குறுந்தொடர் – 2
எரியும் எண்ணெய் பூமி
– ப.ரகுமான்
சதாம் வில்லனானது எப்படி?
இன்றளவும், கச்சா எண்ணெய் விலை டாலரில் நிர்ணயிக்கப்படுவதன் மூலம், அமெரிக்கப் பொருளாதாரம் அளவு கடந்த ஆதாயங்களை அடைகிறது. இதுதவிர, டாலரின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற-இறக்கம், அமெரிக்கர்களுக்கு மட்டும் எண்ணெய் விலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
ஆனால் பிற நாடுகளின் நாணயங்கள், டாலருக்கு எதிரான மதிப்பில் சரிவைச் சந்தித்தால், அந்த நாடுகளுக்கு எண்ணெய் விலை அதிகரிக்கும். இந்த எண்ணெய்-டாலர் பிணைப்பு, சர்வதேச வர்த்தகத்திலும் அமெரிக்காவிற்குப் பெரும் சாதகங்களை வழங்குகிறது. நாடுகளும், பெரும் நிறுவனங்களும் டாலரிலேயே வர்த்தகத்தை மேற்கொண்டதால், அமெரிக்கக் கருவூலமும், அமெரிக்க மத்திய வங்கியுமே உலகச் செலாவணிக் கொள்கையைத் தீர்மானிப்பவையாக மாறிப்போயின. உலகப் பொருளாதாரம் என்பது டாலரைச் சார்ந்தது என்கிற நிலை இதன்மூலம் தக்கவைக்கப்பட்டது. இதன் மறைமுகப் பொருள் என்னவென்றால், அமெரிக்க டாலரின் நிலைத்தன்மையும், அதன் நீட்சியாக உலகளாவிய நாணய முறையும், உலக கச்சா எண்ணெய் இருப்பில் மூன்றில் இரண்டு பங்கை வைத்திருக்கும் வளைகுடா நாடுகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதே. ஆனால், வலிமை மிக்க யானையை அடிமையாக வைத்திருக்கும் பாகன் நிலை அமெரிக்காவுக்கு.
யானை தன்வலிமை உணர்ந்து கோபம் கொண்டால், பாகன் கதி அதோகதிதான். 1979இல் ஈரானில் மன்னர் ஷா தூக்கியெறியப்பட்டு, அயதுல்லா கொமேனி ஆட்சியைப் பிடித்தபோது, அமெரிக்கா தனது வலிமையான நண்பனை இழந்தது. கச்சா எண்ணெய் விலை மும்மடங்கு உயர்ந்தது, பிற நாணயங்களுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டாலர் அதலபாதாளத்திற்குச் சரிந்தது. தங்கத்தின் விலை உச்சத்திற்குச் சென்றது. இதன் எதிரொலியாக, வெளிநாடுகள் டாலரைக் கைவிடாமல் தடுக்க அமெரிக்கா 15 முதல் 20 விழுக்காடு வரை வட்டி விகிதங்களை உயர்த்தப்போக, அதன் பொருளாதாரம் கடும் சரிவில் சிக்கியது.
ஆக, எண்ணெய் வளத்தைக் கட்டுப்படுத்தும் வரையிலும், எண்ணெய் வர்த்தகம் டாலரில் நடைபெறும் வரையிலும்தான் அமெரிக்கப் பொருளாதாரம் தாக்குப் பிடிக்கும். அந்த நிலை மாறினால் சீட்டுக்கட்டு மாளிகை போல அமெரிக்கப் பொருளாதாரம் சரிந்துவிடும்.
யூரோவுக்கு மாற முயற்சித்த சதாம் உசேன்!
எண்ணெய் வளத்தை நாட்டுடைமையாக்கி ஈராக்கை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் சதாம் உசேன்; அதன் பிறகு ஈரானுடன் போர் நடத்தியது, அதனால் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பேரிழப்புகள், கடன் நெருக்கடியால் குவைத்துடன் மோதல், குவைத் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து அமெரிக்காவுடன் மோதல் என்பதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவிற்கு மரண அடி கொடுக்கும் வகையில், எண்ணெய் வள நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த முயன்றார் சதாம். அது எண்ணெய் வர்த்தகத்தை டாலருக்குப் பதிலாக யூரோ நாணயத்தில் நடத்துவது. இதன் பிறகுதான், பேரழிவு ஆயுதங்களை ஈராக் வைத்திருக்கிறது என்ற பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி, அமெரிக்கா ஈராக்கின் மீது சட்டவிரோத ஆக்கிரமிப்பை நடத்தியது. ஈராக்கின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி, எண்ணெய் வர்த்தகத்தை யூரோவில் நடத்துவதற்கான முயற்சியை மேற்கொண்ட ஈரான் மீதும் கடுங் கோபப் பார்வையைத் திருப்பியது, அமெரிக்கா. ஈரானுக்குப் பக்கபலமாக இருந்த சிரியா அரசையும், அதன் அதிபர் பஷார் அல்-ஆசாத்தையும் வீழ்த்துவதற்கு தீவிரவாதக் குழுக்களை ஊட்டி வளர்த்தது.
ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன் அமெரிக்காவுடன் மோதல் போக்கைக் கையாளத் தொடங்கிய பிறகு, அமெரிக்க உளவு நிறுவனமான சிஅய்ஏ, அவருக்கு எதிராக ஷியா முஸ்லிம்களைத் தூண்டிவிடும் வேலையில் இறங்கியது. 2003இல் அமெரிக்கப் படைகள் புகுந்த பின்னர் ஈராக்கில் ஷியா-சுன்னத் (சன்னி) வேறுபாடுகள் தீவிரப் பகையாக முற்றியது. ஈராக்கிற்குள் புகுந்த அமெரிக்கா, இந்தப் பகை பற்றி எரியும் வகையில் பல வேலைகளைச் செய்தது. ஈராக் ராணுவத்திலிருந்து 7 லட்சம் சுன்னத் பிரிவு வீரர்களை, சதாம் உசேன் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டி வெளியேற்றியது. இவர்களே பின்னர் தீவிரவாதக் குழுக்களாகத் திரிந்தனர். சுன்னத் பிரிவு அரசு அதிகாரிகளும் பணிக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்காவால் நிறுவப்பட்ட பொம்மை அரசின் கீழ், வாழ்வின் எல்லா நிலைகளிலும் தாங்கள் ஒடுக்கப்படுவதாக சுன்னத் பிரிவினர் அதிருப்தி அடைந்தனர். இவை அனைத்தும் சேர்ந்து அங்கு பயங்கரவாதத் தாக்குதல்கள் நாள்தோறும் அரங்கேறுவதற்கு வழிவகுத்தன. மக்கள்கூடும் இடங்களிலும், அரசு நிலைகளைக் குறிவைத்தும் கார் வெடிகுண்டுத் தாக்குதல் என்பது, சர்வசாதாரணமாகிப் போனது. ஒருகட்டத்தில் கார்களை ஓட்டுவதற்கே தடை விதிக்கப்பட்டு, கழுதைகள் இழுத்துச் செல்லும் கட்டை வண்டிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். பெட்ரோல் ஊற்றெடுக்கும் நாட்டில் கட்டை வண்டியில் பயணிக்க வேண்டிய அவலம் உருவானது. இதன் பின்னணியில் மிக முக்கியமான பொருளாதார மாற்றமும் அரங்கேறியது. 2003இல் அமெரிக்கப் படைகள் புகுவதற்கு முன்னர், ஈராக்கின் எண்ணெய் வளமும் தொழிற்துறையும் அரசால் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் 2003க்குப் பிறகு எண்ணெய் வளத்தை அமெரிக்க_பிரிட்டிஷ் நிறுவனங்கள் கூறுபோட்டுக் கொண்டதோடு, முழுமையாக தனியார்மயம் அமல்படுத்தப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக ஈராக் மாற்றப்பட்டது. அதற்கு வசதியாக மக்கள் ஏற்கெனவே ஷியா-சுன்னத் என கூறுபோடப்பட்டிருந்தனர்.
அண்டை நாடான சிரியாவில், ஷியா-சுன்னத் பகை என்ற வடிவத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போரும், ஈராக்கில் நிலைமையை மோசமடையச் செய்தது. சிரியாவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு ஆதரவாக ஷியா பிரிவைச் சேர்ந்த ஆயுதந் தாங்கிய குழுக்களும், சிரிய அரசுக்கு எதிராக சுன்னத் பிரிவைச் சேர்ந்த ஆயுதந் தாங்கிய குழுக்களும் ஈராக்கிலிருந்து சிரியாவிற்குள் புகுந்து சண்டையில் ஈடுபட்டன. ஆசாத்தை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று துடித்த அமெரிக்காவோ அய்.நா. பாதுகாப்புக் கவுன்சில் மூலமான நடவடிக்கைகள் பயனளிக்கவில்லை என்பதால், சிரியாவுக்கு எதிரான (சுன்னத் பிரிவு) தீவிரவாதக் குழுக்களுக்கு, நேரடியாகவும், சவுதி அரேபியா போன்ற நாடுகள் மூலமாக மறைமுகமாகவும் ஏராளமான ஆயுதங்களை வழங்கியது. இப்படி ஆயுத உதவி பெற்ற குழுக்கள்தான், அய்எஸ்அய்எஸ் என்ற பெயரில், சிரியா பாலைவனத்தின் வழியாக ஈராக்கிற்குள் புகுந்து நகரங்களைக் கைப்பற்றி வருகின்றன. ஆட்சியாளர்கள் மீது கடும் அதிருப்தியில் இருந்த சுன்னத் பிரிவைச் சேர்ந்த பழங்குடிகள் அவர்களுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளனர்.
(எரியும்)