பிறப்பு: ஏப்ரல் 4, 1928 | இறப்பு: மே 28, 2014
அழுகுரலும், ஓலங்களும் நிறைந்த ஒரு ஓலைக் குடிசையில் இருந்து உலகை வெல்லும் ஓங்காரமான விடுதலைக் குரலை வழங்கி விடுவது ஒன்றும் அத்தனை எளிதான செயலல்ல. ஆனால், அப்படி ஒரு குரலைத் தனது சொற்களால் கட்டமைத்து புவிப்பந்தெங்கும் வழிய விட்ட ஒரு கவிதையை நாம் இழந்து விட்டோம். இனி புதிதாக விடுதலை குறித்துச் சொல்வதற்கு அவரது பேனா முனைகள் இயங்கப் போவதில்லை. ஆனால், மாயா ஏஞ்சலோவின் பழைய இயக்கத்தில் உருவான சொற்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டு இன்னும் ஓராயிரம் ஆண்டுகளுக்குப் பயணிக்கலாம்.
அவரது சொற்களில் படிந்திருக்கும் அறச்சீற்றம் முழுக்க முழுக்க அவரது சொந்த வாழ்க்கையின் துயரங்களில் இருந்து பெறப்பட்டது. வெள்ளைக்காரக் குடும்பம் ஒன்றுக்கு அடிமையாய் இருந்த பாட்டி, அதே குடும்ப உறுப்பினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்; கருத்தரிக்கிறார்; குழந்தை பெறுகிறார். பிறகு அதே குழந்தை இன்னொரு பார்த்திராத மனிதருக்குப் பிறந்தது என்று எழுதிக் கையெழுத்திடுகிறார்.
பாட்டியின் உடலும், உள்ளமும் கேட்பாரற்றுச் சீரழிக்கப்பட்ட கதைகளைக் கேட்டபடியே வளர்கிறார். தன்னுடைய ஏழு வயதில் அதே போன்றதொரு கதை தனக்கு நிகழும் போது ஒரு பாமரக் கறுப்பினப் பெண்ணாக அவர் எல்லாவற்றையும் இழந்து மனதளவில் ஒடுங்கி இருத்தலுக்கான பயணத்தைச் செய்திருந்தால் இந்த உலகம் ஒப்பற்ற ஒரு கவிதைக்காரியை இழந்திருக்கும்.
தனது ஏழு வயதில் தாயின் காதலனால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான போது குடும்பத்தினருடன் அழுகுரலோடு பகிர்ந்து கொண்டார் அந்தப் பெண். அடுத்த நான்கு நாட்களில் தாயின் காதலன் படுகொலை செய்யப்பட்டான், நியாயமாய் மகிழ வேண்டிய அந்தக் குட்டிப் பெண், அழுது புரண்டாள், தனது குரல் ஒரு மனிதனைக் கொன்று விட்டதை அவரால் சகிக்க முடியவில்லை, சக மனித உயிரைக் குடிக்கும் அளவுக்கு எனது குரலுக்கு வலிமையிருக்குமென்றால் நான் இனிக் குரல் எழுப்பவே விரும்பவில்லை என்று ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் தன்னுடைய சொற்களைப் புதைத்து விட்டார்.
ஆனால், காலமோ பல்வேறு வெவ்வேறு மனிதர்களின் சொற்களைத் தோண்டி எடுத்து அவர் கைகளில் கொடுத்தது. ஆம், அமைதியாய் இருந்த அந்த ஆறு ஆண்டுகளில் தீவிரமாகப் படித்தார், மிகப்பெரிய தேடலுடன் படிக்கத் தொடங்கிய அந்தச் சின்னஞ் சிறு பெண்ணுக்கு சொற்கள் மனித குலத்தின் ஆன்மம் என்பது விளங்கத் தொடங்கியது. அநீதிக்கு எதிராக சொற்களைக் கொண்டே போர் தொடுக்க வேண்டும் என்கிற உண்மையை அவர் உணர்ந்து கொண்டபோது அவருக்கு வயது பதினான்கு.
அந்த ஆறு ஆண்டுகால அமைதியும், வாசிப்பும் பதினேழு வயதில் உலகின் மனசாட்சியைப் புரட்டிப் போடுகிற ஒரு நூலை எழுதும் அளவுக்கு அவரை முதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
“I Know Why the Caged Bird Sings” வன்கொடுமைகளுக்கு ஆளான ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட கறுப்பினப் பெண்களின் குரலாக அந்தப் பெண்ணின் தன் வரலாறாக 1969இல் வெளியான போது உலகம் சினம் கொண்டது, ஆர்ப்பரித்தது. ஆனால், அவரோ அமைதியாகச் சொன்னார், நான் வன்முறையையும், அடக்குமுறையையும், வன்கொடுமைகளையும் இலக்கியத்தால் எப்படி எதிர் கொள்ள முடியும் என்று எழுதிப் பார்த்தேன் என்றார்.
ஒரு பெண் விடுதலைக் கவிஞராகவே அவரை இலக்கியம் எனக்கு அறிமுகம் செய்தது. ஆனால், அது தவறென்று அவர் தனது சொற்களால் எனக்கு உணர்த்தினார். “I Know Why the Caged Bird Sings” நூலின் ஒற்றை வரி எனது இரும்பாலான இதயத்தின் சுவர்களைச் சுரண்டி வலி உண்டாக்கியது. அது பெண்ணுக்கான குரல் இல்லை, உலகெங்கும் ஒடுக்கப்படும் எந்த ஒரு உயிருக்குமான குரல் என்பதை நான் விரைவில் உணர்ந்து கொண்டேன். குறுகிய கம்பிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டாலும், கீழ்வானத்தில் எனது சிறகுகள் மிதக்கப் போவதில்லை என்பதை அறிந்தாலும், நான் எனது அலகைத் திறந்து பாட முயற்சிக்கிறேன். கூண்டுப் பறவை தான் என்றாலும் தான் பாட மறப்பதில்லை என்று மெல்லிய சோகம் இழைந்தோட அவரது உயிர் தடவிய அந்தச் சொற்களில் இருந்து மரணம் கூட என்னைப் பிரித்துவிட முடியாது. உலகின் ஆற்றல் மிகுந்த மனிதரெனச் சொல்லப்படுகிற அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா இப்படிச் சொல்கிறார்:
தனது எழுச்சி மிகுந்த ஒடுக்குமுறைக்கு எதிரான பயணத்தில் மாயாவின் சொற்கள் கலந்திருக்கின்றன.
ஒவ்வொரு விடுதலைக்குப் போராடுகிற ஒடுக்கப்பட்ட பெண்ணின், மனிதனின், உயிர்களின் குரலில் மாயாவின் சொற்கள் கலந்திருக்கின்றன. உலகெங்கும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை மெல்லிய இழையாய் தனது சொற்களின் மூலம் தொடர்ந்து கடைசி வரை சொல்லிக் கொண்டே இருந்தார் மாயா. இன்றைய நவீன உலகில் பெண்ணின் உடல் மற்றுமொரு முதலாளித்துவப் பண்டமாய் மாற்றப்பட்டிருக்கிறது, பொருட்களை விற்கவும், வாங்கவும் பெண்களின் உடல் காட்சிப்படுத்தப்படுகிறது என்பதை எல்லாம் ஒரு தீவிரப் போராட்ட வழியில்லாமல் நெகிழ்வாக சொற்களின் மூலம் உணர்த்துகிற இலக்கியப் போராட்டத்தையே அவர் செய்தார்
பெண் தனக்கான வாழ்க்கையை வாழ இவ்வுலகில் இன்று வரையில் மறுக்கப்படுகிறது, ஏனைய மனிதர்களின் வாழ்க்கையை வாழும்படியோ, ஏனைய மனிதர்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கத் தன்னால் ஆன தியாகங்களைச் செய்யும்படியோ பெண்களை ஆண்களால் ஆளப்படுகிற இவ்வுலகம் தொடர்ந்து வற்புறுத்துகிறது.
பெண்ணின் உடல் ஒரு உணவுப் பண்டத்தைப் போல நுகரப்பட்டு உமிழப்படுகிறது. பெண்களின் உடல் சேவைகளைச் செய்யப் படைக்கப்பட்டிருக்கும் ஒரு பருப்பொருளைப் போலவே நோக்கப்படுகிறது, ஒரு நீரோடையைப் போல நகர வேண்டிய பெண்ணுடலின் ஆசைகளை பல்வேறு குறியீடுகளின் மூலம் ஒடுக்கித் தேங்கிய குட்டையைப் போல மாற்றி வைத்திருப்பதில் நம் அனைவருக்கும் அளப்பரிய பங்கிருக்கிறது என்று சமூகத்தை விட்டும், குடும்பங்களை விட்டும் விலகாமல் அதே வீரியத்துடன் இலக்கியத்தின் மூலம் சொல்வது என்பது அனேகமாக மாயாவுக்கு மிகப் பிடித்த வேலையாக இருந்திருக்கக் கூடும்.
மாயாவின் சில கவிதைகளைப் படித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு ஆணாகக் குற்ற உணர்வு பீறிடுவதைத் தடுக்க இயலவில்லை, நகர வாழ்க்கையில் கொஞ்சமாய் வண்ணங்கள் பூசப்பட்டு மறைக்கப்பட்டிருக்கும் பெண் உடலுக்கு எதிரான இந்தச் சமூக மனநிலை ஊரகப் பகுதிகளில் எந்த வண்ணங்களும் இன்றி நிலைத்த உண்மையாகச் சுடுகிறது என்பதைப் பல இடங்களில், மாயா தனது தீப்பிழம்பான சொற்களால் அல்லது பனிக்கட்டி போன்ற சொற்களால் உணர்த்துவார்.
உலகெங்கும் இடைவிடாது ஒலிக்கும் பெண்களின் ஓலத்தை சிற்சில சொற்களில் அடைத்து வந்து வாசிப்பவனின் இதயத் துளிகளுக்குள் ஒரு நாகப்பாம்பின் பிளவுற்ற நாவைச் செருகி வதை செய்வது உன்னதமான ஒரு நிகழ்வு. ஆண்களின் உலகில் விழுதுகளைப் போலவும், தூண்களைப் போலவும் நிலைத்திருக்கும் சமநீதிக்கு எதிரான குறிகளாய் மண்டிக் கிடக்கும் அடையாளங்களை இலக்கியம் என்கிற வெகு நுட்பமான கருவியின் மூலம் மாயா எப்போதும் வெட்டி எறிந்து கொண்டே இருந்தார். வெட்டுப்பட்ட காயத்தில் இருந்து கொப்பளித்து வெளிக்கிளம்பும் ஒவ்வொரு ஆணின் ஆற்றாமையும், குற்ற உணர்வும் புற உலகின் காயங்களை ஆற்றும் வல்லமை கொண்டது என்பது தான் அவரது கவிதைகளின் தனிச் சிறப்பு.
இதுவரை பார்த்திராத ஒரு மனிதரின் மரணம் முதன் முறையாக சொல்ல முடியாத துயரத்தைத் தருகிறது, இருப்பினும் அவர் உடலின் சுமையில் இருந்து விடுபட்டுத்தான் ஆக வேண்டும். குட் பை மாயா. உங்கள் கவிதைகளும், சொற்களும் உலகமிருக்கும் வரை விடுதலை குறித்த கனவுகளை உயிர்ப்போடு வைத்திருக்கும்.
– கை.அறிவழகன்