கடவுள் நம்பிக்கையாளர்கள் பலரும் நம்பும் கடவுளின் முக்குணங்கள், முத்தன்மைகள் – மனித சக்திக்கு மேற்பட்டதாக கூறப்படுவன.
(1) சர்வ சக்தி – எல்லாம் வல்லவன்.
(2) சர்வ வியாபி – எங்கும் நிறைந்த பரம்பொருள்.
(3) சர்வ தயாபரன் – கருணையே வடிவானவன்.
உள்ளபடியே அப்படிப்பட்ட தன்மைகள் அக்கடவுளர் – கடவுளச்சிகளுக்கு உள்ளனவா என்று எந்த பக்தராவது புத்திகொண்டு சிந்திக்கின்றனரா? ஆராய்கின்றனரா? இல்லையா?
வெறும் நம்பிக்கை அதுவும் குருட்டு நம்பிக்கைதானே.
அதனால்தான் பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும் என்றார் அனுபவரீதியான வகையில் அறிவு ஆசான் தந்தை பெரியார்!
அன்றாடம் அத்துணை மதநம்பிக்கையாளரும் கடவுளை வணங்கி, பிராத்தனை என்ற கையூட்டும் – லஞ்சமும் தரத் தவறுவதே இல்லை.
அப்படி இருந்தும் அன்றாட நிகழ்வுகள் பெரும்பாலான மக்களுக்குத் துன்பமும், இழப்பும், தொல்லையும் ஆகத்தானே உள்ளதே தவிர, மகிழத்தக்கதாக உள்ளதா?
கடவுளை நம்பாத, நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் மட்டும்தான் தொல்லைகளை, துன்பத்தை அனுபவிக்கின்றார்களா? இல்லையே. நம்பிக்கையாளர்களில் பெரும்பாலோர் இப்படி துன்பத் தீயில் வெந்து கருகுகின்றனரே.
உத்தரகாண்டில் யாத்திரைக்குப் போனவர்கள் அளவுக்கு அதிகமான மழை, வெள்ளம் மூலம் அடித்துச் செல்லப்பட்டவர்கள்,
மராத்திய மாநிலம் புனேயில் மலின் என்ற ஊரில் பழங்குடிமக்கள் வீடுகளோடு, நிலச்சரிகளில் புதையுண்டு பிணக்குவியல்களைத் தோண்டி எடுக்கும் அவலம் கண்றாவிக் காட்சி அல்லவா?
பீகாரில் நதி வெள்ளப் பெருக்கெடுத்ததோடு, பல்லாயிரவர் வீடிழந்து, வாழ்விழந்து நிற்கின்றனர்!
இஸ்ரேலில் – பாலஸ்தீனப் பச்சிளங் குழந்தைகள்மீதும் ஈவிரக்கமில்லா இஸ்ரேலின் குண்டுமழை,
சீனாவில் 3.8.2014இல் 6.8 ரிக்டர் அளவுக்கு கடும் பூகம்பம் – பல நூற்றுக்கணக்கில் மக்கள் பலி,
கோவில் தரிசனம் மற்றும் பல மத விழாக்களுக்குச் சென்று, நேர்த்திக்கடன், காணிக்கை தந்துவிட்டுத் திரும்புவோர் சாலை விபத்துகளில் குடும்பம் குடும்பமாகப் பலியாகும் கொடுமை!
பச்சிளம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி பிணமாகும், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சோகச் செய்திகள் நாள்தோறும் வருகின்றனவே.
கடவுள் சர்வசக்தி படைத்தவராக இருப்பின் தடுத்திருக்க வேண்டாமா?
கடவுள் சர்வ வியாபி – எங்கும் நிறைந்தவர் _ இப்படி நடப்பதை வேடிக்கை பார்த்து வாய்மூடியாக இருப்பாரா?
எல்லாவற்றையும்விட மேலாக கருணையே வடிவானவராக இருந்தால், தனது பிள்ளைகள், தன்னால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் இப்படிக் கொத்துக் கொத்தாக கொள்ளைச்சாவு சாவுவதைக் கண்டு வாளா இருப்பாரா?
எண்ணிப் பாருங்கள்!
நாத்திகம் நன்னெறி என்பது அப்போது புரியும்.
கி.வீரமணி,
ஆசிரியர்.