இஸ்லாமியர்க்கு இடஒதுக்கீடு கேள்விக்குறியா?

ஜூன் 16-30

– கவிஞர் கலி.பூங்குன்றன்

16ஆவது மக்களவைத் தேர்தலையொட்டி பி.ஜே.பி. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஆர்.எஸ்.எஸின் இந்துத்துவ வெறி பளிச்சிட்டது. தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவரான முரளி மனோகர் ஜோஷி ஆர்.எஸ்.எஸின் அறிவுரை பெற்றுதான் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். (டில்லியில் பேட்டி 12.4.2014)

 

தேர்தலில் பி.ஜே.பிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்துவிட்ட நிலையில், அதன் அமைச்சர்கள் பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் கண்டுள்ளவற்றைச் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டத் துவங்கிவிட்டனர் என்பதற்கு அடையாளம்தான் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா அவர்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளதாகும்.

முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல; பார்சிகள்தான் சிறுபான்மையினர்; புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு அனைத்து சமுதாய முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும். குறிப்பாக சிறுபான்மையினரின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இது சிறுபான்மையினர் அனைவருக்கான அமைச்சகம். 2001ஆம் ஆண்டின் சென்சஸ் கணக்கின்படி, இந்தியாவில் 138 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். அதாவது 13.4 விழுக்காடு. எனவே முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல. உண்மையில், பார்சிகள்தான் சிறுபான்மையினர். ஏனென்றால், அவர்களது எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அவர்கள் சமுதாயம் அழிந்துவிடாமல் பாதுகாக்க அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது.

நாங்கள் முஸ்லிம்களுக்கு ஒருபோதும் இடஒதுக்கீடு வாக்குறுதி கொடுத்தது கிடையாது. காங்கிரஸ்தான் அவ்வாறு செய்தது. இடஒதுக்கீடு மட்டுமே முஸ்லிம்களின் வாழ்வை முன்னேற்ற வழி அமைக்கும் ஒரு தீர்வாகிவிட முடியாது. அது ஒரு சாக்குப் போக்கு அவ்வளவுதான். ஆனால், நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அது மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்படுவதைப் பற்றியது அல்ல. அதை அனுமதிக்கவும் செய்யாது. நாங்கள் அனைவருக்காகவும் பாடுபடத் தயாராக இருக்கிறோம். புதிய அரசு சச்சார் கமிட்டியின் அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. கல்வி மூலமாக வளர்ச்சியைக் கொண்டுவர வேண்டுமே தவிர சிறுபான்மை யினருக்கான கல்வி நிறுவனங்களை வளர்ப்பது கூடாது -_ இவ்வாறு நஜ்மா ஹெப்துல்லா கூறினார்.

– (ஒன் இந்தியா தமிழ்.இன், 28.5.2014)

பிஜேபி அரசின் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சர் தாவர்சந்த் கெல்லட் கூறி இருப்பதாவது: முந்தைய காங்கிரஸ் அரசு முஸ்லிம்களுக்கு அளிக்க முயன்ற 4.5 சதவீத இடஒதுக்கீடு மதத்தின் அடிப்படையிலானது என்பதால் அது சட்டத்துக்குப் புறம்பானது என்று கூறியுள்ளார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, மதரஸாக்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை இனி மத்திய அரசு தரத் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.

இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்தால் பி.ஜே.பி.யினர் தங்களின் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்த கோதாவுக்குள் குதித்துவிட்டனர் என்பது வெளிப்படை.

நீதிபதி சச்சார் ஆணையத்தின் அறிக்கையில் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு அதிக அளவில் முஸ்லிம் குழந்தைகள் கல்வியை இடையில் கைவிடுவதுதான். கடந்த மூன்று ஆண்டுகளில் முஸ்லிம் குழந்தைகள் பள்ளிகளுக்கு வருவது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் வருவதைவிடக் குறைவாகவே இருந்துள்ளது. 2008இல் சிறுபான்மையினருக்குப் படிப்புதவி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி 75 விழுக்காடு செலவினை மத்திய அரசும் 25 விழுக்காடு செலவினை மாநில அரசும் ஏற்கவேண்டும். இந்தத் திட்டம் தொடங்கியது முதல் குஜராத் மாநிலத்தில் எவர் ஒருவருக்கும் இந்தப் படிப்புதவித் தொகை வழங்கப்படவே இல்லை; மத்திய அரசு இதற்காக ஒதுக்கிய நிதி அனைத்தும் செலவிடப்படாமல் வீணாகப் போனது.

முதலில் இந்தத் திட்டம் சமத்துவக் கொள்கைக்கு எதிரானது என்று குஜராத் அரசு கூறியது. ஆனால், இந்தத் திட்டம் அரசமைப்புச் சட்டப்படி சரியானதுதான் என்று குஜராத் உயர் நீதிமன்றம் 2009இல் தீர்ப்பளித்தது. 1979ஆம் ஆண்டு முதல் சிறுபான்மையினர் கல்விக்கு உதவும் திட்டம் ஒன்று இருப்பதாகவும், அதனால் இந்தப் புதிய திட்டம் தேவையில்லை என்றும் குஜராத் அரசு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. சிறுபான்மை விவகாரத் துறை மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் 52,260 முஸ்லிம் குழந்தைகளுக்குப் படிப்புதவி வழங்கலாம் என்று குறிப்பிட்டது. ஆனால், படிப்புதவி பெறாத மற்ற சிறுபான்மைக் குழந்தைகளிடம்  இது மன எரிச்சலை ஏற்படுத்தும் என்று கூறிய குஜராத் அரசு எவருக்கும் படிப்புதவித் தொகையை வழங்கவே இல்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் இவ்வாறு 60,109, பிகாரில் 1,45,809, உத்தரப்பிரதேசம் 3,37,109 சிறுபான்மைக் குழந்தைகளுக்குப் படிப்புதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய சேம்பிள் சர்வே அமைப்பின் புள்ளி விவரங்களைப் பயன்படுத்தி, டில்லி தேசிய பொருளாதார ஆய்வுக் கவுன்சிலின் அபுசாலே ஷெரீப் என்பவர், குஜராத் மாநிலத்தில் பள்ளிப்படிப்பைத் தொடங்கும் முஸ்லிம்களில் நால்வரில் ஒருவர்தான் இடைநிலைக் கல்வியை முடிக்கின்றனர் என்றும், குஜராத் நகர்ப்புறங்களில் உள்ள முஸ்லிம்கள் உயர்ஜாதி இந்துக்களைவிட எட்டு மடங்கு ஏழைகளாக இருக்கின்றனர் என்றும் கணக்கிட்டுக் கூறுகிறார்.

குஜராத் மாநில வங்கிகளில் சிறுபான்மை மாணவர்களுக்குக் கல்விக் கடன் கொடுப்பதில்லை. ஒரு எம்.பி.ஏ. மாணவன் 1.25 லட்சம் கடன் கேட்டபோது, சொத்து ஜாமீன் வேண்டும் என வங்கி கேட்டுள்ளது. ஆனால் 4 லட்சம் வரை சொத்து ஜாமீன் கேட்கப்படக் கூடாது என்பது விதி. கல்விக் கடன் கேட்பவர்களிடம் வருமான அறிக்கைகளும், பான்கார்டும் கேட்கப்படுகின்றன. இவை தேவையே இல்லை. குஜராத் மாநிலத்தில் தமது சிறுபான்மை எதிர்ப்புக் கொடியைப் பட்டொளி வீசிப் பறக்கவிட்ட நரேந்திர மோடிதான் இன்றைக்கு இந்தியாவின் பிரதமராகி இருக்கிறார் என்பதை முக்கியமாக மனதிற் கொண்டால்தான் இன்றைய பி.ஜே.பி இந்துத்துவா அரசின் குடலைப் பிடுங்கும் சமூகநீதிக்கு எதிரான துருநாற்றத்தை உணர முடியும்.

முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்ட சச்சார் ஆணையம் அளித்த சிபாரிசுகளைத் தொடர்ந்து முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா தலைமையில் ஆணையம் ஒன்று சென்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அமைக்கப்பட்டது.

கல்வி, வேலை வாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அதில் முஸ்லிம்களுக்கு மட்டும் 10 சதவீதம் இடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.

பிற்படுத்தப்பட்டோருக்கான (ளிஙிசி) 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வெளியே தனியாக 10 சதவீத இடஒதுக்கீட்டை அளிப்பதில் ஏதாவது சிக்கல் ஏற்படுமேயானால், அதிலிருந்து விடுபட ஒரு வழியையும் நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா ஆணையம் தெரிவித்துள்ளது.

மாற்று ஏற்பாடாக தற்போதைய இதர பிற்படுத்தப்பட்டவருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில் அனைத்துச் சிறுபான்மையினருக்கும் 8.4 சதவீதம் அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றும், அந்த உள் ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கென்று தனியாக ஆறு சதவீத இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் அமைச்சரவை கூடி (22.12.2011) சிறுபான்மை யினருக்கு 4.5 சதவீதம் உள்ஒதுக்கீடாக (ளிஙிசி- 27 சதவீதத்தில்) அளிப்பது என்று முடிவு செய்தது.

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்று ஒரு கருத்து நிலவுகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் சிறுபான்மையினருக்கு மூன்றரை சதவீத இடஒதுக்கீடு அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடாக அளிக்கப்பட்டது. அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றபோது தமிழ்நாடு அரசின் ஆணை செல்லும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுவிட்டதே!

இந்த நிலையில் சட்டத்தில் இடம் இல்லை என்ற பூச்சாண்டி செல்லுபடியாகாது.

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு ஏன் தேவை என்ற விருப்பு _ வெறுப்பினை நீக்கி கவனித்தாக வேண்டும். ஆர்.எஸ்.எஸ் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால் உண்மை புலப்படாது.

இந்தியாவில் இஸ்லாமியர்களின் கல்வி நிலை

இந்தியச் சிறுபான்மை இனத்தவர்களாகிய முஸ்லிம்களில் எழுதப் படிக்கத் தெரிந்தோர் வெறும் 59.1 விழுக்காடு மட்டுமே. இந்திய முஸ்லிம் குழந்தைகளில் ஏறக்குறைய 35 விழுக்காட்டினர் பள்ளிக்கூடம் பக்கமே செல்லாத நிலை இன்னமும் நீடிக்கின்றது. பள்ளியில் சேரும் முஸ்லிம் குழந்தைகள் 44 விழுக்காட்டினரே பள்ளிப்படிப்பை முடிக்கின்றார்கள். மீதி பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். கிராமப்புற முஸ்லிம்களுக்குள் பட்டப்படிப்பைப் பயின்றோர் எண்ணிக்கை 0.8 விழுக்காடு, நகர்ப்புறத்தில் 3.1 விழுக்காடு, மேற்பட்டப்படிப்பை முடித்தோர் எண்ணிக்கை 1.2 ஆகும். இந்திய அளவில் முஸ்லிம் பட்டதாரிகள் எண்ணிக்கை 3.6 விழுக்காடே ஆகும்.

பொருளாதார நிலையில் இந்திய கிராமப்புற முஸ்லிம்களுக்குள் 64.9 விழுக்காடு பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாடிக் கொண்டிருக்கின்றார்கள். 45 விழுக்காடு நகர்ப்புற முஸ்லிம்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள், கிராமங்களில் உள்ள விவசாயத்தை நம்பியே உணவு உற்பத்தி இருந்து வரும் சூழல், விவசாயத்துறையிலாவது விற்பன்னர்களாக முஸ்லிம்கள் இருக்கின்றார்களா என்றால் அதிலும் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

இந்தியாவில் ஏறக்குறைய 2 கோடி விவசாயிகள் சொந்தமாக டிராக்டர்கள் வைத்துள்ளனர். அதில் சொந்த டிராக்டர் வைத்துள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையோ 2.1 விழுக்காடேயாகும். இதிலும் முஸ்லிம்களின் நிலை பாவமாகத்தான் உள்ளது. மிகப்பெரும் இந்தியத் தொழில் நிறுவனங்களுக்குள் முஸ்லிம் நிறுவனங்கள் ஒரு கை விரலுக்கும் குறைந்த எண்ணிக்கை எனில் இந்திய முஸ்லிம்களின் பொருளாதார நிலை எப்படி என்று உணரலாம்.

ஊடகத்துறை

ஜனநாயகத் தூண்களுள் ஒன்றாகக் கருதப்படும் ஊடகத் துறையில் தமிழகத்தில் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் ஆசிரியர், துணையாசிரியர், உரிமையாளர் போன்ற நிலைகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 3 விழுக்காடே ஆகும்.

தமிழக அளவிலோ, இந்திய அளவிலோ ஊடகத்துறைக்குச் செய்திகளை வழங்கும் எந்தவொரு பெரிய நிறுவனமும் முஸ்லிம்களின் கையில் இல்லை.

இந்திய ஆட்சித்துறை

இந்திய ஆட்சித்துறைப் (அய்.ஏ.எஸ்.) பணியில் 1990ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் மத்திய தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை 1069 ஆகும். இதில் 9 பெண்கள் உள்பட முஸ்லிம்களின் எண்ணிக்கை 47 ஆகும். அதாவது 2.92 விழுக்காடே ஆகும்.

அகில இந்திய அளவில் இன்றைக்கும் யூனியன் பிரதேசங்கள் உள்பட அனைத்து மாநிலங்களிலுள்ள அய்.ஏ.எஸ். அந்தஸ்தில் பணியாற்றிக் கொண்டிருப்போர் எண்ணிக்கை 4456 ஆகும். இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 132 அதாவது 2.96 விழுக்காடாகும். இந்திய அளவில் தலைமைச் செயலாளர் என்ற அந்தஸ்தில் ஒரு முஸ்லிம்கூட, 01.08.2010 கணக்கின்படி இல்லை.

இந்திய அயலகப் பணி

இந்திய அயலகப் பணிக்காக (அய்.எஃப்.எஸ்.) 2002 முதல் 2010 வரை 9 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 407 பேரில் 9 பேர் மட்டுமே முஸ்லிம்கள்;  இது 2.2 விழுக்காடாகும். மத்திய தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி) மூலம் 2001 முதல் 2010 வரை 10 ஆண்டுகளில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.ஆர்.எஸ்., அய்.எஃப்.எஸ். மற்றும் குருப் ஏ பணியிடங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் எண்ணிக்கை 3240 ஆகும். இதில் முஸ்லிம்கள் 170 பேர், அதாவது 3.2 விழுக்காடாகும்.

ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி உள்பட வங்கிப் பணிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 2.2 விழுக்காடாகும்.

இராணுவம்

மத்தியத் தேர்வாணையம் மூலம் இந்திய மிலிட்டரி அகாடெமிக்கு 2011ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 242 பேரில் 2 பேரே முஸ்லிம்கள். அதாவது 0.8 விழுக்காடே ஆகும். அதே போல் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 579 பேரில் 3 பேரே முஸ்லிம்கள். அதாவது 0.5 விழுக்காடே ஆகும்.

மத்திய அரசுப்பணி

மத்திய அரசின் ஆறாம் மத்திய சம்பளக் குழுவின் பரிந்துரைப்படி உயர்பதவி வகிக்கும் அதிகாரிகளின் அடிப்படைச் சம்பளம் ரூபாய் 80,000 என நிர்ணயிக்கப்பட்டது. அடிப்படைச் சம்பளம் 80,000 பெறும் அதிகாரிகளின் எண்ணிக்கை 208, இதில் முஸ்லிம்கள் வெறும் 4 பேர் மட்டுமே. அதாவது 1.92 விழுக்காடாகும். மத்திய அரசுச் செயலாளர்களாகப் பணிபுரியும் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் 78 பேர்கள். அவர்களுள் ஒருவர் மட்டுமே முஸ்லிம். அதாவது 1.28 விழுக்காடு ஆகும்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 24.

இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள உத்தரப்பிரதேசத்தில் ஒரு இஸ்லாமியர்கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.

அதேபோல் அதிகமாக இஸ்லாமியத் தொழில் அதிபர்கள் வாழும் மகாராஷ்டிராவிலும் ஒரு இஸ்லாமியர்கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.  மேற்குவங்கம் _ 8  ஜம்மு காஷ்மீர் _ 4  பிகார் _ 4  கேரளா _ 3  அஸ்ஸாம் _ 2  ஹைதராபாத் (சீமாந்திரா) _ 1  தமிழ்நாடு _ 1  லட்சத்தீவு _ 1

தமிழ்நாட்டில்…

தமிழக முஸ்லிம் மக்களின் மொத்த மக்கட்தொகை 8%க்கும் மேல். அரசுப்பணியில் வெறும் 1.9% பேர்தான் உள்ளனர். அதிகாரமிக்க அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் பணிகளில் வெறும் 10 பேர் மட்டுமே உள்ளனர்.

காவல் துறையிலும் சதவீதக் கணக்கு மிகமிகக் குறைவாக உள்ளது.

இன்றைக்கு சிறுபான்மையினர் பற்றிப் பேசத் தலைப்பட்டுள்ளோம்.

இந்த நேரத்தில் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும்; சென்னை மாநிலத்தில், நீதிக்கட்சி ஆட்சியின்போது இன்றைக்கு 86 ஆண்டுகளுக்கு முன்பே பிறப்பித்த ஆணைதான் அந்த அதிசயம். (அரசு ஆணை எண் 1880 -_ கல்வி _ நாள்: 15.9.1928).

மொத்தம் 12 இடங்கள் என்றால்
பார்ப்பனர் அல்லாதாருக்கு 5
பார்ப்பனருக்கு 2
முகமதியர் 2
ஆங்கிலோ இந்தியரும் கிறிஸ்தவரும்    2
தாழ்த்தப்பட்டவர் 1
மொத்தம்     12

மொத்தம் 12 இடங்களில் சிறுபான்மையினருக்கும் 4 இடங்கள் என்றால் 33 சதவீதம் ஆகிறதே! முஸ்லிம்களுக்கு 16 சதவீதம் அளித்தது திராவிடர் இயக்க ஆட்சியில்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீதிக்கட்சி அமைச்சரவையில் தான் முதன்முதலாக பி.கலிஃபுல்லா சாகிப் பகதூர் என்ற முஸ்லீம் அமைச்சராக இருந்தார். (1937)

கலைஞர் அவர்களின் தலைமையிலான அரசு முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவீதம் அளித்ததால் (15.9.2007) ஏற்பட்ட விளைவைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்கலாமே!

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படாததற்கு முன்பு 2006இல் மருத்துவக் கல்வியில் அவர்கள் பெற்ற இடம் வெறும் 46, 2007_2008இல் பெற்ற இடங்கள் வெறும் 57. 2008_2009 இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட மகத்தான மாற்றம் இதோ:

2008_2009இல் முஸ்லிம்கள் மருத்துவக் கல்லூரியில் பெற்ற இடங்கள் 80. அதேபோல பொறியியல் கல்லூரியில் 2007_2008இல் பெற்ற இடங்கள் 2125. இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட நிலையில் 3288. 2009_2010இல் பொறியியல் கல்லூரியில் பெற்ற இடங்கள் 3655.

இது மட்டுமல்ல. சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்குக் கலைஞர் ஆக்கப்பூர்வமாகச் செய்தவை சாதாரணமானதல்ல.

1973இல் உருது பேசும் லப்பைகள், தெக்கனி ஆகியோர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

சிறுபான்மையினர் நல ஆணையம் (13.2.1988), தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் (1.7.1999) சென்னைப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வு மய்யம், சிறுபான்மையினருக்கான தனி இயக்குநரகம் (6.4.2007) ஆகியவற்றை உருவாக்கியது. கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில்தான்.

நியாயமான காரணங்களுக்காக _ உண்மையான திராவிடர் இயக்கத்தின் சமூகநீதிப் பார்வையில் செய்யப்பட்டவை இவை.

இதற்கு மாறாக காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில், இந்துத்துவ, வெறிகொண்டு சிறுபான்மை மக்களின் வளர்ச்சிக்குத் தடைக்கல் போடுவதற்கு இன்றைய பி.ஜே.பி. அரசு முனைப்புக் காட்டுமேயானால், அது எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும்.

மதத்தையும், சமூகநீதியையும் ஒன்றோடு ஒன்று போட்டுக் குழப்பி தனக்குத் தானே குழிவெட்டிக் கொள்ளும் வேலையில் இறங்கினால் அதனை யார்தான் தடுக்க முடியும்?

 

 


 

அ.இ.அ.தி.மு.க. பார்வையில்

அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கண்ணோட்டம் எப்படிப்பட்டது? இஸ்லாமியர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்கிற காங்கிரஸ் அரசு 5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்துள்ளது. நீங்கள் தேர்தலின்போது இதற்கு ஆதரவாக வாக்குறுதி கொடுத்தீர்களே? என்ற செய்தியாளரின் கேள்விக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இல்லையே! அது தொடர்பாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லையே! என்று பதிலளித்ததும், செய்தியாளர்கள், சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டபோது முஸ்லிம்கள் மட்டும் சிறுபான்மையினர் இல்லை. கிறித்தவர்கள் இருக்கிறார்கள்; பார்சிகள் இருக்கிறார்கள்; புத்த மதத்தினர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் கிறித்தவர்கள் சமமாக இருக்கிறார்கள்.

முஸ்லிம்களுக்குத் தனி ஒதுக்கீடு அளித்தால் நாளை கிறித்தவர்களும் இடஒதுக்கீடு கேட்பார்கள். அப்புறம் மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள். எனவே இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்றாகும்.

அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் ஏற்கெனவே பல சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். பெரும்பான்மை சமூகத்தினர் அந்தச் சலுகைகளையெல்லாம் அனுபவிக்கவில்லை என்று பதில் கூறி சிறுபான்மை மக்களான இஸ்லாமிய சமுதாயத்துக்கு எதிரான தனது கருத்தை வெளியிட்டார்.
– (தீக்கதிர் _ 23.7.2004)

 


 

நீதிமன்றத் தீர்ப்பு

நாடார் ஜாதி என்பது, தமிழக அரசின் ஜாதிவாரிப் பட்டியலில் உள்ள ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியாகும். இந்தச் சாதியைச் சேர்ந்த ஒரு பெண் இஸ்லாத்தைத் தழுவி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்_2 தேர்வில் எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்காணல் தேர்வு உள்ளிட்ட எல்லா தேர்வுகளிலும் வெற்றி பெற்றார்.

பின், தனக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ், தீயணைப்பு நிலைய அதிகாரி பணி ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறிய ஒருவரை, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கருத முடியாது; அவரைப் பொதுப் பிரிவினராகவே கருத முடியும் என்று சொல்லி, அவருக்குப் பணி ஒதுக்க மறுத்தது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அலைக்கழிக்கப்பட்ட, இந்தப் பெண்ணுக்கு நீதிமன்றத்தை நாடி பரிகாரம் காணுவதைத்தவிர வேறு வழி இருக்கவில்லை. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தப் பெண் ரிட் மனுத்தாக்கல் செய்து, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள, தனக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் தீயணைப்புத் துறை அதிகாரி பணி வழங்கும்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி _ உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, அந்தப் பெண்ணுக்கு இடஒதுக்கீடு பெறுவதற்கான முழு உரிமையும் இருக்கிறது. எனவே அவருக்கு தீயணைப்பு அதிகாரி பணி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டார்.
(உணர்வு, ஏப்ரல் 18.2014)

இந்திய முஸ்லிம்களின் முதல் கல்வி நிலையம்.

மஹம்மடன் ஆங்கிலோ ஓரியண்ட் கல்லூரி -1875 மே 24இல் தொடங்கப்பட்டது. இதுதான் பிற்காலத்தில் அலிகர் முஸ்லிம் சர்வகலாசாலை என்றானது.

வெள்ளைக்காரரான ஆலன் ஆக்டாவியன் ஹியூம் என்பவர் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் (1885 _ டிசம்பர் 28) கட்சியின் முதல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

இந்திய அரசு ஊழியர் அனைவரும் இந்தியர் மயமாக்கப்பட் வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இதன் முழுப்பலனையும் சேதாரம் இல்லாமல் அனுபவித்தது இந்த நாட்டில் பார்ப்பனர்களே.

முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்லர் என்ற ஒரு கருத்தை நஜ்மா ஹெப்துல்லா கூறியுள்ளார். இது சரியானதுதானா?

1999இல் இயற்றப்பட்ட சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் இரண்டாம் பிரிவில் குறிப்பிட்டுள்ளவாறு இந்தியாவில் சிறுபான்மையினர் யார் என்பதற்கான அறிவிக்கையை இந்திய மத்திய அரசு 1993 அக்டோபர் 23 அன்று வெளியிட்டது. முஸ்லிம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள் சிறுபான்மையினர் என்று அதில் ஒப்புக்கொள்ளப்பட்டது. 2014 சனவரி 20இல் மீண்டும் இந்தப் பட்டியலில் சமணர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *