சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

ஜூன் 01-15

இன்னொரு இராவண காவியம்

நூல்: அசுரன்
ஆசிரியர்: ஆனந்த் நீலகண்டன்,  தமிழில்: நாகலட்சுமி சண்முகம்.
வெளியீடு: மஞ்சுள் பப்ளிசிங் அவுஸ் பிரைவேட் லிமிடெட்,
7/32, தரைதளம், அன்சாரி சாலை, டார்யகஞ், புதுடெல்லி – 110 002, இந்தியா.

பக்கங்கள்: 666   விலை: ரூ.395/-

இதிகாசங்களும், புராணங்களும் பல்வேறு புதிய வடிவங்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுவரும் வேளையில், இன ரீதியான அந்தத் தாக்குதலுக்கு எதிர்வினையை ஆற்றவேண்டியதும் அவசியமாகிறது. அத்தகைய அசுரன் நூலுக்கு முனைவர் அவ்வை து.நடராசன் அவர்கள் வழங்கிய முன்னுரை இந்நூலின் சிறப்பினை எடுத்துச் சொல்கிறது. அம்முன்னுரையிலிருந்து சில பகுதிகளையும், நூலின் ஒருசில சுவையான பகுதிகளையும் தந்துள்ளோம்.

தென் திசையைப் பார்க்கின்றேன் என் சொல்வேன்! என்றன்
சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடடா!
அன்றந்த இலங்கையினை ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்
குன்றெடுக்கும் பெருந்தோளான், கொடை கொடுக்கும் கையான்
குள்ளநரிச் செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம்
என் தமிழர் மூதாதை! என் தமிழர் பெருமான்!
இராவணன் காண்! அவன் நாமம் இவ்வுலகம் அறியும்.

புரட்சிக் கவிஞரின் இந்த எழுச்சிப் பாடலை என் இளம்பருவத்தில் எங்கள் தமிழாசிரியர் சொல்லிச் சொல்லி வலியுறுத்தியது நினைவில் நிழலாடுகிறது. திராவிடர் கழகம் திராவிட உணர்வுகளைப் பரப்பத் தொடங்கியபோது, இராவணன், இரணியன், நரகாசுரன், கம்சன் ஆகியோரைப் பற்றிய கதைகளையெல்லாம் எடுத்துச் சொல்லி, இம்மாந்தர்கள் அந்நாளைய திராவிட உணர்வோடு திகழ்ந்த திருவினர் என்றும், இவர்களை இழிவாக எடுத்துக் காட்டுவது தமிழினத்தைத் தகர்ப்பதற்கான சமுதாயச் சாடல் என்றும் பெரியார் மேடைதோறும் இடிமுழக்கம் செய்து வந்தார். இராவண காவியம் என்றே புலவர் குழந்தை இராவணனைத் தலைமகனாகக் கொண்டு ஒரு காவியப் பனுவல் பாடினார். அந்த நூல் தடை செய்யப்பட்டு, பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தபோது அத்தடை நீக்கப்பட்டது. மேலும் தமிழர்கள் அசுர இனத்தவர்கள் இல்லை என்ற தலைப்பிலேயே தமிழறிஞர்களும் இராவணன் வித்தியாதரனா, இராவணன் ஆரியனா என்றெல்லாம் அந்நாளில் மறுப்புகள் எழுதி வந்தனர். இதற்கு மாறாக, இராமன் திராவிடனே என்றும் எழுதி வந்தனர்.

இராவணன் கதையையும் அவனது புகழையும் சைவ உலகத்தினர் தம் திருமுறைகளில் புகழ்ந்து பாடுவதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இப்படி இடியப்பச் சிக்கல்களுக்குள் அகப்பட்டு, இராம காதை தடுமாறியது. இராவணனை இலங்கேஸ்வரன் என்று புனைந்து காட்டும் ஆர்.எஸ்.மனோகரின் நாடகம் தமிழகத்தில் நூறு நாட்களுக்கு மேல் நடந்தது! கீமாயணம் என்ற நாடகத்தை நடிகவேள் எம்.ஆர்.இராதா, தமிழகத்தின் சிற்றூர்களிலெல்லாம் நடத்திச் சீர்திருத்தப் புயலை எழுப்பினார்! பேரறிஞர் அண்ணாவும் தன்மான இயக்கத்தின் தலைவராக இருந்த நிலையில், இராம காதையை இழை இழையாகப் பிரித்துத் தம் எழுத்தழகோடு இணைத்து, இலக்கியத் திறனாய்வு நாடகமாக, இராவணன் பெருமை காட்டும் நீதிதேவன் மயக்கம் என்ற ஒரு நாடகத்தைத் தாமே நடித்தும் காட்டினார்! இவ்வாறு திராவிட உணர்வுகள் புரோகித வெறுப்பையும் புராண மறுப்பையும் மூடநம்பிக்கை எதிர்ப்பையும் ஆணித்தரமாக வெளிப்படுத்துவதையே ஒரு கடமையாக முந்தைய பல ஆண்டுகளில் மேற்கொண்டு வந்தன.

எனினும், இந்த உணர்வு தமிழகத்தில் எழுந்ததுபோல பிற மாநிலங்களில் இப்போக்கில் வளர்ந்தனவா என்று முழுவதுமாக நினைக்க முடியவில்லை. இந்திய நாட்டு இலக்கிய விருதாகிய ஞானபீட விருது வழங்கப்பட்ட நெடுங்கதைகளில் பல, இதிகாச நிழல் படிந்தவைதான்! தமிழ் மக்களுக்கு நடுவில் எழுந்த சீர்திருத்தச் சிந்தனை ஆழமாக வேர் பிடித்துவிட்டதால், வேடிக்கைக்குக்கூட இராமாயண பாரதக் கதை மாந்தர்கள் ஓரளவுக்கேனும் ஒரு வகையிலேனும் பாராட்டப் பெறும் எழுத்து வடிவம் கடந்த இருபதாண்டுகளாகத் தமிழ்நாட்டில் எழவே இல்லை! அப்படி யாரேனும் எழுதினால், அவர்களது முகமும் முகவரியும் எளிதில் புலனாகிவிடும்.

புகழ்வாய்ந்த ஆங்கில எழுத்தாளராகப் பூத்து வரும் ஆனந்த் நீலகண்டன், தமது கல்வித் தகுதியால் பொறியாளராக இருந்தாலும் தம் கற்பனை வளமும் கலைத் திறமும் மழலைப் பருவத்திலிருந்து தான் கேட்டு மகிழ்ந்த இராமாயணக் கதையும் பொங்கித் ததும்ப, ஆங்கிலத்தில் தமது முதற்படைப்பாக, வீழ்த்தப்பட்டவர்களின் வெற்றிக் காவியமாக, அசுரனை வழங்கியுள்ளார். கேரள மாநிலத்தில் பிறந்து வளர்ந்து, கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வரும் அவர், இந்திய முழுமையோடும் ஆங்கிலப் புலமையோடும் இந்நெடுங்கதையை வளமான ஆங்கிலத்தில் வனப்போடு வரைந்துள்ளார். வட மாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கு இப்பெருங்கதை ஒரு புதிர்க்கதையாக, எதிர்க்கதையாகவே அமையும். ஆங்கிலம் படித்த பிற நாட்டினரும் இப்படிப்பட்ட சிந்தனைகள் இந்தியாவில் மலர்வதைக் கண்டு வரவேற்பார்கள்!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேலேந்தித் திரிந்த வெறியனாக, பிறன்மனை நயந்த பேதையாக, இரக்கமில்லாத அரக்கனாக, பத்துத் தலைகளைக் கொண்ட பதராக நான் காட்டப்பட்டு வந்துள்ளேன். இதனால், எங்களுக்குள் வேறுபட்டிருந்த இனப் பகைவர்கள் என்னை வீழ்த்தியதை வாழ்த்திப் பேசும் மரபை வளர்த்தனர். தேவ குலத்தவர்களின் ஆட்சியில் கொடிகட்டிப் பறந்த ஜாதிச் சழக்கு, வம்பு வழக்கு, ஒரு குலத்தை உயர்த்தும் ஓரவஞ்சகம் _ இவற்றையெல்லாம் நான் எதிர்த்தேன் என்பதற்காகவே என்னை அயலினத்தார் மிதித்து அழித்தார்கள். அசுர இன மக்களின் இந்த வரலாறு இதுவரை புதைக்கப்பட்டிருந்தது. அறியப்படாதுள்ள அசுரர்கள் கதை இது. மூவாயிரம் ஆண்டுகளாக ஜாதியம் தலைவிரித்தாடி, அடங்காப்பிடாரியாக, அரசியலையும்கூட இன்றுவரை தன் கையில் அடக்கி வைத்திருக்கின்றது. ஆனால் இந்த உன்னதக் கதை, ஒடுக்கப்பட்டவர்களின் உள்ளத்தின் ஓலங்களாக இன்றும் எங்கோ மதிக்கப்பட்டுதான் வருகின்றது. அசுரர்கள் தலைநிமிர்ந்து, பிடர் சிலிர்த்துக் கொண்டு, விடுதலை வேங்கைகளாக வடிவெடுப்பதற்குரிய வாய்ப்பு இப்போதுதான் எழத் தொடங்கியிருக்கிறது. இத்தகைய புதையல் வரிகளை ஆனந்த் நீலகண்டன் தம் கதையில் ஆங்காங்கே சுடர்விடச் செய்திருக்கிறார்.

வீடணனைத் தமிழ்நாட்டில் ஆழ்வார் என்று நாம் போற்றுகிறோம். ஆனால் அண்ணனைக் காட்டிக் கொடுத்தவன் என்று வட மாநிலத்தவர் அவனை வஞ்சகனாகக் கருதுகின்றார்கள். மத்தியப் பிரதேசத்தில், வனத்தில் வாழ்பவர்கள், இன்றும் வில்லை வளைக்கும்போது வலது கட்டைவிரலைப் பயன்படுத்துவது இல்லையாம். ஏகலைவன் கதையினால் இந்தப் பழக்கம் அவர்களிடம் வந்ததாம். காலம் காலமாக, கற்றறிந்த பழமைவாதிகள், நாட்டுப்புறக் கதைகளைத் தமக்கு ஏற்ற வகையில் நயவஞ்சமாக மாற்றிக் கொண்டனர் என்று கிரேக்க அறிஞர்களும் கருதுகின்றார்கள். விழிப்புணர்ச்சி வந்ததால், அகலிகை, தாரை போன்றோரின் கதைகளை, மரபுக்கு ஏற்ப, வான்மீகிக்கு வேறாகத் தமிழில் கம்பர் மாற்றிவிட்டார் என்பார்கள். இத்தகைய மாற்றங்கள் நெடிய ஆராய்ச்சிக்கு இடம் தருவனவாகும்.

இராமனின் புனிதம் பேசும் பழைய கதையோ, சீதையின் பொறுமையையும் சீலத்தையும் புகழும் கதையோ அல்ல இது. இராமாயணம் என்று அறியப்பட்ட கதைகளின் தொகுப்பில் இருந்து, அறியப்படாத ஒரு பழங்கதையை இது சொல்கிறது. இராவணனின் தன் வரலாறு என்று இதைக் கூறலாம். அசுரன் என்று அறியப்பட்ட அவன், மனம் திறந்து தன் சொந்தக் கதையை உணர்வோடும் உருக்கத்தோடும் சொல்கிறான்! அவன் சொல்லாமல் விட்ட பகுதிகளை இக்கதையில் வரும் ஓர் எளிய குடிமகனான பத்ரன் சொல்கிறான்.

அசுர குலத்தின் மகத்தான வாழ்க்கை வளர்ந்து மேலோங்கியதையும், காலப்போக்கில் கவிழ்ந்து மாண்டு மறைந்ததையும், அதில் தங்கள் பங்கு பற்றியும், மற்றவர்கள் செய்தவை பற்றியும் இராவணனும் பத்ரனும் மாறி மாறிச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் முறையில், அசுர குலத்தின் நற்பண்புகளும், வீரமும், திறனும், நம்பிக்கைகளும், அவநம்பிக்கைகளும், ஆவல்களும், பேராசைகளும், மகளிருக்கு ஆடவர்மீதும் ஆடவருக்குப் பெண்கள்மீதும் உள்ள காதல் வெள்ளமும் அசுர குலத்தை எவ்வாறு அழித்தொழித்தன என்பதை நிலைக்களனாகக் கொண்டு, அசுரச் சமுதாயத்தின் மன ஓட்டங்களையும் கட்டற்ற வாழ்க்கையின் இயல்பு நெறிகளையும் நூலாசிரியர் விரிவாகக் காட்டியிருப்பது குறிக்கத்தக்கது.

***

இந்நூலை மொழிபெயர்த்த நாகலட்சுமி சண்முகம் அவர்கள் டி.கே.பகவதி அவர்களின் மகளாவார். இனி, நூலிலிருந்து சில பகுதிகள்…

ராவணனின் புரட்சி எங்களுக்கு எதையும் கொடுத்திருக்கவில்லை. எங்கள் நிலைமையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது, அவ்வளவுதான். நாங்கள் சற்றுஅதிக நாகரீகம் கொண்டவர்களாக ஆகியிருந்தோம். ஆனால் நாங்கள் வைக்கப்பட வேண்டிய இடத்தில் வைக்கப்பட்டிருந்தோம். எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை நாங்கள் விரைவாகக் கற்றுக் கொண்டோம். மேட்டுக்குடியினர், சிறப்புரிமை பெற்றவர்கள், பிறகு நாங்கள் என்று எங்கள் சமுதாயம் வகைபிரிக்கப்பட்டு இருந்தது. நாங்கள் எங்கள் இடத்தில் இருந்து கொண்டவரை, எங்களால் உயிர்வாழ முடிந்தது. ஆனால் எங்களில் பலர், வணிகம் மூலமும், அதிர்ஷ்டத்தின் மூலமும், முகஸ்துதியின் மூலமும் உயர்ந்த நிலையை அடைந்திருந்தோம். அரசனின் படையில் என்னுடன் இருந்த எனது பழைய தோழர்களில் பலர் என்னைப் போலவே தொடர்ந்து ஏழைகளாக இருந்தனர். ஆனால் ஒருசிலர் மிகவும் முக்கியமானவர்களாக ஆகியிருந்தார்கள்.

சமீப காலங்களில் பிராமணர்கள் மிக அதிகமாக வளர்ந்திருந்தது எங்களுக்கு மிகவும் எரிச்சலூட்டியது. தோல்வியைத் தழுவிய புரட்சிக்கும் கசாப்புக்கடைக்காரன் சம்பவத்திற்கும் பிறகு, பிராமணர்கள் தெற்கு நோக்கி வருவது தற்காலிகமாக நின்றது. அவர்களுடைய மதத்தையும் வெகுசிலரே பின்பற்றினர். ஆனால் சிறிது காலத்திற்குள், அவர்கள் மீண்டும் ஊடுருவத் துவங்கினர். அதற்குள், ஒரு மாபெரும் அரசன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ராவணன் தனது சொந்த யோசனைகளை உருவாக்கியிருந்தான். அகத்தியன் எனும் ஒரு முனிவனின் தலைமையின்கீழ் பிராமணர்கள் குழுவொன்று அசுர சாம்ராஜ்யத்தில் அடைக்கலம் வேண்டி நின்றது. அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்குப் பிரஹஸ்தன் மறுப்புத் தெரிவித்தான். பிராமணர்களின் இந்த வருகை குறித்துப் பொதுமக்களுக்கிடையேயும் அதிக வெறுப்பு நிலவியது. ஆனால் ராவணன், தனது அரச ஞானத்தில், அவர்களுக்கு அடைக்கலம் தருவதென்று தீர்மானித்தான்.

ஒருசில வருடங்களுக்கு, அகத்தியனும் அவனது பிராமணர்கள் குழுவும் நகரங்களுக்கு வெளியே, சத்தமின்றி வாழ்க்கை நடத்தினர். அவர்கள் தங்கள் வேலைகளைப் பார்த்துக்கொண்டு, எங்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் இருந்தனர். எங்களது சாம்ராஜ்யத்திற்குள் கிராமங்களை நிர்மாணிக்கத் தனக்கு அனுமதியளிக்குமாறு, அகத்தியன், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ராவணனிடம் சென்று கெஞ்சினான். விபீஷணனும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாகப் பேசினான். இறுதியில், இலங்கைத் தீவு உட்பட, தென்னிந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரையோரங்களில் அவர்கள் பல கிராமங்களை உருவாக்கினர். அது ஒரு சிறு துளியாகத் துவங்கியது. வெள்ளைத் தோலும் கொழுத்த உடலும் கொண்ட பிராமணர்கள், மெல்ல மெல்ல, சாம்ராஜ்யத்தின் முக்கியமான அனைத்துப் பெருநகரங்களிலும் சிறிய நகரங்களிலும் தங்களது சொந்தக் குட்டித் தீவுகளை உருவாக்கினர். என்ன நிகழ்ந்திருந்தது என்று நாங்கள் அறிந்து கொள்வதற்கு முன்பாக, குடிமுறை அரசுப் பணிகளில் இருந்த அனைத்து முக்கியப் பதவிகளையும் அவர்கள் ஆக்கிரமித்திருந்தனர், கோவில்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர். அதிக ஊதியம் கொண்ட பதவிகள் மற்றும் முக்கியமான பதவிகள் அனைத்திலிருந்தும் மற்ற அனைவரையும் அவர்கள் திறமையாக வெளியே தூக்கி எறிந்திருந்தனர்.

உலகில் தான் மதிக்கப்பட வேண்டும் என்றால், மதச்சார்பற்ற ஓர் அரசனாகத்தான் இருக்க வேண்டும் என்றும், அனைத்து மதங்களையும் மரியாதையோடும் சகிப்புத்தன்மையோடும் நடத்த வேண்டும் என்றும் ராவணன் நம்பினார். எந்தக் கொள்கைகள் குறித்து என்னைப் போன்ற பல அசுரர்கள் சண்டையிட்டிருந்தார்களோ, அவை மறக்கப்பட்டன. சிறுபான்மையினருக்கும் நாட்டின் வளவசதிகளில் சம உரிமை இருந்ததாகவும், ஓர் அரசன் என்ற முறையில், அவர்களைப் பாதுகாப்பது தனது கடமை என்றும்கூட அவர் கூறினார்.
மக்கள் உள்ளூரப் புகைந்தனர். அசுரர்களின் பெருமைக்காகப் போராடி, ஒரு கச்சிதமான அசுர சாம்ராஜ்யம் உருவாவதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த பிறகு, இதுதான் எங்களுக்குக் கிடைத்த வெகுமதியா? சிறுபான்மையினரின் உரிமைகளும் அவர்களுடைய சமய உணர்வுகளும் மட்டுமே முக்கியம் என்பதுபோலவும், எங்களுடைய உரிமைகளும்  சமய உணர்வுகளும் அவ்வளவு முக்கியமானவை அல்ல என்பதுபோலவும் விஷயங்கள் நடந்து கொண்டிருந்தன. பிராமணர்களின் காரணமாக, அசுரர்களின் முக்கிய உணவான மாட்டிறைச்சி, எல்லா இடங்களிலும் தடை செய்யப்பட்டது. பிராமணர்கள் எங்கள் கோவில்களுக்குள் நுழைந்து, எங்களுடைய எளிய கடவுள்களை நிந்தித்தனர். எங்களுடைய எந்தக் கோவில்களில் நல்ல வருமானம் வந்ததோ, அக்கோவில்களை அவர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு வழிவகை உருவாக்கப்பட்டது. இறுதியில், எங்களுடைய சொந்தக் கோவில்களுக்குள் நுழைய எங்களை அவர்கள் அனுமதிக்கவில்லை. நாங்கள் அசுத்தமானவர்கள் என்று அவர்கள் கூறினர். சிறுபான்மையினரின் உரிமை, ஆளும் வர்க்கத்தினருக்கு ஒரு வெறியாக மாறியிருந்தது. பல அசுரர்கள் தேவ மதங்களுக்கு மாறினர். ஆனால் என்னைப் போன்ற பிடிவாதக்காரப் பன்றிகள், அந்த மதங்களுக்கு மாற மறுத்தன.

ஒற்றைக்கு ஒற்றைச் சண்டையின்போது அதிகாயனும் நானும் கிட்டத்தட்ட அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்விற்குப் பிறகு, அரண்மனைக்குச் செல்வதற்கான விருப்பம் என்னிடமிருந்து முற்றிலுமாக மறைந்தது. ஒரு மிதியடியாக இருந்து நான் சலித்துப் போயிருந்தேன். நான் என் சொந்தத் தொழிலைத் துவக்க விரும்பினேன். ஆனால் என்னுடைய பழைய குடிசை இருந்த இடம் காணாமல் போயிருந்தது. அவர்கள் சாலைகளை விரிவுபடுத்தியிருந்தனர். எனது பழைய ஆலமரம் நின்றிருந்த இடத்தில் பல தோட்டங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. திரிகோட்டா நகரம் எல்லாப் பக்கங்களிலும் விரிவடைந்திருந்தது. நாங்கள் மேலும் மேலும் தொலைதூரத்திற்குத் தள்ளப்பட்டோம். முக்கியத் துறைமுக நகரமான முசிறியைவிட, திரிகோட்டா நகரம் அதிக அழகாக இருந்ததாகப் பயணிகள் தெரிவித்தனர். ஆனால் என்னைப் போன்ற மக்களுக்கு, வாழ்க்கை அப்படியேதான் இருந்தது. அதில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. நாங்கள் தீண்டத்தகாதவர்களாக இருந்தோம். நாங்கள் முக்கியமான நபர்களின் கண்களில் படாமல் இருக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர்களுக்கு எங்கள் தேவையும் இருந்தது. யார் அவர்களுடைய தோட்டங்களைப் பராமரிப்பது? யார் அவர்களுடைய வேலைக்காரர்களாக இருப்பது? ஆற்றிலிருந்து யார் நீரெடுத்து வருவது? யார் அவர்களுக்கு விறகுகளை வெட்டிக் கொண்டு வருவது? யார் அவர்களுடைய தெருக்களைச் சுத்தம் செய்வது? யார் அவர்களுடைய அழுக்குத் துணிகளைத் துவைப்பது? எனவே, அவர்களுக்கு எங்களைப் பிடிக்காவிட்டாலும்கூட, அவர்கள் எங்களைப் பொறுத்துக் கொண்டனர். கண்ணுக்குப் புலப்படாதவாறு ஆவது எப்படி என்பதை நாங்கள் கற்றுக் கொண்டோம். எங்களில் பெரும்பான்மையினர், எங்களுடைய வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, நகரம் கண்விழிப்பதற்கு முன்பாக மாயமாய் மறைந்தோம். வாழ்க்கை இப்படியே சென்றது. அவர்கள் எனது மகனையும் என்னையும் அடித்துக் காயப்படுத்தியதிலிருந்து கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகள் ஆகியிருந்தது.

திரிகோட்டா விரிவடைந்து வளர்ந்தபோது, நகரின் தெற்கே பல மைல்கள் தூரத்தில், நான் என் மனைவியுடன் ஒரு குடிசையில் குடியேறி விவசாயம் செய்யத் துவங்கினேன். காட்டில் ஒரு சிறு பகுதியிலிருந்த செடி கொடிகளையும் புதர்ச்செடிகளையும் மரங்களையும் வெட்டிச் சாய்த்து, அந்த இடத்தை ஒரு விவசாய நிலமாக உருவாக்கி, மிளகு மற்றும் ஏலக்காயைப் பயிரிடுவதென்று நான் தீர்மானித்தேன். ஆனால் அவற்றுக்கான விதைகள் என்னிடம் இருக்கவில்லை. எனவே, உள்ளூரில் வட்டிக்குக் கடன் கொடுத்த ஒருவனிடம் ஒரு சிறு தொகையைக் கடன் வாங்கினேன். பிறகு, பணக்காரர்களாக ஆவது குறித்த எங்கள் கனவுகளை நாங்கள் முடையத் துவங்கினோம். சில நாட்களுக்குப் பிறகு, அந்தக் கனவுகள், சௌகரியமாக வாழ்வது குறித்த கனவுகளாக நீர்த்துப் போயின. பின்னாளில், செலவுகளைச் சமாளிப்பது குறித்து மட்டுமே நாங்கள் கனவு கண்டோம். அதன் பிறகு, ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது உணவு கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் கனவாக ஆகிப் போனது. கடனிலிருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்று நாங்கள் கனவு கண்டோம். இறுதியில், கனவு காண்பதையே ஒட்டுமொத்தமாக நாங்கள் கைவிட்டுவிட்டோம்.

ஆனால் மேட்டுக்குடியினர் செழித்துக் கொழித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்களது செல்வச் செழிப்பைப் பெருமிதத்தோடும் பகட்டோடும் வெளிப்படுத்தி, உலகை மினுமினுக்கச் செய்தனர். ராவணனின் ஆட்சியின்கீழ், அசுர சாம்ராஜ்யம் மிகப் பெரிய அளவில் செழிப்படைந்ததாக எல்லோரும் கூறினர். அது உண்மைதான். மேற்தட்டு மக்கள் செழிப்படைந்தனர். அதனால் நாடும் செழிப்படைந்தது. பெரும்பான்மையான மக்கள் வாழ்க்கை நடத்தப் போராடியது குறித்தோ, அல்லது அதிக வட்டிக்குக் கடன் கொடுத்த ஈட்டிக்காரர்களிடமிருந்து தப்பிப்பதற்காக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது பற்றியோ யாரும் கவலைப்படவில்லை. நாங்கள் கண்ணுக்குப் புலப்படாத மக்களாக இருந்ததால், யாரும் எங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. உலகில் மிக வேகமாக வளர்ந்து வந்த நாடுகளில் எனது நாடும் ஒன்றாக இருந்தது என்பதை நினைத்து நான் என்னைச் சமாதானப்படுத்திக் கொண்டேன். அது என் வயிற்றை நிரப்பவில்லை. ஆனால் மார்தட்டிக் கொள்வதற்கும் என்னுடைய அகங்காரத்திற்குத் தீனி போடுவதற்கும் அது உதவியது. என்னைப் போன்ற பல நண்பர்கள் எனக்கு இருந்தனர். உள்ளூரில் இருந்த அலங்கோலமான மதுவிடுதிகளில் நாங்கள் ஒவ்வொரு நாளும் குடித்தோம். எங்களுடைய அரசனின் செழிப்பையும் அசுர சாம்ராஜ்யத்தின் செழிப்பையும் நாங்கள் கொண்டாடினோம்.

அன்றும் மற்ற எந்தவொரு நாளைப்போலவே சூடாகவும் சலிப்பூட்டுவதாகவும் மந்தமாகவும் இருந்தது. பெயரளவுக்குக் கூடக் காற்று வீசவில்லை. உள்ளூரில் இருந்த கள்ளுக் கடையில் நான் மூக்கு முட்டக் குடித்திருந்ததால் கிட்டத்தட்ட நினைவிழந்து இருந்தேன். நான் என் வீட்டிற்குச் செல்ல விரும்பவில்லை. இங்கு சௌகரியமாக இருந்தது. கடன் கொடுத்தவனையும் விவசாயப் பயிர்களையும் நான் மறந்தேன். அரசனையும் மேட்டுக்குடியினரையும் அனைத்து பிராமணர்களையும்கூட நான் மறந்துவிட்டேன். என்னால் இங்கு சிறிது நேரம் உட்கார்ந்திருக்க முடிந்தால், ஏதேனும் ஒரு மடையன் எனக்கு இன்னொரு சுற்றுக் கள்ளை வாங்கிக் கொடுப்பான். எனவே, இளவரசி சூர்ப்பனகை பற்றியும் அவளது சல்லாப முயற்சிகளைப் பற்றியும் கூறப்பட்ட காரசாரமான கதைகளைக் கேட்டபடியே நான் அங்கு உட்கார்ந்திருந்தேன். காட்டில் வசித்த யாரோ சிலரால் அவள் இழிவுபடுத்தப்பட்ட கதையும் மும்முரமாக உலா வந்தது. அவர்கள் நாகர்கள் அல்லது வானரர்கள் அல்லது தேவர்களாக இருக்கக்கூடும் என்று கிசுகிசுக்கப்பட்டது. அவர்கள் அவளது கற்பைச் சூறையாடிய பிறகு, அவளது மார்பகங்களையும் மூக்கையும் அறுத்து எறிந்திருந்தனர். தனது சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்திற்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காக ராவணன் ஒரு பெரிய யுத்தத்தைத் துவக்கவிருந்ததாகவும் மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது, பறக்கும் இயந்திரத்தின், காதைச் செவிடாக்கும் சத்தம் கேட்டது. நாங்கள் அனைவரும் வெளியே ஓடினோம். ஒரு பெரிய கூட்டம் வானத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தது. அக்காட்சியைக் காண, மக்கள் முண்டியடித்துக் கொண்டும் ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டும் இருந்தனர். நான் வசதியாக நின்று பார்ப்பதற்காக மற்றவர்களை இடித்துத் தள்ளினேன். தெருக்களில் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்தது. மூடப் பேராசிரியனான மயன் மீண்டும் ஏதேனும் செப்படி வித்தை காட்டிக் கொண்டிருந்தானா?

அப்போது, மக்கள் அதிர்ச்சியில் வாய் பிளந்தனர். ராவணனின் கடுமையான முகத்தை என்னால் பார்க்க முடிந்தது. அந்தச் சிக்கலான இயந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அவர் கடினமாகக் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். அந்தப் பெரிய இரும்புப் பறவை எங்களுக்கு மேலே பறந்து சென்றது. அப்போது, தன் தலையைக் கவிழ்த்துக் கொண்டு, அந்த இயந்திரத்திற்குள் ஒரு பெண்ணின் உருவம் ஒடுங்கி உட்கார்ந்திருந்ததை நான் பார்த்தேன். அக்காட்சி எனது போதை மயக்கத்தைத் தெளிய வைத்தது. அவள் அழுது கொண்டிருந்ததுபோலத் தோன்றியது. மறைந்து கொண்டிருந்த சூரிய ஒளியில் அப்பெண்ணின் அழகான முகம் தெளிவாகத் தெரிந்தது. ஒரு நடுக்கம் என் ஊடாகச் சென்றது. நெடுங்காலத்திற்கு முன்பு நான் மறந்துவிட்டிருந்த எனது கடந்த காலத்தைச் சேர்ந்த ஒரு முகம் அது. அது மண்டோதரியாக இருக்குமோ? அரசியார் தனது இளமைப்பருவத்தில் எப்படி இருந்தாரோ, அப்பெண் அப்படியே இருந்தாள். ஆனால் அவளது தோல் மட்டும் கருப்பாக இருந்தது. அரசன் இப்போது என்ன காரியத்தில் ஈடுபட்டிருந்தார்? அது எனக்குத் தெரியவில்லை. என் பாதங்களிலிருந்து என்னுள் ஊடுருவிய பயம் மட்டுமே எனக்குத் தெரிந்தது. ஏதோ ஒரு பெரிய பிரச்சினை ஏற்படவிருந்ததாக என் உள்ளுணர்வு என்னிடம் கூறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *