தமிழக நீதித்துறையில் தலைவிரித்தாடிய பார்ப்பனிய வல்லாண்மை
– பேராசிரியர் ந.வெற்றியழகன்
இன்றைய இந்திய நிலப்பரப்பிலும் சரி, தமிழகத்திலும் சரி, நீதித்துறையில் பல்வேறு அமைப்புகளில் பார்ப்பனர்கள் வல்லாண்மை செலுத்தி, சமயம் கிடைத்த போதெல்லாம் பார்ப்பன நீதிபதிகள் சிலர் மட்டுமே இருந்தாலும் சரி திராவிடர் _ தமிழர்களின் சமூகநீதிக்கு உலைவைக்கும் அநீதிகளைச் செய்துவருவது அனைவரும் அறிந்தது. உயர் _ உச்ச நீதிமன்றங்களில் இந்நிலை வெகுவாக பரவிக் கிடப்பதையும் பார்க்கிறோம்.
நீதிகெட்டது யாரால்?
இந்த நிலை கண்ட நம் சுயமரியாதைச் சூரியன் அய்யா தந்தை பெரியார் நீதித்துறை கெட்டுக் கிடக்கும் நிலை கண்டு, துணிவாக, வெளிப்படையாக கருத்து வெளிப்படுத்தியுள்ளார். இது நீதி கெட்டது யாரால்? _ என்ற தலைப்பில் நூலாகவே வெளிவந்துள்ளது.
காலந்தோறும் காலூன்றிய பார்ப்பனியம்
இப்பொழுது, நாம் பண்டைய, இடைக்கால நீதித்துறையில் பார்ப்பன வல்லாண்மையைப் பார்க்க இருக்கிறோம்.
தற்போது கிடைத்த சில வரலாற்றுப் புதிய வரவுகள் அடிப்படையில் அதனை அறிவோம்! தமிழ் இலக்கியங்களும், கல்வெட்டுகளும், செப்பேடுகளும் இந்தப் புதிய செய்திகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
நீதியின் வரையறையை நிறுவிய திருக்குறள்
இந்தியத் துணைக் கண்டம் முழுதும் ஒரு குலத்துக்கு ஒரு நீதி கூறும் மனு நீதியின் தாக்கம் தமிழகத்திலும் கொடி கட்டிப் பறந்துள்ளது. ஒருவன் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி, யாரிடத்தும் ஓரவஞ்சனை காட்டாது நடுவுநிலையுடன் அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டனையை அறிஞர்களோடு ஆராய்ந்து செய்வதே நீதி (முறை) ஆகும் என, நீதிக்கு இலக்கணம் வகுத்துள்ளார் வள்ளுவர்.
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை! (குறள்: 541)
நிலைகுலைக்கப்பட்ட நீதி
இந்த நீதிநிலை நாட்டில் முழுதும் பின்பற்றப் படாமல் ஊடே பார்ப்பன வல்லாண்மை _ மனு(அ)நீதி இடைபுகுந்து நீதியை நிலைகுலைத்து விட்டது. அனைத்து நீதிமுறைகளுக்கும் மன்னனே மூல அடிப்படையாக விளங்கினான். மவுரியர் காலத்தைச் சார்ந்த கவுடில்(சாணக்கி)யரின் அர்த்த சாஸ்திரத்திலும் ஏறத்தாழ, அதே காலத்தில் இறுதி வடிவம் பெற்ற மனுஸ்மிருதியும் அரசநீதியைப் பேசுகின்றன.
சேக்கிழாரின் வாக்குமூலம்
கி.பி.12ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார், மூவேந்தர்கள் மனுதர்ம சாஸ்திரத்தின்படி நீதி வழங்கியதாகத் தெளிவாகவே குறிப்பிடுகிறார்.
உலகு புரக்கும் கொடை வளவர் உரிமைச் செழியர் உடன்கூட நிலவு பெருமுக் கோக்கள் எலாம்
நீதி மனுநூல் நெறிநடத்தி…
ஆட்சிபுரிந்தனர் என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்.
– (கழறிற்றறிவார் நாயனார் புராணம், பெரிய புராணம்)
மனுநூல் நெறி என்றால் என்ன பொருள்? மனுஸ்மிருதி மார்க்கப்படி என்றுதானே பொருள்? பார்ப்பன நீதிப்படி என்றுதானே பொருள்? ஜாதிக்கொரு நீதி என்பதுதானே பொருள்?
அவாள் மயம், அப்படித்தானே?
பண்டைத் தமிழ் இலக்கியங்களில், நடுவு, நடுவு நிலைமை, நடுவர் போன்ற தூய தனித்தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. கல்வெட்டுகளிலும் இவ்வண்ணமே பொறிக்கப்பட்டுள்ளன. பின்னாளில், இச்சொற்கள், மத்தியம், மத்யத்ஸம், மத்யத்ஸர் என்னும் வடசொற்களாக பார்ப்பன மயமாக்கப்பட்டுவிட்டன.
இதற்கு முழுமையான காரணம் பண்டைத் தமிழகத்தில் நடுவர்பணி செய்தவர்கள் மிகப் பெரும்பாலும், பார்ப்பனர்களே!
முதல்முதலாகக் கேட்டபோது
சேக்கிழாரின் பெரிய புராணத்தில் ஒரு செய்தி. தேவாரம் பாடிய சுந்தரமூர்த்தி நாயனார் என்றழைக்கப்பட்ட நம்பியாரூரன் தனக்கு வழிவழி அடிமை என்று சிவன் வேதியர் வடிவில் வந்து புத்தூர் என்னும் ஊரில் நடந்த நம்பியாரூரனின் திருமண நிகழ்ச்சியில் அங்குள்ளவர்களிடம் முறையிட்டான்.
சுந்தரமூர்த்தியின் காலம் கி.பி.8ஆம் நூற்றாண்டு. அப்பொழுது மணமகனாக இருந்த சுந்தரன், ஓர் பார்ப்பனன் இன்னொரு பார்ப்பனனுக்கு அடிமையாதல் வழக்கமில்லை என்று கூறி சிவ வேதியரை மறுத்தான். ஆசில்அந் தணர்கள் வேறோர்
அந்தணர்க்(கு) அடிமை யாதல்
பேச, இன்றுன்னைக் கேட்டோம்…
– (தடுத்தாட்கொண்ட புராணம் பாடல் 40, பெரிய புராணம்)
வழக்கை விசாரித்த திருவெண்ணெய் நல்லூர் மகாசபை யாரும், பார்ப்பனருக்கு, பார்ப்பனர் அடிமையாதல் என்பது இன்று நீ சொல்லித்தான் நாங்கள் கேள்விப்படுகிறோம்
சொன்னது நீதானா, சொல், சொல், சொல்?
அந்தணர் அவையில் மிக்கார்
மறையவர் அடிமை ஆதல்
இந்த மா நிலத்தில் இல்லை
என் சொன்னாய் அய்யா? என்றார்
– (தடுத்தாட்கொண்ட புராணம் பாடல் 52, பெரிய புராணம்)
பாரினில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்!
இதிலிருந்து, பார்ப்பானுக்கு ஓர் அரசன் (சத்திரியன்) அடிமையாகலாம்; வைசியன் அடிமையாகலாம்; சூத்திரன் அடிமையாகலாம். ஆனால், வேறொரு பார்ப்பனன் மட்டும் அடிமையாதல் கூடாது; முடியாது; தகாது என்கிற நடைமுறைச் சட்டமாக, நீதிமுறையாக இருந்த மனுநீதிப் பார்ப்பன வல்லாண்மையைப் பார்க்கிறோம்.
வல்லடி வழக்கு
கி.பி.911இல் நாராயணன் கேசவன் என்கிற பார்ப்பனன் ஒருவன், திருமங்கலம், சோழமாசிக் குறிச்சி ஆகிய ஊர்களில் வாழ்ந்த பார்ப்பனர்கள் சார்பாக கடற்றிருக்கைக் கிழவன் என்ற சூத்திரன் மீது ஒரு வழக்குத் தொடுத்தான்.
ஏன் இந்த வழக்கு?
பாண்டியன் கடுங்கோன் (கி.பி.550-_575) திருமங்கலம் கிராமத்தை பன்னிரெண்டு பார்ப்பனர்களுக்குத் தானமாகக் கொடுத்திருந்தான். இறந்துபோன இன்னொரு பாண்டியன் காடக சோமாஜி என்ற இன்னொரு பார்ப்பனனுக்கு சோமாசிக்குறிச்சி என்ற கிராமத்தைத் தானம் கொடுத்திருந்தான்.
உழுதுண்டு வாழ்வோரை உயர்த்திய பண்பாளன்
கடற்றிருக்கைக் கிழவன் என்ற தமிழன் சோமாசிக்குறிச்சியைக் கையகப்படுத்தி மதுரதரநல்லூர் (மதுரதானசத் கிராமம்) என்ற பெயரில் குடிநிலமாகச் செய்து உழுதுண்டு வாழும் ஊராக்கினான்.
இதனால் ஆத்திரம்கொண்ட நாராயணன் கேசவன் கடற்றிருக்கைச் சூத்திரன்மீது பாண்டியன் பராந்தக வீரநாராயணன் இடம் வழக்குத் தொடுத்தான். கடற்றிருக்கை என்னும் ஊரைச் சேர்ந்தவன் இந்தக் கடற்றிருக்கைக் கிழவன் (கிழவன்_உரியவன்)
பாண்டிய ராசனா? பார்ப்பன தாசனா?
உழுதுண்ணும் மக்கள் வாழ்ந்த அந்தச் சோமாசிக்குறிச்சியை, பாண்டியன் தன்னிச்சையாக தண்டச் சோறுண்ணும் பார்ப்பனர்க்குத் (உபயம்_ சுப்பிரமணியபாரதி) தானமாகத் தந்த செயலைக் கண்டித்துத்தான் கடற்றிருக்கைக்கிழவன் அவ்வாறு செய்து, உழுது வாழ்வார்க்கு சோமாசிக்குறிச்சியை உரிமையாக்கினான்.
பொறுப்பார்களா பூசுரர்கள்? வழக்குத் தொடுத்தனர் பார்ப்பனர். இந்த ஊர் இன்றைக்கு, வெப்பக்கோட்டை எனப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் உள்ளது.
இருதரப்பு வாதங்கள் இல்லாமலே தீர்ப்பு
பார்ப்பனக் கொத்தடிமையாக இருந்த இந்த பாண்டிய பராந்தக வீர நாராயணன் வழக்கின் எதிர்வாதியாகிய கடற்றிருக்கைக் கிழவனை அழைத்து விசாரணை செய்யாமலேயே நாராயணகேசவன் என்னும் அந்தப் பார்ப்பனனுக்குச் சாதகமாக ஒருதலைப் பக்கமாக, நெறிமுறை நழுவி, வழுவி அந்தத் தேராமன்னன் தீர்ப்பளித்தான். அதாவது, திருமங்கலம், சோமாசிக்குறிச்சி என்ற ஊர்களை பார்ப்பனர்களுக்கே தானமாகத் தாரைவார்த்து பழைய நிலையிலேயே பார்ப்பனர்கள் அவ்வூர்களைத் தம்மகப்படுத்தி வாழலாம் என்பதே அந்தத் தீர்ப்பு!
நெறிதவறிய நீதிமுறை
மேற்கொண்ட தீர்ப்பின் மூலம் பண்டைநாளில் முதல் வர்ணத்தவரான பிராமணர்களுக்கும் நாலாம் வர்ணத்தவரான சூத்திரர்களுக்கும் இருந்த உயர்வு_தாழ்வு நிலை வெளிப்படுகிறதல்லவா? என்னே பார்ப்பன வல்லாண்மை? நீதியிலும் இந்த வர்ணஜாதி நிலையா? பண்டை நாளில் முதலாம் வருணத்தவரான பிராமணர்களுக்கும் நான்காம் வர்ணத்தவரான சூத்திரர்களுக்கும் இருந்த சமூக அந்தஸ்து வெளிப்படுகிறது (நூல்: பண்டைத் தமிழகத்தில் சட்டமும் நீதியும் பக்கம்: 121)
செப்பேடு செப்பும் செய்திகள்:
மேற்கூறப்பட்ட சோமாசிக்குறிச்சி, திருமங்கலம் பார்ப்பனர்க்குத் தானம் செய்திகள் அடங்கிய சில பகுதிகளை மட்டும் செப்பேடு வாயிலாகக் காட்டுகிறோம். இது, தளவாய்புரச் செப்பேடு எனப்படுகிறது.
…..களப்பாளரைக் களைகட்ட, மல்திரள்தோள் மாக்கடுங்கோன் மானம் போர்த்து அருளியகோன்
நன்று நான்மறை பேணி, அய்வேள்வி நலம்படுத்து,
அறுதொழில்கள் மேம்பட, மறையோர்கள் பன்னிருவர்க்குக்
காராண்மை மீஆட்சி உள்ளடங்கக் கண்டமைத்து, செப்பேடு செய்து கொடுத்தருளினான்…
– செப்பேட்டின் ஒரு பகுதி)
…. கழுதூரில் சித்திசெய்த கடிக்கூடல் நகர்க் காவலன்
சோமாஜிகுறிச்சியிது தொல்லை மேற்படி கிடந்ததனை
சோமபான மநோசுத்தராகிய
காடகஸ் ஸோமாஜி யார்க்கு ஏகபோகம் அதுவாக,
எழிற் செப்பேட்டோடு கொடுத்தனை
– (செப்பேட்டின் மற்றொரு பகுதி)
ஆரியப் பகைவரை அழித்த தமிழரசன்
ஆரிய வல்லாண்மையை அடியோடு அழித்தவர்கள் களப்பிரர்கள் (களப்பாளர்கள்). இவர்களைப் பார்ப்பன அடிவருடிப் பாண்டியன் களை எடுத்துப் பார்ப்பனர்களுக்கு ஆதரவளித்தானாம். என்னே கொடுமை!
சொல்லிய ஊரிரண்டும் தம்மில் எல்லை கலந்து கிடக்குமாதலின்
ஒன்றாக உடன்கூட்டிப் புரவு எழுதிப் பிடி சூழ்ந்து நன்றாகிய சாசனம் செய்து நன்கருள வேண்டுமென்றும்….
……. மீனவன் வீரநாராயணற்கு விச்வாச கர்மங்களுக்கான
தன்மையா னாதலின் அருளறிந்து விண்ணப்பம் செய்ய….
– (இன்னொரு பகுதி)
மதுர தர நல்லூர் என்னும் வளம்பதி சோமாசிக்குறிச்சி அதன்மேலை புரவேற்றி ஆங்கதும் திருமங்கலமும்
உடன் கூடப் பிடிசூழ்வித்து உலகறிவன் கொடுத்தருளினன்
– பண்டிததாசன் பாண்டித் தமிழாபரணன் பாண்டிய மாராயப் பெருங்கொல்லன். (இறுதிப் பகுதி)
சிரீவல்லவன் – (இவன் செப்பேடு செதுக்கியவன்)
இப்படியும் ஒரு தமிழ் மன்னனா?
சோமாசிக்குறிச்சியும் திருமங்கலமும் தங்களுக்கு மறுபடி தந்தருள வேண்டும் என, நாராயணகேசவன் எனும் பார்ப்பனன் மன்னனிடம் விண்ணப்பம் செய்தவுடன், கடற்றிருக்கைக் கிழவனாகிய சூத்திரனை வரச் செய்து அவன் வாதத்தைக் கேட்காமலேயே பாண்டியன் ஒருதலைப்பட்சமாக உடனடியாக ஊரிரண்டையும் பார்ப்பனர்களுக்கு மறு உரிமையுடன் ஆண்டனுபவிக்கத் தானம் ஆகக் கொடுத்துவிட்டான். இதுதான் நீதிமுறையா?
பார்த்தவை சில; பாராதவை பல
இந்தப் பொல்லாத பார்ப்பனியம் நீதித்துறையில் புகுந்து விளையாடி ஆதாயம் கண்டது.
பார்ப்பனிய வல்லாண்மைக்கு நீதிநெறி வழுவக்கூடாது தமிழரசன் இரையாகிவிட்ட இழிநிலையை _ நீதிமுறையினைக் கொலை செய்த கொடுமையை அறியும்போது நம் உள்ளம் கொதிக்கிறதே?
எரிமலையாய்க் குமுறுகிறதே! நீதித்துறையில் தலைவிரித்தாடிய பார்ப்பனியக் கொடுமையின் ஒருசில காட்சிகள் தாம் இவை! இன்னும் தெரியாமல் இருப்பன எத்தனையோ?