எச்சரிக்கைக் குரல் எழுப்பிய
திராவிடர் விவசாயத் தொழிலாளர் எழுச்சி மாநாடு
திருவாரூரில் 26.5.2014 அன்று நடைபெற்ற திராவிடர் விவசாய தொழிலாளர் எழுச்சி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசும்போது, விவசாயம் என்பதை வருணாசிரம முறையில் பாவத் தொழிலாகக் கூறும் மனுதர்மம்- பார்ப்பனர்கள் தான் தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மிராசுதாரர்களாக உள்ளனர். அந்த பாவப்பட்ட தொழிலின் இலாபத்தை அனுபவிப் பவர்களாக பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். ஆனால் வயலில் உழைக்கும் விவசாயிகளின் நிலையோ அன்று தொட்டு இன்றுவரை பரிதாப நிலைதான்.
நகர்ப்புறங்களில் மக்கள் அனுபவிக்கும் எல்லா வசதிகளும் கிராமப் பகுதியில் உள்ளவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று 1944ஆம் ஆண்டிலேயே இதுபற்றிச் சிந்தித்து தம் கருத்தினை தந்தை பெரியார் வெளியிட்டுள்ளார்கள்.
மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் தொடங்கிய புரா திட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் கூறிய அந்தக் கருத்தின் அடிப் படையில் தான் தஞ்சை வல்லத்தைச் சுற்றியுள்ள 67 கிராமங்களைத் தத்தெடுத்து பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் செயல்படுத்தி வருகிறது என்று தெரிவித்த ஆசிரியர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் 10 கிராமங்களில் ஆய்வு செய்து அங்கும் புரா திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்றும் அறிவித்தார்.
காவிரி நீர்ப் பங்கீடு, நீர் சேமிப்பு, விவசாயிகளுக்கான இழப்பீடு, மானியம் முறையாகச் சென்றடைதல் உள்ளிட்ட தீர்மானங்களுடன் பெண் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளைக் களைதல், ஆண் – பெண் ஊதிய வேறுபாட்டை நீக்குதல், விவசாயத் தொழிலாளர்களுக்கு முதியோர் காப்பகங்கள் போன்ற இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான 12 முக்கியத் தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. ஒன்று விவசாயத்தை வாழ வைக்க வேண்டும்; அல்லது விவசாயிகளுக்கு மாற்றுத் தொழில் செய்யும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். விவசாயிகளை வாயாரப் புகழ்ந்துவிட்டு அவர்களது வாழ்வை உறிஞ்சக் கூடாது என்று ஒலித்த குரல் விவசாயிகளைப் புறக்கணித்து விட்டு வளர்ச்சி பேசும் அத்தனைப் பேருக்குமான எச்சரிக்கையும் அறைகூவலும் ஆகும். திருவாரூர் மாநாடு பெரியார் பார்வையில் புதிய அணுகுமுறையில் விவசாயிகளைப் பார்த்திருக்கிறது; இனி வழிகாட்டும்.