பத்மஸ்ரீ டாக்டர் விவசாயி!

ஆகஸ்ட் 16-31

புதுச்சேரியில் – கூடப்பாக்கத்தில் உள்ள விவசாயி வெங்கடபதி (ரெட்டியார்). விவசாயத்தில் குறிப்பாகத் தோட்டக்கலையில் முதன்முறையாக இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.  பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 30.8.2013 அன்று பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தஞ்சை வல்லத்தில் நடைபெற்ற தேசிய வேளாண் தொழில்நுட்பத் திருவிழாவில் பங்கேற்று பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி வெளியிட்ட விழா மலரைப் பெற்றுக்கொண்டவர்.

அவருக்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் அறிவியல் துறைக்கான மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. தனது மய்யத்துக்கு வருகைதர வேண்டும் என வெங்கடபதி விடுத்த வேண்டுகோளை ஏற்று, 2.8.2014 அன்று நேரில் சென்று ஆசிரியர் கி.வீரமணி பார்வையிட்டு பாராட்டுகளைத் தெரிவித்தார்.

 

உண்மைக்காக நேரம் ஒதுக்கி உரையாடிய வெங்கடபதியார், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத் துறையில் தன்னால் ஆன அனைத்தும் செய்வதாகக் கூறினார். இனி அவருடன்…

உண்மை: எப்படி மலர் சாகுபடிக்கு வந்தீர்கள்?

வெங்: நான் என் தந்தையுடன் இளம் வயதிலேயே விவசாயத் தொழில் செய்துவந்தேன். வேறு தொழில் எனக்குத் தெரியாது. நான் படித்ததும் நான்காம் வகுப்பு மட்டுமே. விவசாயத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த எனக்கு ஒரு கட்டத்தில் விவசாயத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டது. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன். அதன்பின்னர் மனதைத் தேற்றிக்கொண்டு ஏற்கெனவே எனக்குப் பழக்கம் உள்ளவரான வேளாண்மைத்துறை அதிகாரி, முன்பு புதுச்சேரியில் பணியாற்றியவர்.

அவரைத் தேடிப்போய்ப் பார்த்தேன். அவர் மலர்ச் சாகுபடி செய்யுமாறு என்னிடம் கூறினார். சரி என்று திரும்பி வந்தேன். என்னிடம் பணம் இல்லை. என் மனைவியிடம் கேட்டால் தருவாரோ இல்லையோ என்று அவரிடம் கூறாமலே அவருடைய வளையல்களை எடுத்துச்சென்று, அந்தப் பணத்தில்தான் கனகாம்பரச் செடிகளை வளர்க்க ஆரம்பித்தேன். பூ என்ன கொடுத்துவிடும் என்று அதில் பணத்தைப் போடுகிறீர்கள் என்றும் கேட்டார்கள். விடாமுயற்சியுடன் மலர்ச்சாகுபடியில் ஈடுபட்டேன். ஏனென்றால், பூ நல்ல விஷேசத்துக்கும் உள்ளது. கெட்டதுக்கும் உள்ளது. பெண்கள் விரும்பிச் சூடிக்கொள்ளும் பூ விவசாயத்தையே செய்வது என்று தீர்மானித்துக்கொண்டேன். விவசாயத்துறையில் உள்ளவர்களிடம் தகுந்த ஆலோசனைகளைக் கேட்டு, அதன்படி செய்து வந்தேன்.

உண்மை: கனகாம்பரம் மலர்ச் சாகுபடியில் என்ன புதுமை செய்தீர்கள்?

வெங்: பூ விவசாயத்தில் அதிக லாபம் வருவதைக் கண்டேன். நிறைய உற்பத்தி செய்தபோது வியாபாரிகள் நல்ல விலை கொடுத்து வாங்காமல் இருந்தார்கள். அதனால், நானே விற்பனை செய்வதற்கு ஆள்களை வைத்து விற்பனை செய்தேன். ஒரே நிறமாக இருக்கிறதே என்று பூவின் நிறத்தில் மாற்றம் செய்தேன். வெவ்வேறு நிறங்களில் பூக்கும்படியாக செய்தேன். அப்படிச் செய்தபோது பூச்செடிகளைக் கேட்டு வாங்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். லட்சுமிநாராயணா நர்சரி என்று ஆரம்பித்து செடிகளைக் கொடுக்கத் தொடங்கினேன். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு இலவசமாகவே செடிகளைக் கொடுத்தேன். இப்போது கனகாம்பரத்தில் மட்டும் அப்துல் கலாம் மாடலில் இருந்து நூறு வகையான கனகாம்பரச் செடிகளை உருவாக்கியுள்ளேன்.

உண்மை: இப்படிச் செய்வதற்கு யாரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டீர்கள்?

வெங்: தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் அரசு விவசாயக் கல்லூரிக்குச் சென்று முதுகலை மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதைக் கண்டேன். அவர்கள் கூறிய தகவல்களை நானே செய்து பார்க்கத் தொடங்கினேன். அந்தப் பேராசிரியர்களிடம் சந்தேகங்களைக் கேட்டு அதன்படிச் செய்து வந்தேன்.

உண்மை: லட்சுமி நாராயணா நர்சரியிலிருந்து நீங்கள் கொடுக்கும் அத்தனை செடிகளும் நன்றாக வளருகின்றனவா? அதற்கு என்ன செய்கிறீர்கள்?

வெங்: செடிகள் வளருவதற்குச் சரியான தட்ப வெப்பத்தைப் பராமரித்து வருகிறேன். ஈரப்பதம் சீராக இருப்பதால் அது நல்லபடியாக வளர்ந்து கைகொடுத்துள்ளது. என்னிடம் ஒரு இலையைக் கொடுத்தால் போதும், அதிலிருந்து நூறுவகைகளை உருவாக்குவேன். நான் கொடுக்கும் செடிகள் நோய் இல்லாதவையாக இருக்கும். பூச்சித் தொல்லை இருக்காது. அப்படி ஒரு ஏற்பாட்டை நாற்று வளரும்போதே செய்துவிடுவேன்.

உண்மை: அது என்ன ஏற்பாடு? வெங்: செடிகளுக்கான நாற்றை வளர்க்கும் பகுதியை முற்றிலுமாக மூடிவிடுவேன். அதனால், வெளியிலிருந்து பூச்சிகளோ, நோய்த் தொற்றோ ஏற்படாதவண்ணம் பாதுகாக்கப்படுகிறது. சிறு துளைகள்மூலம் பீய்ச்சி அடிக்கும் நீரானது கீழே தரைக்குச் செல்லாமல் அப்படியே இலைகளால் உறிஞ்சப்படுகிறது. மூடிய அமைப்பால் வெப்பமாக இருக்கும். வெப்பத்தைத் தணிக்க சிறு துளைகள் கொண்ட குழாய் அமைப்புகள்மூலம் தண்ணீர் தெளிக்கப்படும்போது வெப்பமடைந்த அந்த கூண்டுப் பகுதியாக உள்ள பகுதியில் இதமான சில்லிப்பு ஏற்படும். வெளிக்காற்றோ, வெளி வெப்பமோ இன்றி பாதுகாக்கப்படுகிறது. இதை இசுரேல் தொழில்நுட்பம் என்று கூறுகிறார்களாம்.

உண்மை: கனகாம்பரம் சாகுபடிபோல் வேறு என்னவெல்லாம் செய்கிறீர்கள்?

வெங்: ரோஜாச் செடியில் முள்ளே இல்லாத ரோஜாச் செடியை உருவாக்கி உள்ளேன். பச்சை மிளகாய் செடியை புதுவிதமாக உருவாக்கி உள்ளேன்.

உண்மை: பச்சை மிளகாயில் என்ன புதுவிதம்?

வெங்: நெய் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு நெய் வாசம் இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், மருத்துவர்கள் கொழுப்பு இல்லாமல் சாப்பிடச் சொல்லுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நெய் மிளகாய் செடி வகையை அறிமுகப்படுத்துகிறேன். இது டிஸ்கவரி தாவரமாகும். அந்த மிளகாயைச் சமைத்த உணவில் நெய்வாசம் வரும்படியாக உருவாக்கி உள்ளேன்.

உண்மை: வேறு என்ன புதிதாகச் செய்திருக்கிறீர்கள்?

வெங்: சவுக்கு நாற்றை உருவாக்கிக் கொடுத்துவருகிறேன். சவுக்கு வளரும் இடத்தைப் பார்த்தீர்கள் என்றால், அது கடலோரத்தில் உள்ள உப்புக் காற்றில் வளர்வதாக இருக்கிறது. அப்படி உப்பு நீர் உள்ள மற்ற பயிர்களுக்குத் தோதாக இல்லாத நிலத்தில் சவுக்கை நட்டால் நல்ல பலன் தரும் என்று எடுத்துச் சொல்லித் தருகிறேன். ஏக்கருக்கு, குறிப்பிட்ட காலத்தில், அதிக அளவில் கூடுதலாக சாகுபடி தருவதை உறுதி அளித்து நாற்றுகளை அளித்து வருகிறேன்.

உண்மை: இன்னும் என்னவெல்லாம் செய்கிறீர்கள்?

வெங்: கொய்யா ஹைபிரிட் வகையை உருவாக்கி உள்ளேன். அதிக எடையுள்ள கொய்யாவை உற்பத்தி செய்கிறேன். தண்டுக்கீரை வகையில் தண்டுகளில் நார் இல்லாமல் உருவாக்கி உள்ளேன்.  வெற்றிலைக்கொடி வகைகளை உருவாக்கி உள்ளேன்.

உண்மை: குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வளரக்கூடியதுதானே வெற்றிலை போன்றவை?

வெங்: குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வளரக் கூடியவைகளை, எல்லாப் பகுதிக்கும் ஏற்றவகையில் வளரச் செய்யக் கூடிய தொழில்நுட்பம்தான் அறிவியலில் சாதனை. அறிவியலால்தான் என்னால் செய்ய முடிகிறது.

உண்மை: அறிவியல் முறைப்படி எப்படிச் செய்கிறீர்கள்?

வெங்: காற்றில் உள்ள ஈரப்பதத்தை ((ph அளவை) குறிப்பிட்ட விகிதத்தில் வைத்து நாற்றுகளைப் பராமரிப்பதற்கு அறிவியல் பயன்படுகிறது. மூடிய அமைப்பாக ஏற்படுத்தியுள்ளதன் செயலும் அறிவியலே. திசுக்கள் வளர்ப்பு முறையும் அறிவியல்தான். செடிகளை ஒரே இனத்திலிருந்து பலவகைகளாக உருவாக்கப் பயன்படுவதும் அறிவியல் தொழில்நுட்பம்தான்.

உண்மை: நீங்கள் ஒருவரே இவ்வளவையும் செய்கிறீர்களா?

வெங்: இல்லை. நான் மட்டுமே இல்லை. என் மனைவி, சிறிய வயதிலிருந்தே என் மகள் எனக்கு எல்லாவகையிலும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

உண்மை: இன்னும் யாரெல்லாம் உதவி உள்ளார்கள்?

வெங்: முதலில் நான் நன்றி கூற வேண்டியது இந்தியன் வங்கிக்கு. அவர்கள் என்னை அதிக அளவில் ஊக்கப்படுத்தி உள்ளார்கள். இந்திய அரசு, புதுச்சேரி அரசு என்னுடைய அத்தனை முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

உண்மை: ஊக்கப்படுத்தியவர்கள் என்று உள்ளவர்கள்?

வெங்: மேனாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் என்னை ஊக்கப்படுத்தினார். மேனாள் குடியரசுத்தலைவர் பிரதீபா பாடீல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கினார். இன்னும் பலரும் பல்வேறு விருதுகளை வழங்கி உள்ளனர்.  என்னுடைய அனுபவத்தை விவசாயம் பயிலும் பெரியகுளம், கோயம்புத்தூர் மற்றும் கடலூர் ஆராய்ச்சி நிலைய மாணவர்களுக்கு பாடமாக சொல்லித்தர தமிழ்நாடு அரசின் விவசாயத் துறை அதிகாரி அனுமதி கொடுத்துள்ளார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் அய்யா அவர்கள் என்னை _ என் பணிகளைப் பாராட்டி அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கி ஊக்கப்படுத்தி உள்ளார்கள். ஊக்கத்துடன் பயணத்தைத் தொடர்கிறார் பத்மசிறீ டாக்டர் விவசாயி.

நேர்காணல் : செஞ்சி கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *