நாத்திக அறிவியலாளர்
சர் ரோஜர் பென்ரோஸ்
– நீட்சே
ஆங்கிலேயரான சர் ரோஜர் பென்ரோஸ் ஒரு கணித இயல்பியலாளரும், கணித இயலாளரும், அறிவியல் தத்துவ இயலாளரும் ஆவார். ஆகக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கணித நிறுவனத்தில் கணித எமிரடஸ் ரவுஸ் பால் பேராசிரியராகவும், வாட்ஹாம் கல்லூரியின் எமிரிடஸ் ஃபெலோவாகவும் இருந்தவர் இவர்.
கணித இயற்பியலில் ஆற்றிய அரும் பணிக்காக நன்கு அறியப்பட்டவரான பென்ரோஸ் விண்வெளியியல் மற்றும் பொதுவான தொடர்புத் தத்துவத்திற்கு அளித்த பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். பிரபஞ்சத்தைப் பற்றி நாம் அறிந்திருப்பது என்ன என்பதை ஆய்ந்து அறிந்து வெளிப்படுத்தியமைக்காக 1988 ஆம் ஆண்டு இயற்பியலுக்காக ஸ்டீஃபன் ஹாகிங் அவர்களுடன் பகிர்ந்து கொண்ட வுல்ஃப் பரிசைப் போன்று எண்ணற்ற பரிசுகளும் விருதுகளும் இவர் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் எஸ்ஸக்ஸ் பகுதியில் கோல்செஸ்டர் என்ற ஊரில் 1931 ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதியன்று, லையனல் பென்ரோஸ் _ மார்கரட் லீத்ஸ் என்னும் இணையருக்கு ரோஜர் பென்ரோஸ் பிறந்தார். லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி பள்ளியிலும், பின்னர் அதே கல்லூரியிலும் கல்வி பயின்ற ரோஜர் பென்ரோஸ் கணிதப் பாடத்தில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார். மாணவராக இருந்தபோதே இவர் ஈ.எச். மூர்ஸ் அவர்களால் பொதுவாக விளக்கப்பட்ட மேட்ரிக் இன்வெர்ஸ் என்ற கணிதக் கோட்பாட்டை விளக்கமாக வெளியிட்டு அறிமுகப்படுத்தினார். ஆர்னி ஜெர்ஹேமர் என்பவரால் 1951 இல் மேலும் விளக்கம் அளிக்கப்பட்ட இக்கோட்பாடு பின்னாட்களில் மூர்-ரோஜர் இன்வெர்ஸ் கோட்பாடு என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஜான் கல்லூரியில், அல்ஜீப்ரா ஜியோமெட்ரியில் டென்சார் நடைமுறைகள் என்ற ஆய்வுக் கட்டுரையை, அல்ஜீப்ரா மற்றும் ஜியோமெட்ரி பேராசிரியர் ஜான் ஏ. டாட் அவர்களின் வழிகாட்டுதலில் எழுதி தனது ஆய்வு முனைவர் பட்டத்தை 1958இல் பென்ரோஸ் பெற்றார். விண்வெளியில் உள்ள கரும்புள்ளிகள் போன்ற தனித்துவம் பெற்றவை இறந்து கொண்டிருக்கும் மாபெரும் நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசை அழிவிலிருந்து தோற்றம் பெற இயலும் என்பதை இவர் மெய்ப்பித்துக் காட்டினார். பென்ரோஸின் இந்த ஆய்வுப் பணி பென்ரோஸ்-ஹாகின்ஸ் தனித்தன்மைக் கோட்பாடுகளை மெய்ப்பிக்க பெரிதும் பயன்படுத்தப்பட்டது. பொதுத் தொடர்புக் கோட்பாடு பற்றி மிக ஆழ்ந்து ஆராய்ந்து இவர் செய்த பணி கரும்புள்ளிகளைப் பற்றி நாம் நன்றாக அறிந்து கொள்வதற்கு ஒரு முக்கியமான காரணியாக விளங்கியது. கணித இயற்பியலில் தொன்மையான கணிதச் சமன்பாடுகள் பற்றிய அழகு நிறைந்த, ஆக்கபூர்வமான அணுகுமுறையுடன் கூடிய வழியில் ட்விஸ்டர் கோட்பாட்டை இவர் மேம்படுத்தினார்.
இயற்பியல் விதிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் வழிகாட்டும் நோக்கத்துடன் உண்மை நிலைக்கான பாதை: பிரபஞ்ச விதிகளுக்கான ஒரு முழுமையான வழிகாட்டி என்ற 1099 பக்க நூலை பென்ரோஸ் எழுதி 2004 இல் வெளியிட்டார். மிகைச் சிற்றளவு இயந்திரவியல் பற்றி இவர் ஒரு புதுமையான விளக்கத்தை அளித்துள்ளார். பெனிசில்வேனியா மாநில பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் மதிப்பு மிகுந்த இயற்பியல் மற்றும் கணிதவியல் பேராசிரியராக விளங்கிய இவர் வானியல் மறுஆய்வு பத்திரிகை ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
1959 இல் ஜோன் இசபெல் வெட்ஜ் என்ற அமெரிக்கப் பெண்மணியை மணந்ததன் மூலம் இவருக்கு மூன்று மகன்களும், அடுத்து அபிங்டன் பள்ளி கணிதத் துறைத் தலைவராக இருந்த வானசா தாமஸ் என்பவரை மணந்து கொண்டதன் மூலம் ஒரு மகனும் இவருக்கு உள்ளனர். எந்த மதத்திலும் நம்பிக்கை அற்றிருந்த பென்ரோஸ் தன்னை ஒரு நாத்திகவாதி என்றே கூறிக்கொண்டார். காலத்தைப் பற்றிய சுருக்கமான ஒரு வரலாறு என்ற படத்தில், இந்தப் பிரபஞ்சம் உருவானதற்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும் என்றே நான் கருதுகிறேன். ஏதோ தற்செயலாக இந்தப் பிரபஞ்சம் உருவாகி நிலைத்திருக்கிறது என்று கூறமுடியாது. இந்தப் பிரபஞ்சம் தற்செயலாகத் தோன்றி நிலைத்திருப்பதாகவே சிலர் கருதுகின்றனர். ஆனால் அவ்வாறு கூறுவது பிரபஞ்சத்தைக் காணும் ஒரு பயன்நிறைந்த அல்லது உதவிநிறைந்த வழியாக இருக்க முடியாது என்றே நான் கருதுகிறேன் என்று பென்ரோஸ் கூறியிருக்கிறார். இங்கிலாந்து மனித நேய சங்கத்தின் மதிப்பு மிகுந்த ஆதரவாளராக பென்ரோஸ் இருக்கிறார்.
– தமிழில்: த.க.பாலகிருட்டிணன்