ஆயிரங்காலத்துப் புன்னகை

ஆகஸ்ட் 16-31

– கோவி.லெனின்

காயத்ரி மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாள் ஊர்மிளா. எதிர்வீட்டு கௌசல்யா போல அவளுக்கு ஸ்பஷ்டமாகச் சொல்ல வரவில்லை. பழக ஆரம்பித்து இரண்டு நாட்கள்தானே ஆகிறது, போகப்போக கௌசல்யா போல சொல்ல முடியும் என்ற நம்பிக்கை ஊர்மிளாவுக்குக் கூடிக்கொண்டே இருந்தது. அதைவிட, தன் அம்மாவின் உடல்நிலை விரைவில் சீராகிவிடும் என்ற எண்ணம் அவளுக்கு அதிகமாக இருந்தது.

ஊர்மிளாவின் அம்மா பக்கவாதத்தால் படுத்த படுக்கையாகி 6 மாதத்திற்கு மேலாகிவிட்டது. அம்மாவைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு முழுக்க ஊர்மிளா தலையில்தான்! அண்ணன் எப்போதாவது வந்து பணம் கொடுப்பான். அது பஸ் பயணத்திற்கே போதுமானதாக இருக்காது. அதற்குமேல் கேட்டால், அண்ணியையும் குழந்தைகளையும் யார் கவனிப்பது என்பதுபோல முகபாவம் காட்டுவான் அண்ணன்.

அரசு மருத்துவமனைதான் அம்மாவின் சிகிச்சைக்கு உதவியாக இருந்தது. முதல் முறை ஆட்டோ பிடித்து, அம்மாவை அழைத்துக் கொண்டுபோய் டாக்டரிடம் காட்டி மருந்து-மாத்திரைகளை வாங்கி வருவதற்கு அரைநாளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அதன்பிறகு அம்மாவைக் கூட்டிக்கொண்டு போக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மாத்திரை தீர்ந்துவிட்டதென்றால், அதற்கான அட்டையை ஊர்மிளாவே எடுத்துக்கொண்டு போய் மருத்துவமனையில் மருந்து-மாத்திரைகளை வாங்கி வந்துவிடுவாள்.

அம்மாவுக்காக மருத்துவமனைக்குப் போகும்போது பஸ்ஸில் பழக்கமானவர்தான் பங்கஜம் பாட்டி. பக்கத்து சீட்டில் உட்கார்ந்த நிமிடத்தில் ஊர்மிளாவின் குலம், கோத்திரத்தை விசாரிக்கத் தொடங்கிய பாட்டி, அம்மாவின் உடல்நிலைக்காக உச் கொட்டினார். ஊர்மிளாவும் குடும்பச் சூழ்நிலை மொத்தத்தையும் அவரிடம் கொட்டினாள்.

தோ..பாருடியம்மா. நாம நன்னா இருக்கிறதும் கஷ்ப்பட்டுண்டிருக்கிறதும் போன ஜென்மத்துப் பலன். என்னதான் டாக்டர் ட்ரீட்மெண்ட் கொடுத்தாலும் பகவான் அனுக்ரகம் வேணும். அதனால நீ வீட்டுல அம்மா காதில் விழுற மாதிரி மந்திரம் சொல்லிண்டிருந்தேனா எல்லாம் ஷேமமாயிடும். பகவான் கைவிடமாட்டான் என்ற பங்கஜம் பாட்டியின் வார்த்தைகள் ஊர்மிளாவுக்கு ஆறுதலாக இருந்தது. வீட்டிற்கு வந்ததும் காயத்ரி மந்திரம் சொல்லப் பழகினாள். இன்றைக்கு இரண்டாவது நாள்.

அண்ணன் வந்திருந்தான். படுக்கையில் இருந்த அம்மாவைப் பரிதாபமாகப் பார்த்தான். ஏதாவது உதவ வேண்டும் என்று நினைத்தவன், கட்டிலுக்குக் கீழே இருந்த பெட்பேனை எடுத்தான். அவன் கொடுத்த காசில்தான் ஊர்மிளா அதை வாங்கியிருந்தாள். அம்மாவை நிமிர்த்தி உட்கார வைத்து, பெட்பேனை சரியாக வைக்க முயற்சித்தான். உடம்பில் தெம்பில்லாத நிலையிலும் ஊர்மிளா.. ஊர்மிளா-. என்று அலறினாள் அம்மா.

ஊர்மிளாவால் மந்திரத்தைப் பாதியில் நிறுத்தவும் முடியவில்லை, அம்மாவின் அழைப்பை அலட்சியப்படுத்தவும் முடியவில்லை. உச்சரித்துக்கொண்டே ஓடிவந்தவள், என்னம்மா? என்றாள், மந்திரத்தை முடிக்கமுடியாமல் போய்விட்டதே என்ற கவலையில். பெட்பேனுடன் நின்று கொண்டிருந்தான் அண்ணன்.

அவன்கிட்டேயிருந்து அதை வாங்கி, நீ சரியா வைம்மா என்றாள் அம்மா. ஊர்மிளா அதை வாங்கிக்கொண்டாள். அவனை அந்தண்டை போய் இருக்கச் சொல்லு- அம்மா மறுபடியும் உடம்பில் உள்ளசக்தியைத் திரட்டிப் பேசினாள். அண்ணன் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தான்.

அம்மா.. அண்ணனே எப்பவாவதுதான் வந்து பார்க்குது. உனக்கு ஏதாவது உதவணும்ங்கிற அக்கறையோடு வந்தா, ஏன் இப்படி விரட்டுறே? அண்ணனையும் நீதானே பெத்தே?

தாயும் புள்ளையுமா இருந்தாலும் வாயும் வயிறும் வேறதானே.. நான் பெத்த புள்ளதான்னாலும், ஆம்பளைப் பயல் முன்னாடி இதை வைக்கிறது கஷ்டமா இருக்குடீ. துணியை விலக்கி, பெட்பேனை வச்சி, அப்புறம் அதைத் துடைச்சி சுத்தம்பண்ணி.. .. எனக்குத் தர்மசங்கடமா இருக்கு.

ஆபரேஷன் பண்ணுற டாக்டர்கிட்டே இதையெல்லாம் சொல்லுவியா.. அப்படி நினைச்சிக்க வேண்டியதுதான்.

அவசரத்துக்கோ ஆபத்துக்கோ அதெல்லாம் பாவமில்ல. ஆனா, நீ இருக்கிறப்ப அவன் இதையெல்லாம் செய்றது எனக்குக் கஷ்டமா இருக்குது. உங்கப்பா இப்படிப் படுத்துக்கிடந்தப்ப அவரு சாகுறவரைக்கும் அவன்தானே பார்த்துக்கிட்டான். நீதான் எனக்கு இருக்கிறியே.. உன்னை ஒருத்தன் கையில் புடிச்சிக் கொடுக்கிற வரைக்கும் செய்யி. அப்புறம் நான் கண்ணை மூடிடுவேன். அம்மா சொன்னதைக் கேட்டபடியே பெட்பேன் வைக்க உதவிய ஊர்மிளா, அதன்பிறகு குளித்துவிட்டு வந்து மறுபடியும் மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.

மாதக்கணக்கில் அம்மாவைக் கவனித்துக்கொண்டவள், மந்திரங்களையும் நிறையப் படித்து மனப்பாடமாகச் சொல்வதற்குப் பழகிக் கொண்டாள். லட்சார்ச்சனை, கோடியர்ச்சனை எல்லாம் அவளுக்கு இப்போது அத்துப்படி. அம்மாவைப் பார்ப்பதற்காக வந்திருந்தன சொந்த பந்தங்கள். ஊர்மிளா அநாயாசமாக மந்திரங்களைச் சொல்வதைக் கவனித்த உறவுக்காரர் ஒருவர், நம்ம விட்டல் ருக்மணிதேவி கோவிலில் எல்லா ஜாதிக்காரங்களையும் அர்ச்சகராக்கப் போறாங்களாம். கோர்ட்டுல தீர்ப்பாயிடிச்சி என்றார்.

அப்படியா? என்று ஆச்சரியமாகக் கேட்ட இன்னொருவர், இந்த மகாராஷ்ட்ரா பந்தார்பூரிலே இருக்கிற கோவில்தானே… கிட்டதட்ட 900 வருசம் பழமையான கோவிலாச்சே.. ஆகமம், ஆச்சாரமெல்லாம் பேசுவாங்களே.. அதிலே எல்லா ஜாதிக்காரங்களும் அர்ச்சகராகப் போறாங்களா? என்றார். பொண்ணுங்களைக்கூட அர்ச்சகராப் போடப்போறாங்களாம் என்ற முதலாமவர், ஊர்மிளா நீகூட ட்ரை பண்ணலாம் என்றதும் எல்லோரும் கலகலவென சிரித்தனர். ஊர்மிளா யோசித்தாள்.

வேலை, வருமானம் என்று இருந்தால் அம்மாவைக் கவனித்துக் கொள்வதற்கு வசதியாக இருக்கும் என்பதுதான் அவளது எண்ணமாக இருந்தது. அடுத்த முறை பஸ் பயணத்தின்போது பங்கஜம் பாட்டி தவறாமல் வந்தார். அர்ச்சகராவதற்கு முறைப்படியான பயிற்சிகள் பெறவேண்டும் என்றும் அந்தப் பயிற்சி கொடுக்கப்படும் இடத்தைப் பற்றியும் பங்கஜம் பாட்டி சொன்னார். அதோடு, அதெல்லாம் பகவான் கிருபையால வர்றது. சும்மா ட்ரெய்னிங்னு இவா நடத்துற க்ளாஸெல்லாம் சரிப்படாது என்றும் சொன்னார். பாட்டி முதலில் சொன்னதிலேயே ஊர்மிளாவின் மனது நிலைத்துவிட்டதால், அடுத்துச் சொன்னதை அவள் கவனிக்கவில்லை.

வீட்டில் அவள் மனப்பாடம் செய்திருந்த மந்திரங்களைத்தான் பெரும்பாலும் பயிற்சியிலும் சொல்லிக் கொடுத்தார்கள். இப்போது கௌசல்யா போல தன்னாலும் ஸ்பஷ்டமாகச் சொல்ல முடிகிறது என்ற தன்னம்பிக்கை ஊர்மிளாவுக்கு வந்துவிட்டது. விட்டல் ருக்மணி தேவி கோவில் அர்ச்சகர் வேலைக்கு வழக்கமாக மந்திரம் சொல்பவர்களில்லாமல் மற்ற ஜாதிகளிலிருந்து 129 பேர் நேர்காணலில் பங்கேற்றார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களில் 16 பேர் பெண்கள். அதில் ஊர்மிளாவும் ஒருத்தி.

ருக்மணிதேவி சன்னதியில் பூசை செய்யும் வேலை கொடுக்கப்பட்டது. ஊர்மிளா அங்கே சென்றாள். அம்பாளைப் பார்த்தாள். முதல்முறையாக ஒரு பெண், அர்ச்சனை செய்ய வந்திருக்கிறாளே என்று அம்பாளும் அவளை வாஞ்சையோடு பார்ப்பது போலவே இருந்தது. அபிஷேகம் செய்து, அலங்காரம் முடித்து அதன்பின்தான் அம்பாளுக்கு அர்ச்சனை செய்யவேண்டும். திரைச்சீலையை இழுத்துவிட்டாள். அம்பாள் கட்டியிருந்த சேலைமீது கை வைத்தாள்.

பெற்ற மகன் பெட்பேன் வைப்பதற்கே கூச்சப்பட்ட அம்மாவின் நினைவு ஊர்மிளாவுக்கு வந்தது. 900 ஆண்டுகளாக ஆண் அர்ச்சகர்ளாலேயே அபிஷேகம் செய்யப்பட்ட அம்பாளைப் பரிதாபத்தோடு பார்த்தாள். சிலையாக நின்ற ருக்மணிதேவி, தன் நெடுங்கால சங்கடத்திலிருந்து விடுதலையாகி புன்னகைப்பதுபோலவே இருந்தது ஊர்மிளாவுக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *