கேள்வி : வாக்களித்த ஏழை, எளிய மக்களின் வயிற்றிலடிப்பதைப் போல, பால் விலை உயர்த்தப்பட உள்ளது. ஆனால், ஒரு கல்லின் தலையில் இலட்சக்கணக்கான லிட்டர் பால் கொட்டி வீணடிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு அறிவுபூர்வமாக சிந்தித்து இதனைத் தடை செய்ய புரட்சிகரமான முடிவு எடுத்தால் அறிவுலகம் பாராட்டுமே.. செய்யுமா?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : அறிவுலகம் பாராட்டும் அளவுக்கு துணிவுடன் செய்யும் பகுத்தறிவாளர் அரசு முகிழ்ந்தால் முடியக்கூடும்!
கேள்வி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நமது முதல்வர் அவர்கள் கோரிக்கையை பிரதமரிடம் வைத்துள்ளார். ஆனால் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை என்றால்(?) தமிழ்நாட்டை வஞ்சிக்க வேண்டும் என்றுதானே அர்த்தம். இதுபற்றிய தங்களின் கருத்தென்ன?
– பெ.கூத்தன், சிங்கிபுரம், வாழப்பாடி
பதில் : இதுபற்றி ஏற்கெனவே அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம்.
இரட்டைக்குரல் ஒருபுறம் இருக்கட்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு கட்டாயம் அமல்படுத்த வேண்டும். இது சலுகை அல்ல; சட்டப்படிக்கான கடமை. உமாபாரதி உண்மையைச் சொல்லிவிட்டாரோ என்று சந்தேகம் அவர்கள் கட்சியில் உள்ள சிலருக்கே வந்துவிடக் கூடும்.
கேள்வி : தஞ்சை மாவட்டத்திற்கு மழைவேண்டி விவசாய சங்கத்தினர் பசு வழிபாடு செய்துள்ளது பற்றி? – கோ.சாந்தி, அம்மாபாளையம்
பதில் : விசித்திரமான மூடத்தனம்; அதிக மழை பெய்தால் அதை நிறுத்த நாம் எருமை மாட்டுப் பூஜையைச் செய்யப் பரிந்துரைக்கலாமா?
கேள்வி : ஒரு மணவிழாவில் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளையும் காரசாரமாக வசைபாடி, அக்கட்சிகளைக் கடலில் தூக்கி எறியுங்கள் என பேசி இருக்கிறாரே… இனி இவர்களோடு எந்தக் காலத்திலும் அய்யா கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டாரா? – தி.செல்வதிருமகள், சென்னை
பதில் : கடலில் தூக்கி எறிந்தாலும் கலைஞர் கூற்றுப்படி கட்டுமரமாகப் பயன்படுவதால் அதிலும் சவாரி செய்யவே செய்வார். அவரது பழைய அணுகுமுறை அறிந்தவர்கள் கூறுவர்!
கேள்வி : தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் பற்றிய ஆரோக்கியமான விவாதம் தேவை என கலைஞர் கூறியுள்ள கருத்துக் குறித்து?
– ச.வீரநிதி, செங்கை
பதில் : மிகவும் வரவேற்கத்தக்கது; ஆராயப்பட வேண்டியது. உலக நாடுகள் பலவற்றில் அமலில் உள்ளதே!
கேள்வி : இந்திய நாட்டிற்கு தற்பொழுது காவிப்புரட்சி அவசியம் தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளாரே? எதைக் காவிப்புரட்சி என குறிப்பிடுகிறார்?
– சா.கோவிந்தசாமி, பெரம்பலூர்
பதில் : நல்ல, நியாயமான கேள்வி. 1992 பாபர் மசூதி இடிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் – தமிழ்நாடு நீங்கலாக _ ரத்த ஆறு ஓடியதே அதுபோன்ற காவிப்புரட்சியா? அல்லது 2002இல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பை ஒட்டி சிறுபான்மை இஸ்லாமியர்களின் ரத்தம் பெரிதும் சிந்தப்பட்டதே அந்தக் காவிப்புரட்சியா? அல்லது மாலேகான் குண்டுவெடிப்பு மூலம் காவி சாமியார், காவி சாமியாரிணி – (பிரக்யாசிங்) – மூலம் நடந்த காவிப் புரட்சியையா? அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்!
கேள்வி : ஊழலின் ஊற்றுக் கண்ணான எடியூரப்பா சட்டவிரோத சுரங்கத் தொழிலைக் கட்டுப்படுத்த வேண்டும் என கூறுவது நகைச்சுவையாக உள்ளதே?
– த. கண்மணி, காஞ்சி
பதில் : அவருக்கு எப்படியாவது புதிய பதவி பெறவேண்டும் என்பதே ஆசை. அதற்கேற்ப ராகம் பாடுகிறார்! அவ்வளவே!
கேள்வி : புதிய பிரதமரால் (மோடி) தமிழகத்தில் பா.ஜ.க. தலைதூக்குமா? ஈழத்தமிழனுக்கு விடிவுகாலம் ஏற்படுமா? தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக வாய்ப்புண்டா? – தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
பதில் : யார் தலையைத் தூக்கும் என்பது போகப் போகப் புரியும். ஹிந்தித் திணிப்பு முதல் கட்ட ஒத்திகை இப்போதுதானே முடிந்துள்ளது!
கேள்வி : நாடாளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து அளிக்கும் விஷயத்தில் பாஜக பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளும் என எதிர்பார்க்கலாமா?
– கோ.சுருதி, பெரம்பலூர்
பதில் : எதிர்பார்க்க மற்றவர்களுக்கு உரிமை உண்டு. அதைச் செய்துகாட்ட பா.ஜ.க.வுக்கு மட்டுமே உரிமை உண்டு.
கேள்வி : ஒரு வேளை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு துணிவான முடிவு எடுத்து அமைக்க உத்தரவிட்டால் அதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும்? – அ.காளிதாஸ், ஈரோடு
பதில் : தமிழ்நாடு பாராட்டும்; கர்நாடகம் சண்டித்தனம் செய்யும்! சரியாகிவிடும் _ கொஞ்சகாலம் பின்பு.
கேள்வி : இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவுக்கு, தானாகவா வந்தார் இலங்கை அதிபர் ராஜபட்சே? விரும்பி அழைத்ததால்தானே! அவரின் வருகையை எதிர்த்து டில்லி, தமிழகத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களிலும், போஸ்டர்களிலும் ராஜபட்சேவைக் கண்டித்து வாசகமும், முழக்கங்களும் இருந்தது, அழைத்த மோடியையோ, பா.ஜ.க.வையோ பற்றி ஏதும் இல்லையே?
– மன்னை சித்து, மன்னார்குடி
பதில் : இருந்தாலும் இல்லாவிட்டாலும் அழைத்தது மோடியும் அவரது புதிய அரசும்தான் என்பது புரியாதவர்கள் அல்ல; துவக்கம் என்பதால் அவரைக் கடுமையாகக் கண்டிக்கவில்லை போலும்!
கேள்வி : புத்தரின் சீடர்களாக கருதப்படும் இலங்கையின் புத்த பிக்குகள் வன்முறையில் இறங்கி அவர்களது அடிப்படைக் கொள்கையையே தகர்க்க முயற்சிக்கிறார்களே? – அ.மாணிக்கம், திண்டிவனம்
பதில் : இலங்கையில் உள்ளவர்கள் புத்த பிக்குகள் அல்ல; ரத்த பிக்குகள் -_ ரத்தம் சரணம் கச்சாமி கூறுவோராயிற்றே!