சிறுகதை : சட்டை

ஜூலை 01-15

டேய் என்னடா இருக்கு அந்த அமெரிக்கால, இந்த மாதிரி கோவில் குளம்ன்னு இருக்காடா? இங்க பாரு கடற்கரை, மணல்ன்னு எவ்வளோ ரம்மியமா இருக்கு என்றபடி மடித்துக்கட்டிய வேஷ்டியோடு அலைகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தார்.

சித்தப்பா! ஒன் மந்த் வெக்கேசன்ல ஜாலியா இந்தியாவ சுத்திப் பார்ப்போம்னு வந்தா இப்படி கோவிலு குளம்னு சுத்திக் காட்றீங்களே. ஏதோ தனியா வர்றீங்களே கொஞ்சம் கம்பெனி கொடுப்போம்னுதான் வந்தேன். இல்லாட்டி இங்க வந்திருக்கவே மாட்டேன். அங்க இல்லாத பீச்சா சித்தப்பா!? இது என்ன பீச்சு? அங்க எவ்ளோ நீட்டா இருக்கும் தெரியுமா? என்றபடியே தன் ஜீன்ஸை மேலேற்றினான். அந்த அலைப்பரப்பில் நின்றபடி.

ரொம்பப் படிச்சுட்டோம்னு நினைக்காதடா? சும்மா கம்ப்யூட்டர்லயே உட்கார்ந்திருக்கிற உனக்கு என்னடா தெரியும். எங்கள மாதிரி நாலு எடம் போணும் வரணும், நாட்ல என்ன நடக்குது ஏது நடக்குதுனு தெரிஞ்சுக்கணும்டா. நக்கலாய்ச் சிரித்தார் வேஷ்டி.

பதிலுக்கு மெல்லிதாய் புன்னகைத்தபடி தன் கூலிங்கிளாசைத் தலைக்கு ஏற்றினான், ஜீன்ஸ்.

என்ன பெரிய அமெரிக்கா. அவன் செய்ற அநியாயம் தெரியாதா? இருந்தாலும் அவனுக்கு இம்புட்டு ஆகாது, என்று பேச்சுக் கொடுத்தவாறே உருண்டுவரும் அலைகளைத் தன் கைகளால் தள்ளிவிட்டார் வேஷ்டி.

சித்தப்பா எதச் சொல்றீங்க, என்றவாறே அவரை ஏறிட்டான் ஜீன்ஸ்.

அதாம்யா நம்ம நாட்டுத் துணைத்தூதரா இருந்துச்சே அந்தப் பொண்ணு விவகாரம்தாம்யா… என்றபடி அண்ணாந்து அவன் முகத்தை உத்துப் பார்த்தார்.

ஓ யெஸ்! அமெரிக்கால உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத்தூதரா வேலை பார்த்துக்கிட்டு இருந்ததே அந்தப் பொண்ணுதானே.

ஆமாம்யா அந்தப் பொண்ணுதான். ஒரு உயர் அதிகாரிய, அதுவும் ஒரு பொம்பளப் புள்ளைய இப்படியா தரக்குறைவா நடத்துறது? என்றவாறே வேட்டியைத் தூக்கியபடி, ஈரக்கால்களை மெல்ல கரைக்கு நகர்த்தினார்.

ஆயிரம்தான் இருந்தாலும் அந்த அம்மா பண்ணுனதும் தப்புத்தான சித்தப்பா. ஒரு வேலக்காரப் புள்ளைக்குச் சொன்னபடி சம்பளம் குடுக்காதது தப்பில்லையா. அதுவும் பொம்பளப் புள்ளைதான. அது தன் சொந்தத்தை விட்டுட்டு, பெத்த அப்பே ஆத்தாள விட்டுட்டு, கட்டினவன விட்டுட்டு, குழந்தை குட்டிய விட்டுட்டு ஆள் தெரியாத  அமெரிக்கால வந்து குப்ப கொட்டுறது எதுக்காக? அந்தக் காசுக்குத்தான என்றபோது உயர்ந்தெழுந்த அலை, அவன் சட்டையைத் தொப்பலாக நனைத்தது.
ஹா… ஹா.. உனக்கு வேணும் வேணும்… சிரித்துக் கொண்டார் வேஷ்டி.

உடன் சிரித்தபடி வேஷ்டியை நோக்கி நகரத் தொடங்கினான் ஜீன்ஸ்.

பின் வேஷ்டியே தொடர்ந்தார். ஆயிரம்தான் தப்புப் பண்ணி இருக்கட்டும்யா… அதுக்காக ஒரு உயர் அதிகாரிய அதுவும் ஒரு பொம்பளப் புள்ளய நடுரோட்ல வச்சு கைது பண்ணி இழுத்துட்டா போறது, என்று, காற்றில் பறக்கும் தன் வேஷ்டியை இறுக்கிப் பிடித்தவாறு கோபுரத்தை நோக்கி நடக்கலானார். ஜீன்ஸும் பின்தொடர்ந்தார். கடற்கரைக் காற்று ஈரம் தெறித்திருந்த உடைகளை உலர்த்தி உடல்களையும் சில்லிட்டோடியது.

சற்றுத் தொண்டையைச் செருமியபடி அவரே தொடர்ந்தார். ஆமாம்யா இங்க, விஷ வாயுவக் கசியவிட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களக் கொன்ன அமெரிக்க நிறுவன அதிபரைக்கூட பத்திரமா மரியாதையோட திருப்பி அனுப்பிச்சிடுறோம். அந்த விசுவாசம்கூட அமெரிக்காக்காரன்ட்ட இல்லையே!?

விசுவாசமே இல்லாத அவன்ட்டதான, இங்க எல்லாரும் மாறிமாறி தன் விசுவாசத்தக் காட்டுறாங்க. உலக நாயகன்கூட அவரது அமெரிக்க விசுவாசத்த விசுவரூபமா எடுத்துக் காமிச்சுட்டாரு. ஊழல ஒழிக்க வர்ற சூப்பர்  பாஸ்ஸும் அமெரிக்க ரிட்டனாத்தான் வந்து தன் விசுவாசத்தக் காட்றாரு. அமெரிக்கப் போர்க்கப்பல் கடற்கரைல நின்னதே தெரியாதுன்னு, பிரதமர் அவர் பங்குக்குத் தன் விசுவாசத்தக் காட்டுனாரு. என்று தன் தலைக்குமேல் தூக்கிவிட்டிருந்த கூலிங்கிளாஸை இறக்கிவிட்டுக் கொண்டான்.

அவரது முகக்குறிப்பு என்ன என்று அறிய கூலிங்கிளாஸ் வழியாக சில நொடிகள் பார்த்து, ஒன்றும் புடிபடாமல் பின் இவனே தொடர்ந்தான். அது மட்டுமா அங்க பொருளாதார நெருக்கடின்னா இங்க உள்ள அரசு கோடிக்கணக்கா செலவழிச்சு அங்க இருந்து பழைய ஈயம், பித்தளை எல்லாம் வாங்குது. எவனெவனோ பேரிச்சம்பழம் திங்குறதுக்கு இந்தியப் பொருளாதாரத்தைத் துருப்பிடிக்க விடுறானுக. இவ்ளோ ஏன், அங்க இருந்து இங்க வர்ற அதிகாரிகளுக்கு சிறப்புப் பாஸும், சலுகையும் கொடுக்குது, இன்னும் சொல்லப்போனா அவங்க அதிபர் இங்க வந்தா, பாதுகாப்பு சோதனைல இருந்து விலக்கு வேற கொடுக்குது. விசுவாசத்துல இந்தியாவ அடிச்சுக்க ஆளே கிடையாது சித்தப்பா! என்றபடி அவரை ஏறிட்டான் ஜீன்ஸ்.

அதை ஒத்துக்கொள்வது போல தலையை ஆட்டியபடி, ஆனா, நம்ம நாட்டுல இருந்து அமெரிக்கா போற பிரபலங்களை, பாதுகாப்பு  சோதனைங்கற பேர்ல அவங்க பண்ற அட்டூழியம் கொஞ்சமா நஞ்சமா? போனவாரம் கூட, பேத்தி ஒரு ஹிந்தி படம் போட்டாயா… பிரபல ஹிந்தி நடிகர் ஏதோ கான்னு சொன்னா. அவர் நடிச்சது, அதுல இதப்பத்திதான் எடுத்திருந்ததாம்யா. தெரியுமா? வடக்கே, அந்தப் படமும் சரி ஓட்டம் ஓடிச்சுன்னு பேத்தி சொன்னா

கடகடவென சிரித்தபடி, ஆமாம் சித்தப்பா அமெரிக்கா தயவுல இங்க நிறையப்பேரு நல்லா கல்லா கட்டுறாங்க… ஹா… ஹா… என்று சிரித்துவிட்டுக் கொஞ்சம் இடைவெளி விட்டுத் தொடர்ந்தான். அவர சோதனை செஞ்சதுக்கே இப்படிக் கொதிச்சுப் போய் ஒரு படத்தையும் எடுத்து, அத நல்ல விலைக்குக் கல்லாவும் கட்டிக்கிட்டாரே… இங்க அன்றாடம் வயித்துப்பிழப்புக்கு கடலோடு மல்லுக்கட்டுற சனத்த டப்புடப்புன்னு சுட்டுத்தள்றானே அந்தக் கொடுமையக் கேட்க ஒரு கதாநாயகனுக்கும் துப்பில்ல.

தன் நெற்றிப் புருவத்தைச் சுருக்கியபடி, நீ சொல்றது நெசெந்தாம். நமக்கு ஒன்னுன்னா கேட்க நாதியில்லதான். ஆனால் நம்ம ஜனாதிபதிக்கே ஒன்னுன்னா கூட அமெரிக்காக்காரன்ட்ட கேட்க முடியலையே. இங்க ஜனாதிபதிய, முதல் குடிமகனாக் கொண்டாடுறோம். ஆனா அவர் அங்க அமெரிக்கா போனப்பக்கூட சட்டையெல்லாம் கழட்டச்சொல்லி அவமானப்படுத்துனாங்களே?

சித்தப்பா, முதல்ல இந்த தினசரி பேப்பரெல்லாம் படிக்கிறத நிப்பாட்டுங்க. பேப்பர்காரனுக்குப் போடுறதுக்கு ஒரு நியூஸ் வேணும். உண்மையிலேயே அதப் படிக்கிறத நிப்பாட்னாத்தான் நம்ம அறிவு வளரும், உண்மையான நாட்டு நடப்பு என்னன்னு தெரியவரும் என்றதைக் கேட்டதும் அவர் முகம் சுருங்கியது. இதை உணர்ந்தவனாய் தன் ஜீன்ஸ் மடிப்பை இறக்கிவிட்டபடி, ஜனாதிபதிங்கிறதே, நம்ம நாட்டக் கண்காணிக்க வெள்ளைக்காரன் உருவாக்கியதுதான் சித்தப்பா. சுதந்திர இந்தியால அது இன்னும் தொடர்றதே நம்ம விசுவாசத்தக் காட்டுது. என்று மெல்லிய குரலில் காதுக்குள் ஓதினான்.

பின் அவனே, இங்கிலாந்துல, அமெரிக்கால எல்லாம் பிரதமர் இல்லாட்டி அதிபர்ன்னு ஒரு பதவிதான் தெரியுமா. ஆனா எல்லா காலனி அடிமை நாட்லயும் பிரதம மந்திரின்னு ஒன்னும் ஜனாதிபதின்னு ஒன்னும் இருக்கும். முதல்ல வெள்ளைக்காரந்தான் நம்ம ஜனாதிபதியா இருந்தான். அப்புறம்தான் இந்திய நாட்லயே நல்ல விசுவாசிய பொறுக்கியெடுத்து ஜனாதிபதியா ஆக்குனான். அதத்தான் நாம குடியரசு தினம்னு கொண்டாடிட்டிருக்கோம். மார்பிலே துணியைத் தாங்கும்  வழக்கங் கீழடியார்க் கில்லை அப்படின்னு ஒரு கவிஞர் பாடினாரே அதான் நினைவுக்கு வருது. நாம இன்னும் அவிங்களுக்கு அடிமைதான். இப்பவும் நம்மள அவிங்கதான் ஆளுறாய்ங்க. இதுல எந்த அரசியல்வாதியும் சரியில்லை. ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரணும்னு நம்ம மக்கள் சொல்லும்போது ரொம்ப வேடிக்கையா இருக்கும்… சில சமயம் இப்படிப்பட்ட சீர்திருத்தம் பேசுறவங்களப் பார்த்தா சிரிப்பு சிரிப்பாக்கூட வரும்.. ஹா… ஹா… வாய்விட்டே சிரித்துவிட்டான் ஜீன்ஸ்.

இதுல இம்முட்டு விசயம் இருக்காயா? என்று ஆச்சரியப்பட்டுப் போனார் அந்த நாளிதழ் பிரியரான வேஷ்டி.

மீண்டும் ஜீன்ஸ் தன் மெல்லிய குரலில், இன்னும் என்னன்னா அணுஉலை மாதிரி வெளிநாட்டுக்காரன் போடுற ஒவ்வொரு திட்டத்துக்கும், அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் போற மாதிரி நம்ம ஜனாதிபதிக்கும் கமிசன் போகுதாம், அரசல்புரசலா பேசிக்கிறாய்ங்க. அது இல்லாமையா… பெரிய பெரிய பங்களா, தனி விமானம், குடும்பத்தோட உலகச் சுற்றுலான்னு அனுபவிக்க முடியுது? என்றவனை இடைமறித்து,

இம்… இதெல்லாம் எங்க நம்ம காதுல விழுந்திடுமோன்னுதான் இன்னமும் நம்மள கனவு காணுங்க கனவு காணுங்கன்னு சொல்லிட்டுத் திரியுறாங்களா? நீ சொல்றது எல்லாம் வாஸ்தவமாத்தான் இருக்கு. ஆனா இவ்ளோ பேசுற நீ அந்த அமெரிக்காக்காரன்ட்டதான கையக்கட்டி நிக்குற, அத விட்டு இங்க வந்து ஏதாவது பண்ணலாம்ல. படிச்சவன் எல்லாம் ஊருக்குத்தான் உபதேசம் பண்றீங்க! என்று ஜீன்ஸை வாரினார் வேஷ்டி.

என்ன சித்தப்பா விவரமில்லாம பேசுறீங்க. நம்ம குடும்பத்திலேயே முதன்முதலா கல்லூரிக்குப் போனதே நான்தான். படிக்கும்போது இவ்ளோ விவரமும் கிடையாது. அந்தப் படிப்பும் இந்த விவரத்தை எல்லாம் சொல்லியும் கொடுக்காது. முதல்ல வெளிநாடுங்கிற ஆசைலதான் அமெரிக்கா போறோம். அங்க போனப்பறம்தான் தெரியுது… அங்க உள்ள வேலைக்காகத்தான் நாம இங்க இவ்ளோ கல்லூரி கட்டிவச்சுருக்கோம்னு. ஏன் என்னையமாதிரி படிச்சுட்டு சென்னை, பெங்களூர் சிட்டிகள்ல வேலை பார்க்குற எல்லாருக்குமே இது புரிஞ்சிருக்கும். நம்ம மண்சார்ந்த தொழிலுக்குனு ஏதும் படிப்பு இங்க இருக்கா சொல்லுங்க? அப்புறம் என் படிப்புக்காக அப்பா வாங்குன கடனுக்காகவும், தங்கச்சியக் கட்டிக்கொடுக்குற கடமைக்காகவும் பல்லக் கடிச்சுட்டு அங்கயே குப்ப கொட்ட வேண்டியிருக்கு. பீ.பி.ஓங்கிற பேர்ல அமெரிக்காக்காரன் விடியலுக்குத்தான் நம்ம இளைஞர்களோட இரவுகள் எரிக்கப்படுது.  சித்தப்பா, முன்னாடி கரும்பு வெட்ட வெளிநாடு போனோம் இப்ப கம்ப்யூட்டர் தட்டப் போறோம். அப்ப கங்காணிங்க செஞ்ச வேலைய, இப்போ அரசாங்கமே செய்யுது. ஆனாலும் அதில ஒரு நன்மை என்னன்னா, எப்படி காந்தி, அம்பேத்கர் போன்றவர்கள் வெளிநாடு போய் படிச்சதும் தான் அங்க உள்ள சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் பார்த்து, நம்ம அடிமைத்தனம் பற்றியும் ஜாதிய ஒடுக்குமுறை பற்றியும் ஒரு புரிதலுக்கு வந்தாங்களோ… பின்ன அதுக்காக இங்க போராடுனாங்களோ… அப்படி என்னைப் போல பலரும், இங்க உள்ள இளைஞர்களும் நம்ம நாட்டுக்காக வருவாங்க. இப்பவும் பலர் இருக்காங்க, இப்ப இந்தப் புரிதலும் தெளிவும் சிந்தனைல இருக்கு. அது செயலுக்கு வர சில காலம் பிடிக்கும். ஆனா அந்தக் காலமும் கண்டிப்பா வரும்.

இருவரும் யோசனைக்குள் ஆழ்ந்தவர்களாய் நடக்கலானார்கள். கடற்கரையில், சுக்குக் காபியை வாங்கி சிறிது நேரம் மௌனத்தைப் பருகினர்.

சுக்குக் காப்பியைக் குடித்து முடித்ததும், தன் யோசனையிலிருந்து மீண்டவராய் வாய் திறந்தார் அந்த வேஷ்டி மனிதர். சரி நம்ம விசயத்துக்கு வருவோம். நம்ம நாட்டின் முதல் குடிமகன்கிறதுக்காக கூட வேண்டாம்யா, வயசுல பெரியவர் அப்படிங்கிற ஒரு மனுசத்தன்மைகூட இல்லையே இந்த அமெரிக்கப் பயலுவட்ட. இப்படியா ஒரு பெரியவர விமான நிலையத்துல வச்சு சட்டையெல்லாம் கழட்டி நிக்கவைக்கிறது. அவஅவனுக்குன்னு ஒரு சுயமரியாதை இருக்கும்லயா. இப்படி மேலாடை இல்லாம நிக்கச் சொல்றது எவ்வளவு பெரிய அவமானம். அந்த அவமானத்த எதிர்த்துத்தானயா தோள்சீலைப் போராட்டம் மாதிரி பல போராட்டம் நம்ம நாட்ல நடந்துச்சு. இப்ப மறுபடியும் சட்டையக் கழட்டச் சொன்னா… எவ்ளோ அவமானம். நானா இருந்தா போடா… நீயுமாச்சு உன் பிளேனுமாச்சுன்னு நம்ம ஊருக்கே திரும்பியிருப்பேன். இப்படி மானங்கெட்ட பொழப்பு தேவையா நமக்கு? என்றவாறு நடக்கலானார்.

உம்… ரொம்பச் சரியாச் சொன்னீங்க. சட்டைதான் ஒருத்தனோட சுயமரியாதை. ஆண்டவனே மறுத்தாலும், அறிவுக்கனிய உண்டு ஆடையை அணிந்துகொண்டது தான் ஆதாம் ஏவாள் கதை. ஆடை என்பது தன்மானத்தின் குறியீடு.

இப்பவும் அந்த அறிவுக்கனி விலக்கப்படுதுன்னா, அது பெரிய அவமானம்தான். நினைச்சாலே மனசெல்லாம் கொதிக்குது. அவன் நாட்டுப் பிரதமர் இங்க வரும்போது இப்படிச் சட்டை இல்லாம நிக்க வச்சாத்தான் அவனுக்கும் அந்த வலி என்னன்னு தெரியும்… ஆனா அத யார் செய்றது? என்றபடி உடன் நடந்தான்.

செத்த நின்னுங்கோ! நின்னுங்கோன்னா! என்ன கூப்பிடக் கூப்பிட கவனிக்காம உள்ளே போறேள்… கோவிலுக்குள்ளாற சட்டை போட்டுண்டு போகப்படாது! அய்தீகம் தெரியுமோன்னோ? உம்… சட்டையக்  கழட்டுங்கோ. பிறகு பகவான பேஷா சேவிக்கலாம். உம்… உம்… சட்டுன்னு கழட்டுங்கோ

………………………..

சட்டென செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்த வேஷ்டியிடம் மெல்லிதாய்ப் புன்னகைத்தபடி நடையைக் கட்டினான் ஜீன்ஸ் கோவிலைவிட்டு.

காற்றில், அவனின் ஈரச் சட்டை உடலோடு ஒட்டியபடி படபடத்துக் கொண்டிருந்தது கம்பீரமாய்.

 

– பாண்டூ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *