இந்தியா – இந்த நிலையில்

ஆகஸ்ட் 01-15

எச்.அய்.வி. பதிப்பு

இந்தியாவில் 21 லட்சம் பேருக்கு, அதாவது பத்துப் பேர்களில் 4 பேர்களுக்கு எச்.அய்.வி. பாதிப்பு இருப்பதாக அய்.நா.வின் எச்.அய்.வி. மற்றும் எய்ட்ஸ் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் எச்.அய்.வி. பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் 35 கோடிப் பேர்கள் எச்.அய்.வி. நோய்க்கு ஆளாகியிருப்பதாகவும், இவர்களில் 19 கோடிப் பேர்கள் தங்களுக்கு எச்.அய்.வி. பாதிப்பு உள்ளது என்று தெரியாமல் இருக்கின்றனர்.

2013ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான எச்.அய்.வி. கிருமி தொற்று உள்ளவர்களில் சப் சஹாரா ஆப்ரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு 48 லட்சம் பேர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 21 லட்சம் பேர்கள் எச்.அய்.வி. பாதிப்புடன் உள்ளனர். இங்கு ஏற்படும் மரணங்களில் 51 விழுக்காடு எய்ட்ஸ் நோயுடன் தொடர்புடையனவாக இருக்கின்றன. ஆனால் 36 விழுக்காட்டினர்  மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளனர். மேலும், பாலியல் தொழிலாளர்கள் மூலமாக நோய் பரவுவது 10.3 விழுக்காட்டிலிருந்து 2.7 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அசாம், பீகார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் அதிகரித்துள்ளது. எச்.அய்.வி. பாதிப்பை ஒழிக்கும் திட்டம் 2030ஆம் ஆண்டுக்குள் முடிவுக்கு வரும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

 


வாய்ப் புற்றுநோய்

 

புகைப் பிடித்தல் மற்றும் புகையிலைப் பொருள்களை மெல்லும் பழக்கம் உடையவர்களைப் புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளது என்று எச்சரித்தாலும் யாரும் அதனைக் கண்டுகொள்வதில்லை.

புகையிலை தொடர்பான பழக்கங்களுக்கு அடிமையாகி நம் நாட்டில் 6 மணி நேரத்திற்கு  ஓர் உயிர் பலியாவதாக அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது. கிராமங்களில் இருப்பவர்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள் தங்களுக்கு வாய்ப் புற்றுநோய் வந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளாமலே இறந்துவிடுகின்றனர். அவர்களையும் சேர்த்தால் வாய்ப் புற்றுநேய் தாக்கி மரணமடைபவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

புற்று நோய் பாதிப்பினால் உயிரிழக்கும் நோயாளிகளில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் வாய்ப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாய்ப்புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் முதலிடத்திலும் மேற்கு வங்காளம், குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்தோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.

புகையிலை விவசாயம், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களில் வாழ்க்கைக்குத் தேவைப்படும் மாற்று ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்துவிட்டு, புகையிலை பயிரிடுவதை முழுவதும் தடை செய்தால் மட்டுமே இந்த இறப்பு விகிதத்தை ஒழிக்க முடியும் என புற்றுநோய் ஆராய்ச்சித் துறை நிபுணர்களும் சமூக ஆர்வலர்களும் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *