சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

ஜூன் 16-30

சவாலை ஏற்குமா
ஜோதிடம்?

நூல்: சோதிடத்தின் அய்ந்துமுகப் பார்வை
ஆசிரியர்: சிந்தனையாளர்: பேரா.ஏ.எஸ்.நடராஜ்
தமிழ் மொழியாக்கம்: பகுத்தறிவுப் பாவலர். வீ.இரத்தினம், பெங்களூரு.
பக்கங்கள்: 108  |  விலை: ரூ.10  |  வெளியீடு: தங்கம் இராமச்சந்திரா
நூல் கிடைக்குமிடம்: வீ.இரத்தினம்,
1157, 11ஆவது மெயின் ரோடு, ஹம்பி நகர்,
பெங்களூரு – 560 014.  செல்பேசி: 94498 80117.

 

மிகப்பெரிய ஜோதிட குடும்பத்தில் பிறந்து ஜோதிடத்தை நன்கு கற்று தொழில் நடத்தி, ஆயிரக்கணக்கான ஜாதகம் எனப்படும் பிறந்த நாள் குறிப்புகளை எழுதி, ஒரு காலத்தில் அதையே நம்பி அதில் ஆய்வு செய்த பிறகு ஜோதிடம் பொய் என்னும் உண்மையை அறிந்துகொண்டு அதைத் துணிவுடன் வெளிச் சொன்னதோடு மட்டுமல்லாமல், ஜோதிடம் உண்மை என்று மெய்ப்பிப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தருவதாக அறைகூவல் விடுத்துள்ளவர் பேராசிரியர் ஏ.எஸ்.நடராஜ். விரிவான அவருடைய ஜோதிடத்திற்குச் சாவல் என்ற நூலைத் தொடர்ந்து, அதைவிடக் கூர்மையாக ஜோதிடத்தின் அய்ந்துமுகப் பார்வை என்ற நூலை எழுதியுள்ளார். அதன் தமிழ் வடிவமே இந்நூல். பாராட்டுக்குரிய வெளியீடான இந்நூலிலிருந்து சில பகுதிகள்…

as_natraj

சில பலசோதிடம் (பலன் கூறல்) வெற்றி / தோல்வியாவதன் இரகசியம் –

1. சோதிடர்களின் சில முற்குறிப்பு Prediction) உண்மையாவது எப்படி? என்று கேட்கிற கேள்விகளில் இரகசியம் இருக்கிறது?

சோதிடம் பொய், அறிவியல் அல்ல என்பதே விஞ்ஞானிகள், பகுத்தறிவு சிந்தனையாளர்கள் ஆகியோரின் வாதம்: சோதிடம் பொய் மற்றும் அறிவியல் அற்றது. சில சோதிடர்களின் சில முற்குறிப்புகள் உண்மையாவது சோதிட சாத்திரத்திலிருந்து அல்ல. சோதிடம் தெரியாதிருந்தாலும் பலன் சொல்கிறவனுடைய கீழ்க்கண்ட சிந்தனையிலிருந்து சில உண்மைகள் நடக்கக் கூடியனவே!

i.. கேள்வி விதி, ii. திறன், iii. அனுபவம், iv. வாக்குச் சாதுரியம், v. சாதகனின் மனநிலை, vi. சாதாரண அறிவு மற்றும் vii. வாய்ப்பும் திறமைமிக்க ஊகமும் ஆகிய ஏழு கூறுகள் (அம்சங்கள்) மீது சோதிடம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறதே அல்லாமல் வேறுஎந்த ஆதாரத்தின் மீதும் இது நடப்பதில்லை. எ.கா: கண்கட்டி வித்தைகள் மந்திரத்தின் மேல் அல்லாமல் உண்மையில் அது அவன் செய்யும் தந்திரத்திலும் அவனது கைச் சாதுரியத்திலும் இருக்கின்றது. அதைப் போலவே பலன்கள் சோதிடத்தில் இல்லை, சோதிடனின் திறமையில் இருக்கின்றன. சில சோதிடர்கள் சிலருக்குச் சொல்லும் சோதிடங்களில் ஒரு சிலவே உண்மையாகின்றன.

அந்த சில சோதிடம் உண்மையாவது சோதிடம் உண்மை என்ற காரணத்திற்காக அல்ல. சூழ்நிலைக்கேற்றபடி ஊகிக்கும் அவனது திறன், இருமுறை சொல்வதில் யாரும் எதிர்பார்க்காதபடி உண்மையைத் தேர்ந்தெடுக்கும் அவனது அனுபவ நுண்ணறிவு ஆகியவைகளே சோதிடம் உண்மையாவதற்கான காரணங்களாகும்.

1. கேள்வி விதி – சோதிடர்கள் கேட்கும் கேள்விகளில் அமைந்திருக்கும் திறன்.

கேள்வி அதிகப்படியான சோதிடர்களை வெற்றி பெறச் செய்ய பெரும் உதவியாக இருக்கிறது. வெற்றியின் இரகசியத்தை மக்கள் அறிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. அது எப்படி என்றால்:

1.1.  50 விழுக்காடு வெற்றியாகும் இரகசியம்:-

சோதிடரிடம் வந்து சோதிடம் கேட்பவர்கள் எல்லோரும் அதிகமாக இரு கருத்துகளடங்கிய கேள்விகளைக் கேட்கிறார்கள். எ.கா: காரியத்திற்குத் தொடர்புடையதாக இருந்தால் ஆகுமா, ஆகாதா? வெற்றி _ தோல்வி தொடர்புடையதானால் வெற்றியாகுமா _ தோல்வியாகுமா? மங்கள காரியமானால், நடக்குமா, நடக்காதா? படிப்பு தொடர்புடையதானால் தேர்வில் வெற்றியாகுமா _ தோல்வியாகுமா? (பாசா _ பெயிலா), நலம் கிட்டுமா _ நலம் கிட்டாதா? ஈட்டமாகுமா _ இழப்பு ஏற்படுமா? இப்போது காலம் நன்றாக இருக்கிறதா _ இல்லையா? திருமணம் இப்போது நடக்குமா _ நடக்காதா? குழந்தை ஆணாகப் பிறக்குமா _ பெண்ணாகப் பிறக்குமா? பொதுத் தேர்தலில் இந்தத் தடவை காங்கிரசுக் கட்சி வருமா _ பா.ஜ.க. வருமா? இப்படி இரண்டு பதில்கள் இருப்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதாக உள்ளது. இந்தக் கேள்விகளில் எப்போதும் சோதிடம் பாதி மெய் _ பாதி பொய் (பஞ்சபவேத் _ பஞ்ச நா பவேத்) என்பதைப் போல 50 விழுக்காடு முற்குறிப்பு உண்மையாகிறது.

1.2. சோதிடம் 100 விழுக்காடு வெற்றியாகும் இரகசியம். எ.கா:-

தேர்தலில் காங்கிரசுக் கட்சி வெற்றி பெற்று வருமா? பா.ஜ.க. வருமா? அவன் முதலமைச்சர் ஆவானா _ இல்லையா? இந்தக் கேள்விகளில் சில சோதிடர்கள் பா.ஜ.க. என்று சொல்கிறார்கள். சிலர் காங்கிரசு என்கின்றனர். அப்பொழுது எந்தக் கட்சி வந்தாலும் அப்படிச் சொன்ன சில சோதிடர்கள் வெற்றி பெற்றவர் ஆகின்றனர். காரணம், வந்த கட்சி வெல்லும் என்று சொன்ன சோதிடர்கள் இருக்கிறார்கள் அல்லவா? யாரோ சோதிடர்கள் சொன்னது உண்மையாகுவதானது சோதிடம் உண்மையானதைப் போல ஆனதல்லவா? அப்படி ஆவது ஒவ்வொரு தேர்தலிலும் யாரேனும் சோதிடர்களின் முற்குறிப்புகள் உண்மையாவதனால்தான்!

1.3. நீண்ட கால தீர்மானத்திற்கான கேள்விகள்:-

நடந்தாலும் உண்மை, நடக்காவிட்டாலும் உண்மையே! எ.கா: எனது மகளுக்குத் திருமணம் எப்போது நடக்கும்? அதற்கு பதில்: தற்போது 3 திங்கள் கிரகபலன் இல்லை. இப்போது திருமணம் நடப்பது சற்று கடினம். 4லிருந்து 6 திங்களுக்குள் நடந்தால் நடக்க வேண்டும். இல்லையானால் இரண்டு ஆண்டுகள் வரை நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதன் பிறகு கண்டிப்பாக ஆகும். இப்படி நீண்டகால பவிஷியம் (எதிர்கால பலன்) சொல்லும்போது சிலருக்கு நடந்தே நடக்கும்.

1.4. சரியாகச் சொல்வதில் சோதிடர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். காரணம் அப்படிச் சொல்வது பொய்யாகி விடுகிறது. எ.கா:

எனது மகனுக்கு எந்தத் திங்கள் எந்த நாளில் திருமணம் நடக்கும்? எங்கள் பாட்டி எந்த ஆண்டு, எந்தத் திங்கள், எந்த நாளில் இறப்பாள்? எனது மனைவிக்கு எந்த நாளில் மகப்பேறு (பிரசவம்) ஆகும்? எனக்கு பதவி உயர்வு எந்த ஆண்டு, எந்த நாளில் கிட்டும்? தேர்தலில் பேராயக் கட்சி (காங்கிரசு) எவ்வளவு இடங்களில் வெற்றி பெறும்? பா.ஜ.க. எவ்வளவு இடங்களைப் பிடிக்கும்? ஒரு தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் எவ்வளவு வாக்கில் வெற்றி பெறுவார்? எந்தக் காலத்தில், எந்த நேரத்தில் நேர்ச்சி (விபத்து) நிகழும்? இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி வெற்றி பெற்றவர்கள் மிகவும் குறைவு. அப்படி ஏதாவது ஒன்றோ இரண்டோ உண்மையாக இருக்குமானால் அது தப்பித் தவறி இருப்பதே அல்லாமல் சோதிடனின் தந்திரத்திலிருந்து ஆனதல்ல.

1.5. எதிர்கால பலன் (பவிஷியம்) – Prediction) சொல்லும் காலத்தின் கேள்விகள்:

இதை எந்த சோதிடனும் சரியாகச் சொல்வது இல்லை. ஊகத்தினால் சொல்வது ஏதோ ஒரு சமயத்தில் உண்மையாகி விடலாம். நீங்கள் ஆய்விலும் பார்க்க வேண்டுமானால் 1 திங்களில் அல்லது 3 திங்களில் நடக்க இருக்கும் நிகழ்ச்சி பற்றிய கேள்விகளைத் தொகுத்துப் பாருங்கள்.

1.6. இறந்தகால கேள்விகள்

அங்கே கூட முன்பே சொன்ன எல்லா தந்திரங்களும் பயன்பாட்டிற்கு வருகின்றன. இந்த எல்லா பின்னணியிலும் சில சோதிடர்களின் சில குறிப்புகள் உண்மையாகின்றன.

1.7. சோதிடர்கள் அல்லாத பிறர் எவ்வளவோ எதிர்கால பலன் சொல்கிறார்கள். இந்தக் கேள்விகளை எல்லாம் அவர்களிடம் கேட்டால் சோதிடம் தெரியாத அவர்கள் சொல்லும் எதிர்கால பலனில் சில சரியாக இருக்கும். சில தடவை சோதிடர்கள் சொல்வதைவிட இன்னும் நன்றாகவே சொல்வார்கள். இதனால் எதிர்கால பலன் உண்மையாகுவது சோதிடத்திலிருந்து அல்ல, புத்தி கூர்மையான சோதிடனின் மோசம் செய்யும் திறமையினாலும் தந்திரத்தினாலுமே என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

2. சோதிடரின் திறமை – புத்தி சாதுரியம், அனுபவம், சந்தர்ப்பம்.

பல சோதிடம் பல சோதிட நூல்களில் சொல்லப்பட்ட சில கூறுகளை (அம்சங்களை) உள்வாங்கிக் கொண்டு அதன் பின்னணியில் சிலர் வெறும் ஊகத்தின் மேல் சொல்கிறார்கள். இன்னும் சிலர் வெறும் சாதகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு சந்தர்ப்ப சூழ்நிலையின் ஊகத்தை சோதிடரின் புத்திசாலித்தனம், அனுபவங்களின் பின்னணியில் சில தடவை சரியாகச் சொல்லி விடுகின்றனர்.

3. அனுபவம் – சோதிட அனுபவம் அதிக வேலை செய்கிறது. சொல்லிச் சொல்லி என்ன செய்ய வேண்டும் என்னும் திறமை தெரிவிக்கிறது.

சோதிடரின் வெற்றிக்கு சோதிடத்தில் அவர் முன்பே சொல்லிச் சொல்லிப் பெற்றிருக்கும் அனுபவம் மிகவும் உதவிக்கு வருகிறது. பாடிப்பாடி பாடகன் ஆகு என்று சொல்லும் பழமொழி போல பொய்யை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தால் இறுதியில் பொய்யே ஒரு தடவை உண்மையாகி விடுகிறது.

4. வாக்குச் சாதுரியம் – இதுவே சோதிடனின் வெற்றிக்கு முக்கியக் காரணம். திறமையாகப் பேச வராதவன் சோதிடனாக இருக்க மாட்டான். இருக்க முடியாது.

இது சோதிடனின் வெற்றிக்கு முதன்மையானதாக இருக்கிறது. ஈர்க்கும்படியான பேச்சு, சொல்லுக்குச் சொல் சுலோகங்கள் சொல்வது, இப்பொழுதெல்லாம் ஆங்கிலத்தில் சில மேற்கோள் சொல்வது, பலன் சொல்லும்போது குறுக்குச் சுவற்றின் மீது விளக்கு வைத்ததைப் போல சொல்வது ஆகிய இவை யாவுமே மிக மிக உதவிக்கு வருகின்றன. வாக்குச் சாதுரியமே சோதிடம் சொல்வதில் இருக்கும் உயிர். சோதிடம் சொல்பவனுக்கு சோதிடம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆடம்பரம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

5. சாதகனின் மனநிலை அறிந்து கொள்ளல்

சாதகனின் மனநிலை, துக்கம், கவலை, அச்சம், நிறைவேறாத ஆசை, பிற ஆசைகள் முதலிய மனத்தின் நிலைமையை சோதிடன் பயன்படுத்திக் கொண்டு ஊகம் செய்கிறான். திறமையான ஊகம் சில சமயம் உண்மையாகலாம்.

6. சாமானிய அறிவு

சோதிடனின் சாமானிய அறிவு, விஞ்ஞான அறிவு, சமூக மற்றும் குடும்ப அறிவு ஆகிய அனைத்துமே சோதிடம் சொல்பவனுக்கு முன்வந்து கை கொடுத்து உதவுகின்றன. சந்தர்ப்பம், சூழ்நிலையை அறிந்து அதற்குத் தகுந்தபடி பவிஷியம் சொல்பவன் வெற்றி பெறுவான். பலதுறை அறிவு படைத்த ஒருவன் சோதிடம் சொல்வதில் சிறந்து விளங்குவான்.

7. சந்தர்ப்பம் அறிய வல்லவனின் ஊகம்

நிலைமை, சூழ்நிலை, சந்தர்ப்பம் ஆகியவைகளைத் திறம்பட அறிந்து கொண்டு திறமையாக ஊகம் செய்வதில் வல்லமையுடைய சோதிடன் அதிகமாக வெற்றி பெறுகிறான்.

8. எந்த சோதிடனும் நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பாகவே சொல்வதில்லை. ஒருவேளை சொன்னால்கூட குறுக்குச் சுவற்றின் மேல் இட்ட விளக்கு நாலா பக்கமும் ஒளி கொடுப்பதைப் போல அது எல்லா சூழ்நிலைக்கும் பொருந்துமாறு சொல்வதாக இருக்கும்.

அதிகப்படியான சோதிடர்கள் நிகழ்ச்சி, சம்பவம், விளைவுகள் ஆகியன இயற்கையாக நடந்ததன் பிறகு அவைகள் எப்படி நடந்தனவென்று ஆய்வு செய்கிறார்கள். ஆனால், நிகழ்ச்சி நடப்பது, வெற்றி _ தோல்வி ஏற்படுவது, வியாதி வருவது _ அது குணமாவது, விபத்து உண்டாவது, இலாப _ நட்டம் ஏற்படுவது ஆகியன பற்றி முன் கூட்டியே உறுதியாக உரைக்கும் சோதிடர் இல்லவே இல்லை. ஒருவேளை சொன்னாலும், குறுக்குச் சுவற்றின் மேல் விளக்கு ஏற்றி வைப்பதைப் போல சொல்கின்றனர்.

9. பல சோதிடம் பொய்யான அனேக எடுத்துக்காட்டுகள்

சில சந்தர்ப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவைகளை வெளிக்கொண்டு வருவதற்குப் பரப்புரை செய்யப்படுவதில்லை. விஞ்ஞானமில்லாத, உண்மை இல்லாத, தர்க்கத்திற்கு உட்படாத மற்றும் மயக்கம் (பிரமை) என்று மேலே சொல்லப்பட்ட எல்லாம் நிரூபணங்களால் தெளிவாகி உள்ளன. அவ்வளவின் மேல் சோதிடத்தை உண்மையாக்கிக் காட்டுகிறேன் என்பவர் என்னுடைய ஒரு சாதகத்தின் மேல் கேட்கும் 10 கேள்விகளில் 8 கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கொடுத்து உண்மையை மெய்ப்பித்து ரூபாய் ஒரு கோடியைப் பரிசாகப் பெறலாம். சவாலை ஏற்றுக் கொள்ளும் எந்தத் தனிப்பட்ட மனிதரானாலும் அல்லது குழுவானாலும் கீழ்க்கண்ட எனது கைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு விவரம் பெறுக.

10. சவால் 1: 1 கோடி

பவிஷியம் _ இறந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் மேல் ஒரு சாதகத்தின் மீது கேட்கும் 10 கேள்விகளில் 80 விழுக்காடு சரியான பதிலுக்கு ரூபாய் ஒரு கோடி சவால். இது சரியாக எதிர்கால பலன் சொல்லும் தைரியசாலிகளுக்குக் கொடுக்கப்படும். ரூபாய் ஒரு கோடி சவாலின் விவரங்கள்:

இந்த ரூ. ஒரு கோடி சவாலுக்குக் கொடுக்கப்படும் சாதகம் ஒரே ஒரு சாதகம் மட்டுமே. அப்படிக் கொடுக்கப்படும் ஒரு சாதகத்தின் மேல் 10 கேள்விகள் கேட்கப்படும். இந்தக் கேள்விகள் முதலிலேயே தீர்மானிக்கப்பட்டிருக்கும் சரியான கேள்விகளாக இருக்கும். எந்த விதம் மற்றும் எந்த விடயங்களுடன் தொடர்புடைய கேள்விகள் என்பது பற்றிய விவரங்கள், அத்துடன் தீர்மானிக்கப்பட்ட கேள்விகள் எவை மற்றும் அவைகளுக்கான பதில்களை எப்படித் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

அந்த 10 கேள்விகளில் (ஏ _ பாகம்) 1 முதல் 6 கேள்விகள் இறந்த காலம் மற்றும் நிகழ்காலத்திற்குத் தொடர்புடையதாக இருந்தால், (பி _பாகம்) கேள்வி 7 முதல் 10 வரையிலான 4 கேள்விகள் 3 திங்கள் பவிஷிய காலத்தில் நடக்கக்கூடிய நிகழ்ச்சி பற்றிய கேள்விகளாக இருக்கும். சோதிடர்கள் எதிர்கால பலன் சொல்பவராக இருப்பதனால் அவர் குறிப்பிடும் காலத்தில் நடக்கும் கேள்விகள் மிக முக்கியமாக இருக்கின்றன. அதிகப்படியான சோதிடர்கள் தாங்கள் சொல்லும் பவிஷியம் 80 விழுக்காட்டிலிருந்து 90 விழுக்காடு வரை சரியானது என்று சொல்லிக் கொள்வதால் அவர்கள் சொல்வதைப் போலவே நாம் அவர் சொல்லும் எதிர்கால பலன் 80 விழுக்காடு மற்றும் அதைவிட அதிகம் சரியான பதில் சொல்பவருக்கு ரூபாய் ஒரு கோடி பரிசைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.

அந்த 80 விழுக்காடு எப்படி இருக்க வேண்டு மென்றால் ஏ _ பாகத்தில் _ அப்படி என்றால் இறந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் மேலுள்ள 6 கேள்விகள் குறைந்தது 5 எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலைக் கொடுக்க வேண்டும். இப்படி 5 கேள்விக்கான பதில்களில் ஒரு கேள்விக்கான பதில் தப்பானாலும் 5 கேள்விக்கான பதில்களும் தப்பு என்றே அறிவிக்கப்படும்.

பி பாகத்தில் அதாவது கேள்வி 7லிருந்து 10 வரையிலான பவிஷிய கால 3 திங்களுக்குள் நிகழும் சம்பவம் தொடர்பான 4 தீர்மானமான கேள்விகளில் குறைந்தது 3 கேள்விகளுக்குச் சரியான பதில்கள் கொடுக்க வேண்டும். இப்படி 10 கேள்விகளில் குறைந்தது 8 கேள்விகளுக்கு (80%) சரியான பதில்களைக் கொடுக்க வேண்டும். கேட்கப்படும் கேள்விகள் எளிதாகவும் சாதாரணமானதாகவும் இருக்கும். இறந்த மற்றும் நிகழ்காலம் பற்றிய கேள்விகள் அனைத்துமே எளிதாகவும் மற்றும் சாதாரணமானதாகவும் இருக்கும். சோதிடத்தில் கேட்கப்படும் கேள்விகள் கூட 3 திங்களுக்குள் நிகழக் கூடியதான சாதாரண கேள்விகளாக இருக்கும். ஆயுள் காலம், மரணம், தனயோகம், திருமணம், மக்கள் பேறு முதலான நீண்ட காலத்தில் நிகழும் சம்பவங்கள் பற்றிய கேள்விகள் இல்லை. மிகுதியான நன்னடத்தை, ஊர்திகள் (வாகனம்) வாங்குதல், வழிபாட்டு இடங்களுக்குப் பயணம் செய்தல் ஆகியவைகளின் மேல் கேள்விகள் இருக்கும்.

சவால் 2:  ரூ. 10 இலக்கம்

வெறும் இறந்த காலத்தின் மேல் மற்றும் 10 சாதகங்களின் மேல் வெறும் 3 கேள்விகளுக்கு எல்லாம் சரியான பதில்களின் மேல் ரூ.10 இலக்கம் சவால். இது பவிஷியம் சொல்வது பற்றி அதைரியப்படும் பயந்தாங் கொள்ளிகளுக்காக. சில சோதிடர்கள் தாங்கள் சொல்லும் பவிஷிய வாணியில் எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொல்வது நடக்கக் கூடியதல்ல. நீங்கள் இறந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் மேல் கேள்வி கேட்டு நூற்றுக்கு நூறு உண்மையைச் சொல்கிறோம் என்று சொல்கிறீர்கள். அந்த அச்சப்படும் சோதிடர்களுக்காக இந்தச் சவாலை இப்போது விடுக்கிறேன்.

10 சாதகங்களின் மேல் வெறும் 4 கேள்விகளுக்கு எல்லாம் சரியான பதிலுக்குச் சவாலாக நான் 10 சாதகங்களைக் கொடுக்கிறேன். அந்த சாதகங்களின் மீது பின்வரும் கேள்விகள் கேட்கப்படும்.

கேள்வி 1: எந்த சாதகர் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கிறார்? எந்த சாதகர் இப்பொழுது மரணமடைந்தவர்? இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கொடுக்க வேண்டும்.

கேள்வி 2: அந்தச் சாதகங்களில் எந்தச் சாதகம் பெண்ணுக்குரியது, எந்தச் சாதகம் ஆணுக்குரியது என்று சொல்ல வேண்டும்.

கேள்வி 3: அந்த பத்து சாதகங்களில் எந்தச் சாதகருக்குத் திருமணம் ஆகி இருக்கிறதோ அவருடைய முதல் திருமண காலம் அதாவது திருமண நாள், திங்கள், ஆண்டு ஆகியவைகளைத் தெரிவிக்க வேண்டும்.

கேள்வி 4: சாதகன் படித்த படிப்பு அதாவது பத்து சாதகத்தில் யார் எந்த வகை பல்கலைக்கழக பட்டம் அல்லது அதை விடவும் அதிகம் படித்திருந்தால் அப்படி அதிகம் படித்துப் பெற்ற பட்டம் குறிப்பிட வேண்டும். சான்று அளிக்கப்பட வேண்டும். (டிப்ளொமா மற்றும் அதைவிடக் குறைந்த கல்வியைக் கணக்கில் எடுக்கக்கூடாது.) பட்டப்படிப்பு அல்லது அதைவிட அதிகப் படிப்பு படித்தவரை மட்டும் சொல்ல வேண்டும். எல்லாம் சரியாக இருந்தால் ரூ.10 இலக்கம் வெகுமதி இருக்கிறது. ஒவ்வொரு சாதகத்தின் பின் பக்கத்தில் கொடுக்கப்பட்ட தலைப்புகளின் கீழ் ((Column) வீ. வாழ்பவர் / இறந்தவர், வீவீ. பெண் / ஆண், வீவீவீ. திருமணம் ஆகியிருந்தால் திருமணமான நாள், திங்கள் மற்றும் ஆண்டு கிறித்தவ காலண்டர் (நாள்காட்டி)படி, திருமணம் ஆகவில்லையானால் ஆகவில்லை என்று, வீஸ். பட்டம் பெற்றவர் / பெறாதவர் போன்ற விவரங்கள் எழுதிக் கொடுக்க வேண்டும்.

அதிகப்படியான விவரங்களுக்கு மூடத்தனம் மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைகள் (மௌடிய மத்து வைச்சாரிகே) என்ற கன்னட நூலில் சோதிடத்திற்கு ரூபாய் கோடி சவால் என்னும் அத்தியாயம் படிக்கவும்.

 


 

பொய்யான ஜோதிடர்கள்

பலசோதிடங்கள் (பலன் சொல்லும் சோதிடங்கள்) அதிகமான தடவைகளில் பொய்யாய்ப் போனதற்கான பல எடுத்துக் காட்டுகள் உள்ளன. இங்கே சிலவற்றை மட்டும் எடுத்துக் காட்டுகிறேன்.

11.1. 1982இல் எக்கனாமிக் டைம்சில் வைசம்பாயா என்னும் சோதிடர் எழுதிய பல சோதிடம் முற்றிலும் பொய்யாகி விட்டது.

11.2. 1983இல் ஜகஜித்பால் என்பவர் சன்டே அப்சர்வர் என்ற வார இதழில் தூமகேது மற்றும் கிரகண பலத்தைப் பற்றி பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்று தீர்மானமாகச் சொன்னது எதுவும் நடக்கவில்லை.

11.3.: அஷ்ட்ட கிரகங்களின் (8 கிரகங்கள்) யோக சம்பந்தம் குறித்து எல்லா சோதிடர்களும் ஆபத்து, நாசம், கேடு, வெள்ளம், தீ, பூகம்பம், போர் முதலியன நடக்கப் போகின்றன என்று பெரும் பரப்புரையைச் செய்தார்கள். ஆனால் அஷ்ட்ட கிரகம் அமைதியாக வந்து போனது. யாருக்கும் எதுவும் ஆகவில்லை.

11.4: இராஜீவ் காந்தியின் கொலையைப் பற்றி எந்த ஜோதிடனும் முன்னதாகச் சொல்லவே இல்லை. கொலையுண்ட பிறகு நான் முன்பே சொல்லி இருந்தேனே என்று சொல்லத் தொடங்கினார்கள்.

11.4.1: 21, மே, 1991இல் இராஜீவ் காந்தியின் கொலை ஆனது. கொலையாகும் முன்பு மே, 1991இல் இல்லஸ்ட்ரேட் வீக்லியின் 1991க்குப் பிறகு இராஜீவ் காந்தி இந்த நாட்டின் முக்கிய தலைவராகி ஆட்சி நடத்துவார் என்று எழுதியது.

11.4.2: 1991 மே திங்களுக்கு முன்பே இந்த நாட்டின் மிகையான பத்திரிகைகள், அதிகப் படியான சோதிடர்கள் இராஜீவ் காந்திக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. பல ஆண்டுகள் இந்த நாட்டை ஆளுவார் என்று சொன்னார்கள்.

11.4.3: புகழ்பெற்ற சோதிடர் கே.எஸ்.சரஸ்வதி இதையே ஆதரித்தார்.

11.4.4: புகழ்பெற்ற சோதிடர் பி.கே.சக்கரவர்த்தி 1991க்குப் பிறகு இராஜீவ் காந்திக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்று எதிர்கால பலன் சொன்னார்.

11.4.5: மற்றொரு புகழ்பெற்ற சோதிடர் ஏ.கே.இராசா என்பவர் அதே சந்தர்ப்பத்தில், இராஜீவ் காந்தி 10ஆவது லோக்சபை (மக்கள் அவை) ஆளும் கட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்து அவருடைய தலைமையில் முழுமையாக அய்ந்து ஆண்டுகள் அவர் இந்திய நாட்டின் தலைமை அமைச்சராக இருப்பார் என்று  எதிர்கால பலன் சொன்ன இரண்டாவது வாரத்திலேயே அவரது படுகொலை நிகழ்ந்துவிட்டது.

11.4.6: வந்தனா முண்டேல்கர் என்ற வேறொரு சோதிடர் இராஜீவ் காந்தி சாவது தெரிந்திருந்தது; ஆனால் தான் வேண்டுமென்றே சொல்லவில்லை என்று கனமானதொரு பொய்யை அனுப்பினார்.

11.4.7: இன்னுமொரு சோதிடர் கே.என்.ராவ் என்பவர் இராஜீவ் காந்திக்கு சாவு வருவது தனக்கு முதலிலேயே கட்டாயம் தெரியுமென்றும் அதனால்தான் இராஜீவ்காந்தி 1991 சூலையிலிருந்து ஆகஸ்ட் நடுவிற்குள் இறப்பார் என்றும் தெரிவித்தேன் என்றும் கணக்கு கொஞ்சம் தப்பியதால் அவருடைய இறப்பு சற்று வேகமாகவே வந்துவிட்டது என்றும் பெரிய இரயில் விட்டார்.

இப்படியே தேர்தல் பற்றி, மந்திரி பதவிகள் பற்றி, ஆளும் கட்சிகள் பற்றி, இடங்கள் பற்றி ஒவ்வொரு தேர்தலிலும் இந்தச் சோதிட இரயில் விடும் சோதிடர்கள் விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விடும் இரயிலுக்கு தண்டவாளமும் இல்லை, சக்கரங்களும் இல்லை. இருந்தாலும் அவர்களது சோதிட இரயில் அப்பாவிகள், மூடர்கள் ஆகியோர் மீது ஓடுகிறது.

(நூலிலிருந்து…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *