க

அவர்கள் அப்படியென்றால், தமிழர்கள் எப்படித் திருமணம் செய்து கொண்டார்கள்? அகநானூறு 86, 136 ஆகிய பாடல்கள் இதுபற்றிய விவரங்களைக் கூறுகின்றன. அகநானூறு பாடல் 195 திருமண மண்டபம் அலங்கரிப்பு உள்பட எல்லா விவரங்களையும் தெரிவிக்கிறது.

புனைமாண் இஞ்சி பூவல் ஊட்டி
மனைமணல் அடுத்து மாலை தாற்றி
உலந்தினிது அயரும் என்ப

எனும் வரிகள் மணமக்களின் வீடுகள் தூய்மைப்படுத்தப்பட்டதைப் பாடுகின்றன. வீட்டுச் சுவர்கள் செம்மண் பூசப்பட்டன. வீட்டின்முன் புதுமணல் பரப்பப்பட்டன. மாலைகள் தொங்கவிடப்பட்டன. இப்படிப்பட்ட அலங்கரிப்புகள் திருமணம் நடக்கவிருக்கும் வீட்டுக்குச் செய்யப்பட்டனவாம்.

இன்றைக்குச் சிலர் சினிமாப் பாடல்களை ஒலிபரப்புவதுபோல அன்றைக்குப் பறை ஒலியும் சங்கொலியும் முழக்கப்பட்டன. இறப்பு நடந்த வீடுகளில் ஒலிக்கும் சத்தமாகக் கருதப்பட்டுக் கடைப்பிடிக்கப்படும் சங்கொலி, பறையொலி முதலியவை அன்று மங்கல ஒலியாகக் கருதப்பட்டு மணமேடைகளில் இசைக்கப்பட்டன என்றால்… எத்தகைய தலைகீழ் மாற்றம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்தப்பட்டுவிட்டது? ஆரிய ஆதிக்கச் செல்வாக்கு எவ்வகையிலோ புகுத்தப்பட்டு விட்டதால் அல்லவா, இத்தகைய தலைகீழ் மாற்றம் தமிழர் நிலையில்! இதனைத் தமிழர் உணர்ந்து கொள்ளும் நாள் விரைந்து வாராதோ? குறுந்தொகைப் பாடல் 15இல் குறிக்கப்பட்டுள்ள இந்த இசை தமிழர்தம் இல்லம்தோறும் முழக்கப்படும் நிலை வரவேண்டும்.

உளுந்தஞ் சோறு

இருள் கட்டுக் குலைந்து வெளிச்சம் பரவத் தொடங்கும் விடியற்காலை வேளையில் மணம் நடத்தப்பட்டதாம். அகநானூறு கூறுகிறது. (பாடல் 86). அப்போது மக்கள் உண்ட உணவுபற்றியும் பாடல் பாடுகிறது. உளுந்தும் அரிசிப் பொங்கலும் கலந்த சோற்றை சுற்றமும் நட்பும் உண்பார்களாம். இதனால் ஏற்படும் மகிழ்ச்சி ஒலி மண வீட்டில் நிறைந்திருக்குமாம். இன்றைக்குப் பாசிப்பயிறு (பச்சைப் பயிறு) கலந்த பொங்கல் உண்கிறோம். அன்று உளுந்து கலந்த பொங்கல். குமரி, நெல்லை மாவட்டப் பகுதிகளில் இன்றும்கூட உளுந்தம் சோறு சமைக்கப்படுகிறது. உணவு விடுதிகளில்கூட உளுந்தஞ்சோறு பரிமாறப்படுகிறது.

மணமகளை அழகுபட அலங்கரித்து அமரச் செய்து, முதிய பெண்டிர் நான்குபேர் அவளுக்கு வாழ்த்துக் கூறி அவள் தலையில் நீரை ஊற்றி நனைக்கச் செய்வார்களாம். அந்த நீரில் மலரும் நெல்லும் கலந்திருக்குமாம். மலர் மலர்ந்து மணம் வீசக்கூடியது. நெல் விளைந்து பல மடங்கு பெருகக்கூடியது. எனவே, மணங்கமழும் வகையில் அவளது வாழ்க்கையும் வமிசமும் பல்கிப் பெருக வேண்டும் என்கிற விருப்பத்தை அப்படிப்பட்ட முறையில் தெரிவித்திருக்கின்றனர். இன்றைக்கோ…? திருமணம் முடிந்ததும் மஞ்சள் கலந்த அரிசியும் பிய்த்துப் போடப்பட்ட பூவிதழ்களும் கலந்த அட்சதை அவர்களின் தலையில் போடப்படுகின்றன. தொலைவில் இருந்து வீசப்படுகின்றன.

குழலாட… பூவாட…

திருமணம் ஆன நாள் முதற்கொண்டு மகளிர் தம் கூந்தலில் மலர் அணியும் உரிமையைப் பெற்றனர் என்பதும்கூட அகநானூற்றுப் பாடல் (394) மூலம் தெரிய வருகிறது. இதனைக் கொண்டு ஒருத்தி திருமணம் ஆனவளா, அல்லவா என்பதை எளிதாகத் தெரிந்து கொள்ளலாமே! தமிழர் பண்பாடு எவ்வளவு சிறப்பாக இருந்துள்ளது! இன்றைய நிலை என்ன? தாலி என்கிற ஒன்றைக் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டு அது தொங்கும் இடம் நோக்கிக் கவனித்து திருமணம் ஆன நிலையைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று ஆக்கிவிட்டார்களே! தாலி இருக்கும் இடத்தை உற்று நோக்கினால் ஒழுக்கக் குறைவாக இருக்குமே என்கிற சிந்தைகூட அவர்களுக்குப் புலப்படவில்லை.

வடநாட்டுப் பெண்களின் நிலை தமிழ்நாட்டுப் பெண்களின் நிலையைவிடப் பல மடங்கு சிறப்பானது. திருமணத்தின்போது அவர்களுக்குத் தாலி கட்டப்படுவது இல்லை. மாறாக அவர்களின் நெற்றியில் செந்தூரம் வைக்கப்படுகிறது. குங்குமம் ஒருத்தியின் நெற்றியில் இருந்தால் திருமணம் ஆன பெண் என்பதை விளங்கிக் கொள்ளலாம். திருமணம் ஆவதற்கு முன்பு பெண்கள் குங்குமமோ, பொட்டோ வைத்துக் கொள்ளக்கூடாது என்பதால் இது மிக எளிது.

ஆரியப் பண்பாட்டுக்கேடு தமிழ்நாட்டைப் பாதித்துள்ளதைப் போல, வடநாட்டைப் பாதிக்கவில்லை எனக் கருதலாமோ?

தன்மனை வதுவை அயிரயிவள்
பின்னிருங் கூந்தல் மலரணிந்தோயே

என்று மணமகளின் தோழிகள் மணமகனைப் பாடுகின்றனர் என்கிறது பாடல். தன்தோழி கூந்தலில் மலரணியும் வாய்ப்பைத் திருமணம் மூலம் தந்த காரணத்தால் (அல்லது கரணத்தால் = சடங்கால்) அவன் வாழ்த்தப் பெறுகிறான். அந்தச் சடங்கு எங்கே போனது? எப்படிப் போனது? யாரால் போனது? பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு அல்லவா இதற்குக் காரணி? தமிழர் என்று விளங்கிக் கொள்வது?

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *