இங்கல்ல… சூடானில்!
மதத்தை மறுப்பதா?
கர்ப்பிணிக்கு மரணதண்டனை தந்த மதம்
சூடானில் மரியம் யாஹ்யா இப்ராகிம் (வயது 27) என்பவருக்கு 20 மாத வயதுள்ள ஆண்குழந்தை உள்ளது. தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். ஆனால், அப்பெண்ணின் தந்தை குழந்தைப் பருவத்திலேயே பிரிந்துவிட்டார். தனக்குத் தெரிந்தவரை தான் ஒரு கிறித்தவர் என்றே கருதி வந்துள்ளார்.
அவர் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டார். இதனால், அவர் மதத்தை மறுத்தவராகக் குற்றம் சுமத்தப்பட்டார். மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துகொண்டதைச் செல்லாது என்று விபச்சாரக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டார். இந்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு மீண்டும் அவருடைய மதத்துக்குத் திரும்புவதற்கு மூன்று நாட்கள் அவகாசம் அளித்தது. ஆனால் அவர் கிறித்தவர் என்று தன்னைக் கூறிவிட்டார். அவர் தந்தை ஓர் இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அப்பெண்ணையும் இஸ்லாமியர் என்று நீதிமன்றம் கூறுகிறது.
சர்வதேச பொது மன்னிப்பு சபையின் சூடான் ஆராய்ச்சியாளர் மானர் அய்ட்ரிஸ் கூறும்போது, உண்மை என்னவென்றால், தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்பெண் அவருடைய விருப்பத்துக்கு ஏற்ப மதத்தைத் தேர்வு செய்துள்ளார். அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டார் என்பதால் மதத்தை மறுத்தார் என்று கூறியும், விபச்சாரம் செய்ததாகக் கூறியும் தண்டனைக்கு உள்ளாகி உள்ளார். மதத்தை மறுப்பது, விபச்சாரம் ஆகியவற்றைக் குற்றச் செயல்களாகக் கருதக்கூடாது. இச்செயல் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் விதிகளை மீறி உள்ளது வெளிப்படையாகி உள்ளது என்று கூறுகிறார்.
மேலும் அவர் கூறும்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மரியத்தின் மனதளவிலான மத நம்பிக்கை, மத அடையாளத்தைக் கூறுவதால் மட்டுமே அவர் தண்டிக்கப்படக் கூடாது. நிபந்தனைகளின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே சர்வதேச பொது மன்னிப்பு சபையின் விருப்பமாகும். மனசாட்சிப்படி அவருடைய நம்பிக்கையை, மதத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் கருத்துச் சுதந்திரத்தைக் காண முடியவில்லை. இவை எட்டமுடியாத தொலைவில் உள்ளது. தனிப்பட்டவர் மீதான தண்டனை, அதுவும் மதம், நம்பிக்கைமீது தண்டனை இவை போன்ற அனைத்திலும் கருத்துச் சுதந்திரத்தை உள்ளடக்கியே இருக்கிறது என்றார்.
நீதிபதி அப்பாஸ் அல் கலீஃபா குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணான மரியம் யாஹ்யா இப்ராகிமிடம் இசுலாம் மதத்துக்குத் திரும்புகிறாயா என்று கேட்டபோது, நான் கிறித்தவர் என்று பதில் அளித்துள்ளார். அதன்பிறகே மரியத்துக்கு மதத்தை மறுக்கும் குற்றத்துக்கு மரண தண்டனையும், வேறு மதத்தவரைச் திருமணம் செய்துகொண்டதைச் செல்லாது என்று அறிவித்து, அதனால் விபச்சாரக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டு நூறு கசை அடி தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானதை நீதிமன்றத்துக்கு வெளியே திரண்டு மதச் சுதந்திரத்தைக் கோரும் பதாகைகளுடன் முழக்கமிட்டவர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த சில வாரங்களாகவே அதிக சுதந்திரமும், சமுதாயம், பொருளாதார முன்னேற்றங்கள் வேண்டும் என்று கர்த்தூம் பல்கலைக்கழக மாணவர்கள் திரண்டு தொடர்ந்து போராட்டங்களைச் செய்து வருகின்றனர்.
மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள் மற்றும் சூடானிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும், மனித உரிமை நசுக்கப்படுவதைக் கண்டித்தும் இசுலாமியத்தை முன்னெடுக்கும் அரசு நம்பிக்கையின்மீதான சுதந்திரத்தையும் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சூடான் அரசுக்குக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.