வலைக்குத் தப்பிய மாநிலங்கள்!

ஜூன் 01-15

 

மோடி அலை என்பது ஒரு மாயைதான். பெருமுதலாளிகள் இதுவரை மன்மோகன் சிங் அவர்களைப் பயன்படுத்தினார்கள். பயன்படுத்தியாகி விட்டது, தற்போது மோடியைப் பயன்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக ஆட்சிபுரிந்த காங்கிரஸ் கட்சியின் தவறான அரசியல் முடிவுகள் மற்றும் கட்டுப்படுத்த முடியாத விலைவாசிப் பெருக்கம் போன்றன மக்களை வேறு ஒரு கட்சியைத் தேர்தெடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டன. ஆளும் கட்சியின் மீது கோபத்தில் இருக்கும் வட இந்திய மக்களை ஜாதி, மத ரீதியாக எளிதாகப்பிரிக்க முடிந்தது. உடனிருந்த மாநிலக் கட்சிகளின் வலுவைக் குறைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளும் தோல்விக்குக் காரணமாயின. இந்தக்குழப்பமான இடைவெளியில் மோடி என்ற ஒரு உருவத்தைப் பிரமாண்டமாகக் காட்டியதும் மக்கள் திசை திரும்பிவிட்டார்கள். இந்த சூழ்ச்சி எடுபடாத சில மாநிலங்களும் இருக்கின்றன. அவை மேற்குவங்கம், தமிழ்நாடு, ஒரிசா மற்றும் கேரளா ஆகியவை. ஆந்திராவிலும் கூட மாநிலக் கட்சிகளே கோலோச்சியுள்ளன. இந்திய வரைபடத்தில் டிக் அடித்தது போன்ற இந்த கடலோர மாநிலங்கள் தான் ஆர்.எஸ்.எஸ். விரித்த மோடி வலைக்குத் தப்பியிருக்கின்றன. இவற்றின் அரசியல் பின்புலங்களை அறிந்துகொள்வது மற்றவற்றின் மீட்சிக்கும் உதவக்கூடும்.

ஒரிசா

ஒரிசா மாநிலத்தைப் பொறுத்தவரை கம்யூனிசத் தாக்கம் கொண்ட மக்கள் அதிகம் வாழும் மாநிலம். கம்யூனிஸ்டுகள் நேரடியாக ஆட்சியைப் பிடிக்கமுடியாவிட்டாலும், பொதுவுடைமைக் கொள்கைகளைத் தன்னுடைய கட்சியின் முக்கியக் கொள்கையாக கொண்ட பிஜு ஜனதா தளத்திற்கு மக்களின் ஆதரவு என்றும் உண்டு. சுதந்திரத்திற்குப் பிறகு 1990 வரை ஒரிசா பிந்தங்கிய மாநிலங்களுள் ஒன்றாகத்தான் இருந்து வந்தது. ஜனதாதளம் ஆட்சியில் இருந்த போது பிஜு பட்நாயக் ஒரிசா மாநிலத்தில் பல சீர்த்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அதன் பிறகு வந்த காங்கிரஸ் அரசின் ஆட்சியின் மீது இருந்த வெறுப்பால் மீண்டும் பிஜு பட்நாயக்கின் மகன் நவின் பட்நாயக்கிற்கு அமோக ஆதரவு கிடைத்தது. 2000-ங்களில் இருந்து தொடர்ந்து மாநிலத்தில் முதலமைச்சராகத் தொடர்ந்து பணியற்றிவருகிறார்.

இந்தத் தேர்தலில் மோடி ஒரிசாவில் மாத்திரம் 4 பொதுக்கூட்டங்கள் நடத்தி லட்சக்கணக்கான மக்களை திரட்டி பேசிப்பார்த்தார். ஆனால் அவருக்கு கிடைத்ததோ ஒரு இடம் மட்டுமே. மத்தியில் ஆட்சி நடத்தும் காங்கிரசின் மீதான வெறுப்பு இங்கு நவின் பட்நாயக் அலையாக மாறியது கடந்த முறை 14 இடங்களை வென்ற பிஜு ஜனதா தளம் இந்த முறை 21 இடங்களில் 20 இடங்களை வென்று சாதனை படைததது.

கேரளா

சுதந்திரம் வாங்கியது முதலே பொதுவுடமைக் கட்சி மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் தொடர்ந்து ஆண்டுவருகின்றன. கல்வியாளர்கள் சிந்தனை பார்ப்பனிய மதவாத சக்திகளுக்கு எதிராக இருக்கும் என்பதற்கு கேரளா ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.   காவிகளுக்கு கேரளாவைப்பற்றிய மிகப்பெரிய கனவும் முயற்சியும் தொடர்ந்து இருக்கிறது. காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றில் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வீழப்போவது உறுதியாகிவிட்டது. அப்படி என்றால் காங்கிரஸ் இருந்த இடத்தில் தங்களின் காவிக்கொடி ஏற்றப்படும் என்ற பெரிய ஆசை சுக்குநூறாக்கப்பட்டு விட்டதால் காவிகள் பெரிய வெற்றியை சுவைத்திருந்தாலும் அந்த வெற்றியை முழுமையாக கொண்டாடமுடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கேரளாவை மிகவும் சாதாரனமாக நினைத்து இறங்கியது. ஆனால் 20 தொகுதிகளில் எதிலும் வெற்றியில்லை என்பதோடு, ஒரு தொகுதியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதியிலும் வைப்புத்தொகையை இழந்தது.

மேற்கு வங்கம்

இந்தியாவே தேர்தல் முடிவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த மாநிலங்களில் முதலிடம் வகித்தது மேற்கு வங்கம். இந்தியாவில் இஸ்லாமிய எதிர்ப்பை கையில் எடுத்த உடனேயே தானாகவே இந்துத்துவ கட்சிகளின் பார்வை மேற்கு வங்கத்தின் மீது சென்றது. காரணம் பங்களாதேசில் இருந்து வரும் இஸ்லாமியர்களை விரட்டுகிறோம் என்ற போர்வையில் இந்தியாவில் இருந்து இஸ்லாமியர்கள் மீது அழுத்தத்தை கொடுக்கவேண்டும். இதற்கு முக்கியமாக் எல்லை மாநிலமான மேற்குவங்கத்தில் தங்கள் வலிமையைக் காட்டவேண்டும். இந்த எண்ணவோட்டம் மோடியை முதன்மைப்படுத்தியதில் இருந்தே காவிகளுக்கு இருந்து வந்தது.

நீண்டகாலமாக கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்துவந்த மேற்குவங்கத்தில் இன்று 2 இடங்களே அவர்களுக்குக் கிடைத்திருப்பினும், காங்கிரசிலிருந்து வெளியேறி தனிக்கட்சி நடத்தி, அண்மையில் ஆட்சியையும் பிடித்த மம்தா பானர்ஜி அதிக இடங்களைப் பிடித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாஜ்பாயி அரசில் முக்கிய அங்கம் வகித்தவர். அதே நேரத்தில் பாஜகவுடன் நல்ல நட்புறவிலும் இருந்தவர். மேற்கு வங்கத்தேர்தலில் இமாலய வெற்றிப்பெற்றபிறகு முதலில் சென்று வாழ்த்துதெரிவித்த கட்சியும் பாஜக தான் இந்த அளவு நட்புறவில் இருக்கும் போது மம்தாவின் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டை வைக்க அவசியமில்லை. மம்தா அரசியல் வருவதற்கு முன்பிருந்தே பொதுநல சேவைகளுக்கான ஒவியம் வரைந்து அதை நிதி திரட்ட பயன்படுத்துகின்றவர். நட்பு ரீதியாக பகிர்ந்துகொண்ட ஓவிய விவகாரத்தை அரசியலுக்குப் பயன்படுத்தி மம்தா மீது குற்றச்சாட்டை வீசத் துவங்கினார். முதலமைச்சர் என்ற லேபிளைப் பயன்படுத்தி ஒன்றுமில்லாத ஓவியங்களை கோடிக்கணக்கில் விற்கிறார் என்று மோடி வைத்த குற்றச்சாட்டு வங்காளிகளை முகம் சுழிக்க வைத்தது.

விளைவு போட்டியிட்ட பல இடங்களில் மண்ணைக் கவ்வியது.

தமிழ்நாடு

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிட இயக்கங்களால் பண்படுத்தப்பட்ட மண். திராவிட இயக்கத்தின் எழுச்சிக்குப் பிறகு எந்த தேசியக் கட்சியும் தனது செல்வாக்கை நிலைநாட்ட முடியவில்லை. தொடர்ந்து இந்துத்துவ சக்திகள் முயன்று வந்தபோதும், ஜாதியக் கட்சிகள் உள்ளிட்ட பதவிக்காக விலைபோகும் கட்சிகளுடன் கூட்டணி வைத்து பெரிய விளம்பரம் செய்தும் கூட இந்த முறை அவர்களால் இரண்டு இடங்களைத் தவிர மற்றவற்றைப் பிடிக்கமுடியவில்லை.   கிடைத்த இரண்டு தொகுதியும் வென்றவர்களின் தனிப்பட்ட பலத்தில் தான் வென்றார்கள் பாஜக போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் வைப்புத்தொகையை இழந்தது. தமிழகத்தின் மக்களவைத் தேர்தல் முடிவுகள் முற்போக்குத் திசையில் இல்லையென்றாலும், முற்றிலும் மாறான திசைக்கும் சென்றுவிடவில்லை; மதவாத-ஜாதியவாத சக்திகளுக்கு இம்மண்ணில் இடம் கொடுத்துவிடவில்லை; மோடிக்கு அதிகபட்ச ஜால்ரா தட்டிய ஊடகங்களால் கூட எதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, ஆந்திரா இரண்டாகப் பிரிந்தாலும் இரண்டிலுமே மாநிலக் கட்சிகளே அதிக இடம் பிடித்துள்ளன. கணிசமான இடங்களைப் பிடித்த தெலுங்குதேசத்துடன் கூட்டணி வைத்த பா.ஜ.க. 3 இடங்களை மட்டுமே பிடித்தது.

இந்திய அளவில் மதச்சார்பற்ற _ முற்போக்கு சக்திகள், பொதுவுடைமை இயக்கங்கள், சமூகநீதியாளர்கள் பிரிந்து நின்றதும், மக்களை ஒன்றிணைக்கத் தவறியதுமே, பழமையில் ஊறியிருந்த மாநிலங்களில் பா.ஜ.க.வின் வெற்றியை உறுதிப்படுத்தின என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

– சரவணா & சமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *