பொதுநலம் பேணுதலுக்கான நல்வழி நாத்திகமே. உதவிக்கரம் கிடைக்கப்பெறாதவர்களுக்கு உதவி செய்வதே ஒவ்வொரு நாத்திகரின் கடமையாகும். கடவுள் நம்பிக்கை ஒவ்வொரு மனிதரின் முயற்சியையும் பலவீனப்படுத்துகிறது. துயரங்கள் மானிடரைத் தொடர்கின்றன. மனிதரின் தேவை மற்றும் அவசியத்திற்கு அப்பாற்பட்டதுதான் கடவுள். அன்றாட வாழ்வியல் ஆதாரங்களைத் தேடுபவர்களுக்கு, தேவைப்படுகின்றவர்களுக்கு நாத்திகர்கள் தங்களது காலம், பணம், உழைப்பு ஆகியவற்றை நல்கிட முன்வரவேண்டும். பொதுநலமே ஒவ்வொரு நாத்திகரின் நெஞ்சக் குரலாகும். பிறர் நலம் மற்றும் மகிழ்ச்சியில்தான் தம் நலம் மேம்படும்.
கடவுளை அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றலை வணங்கி வழிபாடு செய்வதே மதம் என்பதாக சொல் அகராதி விளக்கம் அளிக்கிறது. மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த மானிட உடல் உள்ளதாக இந்துமதம் கூறுகிறது. மதத்தின் சாராம்சமாக இந்தக் கூற்றினை எடுத்துக் கொள்ளலாம். சாங்கியம், நியாயம் என்ற தத்துவப் பெயர்களால் இந்து மதம் நாத்திகத்தினைக் கூறுகிறது.
வழிபாடு செய்து, நன்கொடை அளித்துவிட்டால், நினைத்ததைச் செய்ய மதம் அனுமதிக்கின்றதா? நன்னெறி, அன்பு, நேர்மை, உண்மை, நீதி ஆகிய நற்பண்புகளை ஆன்மீக ஆர்வலர் கடைப்பிடிக்கின்றார்களா? பின் ஏன், புனித நாடு என தன்னைப் போற்றிக் கொள்ளும் இந்தியா உலகிலேயே ஊழல் விரித்தாடும் நாடுகளில் ஒன்றாக இருக்க வேண்டும்? கடவுள் என்பவர் எங்கும் நிறைந்தவராக, எல்லாம் அறிந்தவராக, எல்லாம் வல்லவராக, நல்லவராக இருப்பதாக ஆத்திகர்கள் கருதுகின்றனர். அப்படியென்றால், அச்சமூட்டும் துன்பங்க-ளும், கொடுமைகளும் உலகில் ஏன் நீடிக்க வேண்டும்? பரிசும், தண்டனையும், சொர்க்கமும் நரகமும், பாவமும் பரிகாரமும் பெரும்பாலான மதங்களில் வலியுறுத்தப்படுகின்றன. இதில் ஆன்மா என்பதை இந்துமதம் வினயமாக வலியுறுத்தி மறுபிறப்பைச் சேர்க்கிறது. வேறு சில மதங்களும் ஆன்மா பற்றி வலியுறுத்துகின்றன.
உங்களுக்கு ஒரு விசயம் தெரிந்திருந்தால் அதை நீங்கள் நம்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. 2+2 = 4 என்பது அனைவருக்கும் தெரியும். அது நம்பிக்கை சார்ந்தது அல்ல. கடவுள் மீதான நம்பிக்கை கடவுளை நம்பி, பிரார்த்தனை, சடங்கு, சாங்கித்தியங்கள், யாத்திரை என்பவை மூலம் வாழ்வு மேம்படுத்துவதாகக் கூறுகிறது. இக்கூற்று, மனிதன் 100 விழுக்காடு தன்னம்பிக்கை உள்ளவன் அல்ல; 100 விழுக்காடு வினையாற்றல் பெற்றவன் அல்ல என்பதையே உணர்த்துகிறது.
ஆத்திகத்தினை ஆட்டம் காண வைத்தவர் தந்தை பெரியார். பெரியாரது நாத்திகக் கருத்துப் பரப்பல், பாலியல் நீதி மற்றும் சமூக நீதித்தளங்களே தனித்தன்மை வாய்ந்தவை. 27 ஜூன் 1970 அன்று அய்.நா. மன்றத்தின் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு தந்தை பெரியாருக்குப் பாராட்டுப் பத்திரம் அளித்து மகிழ்ந்தது. பெரியார் – புத்துலகின் தீர்க்கதரிசி, தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்தத்தின் தந்தை மற்றும் அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற வழக்கங்கள், அடிப்படை மதவாதங்களுக்கு எதிரான முதன்மையான எதிரி என பாராட்டு வரிகள் அமைந்துள்ளன.
பெரியாரின் சீரிய பகுத்தறிவுக் கொள்கைகளை திராவிடர் கழகத்தின் தலைவர் டாக்டர். கி.வீரமணி வெகு நேர்த்தியாகப் பரப்பி வருகின்றார். பெரியாரின் கொள்கைவழித் தோன்றல் – வைரமாகத் திகழ்கின்றார். அவ்வாறே ஆர்வம் மிகு நாத்திகரான கோராவின் குடும்பத்தாரும் அவரது மகனார் டாக்டர் விஜயம் அவர்களும் சிறப்பான பணியினைச் செய்வது பாராட்டுக்குரியது.
தற்பொழுது நிலவும் பயங்கரவாதப் பதட்டம் மத நம்பிக்கையின் விளைவாகும். நவம்பர் 9, துயரம், அதனை ஏற்படுத்தியவர்களின் மூட நம்பிக்கையின் விளைவே. அத்தகைய செயல்களால் ஒருவர் சொர்க்கத்திற்குச் செல்லலாம் எனும் தவறான நம்பிக்கையின் விளைவே. முஸ்லீம் மதம் மட்டுமல்ல – அனைத்து மதங்களும் மடமையின் பங்குதாரர்களாக உள்ளன.
பகவத்கீதையில் உள்ள முரண்பாடுகள் ஒருவரைச் சிந்திக்கத் தூண்டும். இந்து மதத்தினை எதிர்த்து கேள்விக் கணைகளைத் தொகுத்திட வைக்கும். கீதையில் கிருஷ்ணன், அர்ஜூனனிடம் செயல்பாடு மிகவும் கொடுமையானது என உபதேசிக்கிறான். பிறிதொரு இடத்தில் செயல்பாட்டைவிட அறிவு மேம்பட்டது என கூறுகிறான். அப்புறம், அர்ஜூனனிடம் அனைத்தையும் துறந்துவிட்டு முனிவர் நிலைக்கு வருமாறு வற்புறுத்துகிறான். ஒரு கட்டத்தில் குழப்ப நிலைக்கு உள்ளான அர்ஜூனனை, தவம் செய்ய அறிவுறுத்துகிறான். அடுத்து, பலனை எதிர்பாராமல் கடமை ஆற்றிடச் சொல்கிறான். இறுதியாக போரில் வெற்றிபெற சண்டையிடக் கோருகிறான். ஆக கிருஷ்ணன் பலனை எதிர்பார்த்து அறிவுரை வழங்குகிறான். முரண்பாடுகளின் கூட்டாக பகவத் கீதை விளங்குகிறது. கிறிஸ்தவ மத பைபிளிலும் முரண்பாடுகளுக்குக் குறைவே இல்லை. எல்லா மதங்களிலும் பகுத்தறிவு என்பது நடைமுறைக்கு அப்பாற்பட்டதாகவே உள்ளது.
அனைவருமே கடவுள் நம்பிக்கை அற்றவர்களாகத்தான் பிறக்கின்றனர். குழந்தைகளிடம் தன்னம்பிக்கையினை வளர்த்து சுயமாகச் சிந்தித்து முடிவு எடுக்கும் ஆற்றலை வளர்க்காமல், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம், கடவுளை வழிபடச் சொல்லி வலியுறுத்திக் கொடுமைக்கு ஆளாக்கி வருகின்றனர். சிந்திக்கத் தெரிந்த அனைவருமே நாத்திகர்தான் என்பது எர்னஸ்ட் ஹெம்மிங்வே கூற்று. ஆனால், உலகில் சிந்தனை வயப்பட்ட, அறிவார்ந்த மக்கள் மத நம்பிக்கையாளர்களாக இருப்பது பரிதாபத்திற்கு உரியதாக உள்ளது.
பகுத்தறிவைப்போன்றே, அறிவியலும் தொழில்நுட்பமும், புரிந்து கொள்ளலில் உள்ள தேய்மான இடைவெளியைச் சரி செய்கின்றன. மனித மூளை பயன்படுத்தப்பட, பயன்படுத்தப்பட அறிவு வெளிச்சம் அதிகமாகும். அறியாமை இருள் விலகும். இதற்கு மனித வாழ்நாள் நீட்சியே சரியான எடுத்துக்காட்டாகும். நூறாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதரின் வாழ்நாளினைவிட தற்சமயம் மனிதர் வாழ்நாள் அதிகமாகி உள்ளது. இது பெருக்கம், வளர்ச்சி, பிரார்த்தனையால் வந்த விளைவல்ல; மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தினால் ஏற்பட்ட மாற்றமே.
மத அடிப்படை நிலையினை அறிவியலின் துணையுடன் எக்ஸ்ரே (ஆய்வு) எடுத்தால், அது உண்மை சார்ந்ததாக இல்லாமல் வெறும் நம்பிக்கை சார்ந்ததாக உள்ள நிலை விளங்கும். உலகில் மத நம்பிக்கைகள், குழப்பங்களை, பதட்டநிலைகளை உருவாக்கி வருகின்றன என்பதற்கு இதோ சில எடுத்துக்காட்டுகள்: பாலஸ்தீனம் (யூதர் – முஸ்லிம் போராட்டம்) வடக்கு அயர்லாந்து (பிராட்டஸ்டண்ட் – கத்தோலிக்கப் போராட்டம்) சிறீலங்கா (சிங்கள பௌத்தர் தமிழ் இந்துக்கள் போராட்டம்).
கல்வி என்பது மனித மனத்தினைத் திறக்கும் சாவி போன்றது. திறந்த மனது சிதறடிக்கும் மூடநம்பிக்கைகள், பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் விரும்பப்படுதல் , உடலைத் தானமாக வழங்குதலால், இறந்தபின் இறுதிச் சடங்குச் செலவினங்கள் மிச்சப்படுகின்றன, மருத்துவக் கல்விக்குப் பயன்படுகின்றன. என்றாலும், உடல் தானம் தருவோர் எண்ணிக்கையினை உயர்த்திட மூடநம்பிக்கை முட்டுக்கட்டையாக உள்ளது. பெண்ணுக்குக் கல்வி என்பது ஒரு குடும்பத்திற்குக் கல்வி அளிப்பதற்கு ஒப்பாகும். புரட்சிகரச் சிந்தனைகளை உருவாக்கும். குழந்தை பெற்றுக்கொள்வது ஒவ்வொரு பெண்ணின் உரிமையாகும். இந்த உரிமையின் நடைமுறைக்கு, மூட நம்பிக்கை இடர்ப்பாடாக இருக்கிறது. கடவுள் இருப்பது உண்மை என்றால் நாத்திகர்களின் கூற்றை மறுக்கவாவது ஒரு முறை தரிசனம் தர முன்வரலாமே? இதுவரை மனித இனம் வெற்றி கண்டதற்கு திறந்த மனப்போக்கு, விடாப்பிடியாகத் தொடர்ந்து மூளை ஆற்றலைப் பயன்படுத்தியதே அடிப்படை உண்மையாகும். இந்த உண்மைக்கு மாறாக எதுவும் நடக்கவில்லை என்பதற்குச் சவாலே விடலாம். மடமை, ஆச்சரியம், அற்புதம் என நேற்று கருதப்பட்ட வாழ்க்கைநிலை, இன்று வாழ்க்கை என்பது உண்மை நிலை என உணரப்பட்டு வருகிறது. நாளைய உண்மையின் மொத்த வெளிப்பாடாக உருவாகும் நிலைகள் தோன்றும். எடுத்துக்காட்டாக, இணையதளப் பயன்பாடு. தகவல் தொடர்பில் இணைய தளம் ஏற்படுத்தியுள்ள தாக்கம், நினைத்துப் பார்க்க முடியாத வியப்பாக உள்ளது. விண்கலம், விண்வெளி நிலையம், நிலாவில் இறங்குதல், நம்பமுடியாத அளவிற்கான மருத்துவ அறுவைச் சிகிச்சை முறைகள் _ அனைத்துமே அறிவியலின் ஆக்கப்பூர்வச் சாதனைகளாகும்.
அமெரிக்க நாட்டில் உள்ள கரன்ஸி நோட்டில் கடவுளை நம்புகிறோம் (மிஸீ நிஷீபீ ஷ்மீ க்ஷீ) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நீக்குவதற்குச் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பைபிளின் பெயரால் பதவி ஏற்கும் சம்பிரதாயமும் நீக்கப்படப் போராடுகிறோம். 5 கோடிக்கு மேலான அமெரிக்கர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக உள்ளனர். அரசும் தேவாலயமும் பிரிக்கப்பட போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்சமயம் தேவாலயங்கள் அதிகப்படியாக சலுகைகளை அரசிடமிருந்து பெற்று வருகின்றன.
திறன்மிக்க நாத்திகர்கள் வெறும் பேச்சைவிட செயல்படும் தன்மையினராக இருப்பர். மானிடரின் துயரங்களை மட்டுப்படுத்துவர். பணவசதி படைத்த பில்கேட்ஸ், வாரன் பஃபே, ஜார்ஜ் சோரஸ், டாடாக்கள், அம்பானி ஆகிய நாத்திகர்களின் நன்கொடையும். ஈடுபாடும் நாத்திகத்திற்குப் பலன் ஊட்டுவதாக உள்ளது. உதவி என்பது பணத்தின் மூலம் மட்டுமா, சேவை செய்திடும் மனப்பான்மை வளர்ந்திட வேண்டும்.
நாத்திகர்கள் சிறுபான்மையினர் எனும் நிலை மாறி, கடவுள் நம்பிக்கையினைத் துறந்து, பலப் பலர் நாத்திகராக மாறி, நாத்திகர் பெரும்பான்மையினர் எனும் நிலை உருவாக வேண்டும். நாத்திகம் என்பதே நடைமுறை உண்மைக் கூற்று என்பதை உலகம் உணரச் செய்திடுவோம்!
மொழியாக்கம்: கழுவாயி
Leave a Reply