ஜெர்மனியின் மிகப் பழைமை வாய்ந்த பல்கலைக் கழகம் கொலோன் பல்கலைக் கழகம். இது 14ஆம் நூற்றாண்டு (1340 ஆண்டு) துவக்கப்பட்ட ஒன்று; இடையில் பிரெஞ்சுப் படையெடுப்பினால் இது நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் துவங்கி நடைபெறும் வரலாற்றைக் கொண்ட பல்கலைக் கழகம். இதனுடன் நமது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் _ போட்டுள்ளது.
இதன் தென் கிழக்காசிய, தென் ஆசிய நாடுகளின் பாடங்கள் தமிழ், மற்றொரு மொழியாராய்ச்சித் துறையின் தலைவராக உள்ள பேராசிரியர் திருமதி யுல்ரிக் நிக்லஸ் அவர்களது அழைப்பினை ஏற்று (வேந்தர் என்ற முறையிலும் திராவிடர் கழகத்தின் தலைவர் என்ற முறையிலும்) ஜெர்மனி நாட்டின் மூத்த பல்கலைக் கழகமான கொலோன் பல்கலைக் கழக விருந்தினராகச் சென்றேன்; என்னுடன் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரன் அவர்களும், அவர்தம் அழைப்பினை ஏற்று உடன் வந்திருந்தார்.
ஜூன் 2 பிராங்க்ஃபர்ட் (Frank Furt) அடைந்தபோது, விமான நிலையத்திற்கே வந்து பேராசிரியர் யுல்ரிக் நிக்லஸ் அவர்களும் அவரது துறையில் பணியாற்றும் திரு. சுவன் அவர்களும் வந்து வரவேற்று, எங்களை ரயில் மூலம் கொலோன் நகரத்திற்கு அழைத்துச் சென்று, ஹோட்டல் ஈபீஸில் (Hotel Ibis) தங்க வைத்தனர். அத்துறையின் தலைவரான பேராசிரியர் நிக்லஸ் அம்மையார் அவர்களும் அத்துறையில் பணியாற்றும் தமிழ் கற்கும் ஆர்வலர்களான சுவன் அவர்களது டாக்டர் கிளாடியா அம்மையாரும் எங்களை கவனித்துக் கொள்ள வசதியாகவும், எங்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் மூன்று அறைகளை எடுத்து, அதே ஓட்டலில் எங்களுடன் தங்கி மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் உபசரித்தனர்!
3ஆம் தேதியில் டிராம் மூலம் (அங்கு நகரங்களில் மிக வசதியான போக்குவரத்து சாதனம் டிராம்) கொலோன் பல்கலைக் கழக வளாகத்திற்கு _- பரந்து விரிந்த பகுதி -_ அதன் பெயர் அதிகார (Albertus Magnus plat) ஆல் பர்ட்டஸ் மேக்னஸ் என்பவர் ஜெர்மன் தத்துவஞானி.
அங்கு பல துறைகளைச் சுற்றிக் காண்பித்தனர். அவரது துறைக்கும் நடந்தே சென்று பார்த்து, பல்கலைக் கழகத்தின் டீன் பேராசிரியர் டாக்டர் ஸ்டீபென் குரோகி அவர்களைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி அவரை பகல் ஒரு மணிக்குச் சந்தித்து நமது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் பற்றியும் சுருக்கமாக விளக்க, அவரிடம் நமது ஆங்கில நூல்களை பல்கலைக் கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கி, அவரும் அன்புடன் வரவேற்று, இரு பல்கலைக் கழகங்களும் விரிவான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதை விளக்கினார். நன்றி தெரிவித்து விட்டு விடுதிக்குத் திரும்பினோம்.
மதிய உணவு, சிறிய ஓய்வுக்குப் பின், மாலை 5 மணி அளவில் கிளம்பி, ஜெர்மனி இந்திய நட்புறவு வாரத்தையொட்டி, கொலோன் பல்கலைக் கழகத்துறையும் இணைந்து பிரபல கொலோன் அருங்காட்சியகம் (மியூசியத்தை) ஒட்டிய பெரிய மண்டபத்தில், திராவிடர் இயக்கமும் – தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளும் என்ற தலைப்பில் ஜெர்மனியின் மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துக் கூடிய ஒரு சிறப்புக் கூட்டத்தில் எனது முதல் சொற்பொழிவு (3.6.2014) நடைபெற்றது. (நிகழ்வுகள் எல்லாம் ஜெர்மனியிலும், ஆங்கிலத்திலும்) மாலை 7.30 மணிக்குத் துவங்கி 9.30 மணிக்கு நிகழ்ச்சி முடிந்தது).
முதலில் ஜெர்மன் இந்திய நட்புறவு கழகச் செயலாளர் ருத்இ.ஹீப் அம்மையார் வரவேற்புரை நிகழ்த்தினார். அடுத்து, பேராசிரியர் நிக்லஸ் அம்மையார் வந்துள்ள விருந்தினர் – பேச்சாளர்களைப்பற்றி அறிமுக உரையாற்றினார்.
அடுத்து, பெரியார் _- மணியம்மைப் பல்கலைக் கழகம் பற்றியும் குறிப்பாக பெரியார் புரா திட்டம் மற்றும் ஆய்வுத் துறைகளைப் பற்றியும் Power Point மூலம் சுமார் 15 நிமிடங்கள் உரையாற்றினேன். அதன்பிறகு Power Point மூலம் மேற்காட்டிய தலைப்பில் தந்தை பெரியார் பற்றிய வரலாறு, தொண்டு, கொள்கை லட்சியங்கள், சிந்தனைகள், மனிதநேயம் தொண்டு, பெரியார் பட்டம் பெண்கள் மாநாட்டில் வழங் கியது; சுயமரியாதை தத்துவம், அறிவியல் தத்துவம் இவைகளைப்பற்றி Power Point முடிந்து, அதன் மேல் தனி விளக்கங்கள் மூலம் சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றினேன்.
பிறகு கேள்விகளைக் கேட்டவர்க்கு விடையளித்தேன். அது 30 நிமிடங்களுக்கு மேலாக மிக அருமையாக உண்மையாகவே உரையில் ஏற்பட்ட சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்தது. அனைவரும் வரவேற்று தங்களது மகிழ்ச்சியை முடிவில் எங்களுக்குத் தெரிவித்தனர். கூட்ட முடிவில் அந்த செயலாளர் ருத்இ.ஹீப் அம்மையார் (ஜெர்மனியர்) இவ்வளவு செய்திகள் இந்திய சமூகம்பற்றி எங்களுக்கு இதுவரை தெரியாது. மிகவும் அரிய தகவல்களை நாங்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த சொற்பொழிவு அமைந்திருந்தது என்று தெரிவித்தனர். (புத்தகங்களையும் வாங்கிச் சென்றனர்).
அடுத்த நாள் 4ஆம் தேதி ஜூன் காலை 11 மணியளவில் கொலோன் பல்கலைக் கழக துறையின் கட்டடத்திற்குள் இலங்கை முல்லைத் தீவினைச் சேர்ந்த ராகுலன் சிவநாயகம் அவர்களுக்கும், முல்லைத் தீவைச் சேர்ந்த ஒலிவியா அவர்களுக்கும் சுயமரியாதைத் திருமணம் _- தாலி, வேறு எந்த சடங்கும், சம்பிரதாயம் இன்றி மாலை மாற்றுவதுடன் நடந்தது! முதலில் பேராசிரியர் யுல்ரிக் நிக்லஸ் அம்மையார் அனைவரையும் வரவேற்றார். ஜெர்மானிய மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஈழத் தமிழர்களான இருபாலர், பெற்றோர் என சுமார் 40 பேர் வந்திருந்தனர். மணமகள் ஒலிவியா, இத்துறையின் மாணவி. மணமகன் ராகுலன் (இளையர் இயக்கத்தில் தொண்டாற்றியவர்; ஒளிப்பட நிபுணர்).
சுயமரியாதைத் திருமணத்தின் தத்துவத்தையும் விளக்கி தந்தை பெரியார் எப்படித் துவக்கி, இது இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது என்பதை சுமார் 35 நிமிடங்கள் தமிழிலும் சுருக்கி 50 நிமிடங்கள் ஆங்கிலத்திலும் உரையாற்றி, மணமக்கள் உறுதி மொழி கூறி நடத்தி வைத்தேன். மணமக்களது பெற்றோர்களும், உறவினர்களும் வந்திருந்தனர். எல்லோருக்கும் மகிழ்ச்சி. இந்த சுயமரியாதை முறைத் திருமணத்தை முதல் முறையாக பார்த்து, கேட்ட தாய்மார்கள் உட்பட பலரும் பாராட்டினர் – இரண்டு பார்ப்பன நண்பர்களும் வந்து என்னிடம் பாராட்டிப் பேசி விட்டுச் சென்றனர். அன்று (4.6.2014) மாலை 4 மணியளவில் மீண்டும் அதே துறைக்கான வகுப்பறையில் சுமார் 30 பேருக்கு மேல் (பிற பல்கலைக் கழக ஆய்வாளர்கள், பேராசிரியர் சிலர் உட்பட) கலந்து கொண்டனர்.
இந்தி எதிர்ப்பு இயக்கம் அதன் தாக்கங்கள் பற்றிய சொற்பொழிவு சுமார் 40 நிமிடங்கள் Power Point Presentation விளக்கவுரையுடன் நிகழ்த்தினேன் பலரும் கேட்டனர்; குறிப்பெடுத்துக் கொண்டனர். பிறகு 35 நிமிடங்கள் கேள்வி _ பதில்கள் நேரத்தில் பலரது சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தேன். பிறகு நிகழ்ச்சி 5.45 மணி அளவில் முடிந்தது.
அடுத்த நாள் (5.6.2014) ஜெர்மனியின் மற்றொரு பெரிய பல்கலைக் கழகமான ஆகென் (‘Rwth Aachan’ University) அழைப்பை ஏற்று நாங்கள் (துணைவேந்தர், பேராசிரியர் நிக்லஸ், ஜெர்மெனி கொலோன் பல்கலை சுவான், நான் ஆகிய நால்வரும்) ஆகேன் நகருக்கு ரயில் மூலம் சென்றும் அந்த பல்கலைக்கழக முகப்பில் பேராசிரியர் சார்ட்ஜி பன்னாட்டுத் தொடர்பாளர் ஆண்ட்சன் ஆகியோர் எங்களை வரவேற்று, அழைத்துச் சென்றனர். இரு நாட்டுக் கொடிகள் பறந்தன.
அப்பல்கலைக் கழகத்தின் மாணவர் – வளர்ச்சிகல்வித் துறை _- மற்றவைகள்பற்றி விளக்கி, மதியம் எங்களுக்கு விருந்தளித்து, மகிழ்வித்தனர்.
அப்பல்கலைக்கழக அடையாள வெள்ளி சாவிகளை தந்தனர். மிகப் பெரிய திட்டமான 2000 கோடி யூரோ திட்டம் மெலட்டன் என்ற இடத்தில் எல்லாத் துறைகளையும் ஒரே பகுதியில் அமைத்திட திட்டமிட்டு 2003இல் துவங்கி, 2023இல் முடிக்க விருப்பதை விளக்கினர். மாலை 5 மணி அளவில் கொலோன் துறைத்தலைவர்களுடன் விடைபெற்று கொலோன் நகரத்திற்குத் திரும்பினோம்.
மறுநாள் 6.6.2014 அன்று கொலோன் பல்கலைக் கழக தமிழ்மொழி ஆராய்ச்சித் துறையில் _- பேராசிரியர் நிக்லஸ் அவர்கள் முன்னிலையில் _- திராவிடர் இயக்கம் இந்தி எதிர்ப்பு -_ மற்றும் உரையாற்றிய பலவற்றைப் பற்றிய கலந்துரையாடல் ஒன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. நான் தந்தை பெரியார் வாழ்க்கை, லட்சியங்கள், சாதனைகள் பற்றி முதலில் ஒரு சிறு அறிமுக உரை நிகழ்த்திய பின், முழு நேர கேள்வி பதில் அடங்கிய ஒரு கலந்துரையாடல் நிகழ்வு துவங்கி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்தது!
பல்வேறு சந்தேகங்களைக் கேட்டனர், அத்துறை மாண வர்கள் மட்டுமின்றி, வேறு துறைகள், வேறு பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்களும் வந்து கலந்து கொண்டு நல்ல ஆய்வு அரங்கமாக அதனை பயன்படுத்திக் கொண்டனர். வெளிநாட்டுப் பல்கலைக் கழகத் துறைகள் பெரியார் பாடங்களைத் தேடுகின்ற நிலை!
நம் தந்தை 1932இல் ஜெர்மனி நாட்டிற்குச் சென்ற அதே ஜூன் திங்களில் அவரது தொண்டனும் வாழ்நாள் மாணவனும் ஆகிய எனக்குக் கிடைத்த வாய்ப்பு அவர்தம் வாழ்வும் வாக்கும் சாதனையும்பற்றி விளக்கி அவர்களில் பலரைச் சிந்திக்க வைத்த வாய்ப்பு, நாம் -_ நமது இயக்கம் _- பெற்ற பெரு வாய்ப்பு -_ பேறு அல்லவா?
1. வெளிநாட்டுப் பல்கலைக் கழகத் துறைகள் பெரியார் பாடங்களைத் தேடுகின்ற நிலை!
2. அங்கே நடந்த சுயமரியாதைத் திருமணம் (தாலி, சடங்குகள், ஜாதி, மத மறுப்புக் கொள்கை வெற்றிச் சின்னம் அல்லவா?)
3. எந்த ஜெர்மனி ஆரிய வடமொழிக்கு முதலில் பெருமை சேர்த்ததோ, அதே ஜெர்மனியில் இப்போது திராவிடப் பண்பாடு மொழியின் சிறப்பு பெரியார் இயக்கம் பற்றி பரப்புரை செய்யப்பட்டு அமைதிப் புரட்சி.
4. உடனடியாக பெரியார் பன்னாட்டு மய்யம் அமைப்பு அங்கு முகிழ்த்துக் கிளம்பிய நல்விளைவு.
5. பெரியாரியல் பாடங்கள் -_ பட்டயம், சான்றிதழ் படிப்புகளை ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழகம் ஏற்றுச் செயல்படத் தயார் என்ற ஜெர்மனி பேராசிரியர் அம்மையாரின் விழைவு நம்மை மெய் சிலிர்க்க வைத்தது!
இதைவிட நமக்கு வேறு என்ன பேறு – மகிழ்ச்சி வேண்டும்!
கி.வீரமணி
ஆசிரியர்