-கலி.பூங்குன்றன்
16ஆம் மக்களவைத் தேர்தல் முடிந்தது; பத்து ஆண்டுக்காலம் ஆட்சிப் பீடத்தில் இருந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குப் பதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பி.ஜே.பி. தலைமையில் அமைகிறது.
(1) இந்த ஆட்சி அமையக் காரணம் என்ன?
10 ஆண்டுக்காலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலே எதிர் அலை வீசுவது என்பது ஓர் இயல்பான நிலையே.
காங்கிரசில் ஆட்சித் தலைவர் _ வழிகாட்டும் தலைமை என்பது அரசியல் ரீதியான தலைமையல்ல. அரசியல் ரீதியான தலைமைக்குத்தான் அரசியல் _ தேர்தல் _ வாக்கு _ என்பதற்கான அடிவேர்களும் ஆணிவேர்களும் பக்க வேர்களும் என்ன என்று தெரியும்.
பொருளாதார ஆலோசகராக இருப்பது என்பது வேறு _ ஆட்சித் தலைவராக இருப்பது என்பது வேறு. தொலைநோக்குத் திட்டம் தேவைதான். அதனை அன்றாடத் தேவையை விலை கொடுத்துத்தான் பெற வேண்டும் என்று நினைக்கக் கூடாது.
நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வருமானம் உள்ளவர்கள் 7.7 விழுக்காடு என்பதுதான் மெத்தப் படித்த பொருளாதார நிபுணர்களின் (சென் குப்தா அறிக்கை) சாதனையா என்ற கேள்விக்கு என்ன பதில்?
வாங்கும் சக்தி வளர்ந்துவிட்டது என்று கூறி, தவறாமல் விலைவாசியை விண்ணுக்குத் தாவ வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொள்ளும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்குவது எந்த வகையில் சரி?
இந்தியா பல மாநிலங்கள், பல இனங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள் இணைந்த ஒரு கூட்டணிதான்!
அந்தந்த மாநிலப் பிரச்னைகளைக் கையாளும் முறை _ அம்மாநில மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டதாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை _ ஈழத் தமிழர்ப் பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை _ இவற்றை ஒரு சுண்டைக்காய் நாட்டிடம் தன்மானத்தை அடகு வைத்துவிட்டது இந்தியா என்ற எண்ணம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கொழுந்துவிட்டு எரிவதை எப்பொழுதாவது புரிந்து கொண்டுள்ளதா?
தம் கூட்டணியில் பிரதான கட்சியாக அங்கம் வகிக்கும் தி.மு.க. என்ன கருதுகிறது? அதன் உணர்வு என்ன என்பது பற்றி மதிப்புக் கொடுத்துச் சிந்தித்ததுண்டா?
காவிரி நீர்ப் பிரச்சினையில் நேர்மையாக நடந்து கொண்டுள்ளதா?
தெலுங்கானா பிரச்சினையைத்தான் எடுத்துக் கொள்வோம். பிரிவினை என்று முடிவானால் அதனைக் காலத்தே நிறைவேற்றிக் கொடுப்பதில் என்ன தயக்கம்?
சரி தெலுங்கானாவுக்கு ஆதரவாக இருந்து அதனைச் சட்ட ரீதியாக அங்கீகரித்ததன் அரசியல் ஆதாயத்தையாவது காங்கிரஸ் அடைய முடிந்ததா?
ஒரு சந்திரசேகர ராவுக்கு இருந்த ராஜதந்திரம் காங்கிரஸ் தலைமைக்கு இல்லாது போய்விட்டதே!
காங்கிரஸ் தலைவருக்கோ, துணைத் தலைவருக்கோ உள்ள ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருப்போர் யார்? பார்ப்பனர்களும், மலையாளிகளும்தானே! (உருப்பட்ட மாதிரிதான்!)
வெகுஜன விரோத சிந்தனையாளர்களாகவே இருந்துள்ளனர். தேர்தல் கால பட்ஜெட் என்பார்கள். அதைக் கூடச் செய்யத் தவறி விட்டதே!
அதன் ஆதாயத்தை அப்படியே அள்ளிக்கொண்டு போக பி.ஜே.பி.யைத் தவிர அகில இந்திய தேசியக் கட்சி வேறு ஒன்றும் இல்லை _ அதுதான் இப்பொழுது நடந்துள்ளது.
காங்கிரசின் மீது இருந்த வெறுப்பின் பலன் பி.ஜே.பி.க்குப் போய்விட்டது. திராவிடர் கழகத் தலைவர் தெரிவித்த இதே கருத்தைத்தான் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொலிட் பீரோ உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரியும் கூறியுள்ளார்.
(2) காங்கிரஸ் செய்யத் தவறியவை எவை?
2ஜி ஊழல் என்ற ஒன்றை பி.ஜே.பி. _அதன் தொங்கு சதைகளான ஊடகங்கள் ஊதிப் பெருக்கின. 1,76,000 கோடி ரூபாய் ஊழல் என்று அபாண்டமாகக் கிளப்பி விட்டனர்.
அப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தொகையை ஏதோ அமைச்சர் ராஜா எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்பது போன்ற பிரச்சாரம் செய்தனர்.
அதற்குப் பதிலடி எதிரடி கொடுத்து, உண்மை நிலையை எடுத்துக்கூறி, பொய்ப் பிரச்சாரகர்களின் முகத்திரையைக் கிழிக்க வக்கு இல்லை; தி.மு.க. சம்பந்தப்பட்டது என்று தட்டிக் கழித்தார்கள். இன்னொரு வகையில் தி.மு.க.வை அச்சுறுத்துவதற்கும் இதனை அனுமதித்தார்கள். அதன் விளைவு காங்கிரசுக்கே பாதகமாகிவிட்டது.
தொலைத் தொடர்புத் துறையை சாதாரண மக்களுக்குப் பயன்படும் துறையாக ஆக்கிய சாதனையாளர் ஆ.இராசா என்று சொல்ல பிரதமருக்கோ கூட்டணித் தலைவருக்கோ என்ன தயக்கம்?
1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதே! 22 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில்கூட அந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படாதது ஏன்?
நியாயமாக, சரியாக நடத்தியிருந்தால் பி.ஜே.பி., சங்பரிவார் முக்கியத் தலைவர்கள் எல்லாம் தேர்தலிலேயே நிற்க முடியாத அளவுக்குத் தண்டிக்கப்பட்டு இருப்பார்களே!
வெட்கக்கேடு என்னவென்றால், அந்தக் கேவலமான _ அநாகரிகமான குற்றத்தைச் செய்தவர்கள் பிற்காலத்தில் துணைப் பிரதமராக, மத்திய அரசு அமைச்சர்களாக, மாநில அமைச்சர்களாக வந்து விட்டார்கள்.
ராமன் கோவிலைக் கட்டுவோம் என்றும், வெளிநாடுகளில் வாழும் இந்துக்களுக்கு அடைக்கலம் கொடுப்போம் என்பது போன்ற மதச்சார்பின்மைக்கு விரோதமாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளதே பி.ஜே.பி. இதனைப் பெரிதுபடுத்தி இருக்க வேண்டாமா?
மதச்சார்பின்மையைக் குழி தோண்டிப் புதைக்க வருகிறார்கள். உஷார்! உஷார்! என்று இந்தியா முழுவதும் பரப்பிக் கதிகலங்க வைத்திருக்க வேண்டாமா?
தேர்தல் ஆணையத்திடம் _ இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றம் சென்று தேர்தல் அறிக்கையில் சட்ட விரோதமாக உறுதிமொழிகள் இடம் பெற்றுள்ளன என்று கூறி சரியான தீர்ப்பைப் பெற்று இருக்க முடியுமே!
1991 மே 21 அன்று விசுவ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பி.ஜே.பி.யைச் சேர்ந்த மகாஜன், வி.எச்.பி.யைச் சேர்ந்த சாத்வி ரிதம்பரா ஆகியோர் இந்துமத அடிப்படையில் வாக்குகள் கேட்டனர்; அந்த மேடையில் பி.ஜே.பி. வேட்பாளர் ராம் கட்சே இருந்தார் என்பதால் அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததே! (15.4.1994)
2004இல் நடைபெற்ற கேரள மாநிலம் மூவாட்டுப்புழ மக்களவைத் தேர்தலில் இந்தியப் பெடரல் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சி.தாமஸ். (இவர் மத்திய சட்டத்துறை முன்னாள் இணை அமைச்சரும்கூட!) தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.பி.எம். கட்சியின் உறுப்பினர் பி.எம்.இஸ்மாயிலைவிட 529 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சி.பி.எம். கட்சியின் இஸ்மாயில், ஜோஸ் கே. மணி உள்ளிட்டோர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
தேர்தலில் கத்தோலிக்க கிறித்துவ மக்களின் வாக்குகளைக் கவர்ந்திட போப் மற்றும் தெரசா ஆகியோரின் படங்களுடன் தன்னுடைய படத்தையும் இணைத்துக் காலண்டர் அச்சிட்டு மக்களிடம் வழங்கினார்.
இந்த வழக்கில் நீதிபதி சி.என்.இராமச்சந்திரன் வழங்கிய தீர்ப்பு மிகவும் முக்கியமானது. (31.10.2006)
மதத்தின் அடிப்படையில் வாக்குகளைக் கோரியதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123(3)ன்படி தவறானது. இந்த முறைகேடுகள் இல்லாவிட்டால் தோல்வி அடைந்த மனுதாரர் வெற்றி பெற்று இருப்பார். எனவே, நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்த மனுதாரர் இஸ்மாயில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டதே!
நடந்து முடிந்த தேர்தலில் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி உத்தரப்பிரேதேசம் பைசாபாத்தில் ராமன் படம், ராமன் கோயில் படத்தைப் பின்னணியாகக் கொண்ட மேடையில் தேர்தல் பிரச்சாரம் செய்தாரே! தெய்வமாகிய ராமன் பிறந்த மண்ணில் வாழும் மக்களாகிய நீங்கள் காங்கிரசுக்குப் பாடம் புகட்டுங்கள். தேர்தல் வாக்குறுதிகளில் ராமன் கோயிலை ஆதரிக்காதவர்களுக்கும் பாடம் புகட்டுங்கள். இது ராமன் கடவுளின் மண்ணாகும். (பிரான் ஜெயே பர்வச்சன் நா ஜெயே) என்று முழங்கினாரா, இல்லையா? இது அப்பட்டமான மதவாதத்தைக் கையில் எடுத்துக்கொண்ட செயல்பாடாகும்.
அந்த நேரத்திலேயே காங்கிரஸ் இதனைக் கையில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். சட்டரீதியாக அணுகியிருக்க வேண்டும். ஏன் இப்பொழுதுகூட ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை. வாரணாசி வெற்றியைக்கூட கேள்விக்குறியாக்கிட முடியுமே!
(3) பி.ஜே.பி. வெற்றி பெற்றது எப்படி?
இரண்டாண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டது. நரேந்திர மோடிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவித்து நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. விளம்பரத்துக்காகவும், பிரச்சாரத்துக்காகவும் பி.ஜே.பி. செலவிட்ட தொகை ரூ.5,000 கோடி. (அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்).
நாள் ஒன்றுக்கு ஆறு தடவை உடைமாற்றம் என்பதெல்லாம் அறிவுக்கு அப்பாற்பட்டு பாமர மக்களை வசீகரிக்கும் நாடக பாணி செயற்கை யுக்திதானே!
பொய்யான பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன. அதற்கு இணையதளங்கள் வெகுவாக பயன்படுத்தப்பட்டன. (3டி உட்பட).
எடுத்துக்காட்டாக சீனாவில் குவாங்_ஜோ (Guangzhou) நகரில் உள்ள பேருந்து நிலையம் மோடியின் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரப் பேருந்து நிலையம் என்று அப்பட்டமாக வலைத் தளத்தில் வெளியிட்டனர் என்றால் அவர்களின் அண்டப் புளுகைத் தெரிந்து கொள்ளலாமே!
வளர்ச்சி, வளர்ச்சி, குஜராத் மாடல் என்று ஊதிப் பெருக்கிக் காட்டி மக்களை நம்ப வைத்தனர். புதிய வாக்காளர்களான இளைஞர்கள் அதனை நம்பியதுதான் வெட்கக்கேடு!
உண்மையில் குஜராத் இந்தியாவின் முன்மாதிரி (மாடல்) மாநிலமா? இல்லை _ இல்லவே இல்லை. இதனை இந்தியாவின் ஆளுநரான ரகுராம்ராஜன் குழுவினர் வெளியிட்ட விவர அறிக்கை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து காட்டியது.
இந்தியாவில் தனிநபர் வருமானத்தில் _ குஜராத் 10ஆம் இடம். எழுத்தறிவு 18ஆம் இடம். ஏழைகள் குறைந்த மாநிலத்தில 10ஆம் இடம். சாலைகள் பராமரிப்பில் 11ஆம் இடம். பிரசவக்காலத்தில் இறப்பு விகிதம் 100க்கு 62 (குஜராத்தில்). பிற மாநிலங்களிலோ 12 முதல் 14 வரைதான். சராசரி ஆயுள் குஜராத்தில் ஆண்கள் 63.12, பெண்கள் 64.10. பிற மாநிலங்களிலோ ஆண்கள் 71.67, பெண்கள் 75.
எக்னாமிக் டைம்ஸ் சர்வே ஒன்றை வெளிப்படுத்தியது. இந்தியாவுக்கு அடுத்த பிரதமர் யார் என்ற கணக்கெடுப்பு 100 கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நடத்தப்பட்டது. அதில் 74 சதவிகிதம் கார்ப்பரேட் நிறுவனங்கள் மோடிக்கு ஆதரவாக இருந்ததை வெளிப்படுத்தியது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அப்படி என்ன ஆர்வம் _ அக்கறை?
குஜராத்தில் முந்த்ரா துறைமுகம் கட்டுவதற்காக என்று அதானி குழுமத்திற்கு 5.47 கோடி சதுர மீட்டர் நிலத்தை மோடி அரசு அளித்தது. சதுர அடி ஒன்றுக்கு ரூ.ஒன்று முதல் 32 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
வெறும் 98.60 லட்சம் ஏக்கர் நிலத்தை மட்டும் துறைமுகத்துக்காக பயன்படுத்திக் கொண்டு மீதி 4 கோடி ஏக்கருக்கு மேல் உள்ள நிலத்தை சதுர மீட்டர் ரூ.600 முதல் ரூ.737 வரை விலை நிர்ணயம் செய்து, மற்ற நிறுவனங்களுக்கு விற்று, கோடி கோடியாக வாரி சுருட்டிக் கொண்டது அதானி குழுமம். இந்த அதானி குழுமத்திற்குச் சொந்தமான தனி விமானத்தில்தான் நரேந்திரமோடி தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டார்.
(4) பிரதமராக மோடி ஜொலிப்பாரா?
ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆயிரம் பேசலாம். ஆட்சிக்கு வந்த பிறகுதான் அதன் வலி தெரியப்போகிறது. பொருளாதார வளர்ச்சியில் சாதனை காட்டுவதற்கு மாறாக திசை திரும்பும் சில வித்தைகளைக் காட்டக் கூடும்.
ஆர்.எஸ்.எஸ்.தான் மோடியைத் தேர்வு செய்தது. ஆட்சியின் லகான் அதனிடம் இருக்கப் போகிறது.
இங்கேதான் சிக்கல் ஆரம்பமாகப் போகிறது. ராமன் கோயிலைக் கட்டப் போகிறாரா? வறுமையை ஒழிக்கப் போகிறாரா? பொருளாதாரக் கொள்கை வெளி நாட்டுக் கொள்கைகளைப் பொறுத்த வரை காங்கிரசுக்கும் பி.ஜே.பி.க்கும் பெரிய வேறுபாடு கிடையாதே!
(5) தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. 39இல் 37 இடங்களில் வெற்றி பெற்றது எப்படி?
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் விடுதலை அறிக்கை (19.5.2014) விரிவாகக் கூறுகிறது.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் 5 காரணங்கள்.
(1). ஆட்சிப்பலம்
(2). தேர்தல் ஆணையப்பலம்
(3). பணம் பட்டுவாடா
(4). 144 தடை உத்தரவு
(5). ஊடகங்களின் ஒருசார்புப் பிரச்சாரம்.
மற்றபடி மின்வெட்டு சமாளிக்கப்பட்டதா? குறைந்தபட்சம் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு உண்டா? விலைவாசி குறைக்கப்பட்டதா?
மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு. இவைதான் அ.தி.மு.க. ஆட்சியின் மூன்றாண்டு சாதனையாக நடைபெற்றது. சமூக நீதியில் சறுக்கல்!
நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் மாநிலப் பிரச்சினைகள் முக்கியத்துவம் பெறவில்லை. அடுத்த இரண்டாண்டும் அ.தி.மு.க.வுக்கு மிகவும் சோதனையான காலகட்டமாக இருக்கும்.
மாற்றத்திற்கு என்ன மார்க்கம்?
(1) மதச்சார்பற்ற சக்திகளும் சமூகநீதியாளர்களும் கை கோர்க்க வேண்டும்.
மண்டல் காற்று வீசிய பிகார், உத்தரபிரதேசம், மகாராட்டிரம், கருநாடக மாநிலங்களில் இந்தச் சக்திகள் பிளவுபட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை மதவாத சக்திகள் ஆக்ரமித்துக்கொண்டன. (2) பி.ஜே.பி.யைப் பொறுத்தவரை இரு விழிகள் போன்ற இந்த இரு நிலைப்பாடுகளிலும் முற்றிலும் மாறுபாடு கொண்டதாகும். மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக உள்ள தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கையிணைத்தால் கண்மூடிக் கண் திறப்பதற்குள் மதவாத சக்திகள் மறைந்தோடி விடும்.
கார்ப்பரேட் சக்திகள் – உயர்ஜாதி பார்ப்பன சக்திகள் – அவற்றின் ஊடகங்களும் நொறுக்கப்பட்டுவிடும்.
பதவியேற்பு விழாவில் பிரியாணி பார்சல்!?
மோடி சைவ உணவு மட்டுமே உண்பவர் என்பதால் அவரது பதவியேற்பு விழாவில் முழுக்க மரக்கறி உணவு தான் என்று சொல்லிவிட்டார்கள் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள். (ஹிட்லரும் புலால் மறுப்பவர் என்பது உங்களின் நினைவுக்கு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல…)
மரக்கறியா, புலால் உணவா என்பதை சாப்பிடுபவர்கள் தானே முடிவு செய்ய வேண்டும் என்று ஆளாளுக்கு புலம்பத் தொடங்கிவிட்டனர்.
பதவியேற்பு விழாவின் விருந்திலேயே இவ்வளவு கவனமா என்றால், தங்களின் பார்ப்பனியப் போக்கை எங்கிருந்து தொடங்குகிறார்கள் என்பதைத் தானே நாம் கவனிக்க வேண்டும். இன்னொருபுறம், சார்க் நாட்டுத் தலைவர்களையெல்லாம் அழைத்திருக்கும் மோடிக்கு, தனது டுவீட்டு மூலம் ஒரு கொட்டு கொட்டியிருக்கிறார் சசிதரூர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்தியர்களின் தலைகளை பாகிஸ்தான் சீவும்போது, நம்நாட்டுப் பிரதமர் பாகிஸ்தான் பிரதமருடன் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்று மோடி கிண்டல் செய்ததை எடுத்துக் காட்டி, மோடி பதவியேற்பு விழாவுக்கு வரும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் சிக்கன் பிரியானி கேட்பார் என்று நம்புவோம் என்று டுவீட்டியிருக்கிறார் அவர்.
ஆரிய பவன் சாப்பாடுதான் என்று முடிவான பின் ஷெரிப்புக்கு மட்டும் பிரியாணி பார்சலா? என்று கிண்டல் தொடங்கிவிட்டது டெல்லிபவன்களில்!
கடைசிச் செய்தி: சசிதரூர் சொன்னதினாலோ என்னவோ, வெளிநாட்டுத் தலைவர்களுக்கென்று அசைவ உணவும் மெனுவில் சேர்க்கப்பட்டிருக்கிறதாம்.