கடும் துன்பத்திலிருந்து விடுதலை பெற வைப்பது – மனிதநேயமே!
கருணைக் கொலை பற்றி மத்திய மாநில அரசுகள், பொதுமக்கள் கருத்துகளை அறிவது முக்கியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கேற்ப இதுபற்றிய விவாதங்கள் தொலைக்காட்சிகளிலும் ஜனநாயகத்தின் 4ஆவது தூண் என்று அழைக்கப்படும் ஊடக உலகத்திலும் விவாதங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன.
பலருக்குத் தாங்க முடியாத, இனி முழு நலம் பெறமுடியாத அளவுக்கு, நோய் முற்றி, தாங்கொணாத வலி, வேதனை, துன்பத்தைத் தொடர்ந்து தந்து கொண்டிருப்பதால், அதிலிருந்து விடுபட்டு, நிம்மதியான சாவைப் பெற்று, ஆறுதலோடு உலகிலிருந்து விடைபெற வேண்டும் என்று பல நோயாளிகள் கருதுகின்றனர்; விரும்புகின்றனர்.
மற்றொரு வகை உண்டு. திடீர்க் கோர விபத்துகள் மூலமாகவோ, அல்லது வேறு எப்படியோ, மூளைச் சாவு (Brain Death) ஏற்பட்ட காரணத்தால், இனி அவரது வாழ்வு திரும்பவே வாய்ப்பில்லை; அந்த நிலையில் தங்கள் பிள்ளைகளோ, உறவுகளோ வாழ முடியாத நிலைதான் யதார்த்தம் என்று ஆகிவிட்டபோது, அவர்களை வைத்துக் கொண்டு கண்ணீருடன் கூடிய வாழ்க்கையை நீட்டிக் கொண்டே போவதில் அர்த்தமில்லை. எனவே சட்டம் அனுமதித்தால் கருணைக் கொலையே செய்துவிடலாம்; அவர்தம் மற்ற உடல் உறுப்புகள் பிறருக்குப் பயன்பட்டு, அவர்களாவது நல்வாழ்வு, புதுவாழ்வு பெறுகிறார்கள் என்றால் அதைவிட மாந்தநேயம், வளர்ந்த செயல் வேறு எதுவும் இல்லை என்று கருதி, மகிழ்ச்சியோடு இத்தொண்டறம் தொடர்வது மிக நல்ல திருப்பணி அல்லவா?
மருத்துவமனைகளில் ஒவ்வொரு அறுவை சிகிச்சையின்போதும், உயிர் பறிக்கப்படுவதற்கு டாக்டர் பொறுப்பல்ல என்பதற்கு நோயாளியும், அவருடைய உற்ற உறவினரும் இசைவுக் கையொப்பம் இடுகின்ற முறை உள்ளதே!
பல ஆண்டுகளுக்குமுன்பு அமெரிக்காவில் கார் உற்பத்திக்குப் புகழ் பெற்ற நகரமான டெட்டிராய்ட் (Detroit) நகரில் வாழ்ந்த ஒரு டாக்டர் இந்தக் கருணைக் கொலையைச் செய்து, கொள்கை அளவில் பிரபலமாக்கிட தானே தண்டனையையும்கூட ஏற்கும் நிலை அடைந்தார்.
இந்தக் கருணைக் கொலைக்கு எதிராக வாதம் செய்வோர்; ஆண்டவன் கொடுத்த உயிரை மனிதன் எடுப்பதா? என்ற பழைய நம்பிக்கையை முன்வைத்தே கூறுகின்றனர்.
அப்படியானால், தற்கொலை செய்து கொள்ளுகின்றனரே பலர், அதைத் தடுக்க முடிகிறதா? திடீர் விபத்துகளில் மனித உயிர்கள் பலியாகின்றனவே, அதைத் தடுக்க முடிகின்றதா? ணிஸீநீஷீஸீமீக்ஷீகள் என்ற திடீர் தாக்குதல்களைத் தடுக்க முடிந்ததா?
ஆகவே அந்த வாதங்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, கருணை அடிப்படையில் (Compassionate Killing) என்பதை எவ்வளவு விரைவில் சட்டமாக்க முடியுமோ அவ்வளவு விரைவில் தாராளமாகச் செய்ய முன்வர வேண்டும்.
நம்மைப் போன்ற ஆத்மா மறுப்பாளர்களை விட்டுவிட்டு, ஆத்மா நம்பிக்கையாளர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க நாம் விரும்புகிறோம்.
உடம்புதான் அழியும், ஆத்மா என்றும் அழிவதில்லை என்று கூறுகிறார்களே, அந்த வாதத்தை நீங்கள் உள்ளபடியே நம்பினால், கருணைக் கொலையை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? உங்கள் நம்பிக்கை, வாதப்படி ஆத்மாதான் அழிவதில்லையே; கருணைக் கொலையில் உடல்தானே அழிகிறது; பின் ஏன் கருணைக் கொலையை (மத நம்பிக்கை காரணமாக) ஏற்க மறுக்க வேண்டும் என்பதே பகுத்தறிவுவாதிகளின் கேள்வியாகும்.
மனிதநேயம் (Humanism) நமது இந்திய அரசமைப்புச் சட்டம் 51A பிரிவு (h) வற்புறுத்தும் அடிப்படைக் கடமையின் முக்கிய அம்சம் அல்லவா? கடும் துன்பத்திலிருந்து உடல் அளவிலும் மன அளவிலும் விடுதலை கிடைப்பதுகூட மனிதநேயம்தானே!
பின் ஏன் தயக்கம்? பின் ஏன் மயக்கம்? உடனே சட்டம் இயற்ற முன்வாருங்கள்!
கி.வீரமணி,
ஆசிரியர்