ஜூன் 21, 2014 பிரேசில் நாட்டின் மினெஸ்ரோ (Mineirao) நகரில் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டிருக்கும் கால்பந்து விளையாட்டரங்கம் ஆர்ப்பரிக்கிறது. உலகெங்கிலும் இருந்து பல கோடி ரூபாய்கள் செலவழித்து மில்லியனர்கள் பலர் அங்கே முகாம் இட்டிருக்கிறார்கள். வண்ண விளக்குகளும், தோரணங்களும் நிரம்பிய அந்த விளையாட்டரங்கில் அர்ஜென்ட்டினாவும் ஈரானும் கடுமையாக மோதிக் கொண்டிருக்கின்றன.
கால்பந்து விளையாட்டின் அரசன் என்று அழைக்கப்படும் அர்ஜென்ட்டினாவின் கனவை முடக்கி ஆசியாவின் ஒரே அணியாக அங்கே களத்தில் இருக்கும் ஈரான் போராடிக் கொண்டிருக்கிறது. போட்டி ஏறத்தாழ முடிந்து விட்டது என்று ரசிகர்கள் எழுந்து செல்லத் தயாராகிக் கொண்டிருந்த அந்தக் கடைசி நிமிடத்தில் ஈரானின் வீரர்கள் அனைவரையும் தாண்டி நிலைகுலைய வைத்து விட்டு உலகக் கால்பந்து ரசிகர்களின் கனவு நாயகன் லியோனல் மெஸ்ஸி தனது அணியின் வெற்றிக்கான கோலைப் போடுகிறார். அரங்கம் மீண்டும் ஆர்ப்பரிக்கிறது.
மேற்கண்ட காட்சி நீங்களும், நானும் செய்மதித் தொலைக்காட்சியின் உதவியோடு கண்டு களித்த காட்சி. ஆனால், அதே நாளில் அதே அரங்கத்தில் நிகழ்ந்த இன்னொரு காட்சியையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். க்லெய்ட்டொன் சோயர்ஸ் என்கிற 23 வயது இளைஞன் அந்த அரங்கின் வாயிலைக் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறான். அவன் ஒரு ராணுவ வீரன், தீவிரக் கால்பந்து ரசிகன். இந்த அரங்கின் உள்ளே நடக்கிற போட்டிக்கும் தனக்கும் தொடர்பே இல்லை என்பதைப் போல சக ராணுவ வீரனோடு ரியோடி ஜெனிரோ நகரத்துக்கு வெளியே கால்பந்து விளையாடும் பெயர் தெரியாத ஒரு அணியைக் குறித்து அவன் உரையாடிக் கொண்டிருக்கிறான்.
மக்கள் கோப்பை என்ற பெயரில் “FIFA 2014” உலகக் கோப்பையை எதிர்த்து தனியாக ஒரு கோப்பையை அறிவித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் கால்பந்தை தங்கள் உயிருக்கு உயிராக நேசிக்கும் பிரேசில் நாட்டு மக்கள். க்லெய்ட்டொன் சோயர்ஸ் மட்டுமில்லை, பிரேசில் நாட்டின் உழைக்கும் எளிய மக்கள் யாரும் இந்த “FIFA 2014” உலகக் கோப்பையை அத்தனை ஆர்வமாக ரசிக்கவில்லை. க்லெய்ட்டொன் சோயர்சின் தந்தை ஒரு நடைபாதை வணிகர். மினெஸ்ரோ விளையாட்டரங்கில் இருந்து ஏறத்தாழ மூன்று கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் இவரையும், குடும்பத்தினரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருக்கிறது பிரேசில் அரசு. அவரைப் போலவே உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நடக்கும் அரங்கத்தின் அருகிலிருந்த பல ஏழைக் குடும்பங்களும், சிறு வணிகர்களும் விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் இவர்கள் அனைவரும் பிரேசில் அணியை உயிருக்கு உயிராக நேசிப்பவர்கள், தங்கள் நாட்டின் தேசிய கால்பந்து அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று வழிபாடு செய்பவர்கள். உலகின் மிகப்பெரும் திருவிழாவான உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை நடத்தும் பிரேசில் நாட்டின் ஓர் எளிய உழைக்கும் மனிதன் இந்த அரங்குகளுக்குள் நுழைய இயலாதபடி பெரும்பணக்கார முதலாளிகளும், நிறுவனங்களும் நுழைவுச் சீட்டுகளை முடக்கிக் கொண்டார்கள்.
தங்களுக்கு மிக அருகில் உலகக் கோப்பையை விளையாடும் கனவு நாயகர்களை பிரேசில் நாட்டின் மாணவர்களும், இளைஞர்களும் நேரில் கண்டு ரசிக்க முடியாது,
ஒரு மாதம் முழுக்க அவர்கள் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டும் அந்த அரங்கங்களுக்குள் நுழைய இயலாதபடி பணக்கார விளையாட்டாய் மாறிப் போன அந்த வலியையும், துயரத்தையும் அவர்கள் போராட்டங்களின் மூலமாகவும், மக்கள் கோப்பை என்கிற மாற்று விளையாட்டை நிகழ்த்துவதன் மூலமும் கோபமாய் வெளிக்காட்டினார்கள். இன்றைக்கு கால்பந்தாட்ட அரங்குகளில் நாம் காணும் மஞ்சள் வண்ண உடையணிந்து பன்னாட்டுக் குளிர் பானங்களைக் கையிலேந்தியபடி ஆடும் கொளுத்த பிரேசில் இளைஞர்களைக் கடந்து இன்னொரு பிரேசில் இருக்கிறது. முக்கிய நகரங்களைச் சுற்றி இருக்கும் பவேலாக்கள் (Favela) பிரேசில் நாட்டின் வறுமையை வெளிச்சம் போடுகிற கொடுஞ்சிறைக் கூடங்கள். இங்கிருக்கும் வீடுகள் பெரும்பாலும் குப்பைகளால் கட்டப்பட்டவை.
இந்தக் குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் உலகின் ஏழ்மைக்கு எல்லா வகையிலும் எடுத்துக்காட்டானவர்கள். பிரேசில் அரசின் பள்ளிக்கூடங்கள் எதுவும் இங்கே இல்லை; தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீர் இல்லை; அரசு வழங்கும் மின்சாரம் இல்லை; பெரும்பணக்காரர்களின் குடியிருப்புகளுக்குச் செல்லும் மின்னிணைப்பைத் திருடியே இங்கிருக்கும் மக்கள் நெடுங்காலமாக வாழ்கிறார்கள்.
போதை மருந்துகளும் ஆயுதங்களும் குழந்தைகளுக்குக் கூடக் கிடைக்கும் அளவுக்கு இங்கே சட்டமும் ஒழுங்கும் சீரழிந்து கிடக்கிறது, உலகின் மிகக் கவர்ச்சிகரமான பெண்கள் பிரேசிலில் இருக்கிறார்கள் என்று அவ்வப்போது உலகம் குறித்த கவலையோடு எழுதிக் குவிக்கும் ஊடகங்கள் இந்த பவேலாக்களுக்குள் ஒருபோதும் நுழைவதில்லை. அங்கிருக்கும் ஏழைக் குழந்தைகளின் ஒட்டிய கன்னங்களை ஒருபோதும் அவை தங்கள் அட்டைப்படங்களாக வெளியிடுவதில்லை. ரியோடி ஜெனிரோ மற்றும் சா பாவ்லா நகரங்களைச் சுற்றி அரச அமைப்பால் நெடுங்காலமாகக் கண்டு கொள்ளப்படாமல் இருக்கிற இந்த அவலமான மக்கள் திரளுக்கும், உலகின் மிக அழகிய ரியோடி ஜெனிரோ கடற்கரையில் கவலைகளை மறந்து ஆடிக் களிக்கிற உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருக்கும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கும் அதே உலகம் தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. பிரேசிலின் அதிகார அமைப்புகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று ஒரு கூட்டம் எப்போதும் இந்த பவேலாக்களில் தங்கள் சட்டப்புறம்பான ஒரு உலகை நடத்தியபடி இருக்கின்றன. நேர்மையான, பிரேசில் மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்ட அரசியல்வாதிகளையும் இங்கே நுழைய விடுவதில்லை. நீதியின் பால் நின்று தட்டிக் கேட்கிற பல இளைஞர்கள் பவேலாக்களில் விரட்டி விரட்டி சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
பிரேசில் என்றில்லை, கால்பந்து என்றில்லை உலகின் பல்வேறு நிலைகளில் எளிய உழைக்கும் மக்களின் வாழ்நிலை இப்படித்தான் எந்த வேர்களும் இல்லாமல் முதலாளிகளின் கைகளுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பல நகரங்களில் வளர்ச்சி, முன்னேற்றம் என்று கூக்குரலிடும் முதலாளித்துவ ஊடகங்கள் எப்படி சோப்டாக்களைக் கண்டு கொள்வதில்லையோ அதைப் போலவே இன்றைக்கு பிரேசில் பாவேலாக்கள் புறக்கணிக்கப்பட்டு சமூக விரோதக் கூடங்களாகக் காட்சி தருகின்றன. ஏறத்தாழ 20/20 கிரிக்கெட் போட்டியை ஒரு திருவிழாவைப் போலக் கொண்டாடும் இந்திய தேசத்துக்கும், பிரேசிலுக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. வறுமையில் வாடும் உழைக்கும் மக்கள் அனைவரும் நாடு, மொழி, இனம், மதம் என்று எல்லாம் கடந்து ஒரே வரிசையில் உபரி மனிதர்களாய் நிறுத்தப்படுவார்கள். இனி ஒரு உலகக் கோப்பைப் போட்டியை நீங்கள் பார்த்து மகிழ்கிற போது பாவேலாக்களில் இருந்து மீள முடியாத ஒரு ஏழைக் குழந்தையின் அழுகுரல் பின்னணி இசையாய் உங்கள் செவிப்பறையை அடையக் கூடும். ஊடகங்களில் நாம் காணும் உலகுக்கு அப்பால் எப்போதும் ஒரு இருண்ட துயரம் நிரம்பிய ஏழ்மையின் உலகம் நிழலாடிக் கொண்டே இருக்கிறது என்கிற உண்மையை நாம் விழுங்கிச் செரிக்கத்தான் வேண்டும்.
இவ்வளவு செலவா…
கால்பந்தாட்டதிற்கு இவ்வளவு பெரிய தொகையினைச் செலவு செய்வதற்குப் பதிலாக, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தலாமே என்று பல்வேறு போராட்டங்களை அந்நாட்டு மக்கள் நடத்துகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், மக்களின் போராட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 5 ஆயிரம் கோடி ரூபாயினைச் செலவு செய்துள்ளதுதான்.
– கை.அறிவழகன்