கேள்வி : மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தில் கோடிக்கணக்கான சாமான்ய மக்களுக்கு ஏதேனும் பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கலாமா?
– சா.கோவிந்தசாமி, பெரம்பலூர்
பதில் : சாமான்ய மக்களுக்கு விடியல் என்பது விலைவாசி குறைப்பு, வேலையில்லா திண்டாட்டம் தீரும் வகையான பிரச்சினைகள் இல்லை. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட உணவுச் சட்டம் ஊமையாக இருப்பதால் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு பசி தீரவும் வழி அதிகம் இல்லை!
கேள்வி : தமிழக முதல்வரும் ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் எந்த சட்டமன்ற மரபுகளையும் விதிகளையும் பின்பற்ற வேண்டியதில்லை என பேரவைத் தலைவர் முடிவு எடுத்து வருவது குறித்து? – சா.கோவிந்தசாமி, பெரம்பலூர்
பதில் : எதிர்க் கட்சிகளை ஆளுங்கட்சியும் சட்டமன்றத் தலைவரும் நடத்தும்முறை, ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதோ என்ற அய்யத்தை ஏற்படுத்துகிறது!
கேள்வி : தமிழ்நாடு தேர்வு ஆணையம், உயர் நீதிமன்றத்தில் குறிப்பிடும்பொழுது தேர்வு செய்யப்படாத போட்டியாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நியாயமான தவறு என குறிப்பிட்டுள்ளமை தேர்வாணையத்தின் முறைகேடுகளைத் திசை திருப்பும் முயற்சி இல்லையா? – கோ.நளினி, லப்பைக்குடிகாடு
பதில் : அதென்ன நியாயமான தவறு; நியாயமில்லாத தவறு என்ற விசித்திர விளக்கம்? தவறு எப்படி இருந்தாலும் தவறுதானே!
கேள்வி : கடந்த 2012ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனக்குத் திருமணமானதை பிரதமர் நரேந்திர மோடி மறைத்தது குற்றம்தான், எனினும் காலதாமதமாக குற்றம் கண்டறியப்பட்டிருப்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட முடியாது என விசித்திரமான அறிவிப்பை அகமதாபாத் நீதிமன்றத்தில் இவ்வழக்கிற்கான மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.ஷேக் தெரிவித்துள்ளாரே?
– மன்னை சித்து, மன்னார்குடி
பதில் : குற்ற வழக்கில் லிமிட்டேஷன் _ கால அளவு குறியீடு உண்டா? எவ்வளவு, எந்தச் சட்ட விதியின் கீழ் என்பதை அந்த நீதிபதி தெளிவுபடுத்தியிருந்தால் நல்லது! நீதி படும்பாடு வேடிக்கையாக உள்ளது!
கேள்வி : மண்ணெண்ணெய் வீரர் ம.பொ.சி., மண்ணுருண்டை மாளவியா போன்ற
சொலவடைகள் தோன்றக் காரணமான நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ளலாமா?
– சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
பதில் : மண்ணெண்ணெய் வீரர் ம.பொ.சி: தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் அவர்கள், 1952இல் தந்தை பெரியார் இயக்கமும் தி.மு.க.வினரும் ரயில்வே நிலைய பெயர் விளம்பரப் பலகைகளில் மேலே எழுதப்பட்டிருந்த ஹிந்தி எழுத்துகளைத் தார் கொண்டு அழித்து, இந்தித் திணிப்புக்கு எதிரான கிளர்ச்சியை நடத்தும்போது அதற்கு எதிராக மண்ணெண்ணையை எடுத்துக் கொண்டு வந்து தாரின் மேல் மண்ணெண்ணெய் பூசி தாரை அழித்து, ஹிந்தி ஆதரவுக்கு எதிர்க் கிளர்ச்சி செய்தார். அவர் காப்பதாகக் கூறிய தமிழ்ப் பண்பாடு, மொழி வளர்ச்சிக்கு எதிரான செயலைச் செய்தார். (சேலம் ரயில்வே நிலையத்தில் ம.பொ.சி. மண்ணெண்ணெய் டின்னோடு வந்து அழித்து, தமிழ்ப் பற்றைக் காட்டினார்!).
மண்ணுருண்டை மாளவியா: ஹிந்துமகா சபைத் தலைவரும், காசி ஹிந்து பல்கலைக்கழக நிறுவனருமான மதன் மோகன் மாளவியா அவர்கள் சரியான சனாதனவாதி. ஹிந்துக்கள் கடல் தாண்டக் கூடாது; தாண்டினால் மத சாஸ்திர விரோதம் என்று லண்டன் சென்ற அவர், மண்ணை எடுத்துத் தன்னுடன் வைத்துக் கப்பலில் பயணம் செய்து கடல் தாண்டினார். அது முதல் அவரை மண்ணுருண்டை மாளவியா என்று குறிப்பிட்டு வருகின்றனர்- பழைய வரலாறு அறிந்தோர்!
கேள்வி : முதல் தலைமுறை வாக்காளர்களான இரண்டுங்கெட்டான் இளசுகளைக் குறிவைத்தே நவீன தகவல் தொழில்நுட்பம் மூலம் உண்மைக்கு மாறான பிரச்சாரம் செய்து எதிரிகள் வெற்றி கண்டிருப்பது உண்மையெனில், அதே பாணியில் நமது இயக்கங்களும் (தி.க., தி.மு.க.) செயல்பட்டு எதிரிகளின் சவாலை முறியடித்தாலென்ன? – கு.நா.இராமன், சென்னை
பதில் : தவறான வழியை ஒழிக்க தவறான பாதையே சரி என்பது, பகுத்தறிவுவாதிகள் ஏற்க முடியாத தீர்வாகும். எனினும், அதே தொழில்நுட்பத்தின் மூலம் உண்மையை மக்களுக்குக் கொண்டு வருவோம்.
கேள்வி : தமிழகத்தில் பள்ளி செல்லாப் பிள்ளைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இருமடங்காக கூடியுள்ளது (27,400) வியப்பளிக்கிறது. பள்ளியில் சேர்ந்த குழந்தைகளும் இடையில் நின்றுவிடும் நிலை! தொடக்கக் கல்வி அவலமாகி வருவது பற்றி….? – வே.சொர்ணம், ஊற்றங்கரை
பதில் : இதை பள்ளிக் கல்விச் செயலாளர், கல்வி அமைச்சர், முதல்வர் ஆகியோருக்கு அர்ப்பணிப்போம் ஆக! பரிகாரம் தேடிட வேண்டும்.
கேள்வி : உயர் நீதிமன்ற ஆணையை அதிகாரிகள் மதிக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக நீதியரசர் கிருபாகரன் கூறியுள்ளாரே?
– க.தங்கம், சேலம்
பதில் : பல வழக்குகளில் இது நடைபெறுகிறது. கடுமையான அதிர்ச்சி வைத்தியம் தேவையே!
கேள்வி : தமிழர்கள் இந்து மதத்தைத் தழுவாமல் பவுத்த மதத்தைத் தழுவியிருந்தால் தமிழர்கள் நிலை என்னவாயிருக்கும்?
– ப.அருள்மொழி, வாணியம்பாடி
பதில் : இன்றைய பவுத்தமும் மதமாகி சடங்குகளின் தொகுப்பாக உள்ளதால் மாறுதல் வராது. உண்மை புத்தி மார்க்கத்தைத் தழுவினால் அறிவு வளர்ந்திடும்.
கேள்வி : விஜயதசமியில் குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்கும் வியாபாரத்தை நிறுத்தி, காமராஜர் பிறந்த நாள் தினத்தை குழந்தைகள் கல்வி தினம் என செய்தால் என்ன? – சின்னவெங்காயம், கலைஞர் கருணாநிதி நகர்
பதில் : நிச்சயம் பிள்ளைகளும் அதிகம் சேருவர்; மூட நம்பிக்கை ஒழிந்து, தன்னம்பிக்கை வளர வழிவகுக்கும் அது!
கேள்வி : ஆகா, ஓகோ என்று கூறப்பட்ட மோடியின் ஆரம்பமே விலைவாசிகள் கடுமையாக உயர்த்தப்பட்டு, அதற்கு விளக்கமாக கசப்பு மருந்து சாப்பிட்டே ஆக வேண்டும் என விளக்கம் வேறு கூறப்படுகிறதே?
– கு.பழநி, புதுவண்ணை
பதில் : போகப் போகப் புரியும்!- ஒப்பனைகளும் ஓங்காரக் கூச்சல்களும் ஒருநாள் நின்று தானே போகும்.
கேள்வி : அ.தி.மு.க.வில் அகில என்பதும், திராவிட என்பதும் சமஸ்கிருத வார்த்தைகள் என்று இல.கணேசன் கூறியிருக்கிறாரே, இதுகுறித்து தங்களின் கருத்து? – பா.ஆனந்தி, வியாசர்பாடி
பதில் : அனைத்தும் தமிழ்; திராவிடமும் தமிழ். -ஆர்.எஸ்.எஸ் – சமஸ்கிருதம் அல்ல; ஆங்கிலம்! இல்லையா?