கல்லணையும் கற்கோயிலும்

ஆகஸ்ட் 01-15

– பரமத்தி சண்முகம்

 

கரிகாலனும் இராஜராஜனும் சந்தித்தால்…

கரிகாலன்: ஏன் இராஜராஜா சோகமாய் அமர்ந்திருக்கிறாய்? எதைப்பற்றிச் சிந்திக்கிறாய்?

இராஜராஜன்: கரிகாலரே, நீர் கல்லணையைக் கட்டிவிட்டு கரை காணாத மகிழ்ச்சியோடு இருக்கிறீர். நானோ உலகமே வியக்கும் வண்ணம் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினேன். அந்தக் கோவிலைக் கட்ட நான் எவ்வளவு பாடுபட்டிருக்கிறேன். இலட்சக்கணக்கான என் குடிமக்களை வாட்டி வதைத்திருக்கிறேன்.

இவ்வளவும் கட்டி முடித்த என்னை நான் கட்டின கோவிலுக்குள் விடாமல் வெளியிலேயே ஒரு காவல்காரனைப் போல நிற்க வைத்துவிட்டார்கள். என்னை எப்போதும் சுமக்கும் நந்திவாகனம்கூடக் கோவில் பிரகாரத்துக்குள் கம்பீரமாக அமர்ந்திருக்கிறது. நான்தான் காவல்காரனைப் போல் கால்கடுக்க நின்று கொண்டே இருக்கிறேன். நான் என்ன பாவம் செய்தேன்.

கரிகாலன்: நீ செய்த பாவம் கொஞ்சமா? இந்தப் பெரியகோவிலைக் கட்டி முடிக்க இலட்சக்கணக்கான ஏழைக் குடிமக்களை வாட்டி வதைத்து அவர்கள் இரத்தத்தைச் சேறாக்கி, எலும்புகளை உரமாக்கி கோபுர உச்சியிலே ஒரு விமானம் என்ற பெயரால் தஞ்சையிலிருந்து ஏழு மைல்களுக்கு அப்பால் சாரப் பள்ளத்திலிருந்து சாரம் அமைத்து பெரிய கோபுரத்துக்கு அழகு ஊட்டுவதற்காக விமானம் அமைக்க அவ்வளவு பெரிய பாறாங்கல்லைக் கொண்டு வந்து கோபுரத்தின் உச்சியில் வைத்தாயே அது எவ்வளவு திறமையான செயல். ஆனால், அதற்கு மக்களை நீ எவ்வளவு கஷ்டப்படுத்தினாய். நான் அப்படிப்பட்ட பாவச் செயல்களைச் செய்யவில்லையே, அப்படிப் பெரும்பாடுபட்டு நீ எழுப்பிய கோவிலுக்குள் இருக்கும் பிரகதீசுவரனை அருகில் சென்று உன்னால் வணங்க முடியுமா? முடியாதே உனக்கு இந்தத் தண்டனை தேவைதானே.

இராஜராஜன்: ஆ… (கோபமாக) இது பெரிய அநியாயம். இதை நான் அனுமதிக்க முடியாது. (பல்லை நற நற வென்று கடித்தவாறு) நான்  எழுப்பிய கோவிலில் நான் சென்று வழிபட முடியாதா? இது அக்ரமம், அநியாயம்.

கரிகாலன்: பார்த்தாயா? புரோகிதர்களும் பார்ப்பனர்களும் குருமார்களும் சாத்திரத்துக்கு விரோதமாக சூத்திர மன்னர்கள் கோவிலுக்குள் நுழைய முடியாது என்று தீர்மானித்து இராஜராஜன் மன்னனேயானாலும் இந்தப் பெரிய கோவிலைக் கட்டியவனேயானாலும் மனு சாஸ்திரப்படி பிராமணர்கள்தான் கோவிலுக்குள் இருப்பார்கள்;

இராஜராஜனே, நீ எவ்வளவு கீர்த்தி பெற்றவனாக இருந்தாலும் சூத்திரன் சூத்திரன்தான் என்று உன்னை கோவில் பிரகாரத்துக்குள்கூட நுழைய விடாமல் தடுத்துவிட்டார்கள்.

இராஜராஜன்: அது போகட்டும், என்னை ஏன் கோவிலுக்கு வெளியே எரிக்கும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் நிற்க வைத்தார்கள்?

அன்று பாலாபிஷேகமும் பஞ்சாமிர்த அபிஷேகமும் செய்தார்கள். இன்று காக்கையும், குருவியும், கண்ட கண்ட பட்சிகளும் பறவைகளும் எச்சமிட்டுச் செல்கின்றனவே, என்னை அசிங்கப்படுத்தவா இப்படிச் செய்தார்கள். பொதுமக்கள்கூடக் கவலைப்படவோ இரக்கப்படவோ செய்வதில்லையே.

கரிகாலன்: இராஜராஜா நீ உன் குடிமக்களைப் போற்றி அவர்களை மகிழ்ச்சியுடன் வாழ வைக்காமல் புரோகிதப் பார்ப்பனர்களுக்கு நிலபுலன்களைத் தானம் செய்தாய், கிராமம் கிராமமாக எழுதி வைத்தாய். மகாதானபுரங்கள், உத்தமதானபுரங்கள் என அவ்வளவும் செய்து அவற்றைப் பராமரிக்கிற பொறுப்பையும் நீயே ஏற்றுக் கொண்டாயே, ஆனால், உனது ஆட்சிக்குட்பட்ட ஏழை எளியவர்களைக் காப்பாற்ற என்ன செய்தாய்?

என்னைப் பார், குடகிலிருந்து புறப்பட்ட காவிரியைக் கரைபுரண்டு ஊர்களை நிலபுலன்களை நிரவிக் கொண்டு போகாமல் தேக்கி அணைக்கட்டு ஒன்றை அமைத்து கல்லணையிலிருந்து முறையாக தஞ்சைத் தரணி முழுதும் பாய்ந்து வளம் கொழிக்கும்படியாகச் செய்துவிட்டேன். மக்கள் முப்போகமும் சாகுபடி செய்து நெல் விளைத்து சுபிட்சமாக வாழ வைத்துவிட்டேன். இப்போது நிம்மதியாக இருக்கிறேன். அதுமட்டுமல்ல, நீ பிரகதீசுவரனுக்கு மாபெரும் கோவிலைக் கட்டிவிட்டாய்.

உனது ஆட்சியில் உழைக்கும் ஏழை மக்களுக்கு என்ன செய்தாய்? ஊர் ஊருக்குக் கல்விச் சாலை அமைத்தாயா? அங்கு சோழன் பள்ளிக்கூடம், சோழன் நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளை ஏற்படுத்தினாயா? ஏழை-_எளிய உழைக்கும் மக்களுக்குக் கல்வியறிவு ஊட்டினாயா?

மக்களுக்கு எதுவும் செய்யாமல் கோவில்களுக்குத் தானதருமம் செய்து அங்கே உன் பெயரால் கல்வெட்டுகளை நாட்டிக் கொண்டாய். அதைவிட மக்கள் என்ன பயன்பட்டனர்?

இராஜராஜன்: ஏன்? எனக்குத்தானே ஆண்டுதோறும் சதயத் திருவிழா நடத்துகிறார்கள். நாடே கண்டு அதிசயிக்கிறதே, அதை நீ பார்த்ததில்லையா?

கரிகாலன்: அட பைத்தியக்காரா, திருவிழா, தேர், உற்சவம், ஊர்வலம் என உன்னையும் ஊரையும் ஏமாற்றிக் கொட்டமடிக்கும் பார்ப்பனர்களால், இப்படி நடத்தப்படும் திருவிழாக்களிலும் அவர்களுக்குத்தானே இலாபம். உன் பெயரில் கோவில் மண்டகப்படி, திருவீதிஉலா என நடத்துவதால் எத்தனை பொதுமக்கள் பயனடைந்துள்ளனர் என்று நீ எண்ணிப் பார்த்ததுண்டா?

இராஜராஜன்: ஆமாம், ஆமாம், இப்போதுதான் புரிகிறது பார்ப்பனர் சூழ்ச்சி.

கரிகாலன்: அதுமட்டுமல்ல, சோழ இளவரசர்களில் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத ஒருவன் இருந்தானே அறிவாயா? நான் கல்லணையைக் கட்டினேன், நீ கற்கோவில்களைக் கட்டினாய், உன் மகன் இராசேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தில் அற்புதமான கற்கோவில்களை அழகுற அமைத்தான், கலையுணர்வும், எழில்வடிவும் பொங்கிடும் அந்தக் கலைக் கோவில்களால் உன் குடிமக்கள் அடைந்த பலன் தான் என்ன? எல்லாமே காட்சிப் பொருளாகத்தானே நிற்கின்றன. இராஜராஜா, உன் கலைத்திறன்கள் கோவில்களாய் நிற்கின்றன. மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்கள் உருவாக்கிய குடைவரைக் கோவில்கள் காண்போருக்குக் கதை சொல்கின்றன;  ஆனாலும் என்ன பயன்?

இராஜராஜன்: தாங்கள் அரிதாக அமைத்த கல்லணை காவிரி நீரைத் தேக்கி தஞ்சைத் தரணியை நெற்களஞ்சியமாக்கியது. மக்கள் நிம்மதியாக உண்டு மகிழ்கின்றனர். கல்லணையால் வையம் செழிக்கின்றது.

நாங்கள் கட்டிய கற்கோவில்கள் கலை வளர்த்து காவியம் படைக்கும் என்பதை மட்டும்தான் கருதினோம். அதனால் மக்களுக்கு என்ன பயன்? என்று எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டதை இப்போது தான் உணர்கிறோம். நன்றி கரிகாலரே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *