ஒவ்வொரு ஆண்டும் குறித்த நாளில் வந்துவிடுகிறது சுதந்திர தினம்!

ஆகஸ்ட் 01-15

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரு நிகழ்வுகள் மட்டும்தான் கலையாகும் என்றில்லை. அன்றாடத்தின் அனுகணம்கூட கலைதான் என்று கவிஞர் உதயகுமார் இந்த நூலுக்கான தனது, வாழ்த்துரையில் குறிப்பிட்டிருந்தார். அது உண்மைதான் என்பதை, பால்ய வீதி நெடுகிலும் காண முடிகிறது.

பள்ளிப் பருவத்தின் நிகழ்வுகளை,
தபால்பெட்டி டவுசரோடு
பால்ய வீதிகளில் அலைந்திருக்கிறேன்
கேட்பார் யாருமின்றி!
இன்று சிமெண்ட் மூடிக் கிடக்கிறது…
எதிர்காலத்தில், தொல்பொருள்துறை
தோண்டிப் பார்த்தால், படிமங்களாய்
கிடைக்கக்கூடும் அத்துணை குதூகலங்களும்

– என்று கவிதையாக்கித் தரும்போது, நமக்குள் பெருமூச்சு எழுவதைத் தடுக்க முடியவில்லை, ரேடியோ பெட்டி _ என்ற கவிதையில், கால மாற்றத்தை வெகு நயத்தோடு வடித்துக் காட்டுகிறார்.

குழந்தைகளைப்பற்றி எழுதும்போது, குழந்தையாகவே மாறி அவர்களின் அருகமர்ந்து பார்த்ததுபோல எழுதியிருக்கிறார். ஓரிடத்தில்,

வானவில் வரையக் கற்றுக் கொடுத்தேன் குழந்தைக்கு!

வானவில் பார்த்து குதூகலிக்க கற்றுக் கொடுத்தது குழந்தை! _ என்ற கவிதையைப் படிக்கும்போது, அட! என்று புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வது போன்ற உணர்வு வருகிறது.

குழந்தையாக இருந்தவர் சட்டென்று சுதந்திர தினத்தை எள்ளல் தொனியோடு ஒரு தெறிப்பில்  சுட்டிக் காட்டிவிடுகிறார். பாருங்கள் இந்தக் கவிதையை.

வயல்வெளிகள் வறண்டாலும் திறந்துவிடப்படாத காவிரித் தண்ணீரைப் போல் அல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் குறித்த நாளில் வந்துவிடுகிறது சுதந்திர தினம்!

நம் சிந்தையில் ஏதேதோ எண்ணங்களைத் தூண்டுகிறது. அறிவியல் மனப்பான்மையோடு வாழவேண்டும் என்பதை,

இருக்கையைக் கைப்பற்றும் அறிவிக்கப்படாத போரில், கண்டுகொள்ள யாருமில்லை; இருக்கையின்றித் தவிக்கும் பூமியை!

_ என்று எழுதி, பூமி மிதந்து கொண்டிருப்பதை உணராமல் வாழும் நம் நிலையைக் கேலிக்குள்ளாக்குகிறார். அதோடு, இருக்கைக்காக நடக்கும் போர் _ என்றும், அதுவும் அறிவிக்கப்படாத போர் என்றும் நயத்துக்கும் குறைவு வந்துவிடாமல் எழுதியிருப்பதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
சட்டென்று கவிஞர்,

முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒருவர்கூட வருவதில்லை; விவாகரத்துப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க!

_ என்று எழுதி, மூடநம்பிக்கைகளின் முதுகில் சாட்டையால் சுளிர் சுளீர் என்று விளாசுகிறார். உண்மை படும் பாட்டை பொய் என்ற கவிதையில்

செம்பு கலந்த பொன்னைப் போல, அத்தனை அழகாய் இருப்பதில்லை பொய் கலவாத உண்மை

– என்று உவமை அழகோடு சொல்லி, நம்மையும் அந்த ஆழமான உண்மையை (நடைமுறையை) எண்ணி வெட்கப்பட வைக்கிறார்.

மொத்தத்தில் கவிஞர் வத்திராயிருப்பு தெ.சு.கவுதமனின்  பால்ய வீதி எனும் கவிதைத் தொகுப்பு, படித்து ருசித்து மற்றவர்க்கும் படைக்க வேண்டிய படையல்.

தனது மூன்றாவது கவிதைத் தொகுப்பின் மூலம் நம்மையும் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் பால்ய வீதிக்குள். –

– உடுமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *