பாலஸ்தீனப் படுகொலை

ஆகஸ்ட் 01-15

ஈழமும்,காசா முனையும் :

அரச பயங்கரவாதத்தின்
கோர முகங்கள்!

– அல்ஃபினா

போர் மூண்டுவிடும்போது உயிருக்கு அஞ்சி சர்வதேச எல்லை வழியாக அண்டை நாடுகளில் அடைக்கலம் தேடும் வழக்கம் உலகெங்கும் உள்ளது. அப்பாவி சிவிலியன்களுக்கு வேறு என்ன வழி இருக்க முடியும்? அதற்கும்கூட முடியாமல் அடைக்கப்பட்டிருக்கும் பெரும்பேறு வாய்க்கப்பட்ட மக்களினம் ஒன்று உண்டு.

 

ஈழத் தமிழர்கள் போலவே ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்றுத் தொடர்ச்சி கொண்ட பாலஸ்தீனர்கள்தான் அந்த மக்களினம். தாய்மண்ணை இழந்து குற்றுயிரும் குலையுயிருமாகக் கதறும் பாலஸ்தீன காசா முனையின் கோரத்தை வீடியோ விளையாட்டுக் காட்சிகளைப் போல இஸ்ரேல் மட்டுமல்ல, உலக நாடுகள் மட்டுமல்ல, அய்.நா. மாமன்றமும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. வீடியோ விளையாட்டுகளில் இவ்வளவு வக்கிரக் காட்சிகளை இடம்பெறச் செய்து பார்ப்பவர்களைப் பதைபதைக்கச் செய்யலாமா என அப்பாவியாகக் கேட்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

உயிரைப் பொருட்படுத்தாமல் காசா முனைக்குச் சென்று போரில் காயம்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்து வரும் நார்வே மருத்துவர் டாக்டர் மேட்ஸ் கில்பர்ட், ஒபாமாவுக்கு எழுதியுள்ள திறந்த மடலில் கேட்கிறார், திரு.ஒபாமா, உங்களுக்கு இதயம் இருக்கிறதா?

ஒரே இரவு மட்டும் எங்களுடன் அல்_-ஷிபா மருத்துவமனையில் தங்குங்கள், நிச்சயமாக அது வரலாற்றையே மாற்றியமைத்துவிடும் என உறுதியாக நம்புகிறேன். இதயமும், அதிகாரமும் வாய்க்கப் பெற்றவர்கள் ஒரே இரவு தங்கினால் போதும். பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்படும் கோரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு உறுதிபூணாமல், ஷிபா மருத்துவமனையிலிருந்து அகன்றுவிட முடியாது. ஆனால் இதயமும், கருணையும் அற்றவர்கள் காசா முனையைப் படுகொலை செய்ய கனகச்சிதமாக கணக்குத் தீட்டியிருக்கிறார்கள். ரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்து இரவையே நனைக்கிறது…

எங்கும் மரண ஓலம், குழந்தைகளின் சிதைந்த உடல்கள், கையற்றுக் கதறும் பெற்றோர்கள்.. இஸ்ரேல் எனும் ஆக்டோபசின் பிடியில் சிக்கியிருக்கும், காசா முனை எனப்படும் பாலஸ்தீனத் துண்டுநிலத்தின் நிலை இதுதான். போர் நடைபெறாத காலங்களிலோ அது திறந்தவெளிச் சிறைச்சாலை. இஸ்ரேல் எனும் நச்சுவிதையை பாலஸ்தீன பூமியில் விதைத்த இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கேமரூனே மனம் பொறுக்காமல் சொன்ன சொற்கள் இவை:

இப்போது இஸ்ரேல் ராணுவம் வான்வழியாகவும், தரை வழியாகவும் கோரத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள நிலையில், அய்.நா. அமைத்துள்ள முகாம்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அடைக்கலம் புகுந்துள்ளனர். சாரை சாரையாக அஞ்சி ஓடிவரும் மக்களுக்கு இனி இடமில்லை எனுமளவிற்கு அது நிரம்பி வழிகிறது. உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளைப் பெற இனி உலக நாடுகள் மனது வைத்து நிதியளித்தால்தான் உண்டு என்று அய்.நா.வே கூறிவிட்டது.

சர்வதேச விதிகளைக் கழிவறைக் காகிதம் என நினைத்து, அய்.நா. முகாம் என்றும் பாராமல், முன்னர் ஒருமுறை இஸ்ரேல் குண்டுவீசித் தகர்த்திருப்பதால், எங்கிருந்தாலும் சாவு நிச்சயம் என உறுதியுடனிருக்கும் பாலஸ்தீனர்கள் போர்முனைகளில் அலைந்து திரிகிறார்கள்.

கதறும் காசா முனை!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும் பகுதி என அய்.நா. வர்ணிக்கும் காசா முனை (gaza Strip), 25 மைல் நீளமும், சில மைல் அகலமும் கொண்ட செவ்வக நிலப்பரப்பு. முள்ளிவாய்க்கால் போன்ற துண்டுநிலம். சுற்றிலும் காங்கிரீட் சுவர்களையும், முள்வேலிகளையும் எழுப்பி வைத்திருக்கிறது இஸ்ரேல். உள்ளே 20 லட்சம் பேர் நிரம்பி வழிகிறார்கள்.

எதற்காகவும் வெளியே செல்ல முடியாது. ஒருங்கிணைந்த பாலஸ்தீன அரசு மேற்குக்கரை நகரமான ரமல்லாவில் பதவியேற்றுக்கொண்டபோது, காசா முனையிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 4 அமைச்சர்கள் அங்கு சென்று பதவியேற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம், மேற்குக்கரை என்பது அனாதையாக இருக்கும் மற்றொரு துண்டுநிலம் என்பதோடு, இரண்டுக்கும் நடுவே இருப்பது இஸ்ரேலின் நிலப்பரப்பு. சமையல்கட்டுக்கும், படுக்கையறைக்கும் நடுவே இருப்பது வேறொருவரின் வீடு; சுற்றிக்கொண்டும் செல்லமுடியாமல் முள்வேலி தடுப்பு என்றால், பாலஸ்தீனர்களின் இந்தப் புவியியல் அவலம் புரியாமல், இஸ்ரேல் நடத்தும் வெறியாட்டத்தை உங்களால் எப்படி விளங்கிக் கொள்ள முடியும்?

பாலஸ்தீன சுயாட்சிப் பிரதேசம் என்று சொல்லப்படும் காசா முனை மற்றும் மேற்குக்கரைப் பகுதிகள் இணைந்துதான் எதிர்கால பாலஸ்தீன அரசாக அமைய வேண்டும். பாலஸ்தீனர்கள் இருந்தால்தானே அவர்களுக்கு அரசு என மனக்கணக்குப் போடுகிறது இஸ்ரேல். அதன் விளைவுதான் இப்போது நடைபெற்று வரும் தாக்குதல். மேற்குக்கரையில், பாலஸ்தீனர்களின் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத யூதக்குடியிருப்பில் இருந்து, ஜூன் 12ஆம் தேதி, பதின்ம வயது யூதச்சிறார்கள் 3 பேர் காணாமல் போகிறார்கள்; ஜூன் 30ஆம் தேதி அவர்கள் சடலமாக கண்டெடுக்கப்படுகிறார்கள். இடையில், அந்தச் சிறார்களைக் கடத்தியது காசா முனை ஆட்சியாளர்களான ஹமாஸ் அமைப்பினர்தான் என்கிறது இஸ்ரேல் அரசு; எத்தகைய செயலுக்கும் பொறுப்பேற்கும் கொள்கை கொண்ட ஹமாஸ், தாங்கள் அந்தச் சிறார்களைக் கடத்தவில்லை என அடித்துச்சொல்கிறது.

பாலஸ்தீனத்தில் ஒருங்கிணைந்த அரசு அமைக்கப்பட்டதுடன், அய்.நா.வில் நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்து கோருவதையும் கண்ணில் நெருப்புப் பொறி பறக்கப் பார்த்து, தாக்குதலுக்குத் தருணம் பார்த்துக் கொண்டிருந்த இஸ்ரேலுக்கு இதைவிட உவப்பான காரணம் தேவையில்லை. ஹமாஸ் மீது கொலைக்குற்றம்சாட்டி முதலில் வான்வழித் தாக்குதல்; பிறகு தரை வழியாகவும் தாக்குதல். இஸ்ரேல் போர் தொடுத்திருக்கிறது என்கிறார்கள், கொல்லப்படுபவர்களோ குழந்தைகள், பெண்கள், முதியவர்கள்; மக்கள் நடமாடும் கடற்கரை, மருத்துவமனைகள், மசூதிகள் மீதுதான் குண்டுவீச்சு. ஜுலை 23ஆம் தேதி வரை கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 657; படுகாயமடைந்தவர்கள் பல்லாயிரம்.

இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றி துணிச்சலாகப் பேசிய அதே நவநீதம் பிள்ளைதான், இப்போதும் அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் சார்பில் இஸ்ரேலின் போர்க்குற்றங்களையும் கண்டிக்கிறார். அரச பயங்கரவாதத்தின் கோரமுகத்தை இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு ஏற்கெனவே பலமுறை காட்டியிருக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுத்திருப்பதாகச் சொல்லும், பழம்பெரும் ஜனநாயக நாடான அமெரிக்காவோ உக்ரைன் விமானத்தை வீழ்த்தியதாகச் சொல்லி ரஷ்யாவுக்கு எதிராக மேற்குலகத்தைத் திரட்டி தொடைதட்டிக் கொண்டிருக்கிறது. அய்.நா.பாதுகாப்புக் கவுன்சிலும் அதற்காகக் கூட்டப்பட்டு பொருளாதாரத் தடைக்குத் தயாராகிவிட்டார்கள்.

இதுவும்கூட அரச பயங்கரவாதத்தின் இன்னொரு முகம்தான்.

ஈழப் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு மறுக்கிறார் சிங்களப் பேரினவாத ராஜபக்சே. விசாரணைக் குழுவுக்கு விசாகூடத் தரமுடியாது என்கிறது உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவை ஆளும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு. ஈழம், பாலஸ்தீனம், காஷ்மீரம் என எங்கெங்கும் அரச பயங்கரவாதத்தின் கோரமுகங்கள்; போர்முனையிலிருந்து முன்னெச்சரிக்கையாக வெளியேறியிருக்கலாமே, ஹமாஸ் பொதுமக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறது என நீலிக்கண்ணீர் வடிக்கும் அறிவாளிகளே, எங்கு செல்வது, சொல்லுங்கள் என்ற பாலஸ்தீனர்களின் அழுகுரல் உங்கள் செவிப்பறையை எட்டவில்லையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *