பின்வரும் நடிகையரில் யார் அதிக உயரமானவர்?
(அ) ஹூமா குரேஷி, (ஆ) கத்ரினா கைஃப், (இ) தீபிகா படுகோனே (ஈ) ப்ரீதி ஜிந்தா
இந்தக் கேள்வி ஏதோ ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்பட்டு எஸ்.எம்.எஸ்.சில் பதில் சொல்லப்படும் போட்டிக் கேள்வி அல்ல.
புது தில்லியில் உள்ள மத்திய தேர்வாணையம் நடத்திய மத்திய பணியாளர் தேர்வுக்கான வினாத்தாளில் இடம் பெற்றுள்ள வினாக்களுள் ஒன்று தான் மேலேயுள்ளது.
அது மட்டுமல்ல, பெண்களை பாலியல் ரீதியாக இழிவுபடுத்துவதுபோல், தரக்குறைவாக பெண்கள் அனைவரும் பூனைகள், பூனைகள் அனைத்தும் எலிகள் என்கிற தலைப்பில் வினாவும் இடம் பெற்றது.
பெண்களை இழிவுபடுத்தும்விதமாக பாலியல் வேறுபாடுகளுடன் வினாக்களைக் கேட்பதா என்று தேர்வாணையத்திடம் விளக்கம் கேட்டு கேரள மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதற்கு மத்திய தேர்வாணையத்தின் தலைவராக உள்ள ஏ.பட்டாச்சார்யா மன்னிப்புக் கேட்டுள்ளார். இது முறையில்லாதது, சகித்துக் கொள்ள முடியாதது, தரக்குறைவானது என்று கூறியதுடன் இந்தத் தகவலால் மிகவும் நிலைகுலைந்துபோய் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், மகளிர் ஆணையத்தின் வேண்டுகோளுக்கிணங்க தேர்வாணையம் அந்த இரு வினாக்களையும் நீக்கிவிடுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வு எழுதுவோர் இன்ச் டேப்புடன் அலைய வேண்டுமோ என்னவோ? அப்புறம் இடுப்பளவு பற்றி கேள்வி கேட்டுவிட்டால் என்ன செய்வது?