வடமொழிக்கு வக்காலத்து

ஆகஸ்ட் 01-15

-தந்தை பெரியார்

இன்றுகூட சூத்திரரான திராவிடர் 100-க்கு 8 அல்லது 10 பேர்தானே படித்திருக்கிறோம்.  நாம் வரி கொடுக்கவில்லையா?  நமக்கு ஏன் படிப்பில்லை? நமக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட வில்லை.

கிராமத்தில் இருப்பவனெல்லாம் ஊரிலுள்ளவனுக் கெல்லாம் செய்யும் பொறுப்பு பல வசதிகளும் ஆக்கித் தருகிறோம். ஆனால் நமக்குப் படிப்பில்லை. நாம் சூத்திரர்தானே. சாத்திரமே நமக்கு அத்தகைய சாதனங்களை மறுக்கின்றனவே. சில ஆண்டுகளுக்கு முன்னே படிப்பவனும், சொல்லிக் கொடுப்பவனும்,  மார்க் போடுபவனும் அவனே. (பார்ப்பானே) நம்மவர் மிக மிகச் சிலர்தான்;  சூத்திர நிலையிலிருந்து கல்வி பெற முடிந்தது.

இவ்வளவு விழிப்பு இருக்கும் இப்பொழுதுகூட ஒரு மந்திரி வடமொழிக்கு  வக்காலத்து வாங்கிக்கொண்டு சமஸ்கிருதத்தின் கலைப் பண்புகளைப் பாராட்டி, அம்மொழிக்கும் பார்ப்பனருக்கும் விரோதமாக தமிழ்ப் பண்டிதர்களும், ஏனைய ஆசிரியர்களும் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பதை வன்மையாகக் கண்டித்து உஷராக இருக்கவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அறிவில்லையா நமக்கு?  நம்மவர்கள் அறிவில்லாதவர்களா? சுப்பராயன், செங்கோட்டையா முதலியவர்கள் கவுண்டர்கள் தானே? செங்கோட்டையா சீமையில் வாக்குவாதக்காரர் ((Wrangler)) ஆக படித்துச் சிறப்புறவில்லையா? நமக்கு வாய்ப்புத் தரவில்லை என்று கேட்டால் அது குற்றமா? நம்மவன் வேலை செய்துவிட்டுக் கூலிப்பணம் கேட்டாலும், அகவிலையைக்  காட்டிக் கெஞ்சி சற்று அதிகக் கூலி கேட்கிறான். பார்ப்பானோ பிச்சைக் கேட்டால்கூட காப்பி சாப்பிட வேண்டும், கல்வி கற்க வேண்டும் என்று  அதிகாரமாகக் கேட்கிறான்.  இது ஏன்? அவன் உயர்ந்தவன்; நாம் தாழ்ந்தவன்.

நம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கூட பிள்ளையைப் படிக்க வைக்க முடியாது.  பிள்ளையைப் படிக்கவைக்க வழியில்லையே என்றால், அவனுக்கு மேலிருப்பவன் ஒன்னுக்கு இரண்டுக்கு இருக்கிறவனைப் பார் என்பான். பார்ப்பானுக்கோ உயர்வு இருப்பதால் பணம் திரட்ட வாய்ப்பு உண்டு. ஜாதி இருப்பதால் தானே துவேஷம் உண்டாகிறது; ஏன் வைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டால் வெள்ளையர் தாசர் என்றும், வகுப்புத்துவேஷிகள் என்றும் கூறுகிறார்களே! இது நியாயமா? ஜாதிகள் இருக்கலாம்; ஆனால் அதைப்பற்றிப் பேசுவது தவறா? ஏன் ஜாதியை வைத்துக்கொண்டிருக்க வேண்டும்? இன்று இருப்பது ஆரிய ராஜ்யம் அல்லது இந்து ராஜ்யம் என்று பச்சையாகச் சொல். ஏன் நம் ராஜ்யமென்கிறாய்?

இன்று இங்கு ஜாதியில்லையென்றால் அதைக்கூறும் சாத்திரத்தையும் கொளுத்து. அதை ஆதரிக்கும் சாமியை உடைத்து ஜல்லிபோடு. சட்டத்தில் ஒருவரி ஜாதியில்லை என்று எழுது என்றுதானே கேட்கிறோம். ஆனால் இன்றைக்குச் சட்டம் எழுதுகிறவர் யார்? அல்லாடி கிருஷ்ணசாமி, என்.கோபால்சாமி அய்யங்கார் போன்றவர்கள்தானே? சாதாரணமாக ஒருவன் போனான் என்று கூறுகிறார்கள்.

எதற்குத் தெரியுமா? கைதூக்க தூங்குகிறவனைக் கொண்டுவா  என்ற போது எழுப்பிப்போன மெம்பர்கள், (உறுப்பினர்கள்) அலவன்ஸ்படி வாங்கிக் கொண்டு, தனக்கெனக் கொடுக்கப்பட்ட ரூமையும் (அறையையும்) வாடகைக்கு விட்டுவிட்டு, எங்கேயோ ஓசியாகச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கும் பொழுது  கூப்பிட்டால் வந்து எவனெவன் எப்படிப்பட்ட காரியங்களைச் செய்து வந்தானோ அதையே அனுஷ்டிக்கலாம். எங்கே வேண்டு மென்றாலும் போய் எதைவேண்டுமென்றாலும் செய்து எப்படியாவது சம்பாதிக்கலாம்.  ஆனால் சம்பிர தாயத்தை மாற்றக் கூடாது. என்று சட்டம் இயற்றுவதற்குச் சம்மதம் கொடுத்து விட்டுத் திரும்பும் நம்மவர் அங்கு (சட்டமன்றத்தில்) இருந்தென்ன, போயென்ன, இல்லாதிருந்தால் தான் என்ன?

சம்பிரதாயங்களை மாற்றவேணும் என்பதற்காக நாம் போராடுகிறோம்  அதற்குச் சட்டம் தேவை என்கிறோம். அவர்களோ சம்பிரதாயங்களைக் காப்பாற்ற வேண்டு மென்பதற்காகச் சட்டம் இயற்றுகிறார்கள். நமது போராட்டம் இன்னும் அதிகமாதல் வேண்டும். நான் மனிதனாக மதிக்கப்பட வேண்டும். சம்பிரதாயத்தைப்பற்றி எனக்கு அக்கறையில்லை.  மதம், சமுதாய மேடு பள்ளத்தை நிலைநிறுத்துவதனால் அதை ஒரு கை பார்ப்பேன்  என்று கூறவேண்டும்.

பெருமாள் என்பவன் பேரை மாற்றிக் கொள்ள வேண்டும். உயர் குலத்தினருக்கு உரிய அப்பெயர் உனக்கு உதவாது என்று கூறினார்களாம். அப்படிப் பெயரை மாற்றுவதனால் அதற்குச் சம்பிரதாயப்படி செய்யும் சடங்கிற்குச் செலவுத் தொகையும் கொடுக்கப்பட்டதாம். ஆனால் பெருமாளோ அப்பணத்தைப் பெற்றுக் கொண்டு தன் பெயரைப் பெரிய பெருமாள் என்று மாற்றினானாம்.

அவ்வாறு வர்ணாசிரமம், சாத்திரம், கடவுள் இவைகள் ஒழியத்தான் வேண்டும். நம்மை இழிவுபடுத்தும் இராமாயணம், பாரதம் இவைகளை நாம் போற்றுதல் கூடாது என்றால்,  நம்மவர்களில் சிலரைப் பிடித்து அதைக் கொண்டாடும்படி செய்கிறார்கள். அத்தகைய  நூல்களின் உயர்வைப் பேசும் அவர்களுக்கு _- நமது திராவிட இனத்துரோகிகளுக்கு ஆஸ்தான கவிப்பட்டம், பணம், சம்பளம், சன்மானம் முதலியவை கிடைக்கின்றன. நம்மவர்கள் அவர்களிடத்தில் பதவி பெற்றால், அவர்கள் நம் இனத்தைக் காட்டிக் கொடுக்கும் கையாட்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

முன்பு நான் காங்கிரஸ் தலைவனாய் இருந்தேன். சிறை சென்றேன். நாட்டிற்காகப் போராடுபவர்கள் முன்னணியில் முதல்வனாக இருந்தேன். நான் வர்ணா சிரமத்தை எதிர்க்கையில், அன்று சி.ஆர். (இராஜகோ பாலாச்சாரி) போன்ற என் நண்பர்கள் உன் எண்ணம் எமக்கு உண்டு. வெளியாளை முதலில் விரட்டுவோம். பிறகு பார்ப்போம், நமக்குள் இருக்கும் வேற்றுமை ஒழிக்கும் வேலையை என்று கூறியதுண்டு. எனக்கு அவர்கள் கூற்றில் போதிய நம்பிக்கையில்லாமல் வெளியேறினேன்.  25 ஆண்டுகளாக எனது முறையில் பிரச்சாரமும் செய்தேன். பிரச்சாரத்திற்குப் பயனும் இருந்தது.

பாழாய்ப்போன சுயராஜ்யம் வந்து சற்று நமது உழைப்பின் பயனை அமிழ்த்துகிறது. நம்ம ராஜ்யம் வந்துவிடட்டும், அப்புறம் வேற்றுமை களை ஒழிப்போம் என்ற சி. ஆர். போன்றவர்கள் இன்று சும்மாதான் இருக்கிறார்கள் ஆகையால்தான் நாங்கள் பேசுகிறோம். இடையறாது பேசுகிறோம். நாங்கள் ஓட்டுக் கேட்கவில்லை.

மந்திரிகளாகும் முயற்சி எங்களிடம் கிடையாது. பதவி ஆசை உள்ளவர்களுக்கு எங்களிடம் இடம் கிடையாது. நமது நாட்டு ஓட்டர்கள் (வாக்காளர்கள்) தற்குறிகள். தங்களது மேலான வாக்குரிமைகளைத் தகுதியற்றவர்களுக்குக் கொடுத்து நாட்டைக் கெடுத்து நம் நிலைக்குக் கேடு சூழ்கிறார்கள். இதற்காகத்தான் எதிர்த்துப் பிரச்சாரம் செய்கின்றோம்.

இன்றைய நிலையில் இப்பொழுது நானே தேர்தலுக்கு நின்றாலும் சாமி இல்லை என்றும், சாமிகளை உடைத்து சல்லிபோடு என்றும், கூறுகிற இவனுக்கு ஏன் ஓட்டுப்போடுகிறாய் என்று கூறுவார்களே தவிர, நாட்டிற்கு நலன் தேடுவது யார்? என்பதையறியாத தற்குறிகளிடத்தில் அறிவுப் பிரச்சாரம் செய்து, அறிவியல் உணர்வுடையவர்களாக்கி, அரசியலில் கலந்துகொள்ளும் நிலையை ஓட்டர்களுக்கு உண்டாக்காமல் ஓட்டு வேட்டையாடுவது ஏமாற்றமல்லவா?

23.3.1950-இல் காங்கேயம் கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை 26.3.1950)

 

–  படம் : மணிவர்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *