பார்வை குன்றியோரைக் கைபிடித்து சாலையைக் கடக்க உதவினால், பார்வையற்றவருக்குப் பயன், அதற்கு உதவிபுரிந்தவர் கருணையாளன். அதுபோல ஒழுக்கக்கேடான செயலைச் செய்யும்போது அது அவனையும் பாதித்து அடுத்தவனையும் பாதிக்கும். அதனால்தான் பக்தி பொதுவானது அல்ல என்றார் பெரியார்.
பக்தி என்ற ஒரு பொய்த் தோற்றத்தை வைத்து கற்பனையான கடவுளை ஏன் ஏற்க வேண்டும்? சரி, நல்லவர்களுக்குக் கடவுள் தேவையில்லை. தீயவர்களுக்கும், சமுதாய விரோதிகளுக்கும் கடவுள் இல்லை எனும்போது சமுதாயத்திற்கு ஆபத்துதானே… மேலும் நல்லவர்களுக்கும் மனசாட்சி எப்போதும் ஒரே நிலையில் இருக்குமா? அதனால் கடவுள் என ஒன்று இருந்தால் அதற்குப் பயந்து நடுநிலையாகச் செயல்படுவான், இல்லையேல் துணிந்து பல தவறுகளைச் செய்வான். அதனால் கடவுள் அவசியம் என்கிறார்கள் சிலர்.
கடவுளின் அவசியமே இல்லாமல் நாத்திகர்கள் பலர் நல்லவைகளைச் செய்து கொண்டிருக்கவில்லையா? இரு பக்கமும் நல்லது கெட்டது உண்டு. பயத்திற்குத்தான் கடவுள் பக்தி பயன்படுகிறது எனில், அந்த பயத்திற்கு உண்டான காரணத்தை அறிந்து அதிலிருந்து விடுபட்டால் கடவுளையும் கழற்றி விட்டுவிடலாமா? ஆகவே, இன்றைய உலகில் கடவுள் உண்டா? இல்லையா? என்பதை ஆராய்வதைவிட கடவுள் அவசியமா? என சிந்திக்க வேண்டும். கடவுளை வணங்கினால்தான் உயிர் வாழ முடியும் என்கிற நிர்ப்பந்தம் உலகில் எந்த உயிரினங்களுக்காவது ஏற்பட்டதுண்டா? எனவே, கடவுளை(?) எதற்காக வணங்க வேண்டும்?
படைத்தவனுக்கு நன்றி சொல்லவே வணங்குதல் அவசியமாம். அப்படியானால் நம்மைப் படைத்த பெற்றவர்களைத்தான் அவசியம் வணங்க வேண்டுமே தவிர, கண்ட கற்பனைகளை அல்லவே.
கடவுளை அறிமுகப்படுத்தி விளம்பரப்படுத்தியது மத வியாபாரிகளே! ஆகவே, அவர்கள்தான் கடவுள் உண்டா இல்லையா? என்பதை நிரூபித்துக் காட்டவேண்டும். அறிமுகப்படுத்திவிட்டு கண்களுக்கு அகப்படமாட்டார் என்பது கேலிக்கூத்தாகும். ஒரு பொருளைத் தயார்ப்படுத்துகிறவன் அல்லது கண்டுபிடிக்கிறவன், அதாவது உதாரணத்திற்கு கல்கண்டு என வைத்துக் கொள்வோம். இதைத் தயாரித்து விட்டுத்தான் அறிமுகப்படுத்தி விளம்பரப்படுத்துவான். அதுதான் கடைகளில் விற்பனைக்கும் வரும். இது என்னவென்று (அறிமுகப்படுத்துவதற்கு முன்) யாருக்கும் தெரியாது. அப்படித் தெரியாத ஒன்றை யாரும் கடைகளில் இருக்கிறதா? என்று கேட்க மாட்டார்கள்.
ஆனால், கல்கண்டு என கரும்பலகையில் எழுதி வைத்துக்கொண்டு, வந்து கேட்பவர்களிடம் ஆமாம் இருக்கின்றது. ஆனால், கண்ணுக்குத் தெரியாது, கரடுமுரடாக இருக்கும், இனிப்பாக இருக்கும் எனக் கூறினால் இது மோசடி வேலையா இல்லையா? இருக்கும்-… ஆனால் இருக்காது என்று வடிவேலு காமெடி செய்தால் மக்கள் கடைக்காரனைக் கல்லால் அடிப்பார்கள். இல்லாத அல்லது அப்படி ஒன்றைத் தயார் பண்ணாத கடவுளை இல்லை என நாம் ஏன் நிரூபித்துக் காட்டவேண்டும்? இல்லாத ஒரு பொருளை இருக்கிறது என நீ விளம்பரப்படுத்திய தனால்தான் கேட்கிறோம். எங்கே இருக்கிறது என்று? நிரூபிப்பார்களா? மொழியறிவு பெறாத காரணத்தால் விலங்கினங் களால் கேட்கமுடியாது. அதைப் பெற்ற மனிதன் கேட்கிறான், எங்கே இறைவன்?.
– இனியவன்