மூடநம்பிக்கைக்கு எல்லையே இல்லையா?

ஆகஸ்ட் 01-15

அண்மையில் (3.7.2014) நாளிதழ்களில் புதியதாக ஒரு மூடத்தனம் பற்றிய செய்தி வெளிவந்துள்ளது.

திருநெல்வேலி நகரத்தில் வாழும் 60 வயது முதியவருக்குப் பேய் பிடித்திருப்பதாகக் கூறிய மந்திரவாதி, அந்தப் பேயை ஓட்டுவதற்காக முதியவர் தலையில் மூன்று அங்குல நீளமுள்ள துருப்பிடித்த ஆணியை அடித்துள்ளார். வலியால் துடித்த அவருக்கு வலி நிவாரணி மாத்திரைகளைக் கொடுத்திருக்கிறார்கள். சில நாளில் முதியவருடைய இடது கையும், இடது காலும் செயலிழந்து போகவே, அவரைப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். அங்கு அந்த முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை வெளியிட்ட ஒரு நாளிதழ் (தி இந்து_தமிழ்) செய்தியின் இறுதியில் மூடநம்பிக்கைகளுக்கும் ஓர் எல்லையே இல்லையா என கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள் என்று எழுதியுள்ளது.

இதைப் படித்தபோது எனக்கு சில மூடநம்பிக்கைகள் நினைவிற்கு வந்தன.

மழைவேண்டி தவளைக்கும் தவளைக்கும் திருமணம் செய்வது; மனிதனுக்கும் கழுதைக்கும் திருமணம் செய்வது; இடுகாட்டுக்குச் சென்று நிலத்தைத் தோண்டி மனித எலும்புகளை எடுத்துக் கடிப்பது: பேய் ஓட்டுவதாகக் கூறி வேப்பிலையால் அடிப்பது: தலையில் தேங்காய் உடைப்பது, பிறந்த குழந்தையை மாட்டுச் சாணத்தில் குளிப்பாட்டுவது… இன்னும் பல செய்திகள் என் மனதில் ஓடின.

இப்படிப்பட்ட பல்வேறு வகையான கல்வியறிவு இல்லாத எளிய மக்களின் செயல்கள் _ மூடநம்பிக்கைகள்தான் இந்த நாளிதழ் குறிப்பிடும் சமூக ஆர்வலர்கள் மூடநம்பிக்கைகள் என்று கருதுகிறார்கள் போலும்.

அதே நாளிதழில் (3.7.2014) சந்தோஷம் தருபவர் சக்கரத்தாழ்வார் என்ற தலைப்பில் விக்னேஷ்ஜி அய்யர் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் சக்கரத்தாழ்வாரைப் பூஜித்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று விளாவாரியாக எழுதியுள்ளார்.

1.    நவக்கிரக தோஷங்கள் நீங்கும்!
2.    விரைவில் திருமணம் கூடும்!
3.    நினைத்த நல்ல காரியங்கள் கைகூடும்!
4.    கடன் தொல்லை நீங்கும்!
5.    வியாதி ஓடிவிடும்!
6.    எதிரிகள் தரும் துன்பம் நீங்கும்!
7.    கல்வியில் தடை நீக்கப்பட்டு மேலும் மேலும் தொடரும்!
8.    வாழ்வில் வளம் கூடும்!
9.    பொன்னையும் பொருளையும் வாரி வழங்குவார்!
என்று எழுதுகிறார்.

இதைப்பற்றிக் கவலைப்பட்டு மூடத்தனத்திற்கு ஓர் அளவே இல்லையா என்று எந்த அறிவுஜீவி சமூக ஆர்வலரும் கேட்டதாகக் காணோம்.

1.7.2014 அன்று வெளிவந்த இதே நாளிதழில், ஆந்திர மாநிலம் ஓங்கோலில் மழைவேண்டி நடைபெற்ற வருண பூஜையின்போது ஒரு தொட்டியில் உள்ள தண்ணீரில் கழுத்துவரை மூழ்கி பூசை செய்த குருக்கள் பற்றிய படச் செய்தி வந்துள்ளது. இதைப்பற்றி எந்த அறிவுஜீவி சமூக ஆர்வலர்களும் மூடநம்பிக்கைக்கு எல்லையே இல்லையா என்று கேட்கக் காணோம்.

மேலே உள்ள படச் செய்திக்கு கீழே பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.69 உயர்வு. டீசல் 50 பைசா அதிகரிப்பு என்ற செய்தி வெளியாகியுள்ளது.

அதைப் படித்தபோது, அதே தொட்டியில் பெட்ரோலை ஊற்றி அதில் குருக்கள் கழுத்துவரை மூழ்கி பெட்ரோல் வேண்டி பூதேவி பூஜை செய்தால், இந்த அறிவுஜீவி சமூக ஆர்வலர்கள் மூடத்தனத்திற்கும் ஓர் எல்லையே இல்லையா என்று கேட்பார்களா? மாட்டார்கள். மாறாக இவர்களும் மந்திரம்(?) ஓதுவார்கள்.

ராகு, கேது பெயர்ச்சி விழா

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள ராகு தோஷ பரிகாரத் தலமான திருநாகேசுவரத்தில் நடைபெற்ற ராகு பெயர்ச்சி விழாவிலும், நாகப்பட்டினம் மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள நாகநாதசுவாமி கோவிலில் நடைபெற்ற கேது பெயர்ச்சி விழாவிலும் திரளான மக்கள் கலந்து கொண்டனர் என்று செய்தி வெளியிட்டுள்ள (22.6.2014) அதே நாளிதழில் இல்லாத _ கற்பனையான ராகு _ கேது கோள்களின் பெயர்ச்சியும், அதற்கு ஆரவாரமாக விழாவும் எடுக்கிறார்கள். அதைக் காண திரளான பக்தர்கள் பணம், நேரம், உழைப்பு என எல்லாவற்றையும் வீணடித்துக்கொண்டு வருகிறார்களே, இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளுக்கு ஓர் எல்லையே இல்லையா என்று எந்தச் சமூக ஆர்வலரும் ஆதங்கப்படக் காணோம்.

இதெல்லாம் ஒருபுறம் கிடக்கட்டும். கைகளில் கயிறுகள் வண்ணவண்ணமாய்க் கட்டினால், நினைத்தது, கேட்டது எல்லாம் கிடைத்து தங்கள் வாழ்வில் வளமும் நலமும் பெருகும் என்று மூடத்தனமாக நினைத்துக் கொண்டுள்ள இன்றைய மக்களைப் பார்த்து இந்த அறிவுஜீவி சமூக ஆர்வலர்கள் மூடநம்பிக்கைக்கு ஓர் எல்லையே இல்லையா என்று கதறி கண்ணீர் வடிக்கக் காணோம்! அது சரி, அவர்கள் கைகளிலும் அல்லவா கொசகொசவென்று வண்ணக் கயிறுகளைச் சுற்றிக் கொண்டு மூடநம்பிக்கைக்கு ஓர் எல்லையே இல்லாமல் இருக்கிறார்கள்.
எப்படியோ, பேய் ஓட்டுவதாகக் கூறி முதியவர் தலையில் ஆணி அடித்ததைக் கண்டாவது மூடத்தனத்திற்கு ஓர் எல்லையே இல்லையா என்று கேள்வி எழுப்பிய அறிவு ஜீவிகளான அந்தச் சமூக ஆர்வலர்களை நாம் நெஞ்சாரப் பாராட்டுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *