பூமியைவிட 2 மடங்கு பெரிய கோள்
பூமிக்கோளில் இருந்து 560 ஒளி ஆண்டுகள் (ஓர் ஒளி ஆண்டு என்பது சுமார் 6 டிரில்லியன் மைல்) தொலைவில் நாம் வாழும் பூமியைவிட இரண்டு மடங்கு பெரிய கோள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமியைவிட 17 மடங்கு எடையுள்ள இந்தப் புதிய கோளின் சுற்றளவு 18 ஆயிரம் மைல்கள் ஆகும். 45 நாள்களுக்கு ஒருமுறை சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிவரும் இந்தக் கோளினை, ஹார்வர்டு ஸ்மித்சானியன் வானியல் இயற்பியல் மய்யத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து, கெப்ளர்_10சி என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தக் கோளினைக் கண்டு பிடித்திருப்பது தங்களுக்கு மிகுந்த வியப்பினை அளித்துள்ளதாக விஞ்ஞானி சேவியர் டைஸ்கியூவும், இது அனைத்து பூமிகளின் காட்சில்லா போன்றது. இந்தக் கோளில் உயிர் வாழ்வதற்குச் சாதகமான சூழ்நிலை உள்ளது என்று டிமிட்டர் சாஸ்செலோவ் அவர்களும் கூறியுள்ளார்கள்.
பரிதவிக்கும் பாபநாசம்
தாமிரபரணி ஆறு வடக்கு நோக்கிப் பாயும் பாபநாசத்திற்குச் சென்றால் பாவங்கள் நீங்கும் என்ற மூடநம்பிக்கையின் காரணமாக ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தங்கள் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கின்றனர். திதி கொடுக்கும்போது புதிய வேட்டி சேலைகளை ஆற்றில் போட்டால் அது முன்னோர்களைச் சென்றடையும் என்று ஆற்றில் போட்டுவிட்டுச் செல்கின்றனர்.
இப்படி அடுக்கடுக்காக மூடநம்பிக்கைகளைச் சுமந்து வருபவர்களின் மூலமாக துணி சோப்பு, குளியல் சோப்பு மூலம் ஒரு நாளைக்கு 585 கிலோ கழிவுகளும், பேஸ்ட், ஷாம்பு, எண்ணெய் பாட்டில்கள் மூலம் 185 கிலோ கழிவுகளும் ஆடைகளின் அழுக்கு, எண்ணெய், பூ, வாழை இலை போன்றவற்றின் மூலம் ஒரு நாளைக்கு 291 கிலோ குப்பையும் எல்லாவற்றுக்கும் மேலாக மனிதக் கழிவுகள் 200 கிலோ, பரிகாரத் துணிகள் 200 கிலோ ஆக மொத்தம் ஒரு நாளைக்கு சுமார் 1591 கிலோ கழிவுகள் பாபநாசத்தில் கலப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதைத் தூய்மை செய்யும் பணியில் இதுவரை 125 டன் துணிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
உலகத் தலைவர்கள் பெண்களை மதிக்கிறார்களா?
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக உலக வங்கி சார்பில் வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பெண்களின் கல்வித் தேவை குறித்துப் பேசினார். இது தொடர்பாக அந்நிகழ்ச்சியில் மேலும் கூறியதாவது:-
உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு அல்லது ஹார்வேர்டு பல்கலைக்கழகங்களில் தங்களது பெண் குழந்தைகள் கல்வி பயில்வதற்குச் சென்றால் பெருமிதம் கொள்ளும் உலகத் தலைவர்கள், அதற்கு அப்பால் அவர்களது கல்வியைப் பற்றியோ அவர்களது தேவையைப் பற்றியோ ஏதும் சிந்திப்பதில்லை.
இதன்மூலம் சமூகக் கோட்பாடுகளை உலகத் தலைவர்கள் மதிக்காமல் இருப்பது தெரிய வருகிறது. ஆகவே, தலைவர்கள் தங்களது மகள்களின் கல்விக்கு மட்டுமல்ல, தனது நாட்டின் ஒட்டுமொத்த மகள்களுக்காகவும் சிந்திக்க வேண்டும்.
பெண்களை மதிக்கும் மனப்பான்மையை உலகத் தலைவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார்.