”ஆடி வெள்ளி” கருக்கிய அரும்புகள்!
அறிவுவழி சிந்திப்பார்களா ஆசிரியர்கள்?
பள்ளி நிறுவனருக்கு ஆயுள் தண்டனையும் (மொத்தம் 940 ஆண்டுகள்), 8 பேருக்கு 5 ஆண்டுகள், ஒருவருக்கு 2 ஆண்டுகள் தண்டனையும், 11 பேருக்கு விடுதலையும் கொடுத்து 2014 ஜூலை 30 அன்று தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2004ஆம் ஆண்டு கும்பகோணம் சிறீகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில்தான் மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 – நம் உள்ளமெல்லாம் இடிந்துபோன நாள். குழந்தைகள் பட்டாசு வெடித்தாலே பதறும் பெற்றோர்கள், அதே குழந்தைகள் தீயில் கருகி வெடித்ததைக் கண்டு எப்படிப் பொறுக்க முடியும்? நொறுங்கிப் போனார்கள். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு — 940 ஆண்டுகள் தண்டனை என்று பார்க்கப் பெரிதாக இருந்தாலும், பல்வேறு அதிகாரிகள் தப்பிவிட்டதாகவும், தீர்ப்பு இன்னும் பாடம் தருவதாக இருந்திருக்க வேண்டும் என்றும் மக்கள் விரும்புவதாகக் கருத்து தெரிவிக்கின்றன ஊடகங்கள்! கல்வி வணிகர்களும், அவர்களுக்கு உதவிய அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது முற்றிலும் சரி.
ஆனால், இந்தத் தீவிபத்து நடந்தது எப்படி என்பதைப் பலரும் மறந்து போய்விட்டார்கள். 94 பிள்ளைகள் எரிந்து போகும் அளவுக்கு நிலை இருக்கும்போது ஆசிரியர்கள் எங்கே போயிருந்தார்கள். பாதி எரிந்த உடலோடு இன்றும் நம் கண்களைக் குளமாக்கும் பாலகன் ராகுல், அன்று ஏழு வயதுச் சிறுவன்; இன்று பதினேழு வயது இளைஞன். அவனே சொல்கின்றான், ஆசிரியர்கள் எங்களை எல்லாம் வகுப்பறைக்குள் உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு கோவிலுக்குப் போயிட்டாங்க! ஆம். அன்று ஆடி வெள்ளியாம்! வகுப்பு நேரத்தில் வகுப்பறையில் பிள்ளைகளைப் பூட்டிவிட்டு ஆசிரியர்கள் வெளிச்சென்றது இதற்காகத்தான். அப்போது சமையலறையிலிருந்து வந்த தீப்பொறி உண்டாக்கியதுதான் இவ்வளவு பெரிய இழப்பு!
பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு பகுத்தறிவுதான் இல்லாமல் போயிற்று; குறைந்தபட்ச அறிவு கூடவா இல்லாமல் போயிருக்கும்? மழலை யரைப் பள்ளியில் அடைத்து விட்டு வந்தோமே, என்ன ஆயிற்று ஏதாயிற்று என்ற கவலையே இல்லாமல் போனார்களே, இவர்களும் காட்டுமிராண்டிகளே! நாக்கில் இருக்கும் சரஸ்வதி(!) எரியும் நெருப்பில் ஏன் இல்லாமல் போனாள்? கரன்சி பார்க்கும் பள்ளி பெயரில் இருக்கும் சிறீ கிருஷ்ணர் குழந்தைகளைக் காக்க ஏன் தவறினார்…? கடவுளைத்தானே தரிசிக்கச் சென்றார்கள் ஆசிரியர்கள். ஏன் அந்தக் கடவுள் குழந்தைகளைக் காப்பாற்ற முன்வரவில்லை?
மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்லும் இந்த நாட்டில்தான், அவர்கள் நம்பிக்கைப்படியே, குருவும் தெய்வமும் ஒன்றாகச் சேர்ந்து நிகழ்த்திய இந்தப் படுகொலைக்கு இந்த அளவாவது ஆசிரியர்களுக்குத் தண்டனை கிடைத்தது. ஆனால் கடவுள்களுக்கு?
கொந்தளிக்கும் மக்களும், ஊடகங்களும் இந்த விபத்துக்கு அடிப்படைக் காரணமானது ஆடி வெள்ளி என்ற மடமைத்தனமே என்பதை உணர்ந்தார்களா? அது குறித்து கேள்வியாவது எழுப்புவார்களா? மதவிழாக்கள் நடைபெறுகிறபோது கும்பல் கும்பலாக விடுமுறை எடுத்துக் கொண்டும், அப்படியே வந்தாலும் பள்ளி அலுவலகத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு இடையில் டபாய்த்துவிட்டும் கோவிலுக்குப் போகும் கற்றறிந்த பாமரர்களாக அலையும் பல ஆசிரியப் பெருமக்களும் இதை இனியேனும் விடுவார்களா? அறிவுவழி சிந்திப்பார்களா?
– செல்வேந்திரன்.கு