வரலாற்றுப் பாட நூல்களைத்
திரிக்கும் அவலம்
காவிக்கும்பல் ஆட்சிக்கு வந்தாலே அவர்களின் முதல் பார்வை விழும் இடம் அவர்களுக்கு எப்போதுமே பாதகமாக இருக்கும் வரலாறு தான். இதோ இந்த முறை மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததும் கச்சை கட்டிக் கிளம்பிவிட்டது காவிக்கும்பல். அதுவும் இம்முறை முழு வலுவோடு இருப்பதாகக் கருதப்படுவதால், வேகம் கொஞ்சம் கூடுதலாகத் தானே இருக்கும்.
பிரபல பாடநூல் வெளியீட்டு நிறுவனமான ஓரியன்ட் பிளாக்ஸ்வான் நிறுவனத்தின் வரலாற்றுப் பாடநூலுக்கு எதிராக சட்ட அறிவிக்கை (லிமீரீணீறீ ழிஷீவீநீமீ) அனுப்பியதன் மூலம் கணக்கைத் தொடங்கியுள்ளார் தினநாத் பத்ரா என்பவர். இதையடுத்து அந்த நிறுவனம் அதனுடைய பல்வேறு நூல்களை மறுஆய்வு செய்து கொண்டுள்ளது. இவற்றுள் கல்வியாளர் மேகா குமார் எழுதியுள்ள 1969லிருந்து அகமதாபாத்தில் நடக்கும் மதவாதம் மற்றும் பாலியல் வன்முறை என்ற நூலும் மறு ஆய்வு செய்யப்படும் நூல்களின் பட்டியலில் இருப்பதாக ஓரியன்ட் பிளாக்ஸ்வான் நிறுவனம் அவருக்குத் தெரிவித்ததை அடுத்து இந்தத் தகவல் வெளியே வந்துள்ளது. இந்த நூல் 1969, 1985 மற்றும் 2002ஆம் ஆண்டுகளில் அகமதாபாத் நகரத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது முஸ்லிம் மதப் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகளைக் குறித்து ஆய்வு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் சார்ந்த கல்வியியலாளரான தனக்கு சமீபத்திய தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட மாறுதல் கவலையளிப்பதாகக் கூறியுள்ளார் மேகா குமார்.
சரி, யாரிந்த தினநாத் பத்ரா?
ஆர்.எஸ்.எஸ் நடத்தும் வித்யபாரதி கல்வி குழுமங்களின் பொதுச் செயலாளராக இருந்தவர் தினநாத் பத்ரா. தற்போது சிக்ஷா பச்சாவோ அந்தோலன் சமிதி என்ற நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகிறார். வித்யபாரதி பயன்படுத்தும் பாடநூல்கள் சிறுபான்மையினருக்கு எதிராகவும், குழந்தைத் திருமணம், சதி என்ற உடன்கட்டை ஏறுதல் ஆகியவை இந்தியக் கலாச்சாரம் என்பது போலவும் இன்னமும் பல மூடநம்பிக்கை களைக் கொண்டுள்ளது என்று குற்றம்சாட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதன் கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அதை எதிர்த்து 2001ஆம் ஆண்டு லீகல் நோட்டீஸ் அனுப்பியவர் தினநாத் பத்ரா.
வரலாறு மற்றும் சமூக அறிவியல் பாடநூல்களில் உள்ள தகவல்களை எதிர்த்து (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்) எதிராக 2006ஆ-ம் ஆண்டு பொதுநல வழக்குத் தொடர்ந்தவரும் இவரே! அவ்வழக்கு பழங்காலத்தில் ஆரியர்கள் மாட்டிறைச்சி உண்பார்கள் என்று பாடநூலில் இருப்பதை எதிர்த்து பதியப்பட்டிருந்தது என்பதும், அந்தக் கருத்தைப் பாடநூலில் இருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2007ஆ-ம் ஆண்டு அன்றைய மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக இருந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான், தினநாத் பத்ராவின் அறிவுரைப்படி, மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து பாலியல் கல்வியை நீக்கினார். மேலும், பாலியல் கல்வியைப் போதித்தால் சட்டப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டி டெல்லி பள்ளி ஆசிரியர்களுக்குக் கடிதம் அனுப்பியது சிக்ஷா பச்சாவோ அந்தோலன் சமிதி.
2008ஆம் ஆண்டு, டெல்லி பல்கலைக்கழக வரலாற்றுப் பாடத்திட்டத்தில் இருந்து ராமாயணம் தொடர்பான ராமானுஜனின் கட்டுரையை நீக்க வழக்குத் தொடர்ந்தவர்களில் தினநாத் பத்ராவும் ஒருவர்.
2010ஆம் ஆண்டு, இந்துக்கள் தொடர்பான வரலாற்று நூலை வெளியிட்ட பென்குயின் நிறுவனத்திற்கு எதிராகவும், இந்து ராஷ்டிரம் தொடர்பாக கட்டுரை வெளியிட்ட பிரான்ட்லைன் ஆசிரியர் இந்து ராமுக்கு எதிராகவும் லீகல் நோட்டீஸ் அனுப்பினார் தினநாத் பத்ரா.
இப்படித் தொடரும் செயல்களுக்கு மத்தியில் இப்போது நவீன இந்திய வரலாறு குறித்து சேகர் பந்தோபாத்யாய எழுதி ஓரியன்ட் பிளாக்ஸ்வான் வெளியிடும் நூலுக்கு எதிராகவும் தினநாத் பத்ரா கிளம்பியுள்ளார். சேகர் பந்தோபாத்யாய எழுதியுள்ள நவீன இந்திய வரலாறு குறித்த நூல் மிகச் சிறந்த வரலாற்று நூல், அந்த நூலைத் தடை செய்ய யாராவது முயன்றால், அது இந்திய ஜனநாயகத்தின் மீதும் அறிவுலகத்தின் மீது விழும் மிகப் பெரிய அடியாக அமையும். தினநாத் பத்ராவுக்கு அந்த நூலில் பிரச்சினை இருந்தால் அந்த நூலைத் தடை செய்வதற்குப் பதிலாக அந்த நூலுக்கு மறுப்பாக ஒரு நூலை எழுதட்டும் என்று கூறியுள்ளார் பிரபல வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குகா.
தினநாத் பத்ராவின் சட்ட அறிவிக்கையை அடுத்து தனது பல நூல்களை ஓரியன்ட் பிளாக்ஸ்வான் நிறுவனம் மறுஆய்வு செய்வது என்று தன்னிச்சையாக முடிவெடுத்து இருப்பது எண்ணற்ற வரலாற்று, சமூக சிந்தனை யாளர்களைக் கவலையடைய வைத்துள்ளது. இவ்வாறு மிரட்டல்களின் மூலமாக வரலாற்றைத் திரிக்க முயலும் மதவாத அமைப்பினரின் செயல்கள், ராமச்சந்திர குகா சொல்லியுள்ளது போல, இந்திய ஜனநாயகத்தின் மீதும் அறிவுலகத்தின் மீது விழும் மிகப் பெரிய அடியாகவே அமையும்.
– திராவிடப் புரட்சி