புராண லோகங்களும் வானியல் கோள்களும் ஒன்றா? [மடமைக் கருத்துக்கு மறுப்பு]

ஜூலை 01-15

– பேராசிரியர் ந.வெற்றியழகன்

யார் என்பதா? எது என்பதா?

நிலவுக்கு அப்பால் _ என்பது அறிவியல் கட்டுரைகள் சில அடங்கிய ஒரு நூல். இதன் ஆசிரியர் திரு. ஏ.டி.பக்தவத்சலம் எம்.எஸ்ஸி., எம்.ஏ., எம்.எட்., டிசி.எம். ஆவார். இவரது நூல்களில் உள்ள கட்டுரைகளுள் ஒரு கட்டுரையின் தலைப்பு. யார் அந்தக் கதிரவன்?

உண்மையிலேயே, எது அந்தக் கதிரவன்? என்றிருக்க வேண்டும் அந்தத் தலைப்பு. ஏதோ சூரியன் என்பது உயிருள்ள _ அறிவுள்ள உயர்திணைப் பெயராக எண்ணி இவ்வாறு எழுதியுள்ளார். கட்டுரையின் தொடக்கத்தில் பின்வருமாறு எழுதி, இல்லை கிறுக்கியிருக்கிறார். அது இது:

புவிக்கு மேலே ஏழு உலகம் உள்ளன என்று நம் முன்னோர் நம்பி வந்தனர். அவர்கள், மற்ற கோள்களையே இவ்வாறு கருதினர்.

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?

புவி(பூமி)க்கு மேல் ஏழு உல(லோ)கம் உள்ளன என்று நம்பி வந்தனர் நம் முன்னோர் என்று எழுதிய ஆசிரியரின் கட்டுரையில் வரும் நம்பி வந்தனர் என்ற தொடர், அவர்கள் கண்டறிந்தனர் என்று வான் அறிவியல் அடிப்படையில் இல்லாமல் வெறும் குருட்டு (மூட)நம்பிக்கை அடிப்படையில் கருதி வந்தனர் என்பது அறிவியல் அல்ல: ஆய்வுக்கு உரியதும் அல்ல.

யார் அந்த முன்னோர்?

இதில் நம் முன்னோர் நம்பி வந்தனர் என்கிறார். யார் அந்த நம் முன்னோர்? தம்முடைய இந்துமத முன்னோர்களையே இப்படிக் குறிப்பிடுகிறார். மகரிஷிகள் முதலானோர் எழுதி வைத்துப் போன மூடநம்பிக்கை _ முழுக் கற்பனை _ வேடிக்கைக் கதையைத்தான் நூலாசிரியர் முன்னோர் என்கிறார்.

சரி, இனி செய்திக்கு வருவோம். புவிக்கு மேலாக ஏழு உலகங்கள் உள்ளன என்கிறது இந்துமத முன்னோர் எழுதிய நூல்கள்.

ஏன் எழுதவில்லை?

நம் முன்னோர்கள் நம்பி வந்த அந்த ஏழு உலகங்கள் என்னென்ன? என எழுதவில்லை! ஏன்? எழுதினால் என்ன? எழுதியிருக்க வேண்டும். சரி போகட்டும்.
காஞ்சி சங்கரமட நூலில் காணப்படுபவை:

அபிதான சிந்தாமணி என்னும் நூலிலிருந்தும் இந்துமத நூல்களிலிருந்தும் அவற்றைப் பொறுக்கி எடுத்து நாம் கூற இருக்கிறோம். இவற்றை அனைவரும் அறிந்து எள்ளி நகையாட வேண்டும். அபிதான சிந்தாமணி நூலிலிருந்தும், காஞ்சி காமகோடி பீட சங்கரமட ஆதரவில், சங்கராச்சாரியார் ஆசியில் இந்து சமய மன்றம் வெளியிட்டுள்ள நூல், ஹிந்து தர்மங்கள் என்பது அதிலிருந்தும் எடுத்துக் கூறவுள்ளோம்.

எடுத்த எடுப்பிலேயே தவறு:

புவிக்கு மேலே உள்ள ஏழு உலகங்கள் என எழுதியிருப்பதே தவறு. புவி (பூமி) உள்ளிட்ட ஏழு உலகங்கள் என்றுதான் எழுதியிருக்க வேண்டும். தொடக்கமே பிழை.

போவோமா ஊர்கோலம் லோகங்கள் எங்கெங்கும்?

இப்பொழுது, அபிதான சிந்தாமணி மற்றும் ஹிந்து தர்மங்கள் நூல்களில் எழுதப்பட்டுள்ள ஏழு லோகங்களைப் பார்க்கப் போகிறோம். தயாராக இருங்கள். பூமி அதாவது பூலோகம் என்பது அதில் கூறப்படும் முதல் லோகம். இனி, நாம் போக இருப்பன பூலோகத்திற்கு மேலே உள்ள மற்ற ஆறு லோகங்கள். ஏவுகணை (Rocket)  இல்லாமல், விண்கலம் இல்லாமல் எண்ணம் அளவில் பறந்து போவோம். போவோமா ஊர்கோலம்?

இதோ! இரண்டாம் லோகம்

இதோ 2ஆம் லோகம் வந்து விட்டோம். இது புவர் லோகம் எனப்படுகிறது. இந்த லோகம் பூமியிலிருந்து எத்துணை தொலைவு தெரியுமா? 15 லட்சம் யோசனை தூரம். ஒரு யோசனை என்பது இன்றைய அளவீட்டு முறையில் 10 மைல் அல்லது 16 கி.மீ.

இனி, இந்த அளவீட்டு மாற்ற அடிப்படையிலேயே குறிப்பிடப் போகிறோம். 15 லட்சம் யோசனை என்பது 240 லட்சம் கிலோ மீட்டர் ஆகும்.

என்னென்ன? யார் யார்?

இந்தப் புவர் லோகத்தில்தான் சூரிய _ சந்திர கிரகங்கள், 27 நட்சத்திரக் கூட்டங்கள் இருக்கின்றனவாம். (சூரியனும், சந்திரனும் கிரகங்களை என்று கட்காதீர்கள். வந்துவிட்டோம்… பார்த்துவிட்டோம். இங்கே, பதினெண் கணங்களான கின்னரர், கிம்புருடர் முதலானவர்களும், வித்யாதரர்களும் வாழ்கின்றனராம்!

அவற்றையும், அவர்களையும் பார்த்து விட்டோம். புவர் லோகத்திற்கு மேலே உள்ள லோகம் வந்துவிட்டோம். என்ன வேகத்தில், ஒலி வேகத்திலா, ஒளி வேகத்திலா எனக் கேட்டு விடாதீர்கள்.

சுகலோகமா? சுவர்க்க லோகமா?

நாம் வந்து சேர்ந்த 3ஆவது மேலுலகம்தான் சுவர்க்க லோகம் என்பது. பூஜை, புனஸ்காரம், வேத பாராயணம், நியம நிஷ்டை, தவங்கள் இல்லாமலேயே எத்துணை எளிதாக சுவர்க்கம் வந்துவிட்டோமே? பூமியிலிருந்து 1600 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது இது.

கொட்டிக் கிடக்கும் குறைவிலாச் சுகம்

அதோ! நன்றாக உற்றுப் பாருங்கள்! நான்கு கட்டிளங் கன்னிகைகள், கவர்ச்சிக் காரிகைகள் நின்று கொண்டிருக்கிறார்கள். யார் அவர்கள்? அவர்கள் ரம்பா, (நம்ம ஊர் திரைப்பட நடிகையல்ல) மேனகா, ஊர்வசி, திலோத்தமா ஆகிய தேவலோக நாட்டியத் திலகங்கள்! நடன நங்கையர்கள்!! தேவதாசிகள்!! இங்கே எல்லாச் சுகங்களை அனுபவிக்கவும் வாய்ப்புண்டு _ (நூல்: ஹிந்து தர்மங்கள், பக்கம்: 65)

இதற்குமேல் இந்த லோகத்தில் நாம் இருக்க வேண்டாம்! நம் கற்புக்கு ஆபத்து வந்துவிடும். பார்வை ஒன்றே போதும்! நெருங்க வேண்டாம். நம் ஏழு லோகப் பயணம் தடைப்பட்டுவிடும். இதோ, சுவர்க்கத்தை விட்டுப் புறப்பட்டு விட்டோம்.
வந்தது பெண்ணா? தேவதை தானா?

4ஆவது மேலுலகம் வந்து விட்டோம். இது பூமியிலிருந்து 320 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் பெயர் மஹர் லோகம் என்பது. இங்கே வாழ்பவர் பெண்கள் அல்லர்! வானகத்துத் தேவதைகள்! சொக்கவைத்து உள்ளத்தைச் சுண்டி இழுக்க வைக்கும் சுந்தரத் தேவதைகள்!

நெருங்க வேண்டாம்! உங்களை ஒருவழி பண்ணிவிடுவர்! தொலைந்தீர்கள். இப்பொழுது உடனடியாகப் புறப்பட்டு 5ஆவது மேலோகம் வந்துவிட்டோம். பெயர் ஜனோ லோகம். இந்த லோகம் பூமியிலிருந்து 80 லட்சம் யோசனை தூரத்திலுள்ளது. அதாவது 1280 கோடி கி.மீ.

ஈருடல் ஓருயிர்

ஜனோ லோகத்தில், ஆண்களும் பெண்களும் இடைவெளியின்றி உடலுறவு இன்பம் கொண்டிருக்கும் காட்சி! யார் இவர்கள்? கணவன்மார் இறந்தவுடன் அவர்களோடு உடன்கட்டை (சதி) ஏறித் தீயினில் வெந்து நீறாகிப் போன மனைவிமார்கள். இந்த வாழ்விணையர்கள்தான் ஜனோ லோகம் சென்று அங்கே சரசம் சல்லாபம் அனுபவிக்கிறார்களாம்!

பரவசக் காட்சிகளைப் பார்த்தது போதும்!

உடன்கட்டை ஏறி உயிர் நீக்கப்பட்ட பெண்களுக்கு இப்படிப்பட்ட இன்பசுகம்? காமக் களியாட்டம். என்னமோ ஆசைகாட்டி, கணவனை இழந்த மங்கையரை உடன்கட்டையில் சாகடிக்கிறது இந்து மதம்! இந்துமத வேதம்! இந்து தர்மம்!! பார்ப்பன ஆரிய ஏமாற்று வேலை! இங்கு பார்த்தது போதும்! அடுத்த லோகம் கிளம்புவோம்.

வைகுண்ட – சிவலோக பதவிகள்

இதோ, அடுத்த 6ஆவது லோகம் வந்துவிட்டோம்! இதன் பெயர் தபோ லோகம்! இங்கேதான் விஷ்ணு லோகமாகிய ஸ்ரீவைகுண்டம், சிவலோகமாகிய ஸ்ரீகைலாஸம் இருக்கின்றன. இரண்டையும் நாம் பார்த்துவிட்டோம். இந்த லோகம் பூமியிலிருந்து 12 கோடி யோசனை அதாவது 120 கோடி மைல் _ அதாவது 192 கோடி கி.மீ.

சத்தியம் – இது சத்தியம்!

தபோ லோகம் விட்டு 7ஆம் மேலோகம் வந்து விட்டோம். இதன் பெயர் ஸத்ய லோகம். இது, பூமியிலிருந்து 272 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இது பிர்ம்ம லோகம் எனவும் அழைக்கப்படும். படைப்புக் கடவுள் தன் பத்தினி சரஸ்வதியோடு இங்குதான் ஆனந்த பரவசத்தில் ஆழ்ந்து கிடக்கிறானாம். அவனது ஆனந்தத்திற்கு இடையூறு செய்யாமல், நாம் புறப்படுவோம். புறப்பட்டு விட்டோம்.
விண்ணைத் தாண்டி வருவாயா?

வருவோம்! உறுதியாக வருவோம்! வந்தே விட்டோம் மறுபடியும் மனிதர் வாழும் நமது பூலோகத்திற்கு. என்ன இன்பமான விண்வெளிச் சுற்றுலா!!

வெட்கப்பட வேண்டாமா?

மேலே கண்ட, மத புராணப் புளுகுகளை உண்மை என்று கொண்டு இந்தப் புவி உட்பட மேல் ஏழு உலகங்கள்தான் கதிரவனைச் சுற்றும் மற்றைய கோள்கள் என மனம் கூசாமல், வெட்கப்படாமல் எழுதுகிறாரே, திரு. பக்தவத்சலம் என்னும் இந்த நூலாசிரியர்?

மீண்டும் தவறு

மேல் உலகம் ஏழும்தான் வானியல் கோள்கள் என்கிறார். இங்கேயும் புவிக்குமேல் ஏழுகோள் என்கிறார். சூரியனுக்கு மிக அண்மையில் உள்ள புதன், வெள்ளிக் கோள்களை இவர் கூற்றுப்படி, கீழ்க் கோள்கள் என்று விலக்கிவிட்டாலும் அடுத்ததாக உள்ள புவிக்கு மேல் உள்ள 7 கோள் என்கிறாரே, அது எப்படிச் சரியாகும்? புவியினைச் சேர்த்தால்தான், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவற்றோடு ஏழு கோள்கள் ஆகும். இவரோ புவிக்கு மேலே உள்ள 7 கோள்கள் என்கிறாரே?

இன்னொரு கோள் எது? எதை வேண்டுமானாலும் ஆதாரமின்றி அறிவியல் அடிப்படையின்றி எழுதி விடுவதா, பக்தவத்சலனார் அவர்களே! வேண்டாம் அய்யா, இந்த வீண் வேலை!

-தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *