என்னைப்பற்றி கசப்புக் கலந்த திரிக்கப்பட்ட பொய் வரலாற்றைப் புனைந்தாலும்
புழுதியில் போட்டு மிதித்தாலும்
அணுத்துகள் போல் எழுகிறேன்
இன்னும் மேலேமேலே
உங்களுக்கு என்துணிவு திகிலூட்டுகிறதா?
என் வீட்டில் எண்ணெய்க் கிணறு இருப்பதுபோல் இறுமாந்து இருக்கிறேனே அதனாலா?
எதற்கு என்மேல் இந்த இருட்டு முற்றுகை?
உலவும் நிலவாக
உதிக்கும் சூரியனாக
உறுதி அலைகளாக
உயர்கின்றன என் நம்பிக்கைகள்
அதனால்
எந்நிலையிலும் எழுகிறேன்
இன்னும் மேலே மேலே…
உடைந்த உள்ளத்துடன் தலை கவிழ்ந்து
கண்கள் கவிழ தோள் கண்ணீராய் வழிய
ஆற்றல் குன்றிய உணர்ச்சிமிக்க
என் கூக்குரலைக் கேட்க விரும்பினீர்கள் அல்லவா?
மட்டிலா துன்பம் தர கருதினீர் ஆனாலும்
என் தோட்டத்தில் பொன் சுரங்கம் இருந்து அதை
வெட்டி எடுப்பது போல் சிரிக்கின்றேனே இன்னும்
அந்தத் தன்னம்பிக்கை தகிக்கிறதா உங்களை?
சொற்களால் என்னைச் சுட்டு விடலாம்
கண்களால் என்னைப் பிளந்து விடலாம்
வெறுப்பால் என்னைக் கொன்று விடலாம்
ஆனாலும் காற்றாய் எழுகிறேன்
இன்னும் மேலே மேலே!
என் கவர்ச்சி நிலைகுலைய வைக்கிறதா? எனது தொடைகளின் சந்திப்பில்
வைரங்கள் வைத்துக் கொண்டு
நான் ஆடுவதுபோல் திகைக்கிறீர்களா?
வரலாற்றின் அவமானக் குடிசையிலிருந்து
நான் எழுகிறேன்
கடந்த கால வலியின் ஆழத்திலிருந்து
நான் எழுகிறேன்
நான் கருங்கடல்
திகிலும் அச்சமும் நிறைந்த இருளைவிட்டு
இன்பமும் எழுச்சியும் ஏந்திய
அகன்று குதிக்கும் அலைகளாய்
நான் எழுகிறேன்
களங்கமில்லாத விடியலை நோக்கி
நான் எழுகிறேன்
அடிமை மக்களின் நம்பிக்கையும் கனவுமாக
என் மூதாதையர் கொடுத்த பரிசுகளுடன்
நான் எழுகிறேன்…
நான் எழுகிறேன்…
நான் எழுகிறேன்…
தமிழில்: அருள்பேரொளி