மனிதம்

ஜூன் 16-30

இருட்டு மறையாத அந்தக் காலைப்பொழுதில் மதுரை ரிங் ரோட்டில் ஜாகிங் போய்விட்டு வியர்வைக் குளியலாய் வீட்டுக்குள் நுழையும்பொழுதுதான் எதிரில் பஸ் ஸ்டாப்பில் அந்த இளம்பெண் நிற்பதைப் பார்த்தேன். இந்த நேரத்தில் இவள் எந்த பஸ்ஸிற்குக் காத்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தவாறே குளியலறைக்குள் புகுந்தேன்.

 

ஏன்டா இனியா, மதியத்திற்கு என்ன சாப்பாடு செய்யட்டும் என்று கேட்டாள்  அம்மா.

வேண்டாம்மா வெளியில் சாப்பிட்டுக்கிறேன்.

பைக்கை கிளப்பிக்கொண்டே வாசலுக்கு வந்த என்னுடைய பார்வையில் மீண்டும் அவள் பட்டாள். இந்தப் பெண் எங்கேதான் போகவேண்டும்? இன்னமும் எந்தப் பேருந்திலும் ஏறாமல் நிற்கிறாளே என்று நினைத்துக்

கொண்டே வண்டியை அலுவலகத்திற்கு வேகமாக விரட்டினேன்.

பகலில் அலுவலக வேலையாக வெளியில் சென்றுவிட்டு மாலை சற்று முன்னதாகவே வீட்டிற்கு வந்தேன். இப்பொழுது பேருந்து நிலையத்தில் அவள் இல்லை. வீட்டிற்குள் சென்று கை, கால்களைக் கழுவிவிட்டு   அம்மா கொடுத்த தேனீரைக் கையில் வாங்கிக்கொண்டு வீட்டு மாடிக்கு வந்தேன். இப்பொழுது பேருந்து நிறுத்தத்திற்குப் பக்கத்தில் சற்று உள்ளடங்கிய மளிகைக் கடைக்கு முன் அந்தப் பெண் நின்று கொண்டிருந்தாள். இருட்டத் தொடங்கிவிட்டது. அந்த மளிகைக் கடைக்காரன் அவளிடம் சற்றுக் கோபமாக ஏதோ சொல்லி அந்தப் பெண்ணை விரட்டிக் கொண்டிருந்தான். அந்தப் பெண் மெதுவாக நகர்ந்து இவன் வீட்டைக் கடந்து சற்று தள்ளியுள்ள பயன்படுத்தாத பாலம் ஒன்றின்மீது அமர்ந்து கொண்டாள்.

யாரிந்தப் பெண்? என்ன ஆயிற்று இவளுக்கு? காலையில் இருந்தே நாம் பார்க்கிறோமே அப்படியானால் இங்கு அவள் எப்பொழுது வந்தாள்? கடைக்காரன் ஏன் அவளைத் திட்டினான்? என்ற பல கேள்விகளோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அந்தக் காட்சி என் கண்ணில் பட்டது. மாடியிலிருந்து இறங்கி வேகமாக அந்தப் பாலத்தை நோக்கிச் சென்றேன். நான் செல்வதற்குள் மூன்று பேர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக ஆட்டோவில்  ஏற்றிக் கொண்டிருந்தனர்.  வேகமாக அவர்களிடம் சென்று யார் நீங்கள் எதற்காக அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாகத் தூக்கு கிறீர்கள் என்று அதிகாரக் குரலில் நான் கேட்டதும், அவர்கள் சட்டென்று அந்தப் பெண்ணை விட்டுவிட்டு ஆட்டோவில் அவசரமாக ஏறிச் சென்றனர்.

ஆதரவில்லாமல் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் யாரம்மா நீ, உன் பெயர் என்ன? எந்த ஊர், உன் உறவினர்கள் யாராவது இங்கு இருக்கிறார்களா என்று வரிசையாக கேள்விகள் எழுப்பியும் எதற்கும் பதில் சொல்லாமல் பயத்துடன் மலங்க, மலங்க என்னையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

ஒருவேளை வேற்றுமொழிக் காரியா, ஆங்கிலத்தில் பேசிப் பார்த்தேன். தெலுங்கு, மலையாளம், இந்தி என்று எனக்குத் தெரிந்த வரையில் பேசிப் பார்த்து எதற்கும் பதில் சொல்லாத அவளைப் பார்த்து கடைசியாக முடிவுக்கு வந்தேன், அவள் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவள் என்று. பார்ப்பதற்குப் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தாள். சாப்பிட்டாயா என்று சைகையால் கேட்டேன். இதற்கு மட்டும் அவள் கண்களைச் சற்று விரித்துப் பார்த்தாள். எனக்குப் புரிந்தது. அவள் பசியில் இருக்கிறாள். வா என்று சைகையால் சொல்லி வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

அம்மா, அம்மா எங்கே இருக்கிறீர்கள்? என்னப்பா என்று கேள்வியோடு வந்தவர், கூட வந்தப் பெண்ணைப் பார்த்து, யாரப்பா? எங்கேயிருந்து கூட்டிவருகிறாய்! சற்று மிரட்சியோடு கேட்டார்கள்.

காலையிலிருந்து இதுவரை அவளுக்கு  நடந்ததைக்கூறி காலையில் அவளைச் சரியான இடத்தில் சேர்த்துவிடலாம் என்று கூறி சாப்பாட்டை எடுத்து வைங்க சாப்பிடலாம் என்றேன்.

அவள் சாப்பிட்ட வேகத்தைப் பார்த்து, பாவம்பா, எத்தனை நாள் சாப்பிடலையோ என்று அம்மா கூற, அம்மா உங்க பக்கத்திலேயே படுக்க வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு கையைக் கழுவிவிட்டு கணினி முன் அமர்ந்து செய்திகளைப் படிக்கத் தொடங்கினேன்.

தன் கட்டிலுக்குப் பக்கத்தில் பாயை விரித்து, வந்து படுத்துக்கொள் என்று கூறிவிட்டு கட்டிலில் சாய்ந்தார் அம்மா. பாயில் படுத்த அந்தப் பெண் படுத்த உடனேயே தூங்கிவிட்டாள். கணினி முன் அமர்ந்திருந்த என்னுடைய கண்களும் சொக்கியது. மணியைப் பார்த்தேன். 11.40 ஆயிற்று. படுக்கலாம் என்று நினைத்த என்னை அந்தக் குரல் பலமாகத் தாக்கிற்று. ஓடிச்சென்று அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அலறிக்கொண்டே அந்தப் பெண் மார்பின் குறுக்கே கையை வைத்து மறைத்துக் கொண்டும், கால்கள் இரண்டையும் பின்னிக் கொண்டும் படுத்திருந்தாள். திடுக்கிட்டு எழுந்த அம்மா என்னடா இது? ஏன் இந்தப் பெண் இப்படிக் கத்துகிறாள்? ஏதாவது ஒன்னுகிடக்க ஒன்னு ஆயிடப் போகுது. பயமாயிருக்குடா என்றவரை இருங்கம்மா என்று கூறிவிட்டு அந்தப் பெண்ணை உலுப்பினேன். ஒரு வினாடி கண்ணைத் திறந்தவள் என் கையை இழுத்து அவள் தலைக்குக் கீழாக அண்டக் கொடுத்து  நான் அவளுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்பதைப் போல மீண்டும் தூங்கி விட்டாள். சரிம்மா நீங்க படுங்க. காலையில் பார்த்துக்கலாம்.

காலையில் எழுந்து ஜாகிங் முடித்துவிட்டு வந்த நான், படுக்கையில் உட்கார்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்தேன். அந்தப் பெண் என்னைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்து ஓசையில்லாமல் சிரித்தாள். நானும் பதிலுக்குச் சிரித்துவிட்டு, அம்மாவை அழைத்து போலீஸ் ஸ்டேசன் வரைக்கும் போய்ட்டு வரேன். அதற்குள் இந்தப் பெண்ணைக் குளிக்கச் சொல்லி உங்களுடைய உடையைக் கொடுத்துப் போட்டுக் கொள்ளச் சொல்லுங்க என்றேன். சார்!

தலைநிமிர்ந்த ஏட்டு, என்ன என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தார். இன்ஸ்பெக்டரைப் பார்க்கணும்.

சற்று தள்ளி அமர்ந்திருந்த எஸ்.அய். என்னய்யா? என்ன விசயம் என்று கேட்டார்.

நான் நடந்தவற்றைச் சொல்லி, அந்தப் பெண்ணை உரிய இடத்தில் சேர்த்துவிடுங்கள் என்றேன்.

என்னய்யா எங்களுக்கு நீ உத்தரவு போடுறியா?

அய்யய்யோ அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க!

எங்களுக்கே இங்க ஏகப்பட்ட பிரச்சினை. பிரதமர் வர்றாரு, முதல் அமைச்சர் வர்றாரு, அவங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கணும். போதாக்குறைக்கு ஜாதித் தலைவரோட பிறந்த நாளு. அதுல எப்படி கலவரம் பண்ணலாம்ணு காத்திருக்கிற கூட்டம். இதக் கவனிக்கிறதுக்கே எங்களுக்கு தாவு தீர்ந்துபோகுது. இதுல கிறுக்கச்சியைக் கூட்டிவந்து, நாங்க காவல் காக்கணுமாக்கும்…

சார், கொஞ்சம் பொறுப்பா பதில் சொல்லுங்க என்றேன்! எஸ்.அய். சூடானார். யோவ் மொதல்ல நீ பொறுப்பா நடந்துக்கிட்டியா என்றவர் கையில் உள்ள விரல்களினால் அசிங்கமான சைகை செய்து நேத்து இராத்திரியெல்லாம் உன் வீட்டுல வைச்சுருக்கிற. பொண்ணு வேற சின்னப் பொண்ணுங்கிற. நாளைக்கு ஏதாச்சும் பிரச்சினைன்னு வந்தா உன் நிலைமை என்னாகும் தெரியும்ல! போய்யா போ. மொதல்ல போய் கிறுக்கிய வெளியே விரட்டுய்யா. போ.

நான் கூனிக்குறுகி அவமானத்துடனும் குழப்பத்துடனும் வெளியில் வந்தேன்.

இப்பொழுது என்ன செய்யலாம். திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. ஊரெல்லாம் சமுதாய விடிவெள்ளி, மக்கள் தொண்டன் என்று ஒட்டப்பட்டிருந்த வழக்குரைஞர் காத்தவராயன் சுவரொட்டி நினைவுக்கு வந்தது. அதில் தொலைப்பேசி எண் இருந்ததே. மக்களின் பிரச்சினையென்றால் எந்த நேரமும் அணுகலாம் என்றிருந்ததே.

வேகமாக ஓடினேன். பேருந்து நிறுத்தம் என்று போட்டிருக்கும் பலகை மீது ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் காத்தவராயன் சிரித்துக் கொண்டிருந்தார். கீழே தொடர்பு எண் இருந்தது. தொடர்பு கொண்டேன்.

மக்கள் தொண்டன் செல்பேசி மணி அடித்தது.

ஹலோ…

அய்யா வணக்கம். என்னுடைய பெயர் இனியவன் என்று ஆரம்பித்து காவல் நிலையம் சென்றது வரை எல்லாவற்றையும் சொன்னேன். அவர் எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாமல், காவல் நிலையத்தில் நடந்ததை மட்டும் ஆவேசமாகப் பேசத் தொடங்கினார். காவல் நிலையத்தில் எப்படி அவ்வாறு சொல்லலாம்! இ.பி.கோ. பிரிவு என்று ஏதோ எண்களைச் சொல்லி அந்தப் பிரிவின்கீழ் வழக்குப் போட்டு அந்தக் காவல்துறை அதிகாரிகளை நீதிமன்றத்திற்கு இழுக்கலாம் அவங்களை உண்டு, இல்லைன்னு பண்ணிடலாம். உடனே கிளம்பி வாங்க.

எனக்குத் திகிலெடுத்தது. என்னங்கய்யா அந்தப் பெண்ணோட வாழ்க்கைக்கு ஏதாவது வழி பண்ணுவீங்கண்ணு பார்த்தா நீங்க அதிகாரிங்க மேலே வழக்குத் தொடரலாம்னு சொல்லி பிரச்சினையை மேலும் பெரிசாக்க வழி சொல்றீங்க. அவங்க மேலே வழக்குப் போட்டுட்டு நான் இந்த ஊரிலேயே அவங்க முன்னாடி போகணும், வரணும். தயவு செய்து, அந்தப் பெண்ணைக் காப்பாத்துற வேற வழியைச் சொல்லுங்கய்யா.

உங்களை மாதிரி கோழைங்க எல்லாம் எதுக்குய்யா பொதுப் பிரச்சினைக்கு வர்றீங்க. பொண்ணைக் காப்பாத்தணுமாம்ல. போலீசைப் பார்த்து பயப்படறவனெல்லாம் ஏன்யா இந்த மாதிரிப் பிரச்சினைகள்ள தலையிடுறீங்க. வைய்யா போனை. எதிர்முனையில் செல்பேசி அணைக்கப்பட்டுவிட்டது. சுவரொட்டியில் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கும் காத்தவராயனைக் கலவரத்துடன் பார்த்தேன்.

நேரம் ஓடிக் கொண்டிருந்தது. இனி என்ன செய்வது? அடுத்தகட்ட யோசனையாய் நத்தத்தில், ஆசிரியர் பணிபுரியும் நண்பன் கோபாலை செல்பேசியில் அழைத்தேன். என்னடா இனியா எப்படியிருக்கிற? உற்சாகமாய் நலம் விசாரித்தவனிடம் அந்தப் பெண்ணைப் பற்றிச் சொன்னேன். நல்ல காரியம்டா. சின்ன வயசுல எப்படி உதவி செஞ்சியோ அப்படியே இப்பவும் இருக்கடா. இரு. கொஞ்ச நேரத்தில் கூப்பிடுகிறேன் என்று சொன்னவன். அடுத்த அய்ந்தாவது நிமிடத்தில் தொடர்பு கொண்டான். இரண்டு தொண்டு நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி தொலைப்பேசி எண்களையும் கொடுத்தான்.

மதுரையில் சற்று ஒதுக்குப் புறத்தில் உள்ள அபயம் தொண்டு நிறுவனம். பெரியதாய் சாய்பாபா படம். பக்கத்தில் காந்தி, ஏசு, புத்தர் என்று வரிசையாய் படங்களாய்த் தொங்கின. உள்ளே உள்ள பெரிய அறை ஒன்றில் பரிதாபமாய் குழந்தைகளும் பெரியவர்களும் நின்று கொண்டிருந்தனர். இன்னொரு அறை சந்தனம், விபூதி, ஊதுபத்தி மணத்தினால் அந்தப் பகுதியை நிறைத்துக் கொண்டிருந்தது. உள்ளேயிருந்து ஒருவர் நன்கொடை கொடுத்து நல்ல காரியம் செய்த மகிழ்ச்சியோடு வெளியில் வந்து கொண்டிருந்தார்.
சார், நீங்க உள்ளே போங்க. அறை வாசலில் நின்றவன் வழியை விட்டான். உள்ளே அமர்ந்திருந்தவர் முகம் நிறைய சிரிப்போடு வரவேற்றார். எதற்காக வந்தேன் என்று  நான் சொல்லச்சொல்ல அவருடைய சிரித்த முகம் இறுக ஆரம்பித்தது. நன்கொடையை எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றம்.

சார்! தப்பா நினைக்கக் கூடாது. ஏற்கெனவே இங்க ஆட்கள் அதிகமாய் உள்ளனர். இவர்களைக் காப்பாற்றுவதற்கே என்ன வழியென்று ஒவ்வொரு நாளும் யாராவது நன்கொடை தருவார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம். நீங்கள் சொல்வதையெல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது அந்தப் பெண் ஏற்கெனவே பல சிக்கல்களுக்கு ஆளாகியிருப்பாள்னு தோணுது. தவிர பாலியல் தாக்குதலுக்கும் ஆளாகியிருக்கலாம். நகைகள் போட்டுக்கொண்டு வந்திருக்கலாம்; அவைகளைக் காணவில்லையென்று அவளைச் சார்ந்தவர்கள் வந்து சொன்னால் அதையெல்லாம் எங்களால் சமாளிக்க முடியாது. வேண்டுமென்றால் இதுக்கெல்லாம் நீங்கள் பொறுப்பேத்துக்கிட்டு அந்தப் பெண்ணுக்கான பராமரிப்புச் செலவுகளையும் கொடுத்தா நாங்க ஏத்துக்கிறோம் என்றார்.

அய்யா! இவற்றையெல்லாம் நான் எப்படி ஒப்புக்கொள்ள முடியும். மனித நேயத்தோடு நம்மால் முடிந்த மட்டிலும் அந்தப் பெண்ணுக்கு உதவுவோம் என்று நான் நினைச்சது தவறா? என்று கேட்டேன். நிச்சயம் தவறுதான். எந்தவிதப் பிரச்சினைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் மனமும், பணமும் உள்ளவர்கள்தான் சமாளிக்க முடியும் என்றார்.

இப்ப நான் அந்தப் பெண்ணை என்ன செய்யறது? உடனடியாக வெளியில் அனுப்பிடுங்க. வச்சிருக்கிற ஒவ்வொரு வினாடியும் உங்களுக்குச் சிக்கல்தான் என்று சொன்னவரிடமிருந்து விடைபெற்று வெளியில் வந்தேன். அபயம் அபாயமாக தோன்றியது. இன்னொரு தொண்டு நிறுவனத்திற்குத் தொடர்பு கொண்டபோது தொலைப்பேசி பயன்பாட்டில் இல்லையென்றது.

மாலை நேரமாகிவிட்டது. என்னுடைய நெஞ்சக் கூடு முழுவதும் அந்தப் பெண்ணைப் பற்றியே நினைப்பு. அந்தப் பெண்ணிற்கு ஏதாவது நடக்கக் கூடாதது நடந்திருந்தால்… வீட்டிற்கு வந்தேன்.

டேய், எங்கடா போய்ட்ட காலையில் இருந்து சாப்பிடக்கூட வராம இந்தப் பெண்ணையும் இங்கே விட்டுட்டு என்னைத் திண்டாட வச்சுட்டியே!

எங்கம்மா அந்தப் பொண்ணு?

உள்ளே இருக்கிறாள்.

உள் அறையில் கட்டிலின் மீது அமர்ந்து கொண்டு சேலையைத் தோளில் இருந்து எடுத்து எடுத்து மூடிக் கொண்டிருந்தவள் என்னைப் பார்த்ததும் அழகாகச் சிரித்தாள்.  நீ இருக்கும்போது எனக்கென்ன கவலை என்பதுபோல அந்தச் சிரிப்பு இருந்தது. அம்மா! இவளை நல்லா சாப்பிட வைங்க. இவளை உடனே அனுப்பியாக வேண்டும்.

ஏன்டா, என்ன ஆச்சு?

நடந்த அனைத்தையும் அம்மாவிடம் வேகமாகச் சொன்னேன். இனிமேல் இவளை இங்கு வைத்துக் கொண்டிருப்பது நமக்குப் பெரிய இடைஞ்சலாக வந்துசேரும். நாம அவமானத்திற்கு ஆளாகாம இருக்கணும்னா இந்தப் பெண்ணை உடனடியாக அனுப்பனும். நான் போய் குளிச்சிட்டு வர்றேன்.

அம்மா கவலையோடு அந்தப் பெண்ணைப் பார்த்தாள். இந்தச் சின்ன வயசுல இந்தப் பெண்ணுக்கு இப்படியொரு நிலைமையா? வெளியில போயி இந்த மோசமான உலகத்தை எப்படிச் சமாளிப்பா. சிக்கிச் சீரழிஞ்சுற மாட்டாளா! இரக்கமே யாருக்குமில்லாம போயிடுச்சா! ஆனாலும் நாம என்ன செய்ய முடியும்? எந்தப் பக்கம் இருந்தும் சிறிய அளவு ஆதரவுகூட இல்லாத நிலையில் தன் மகனால் மட்டும் என்ன செஞ்சுற முடியும்.  எல்லோரும் கூறியதுபோல் நாளைக்கு இந்தப் பெண்ணால் நம் பையனுடைய வாழ்க்கையில் ஏதாவது ஆயிடுச்சுன்னா…

குளித்துவிட்டு வெளியில் வந்து சாலையின் இரு பக்கங்களிலும் பார்வையை ஓட்டினேன்.  ஒரு ஆட்டோ வந்தது. பக்கத்தில் வந்ததும் பார்த்தேன் தெரிந்த பையன்தான்.

என்ன சார்! எங்கே போகணும்? சிரித்துக்கொண்டே கேட்டான். அவனிடம் சிறிதளவு விவரத்தைச் சொல்லி அந்தப் பெண்ணை ஏற்றி அமர வைத்தேன். அவன் கையில் 100 ரூபாயைக் கொடுத்து சற்று தள்ளி மதுரையின் வேறு பக்கத்தில் கொண்டுபோய் விட்டுவிடச் சொன்னேன்.

இதுபற்றி எதுவும் தெரியாமல் ஆட்டோவில் மகிழ்ச்சியாக ஏறிக்கொண்ட அந்தப் பெண் முகமலர்ச்சியோடு என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். ஆட்டோ புறப்பட்டது. சிறிது சிறிதாக என்னுடைய பார்வையில் இருந்து மறைந்தது.  நிம்மதியாக வீட்டிற்குள் வந்து அம்மாடி என்று பெருமூச்சு விட்டபடியே உட்கார்ந்தேன். சுய அறிவு இல்லாமல், பித்துப்பிடித்த அந்தப் பெண்ணின் நாளையபொழுது எப்படியிருக்கும்? மனிதாபிமானத்தை  சிறிதுசிறிதாகத் தொலைத்துக் கொண்டிருக்கும் இந்த உலகத்திலே நாளைய தினம் அவளுடைய உயிருக்கும், உடலுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கிறது?

என்னைப்போல் இன்னொருவன் நாளை காப்பானா? அல்லது மதுரை நகரத் தெருக்களில் இன்னும் நாலைந்து மாதங்களில் வயிற்றைத் தள்ளிக் கொண்டு திரிவாளா-? இல்லையெனில் எயிட்ஸ் நோயை வாங்கிக் கொண்டும், கொடுத்துக் கொண்டும் வாழ வேண்டிய காலங்களைச் சுருக்கிக் கொண்டு விடுவாளோ. மனசுக்கு உறுத்தலாக இருந்தது. நேற்று மனிதநேயத்தோடு நடந்துகொள்ளத் தொடங்கிய நான் இன்று உலகத்தின் சொற்களுக்கும், இறுகிப் பிடிக்கும் சட்டங்களுக்கும் பயந்து, தன்மானத்திற்குப் பங்கம் ஏற்படாமல் இருக்க, தன்னலம் கொண்டவனாக ஆக்கப்பட்டுவிட்டேன்.

சமூகமும், சட்டங்களும் மனிதத்தை மறக்கடித்துவிடுமா?

அதற்கடுத்து ஒரு வாரம் எல்லாச் செய்தித் தாள்களையும் வாங்கி அவளைப் பற்றி ஏதாவது செய்தி வருகிறதா என்று தேடிக்கொண்டேயிருந்தேன். அவளைப்பற்றி சிறிது மறக்கத் தொடங்கியபோது ஒருநாள் திருமோகூர் செல்லும் வழியில் அரசு மனநல காப்பகம் ஒன்று இருப்பதைக் கண்டேன். விசாரித்தேன். இங்கே கொண்டுவந்து விட்டிருக்கலாமே என்றனர்.

மனது வலித்தது. ஊரின் பேச்சுக்கும் சட்டத்தின் பார்வைக்கும் பயந்து பதற்றமாகி எனக்குள் இருந்த மனிதத்தன்மையை இழந்து அந்தப் பெண்ணை அனுப்பி விட்டேனே. இப்பொழுது எங்கு என்ன பாடுபடுகிறாளோ!

இதற்குப் பிறகு ஓர் ஆண்டு கழித்து சிம்மக்கல்லில் சிக்னலுக்காக வண்டியை நிறுத்தியபொழுது எதிரே வாழை இலைக் கடையருகே மக்கள் கூட்டமாக நின்றிருந்தனர்.

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு கூட்டத்தை விலக்கினேன். ஒரு பெண் இறந்துகிடந்தாள். பக்கத்தில் அப்பொழுதுதான் பிறந்த குழந்தை அழுதுகொண்டிருந்தது. அந்தப் பெண்ணின் முகத்தை உற்று நோக்கினேன். அடுத்த வினாடி எனது சப்த நாடியும் உறைந்து போயிற்று. கடைசியில் ஆட்டோவில் நான் ஏற்றிவிட்டபோது நம்பிக்கையோடு என்னைப் பார்த்துக் கொண்டே சென்ற அந்த முகம் இன்று உயிரற்ற தாய்!

சுற்றியிருந்த மக்கள் ஏதேதோ அந்தப் பெண்ணைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். மாநகராட்சி வண்டி வந்து அந்தப் பிணத்தை ஏற்றியது. குழந்தையைத் தூக்கினார்கள். விருட்டென்று குழந்தையை வாங்குவதுபோல கையை நீட்டி, குழந்தையை எங்கே கொண்டு போவீர்கள் என்று கேட்டேன். ம்… அரசுக் காப்பகத்துக்கு… என்றபடி கதவு மூடப்பட்டது. இதோ விரைகிறேன் காப்பகம் நோக்கி.

– இசையின்பன்

– ph : 9940348533

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *