புதிய சமூகம் படைக்கும் பழகு முகாம்

மே 16-31 - 2014

கழுவி விடப்பட்ட சாலைகள், குளித்துத் தலை துவட்டியிருந்த பசுமையான மரங்கள், மெல்லிய தென்றலுக்கும்கூட, தாக்குப்பிடிக்க முடியாமல் சிதறும் மழைச் சாரல்… இவைகளோடு குழலினிது, யாழினிது என்பதைக் காட்டிலும் இனிமையான மழலைச் செல்வங்களும் இருந்தால், எப்படியிருக்கும்! ஆம், அப்படித்தான் இருந்தது இந்தப் பழகு முகாம் _ 2014.

பெரியார் பிஞ்சு, பெரியார் மணியம்மையார் பல்கலைக்கழகம் இரண்டும் இணைந்து வழக்கம்போல, நான்காவது ஆண்டாக ஆறு நாட்கள் (05.05.14 _ 10.05.14) பழகு முகாமை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தன. இதில் ஒருவர் ஒருமுறைதான் கலந்துகொள்ள வேண்டும் என்று திட்டம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கெனவே கலந்து கொண்ட பெரியார் பிஞ்சுகளும் அடம் பிடித்து, ஆர்ப்பாட்டம் செய்து மறுபடியும் கலந்து கொள்கிறார்கள். இதுதான் பழகு முகாமின் சிறப்பு. இதனாலேயே, அதிகபட்ச எண்ணிக்கையாக 150 என்று திட்டம் செய்திருந்தும் 209 பேர் வந்து குவிந்து விட்டனர். ஏற்பாடு செய்திருந்தவர்கள் இனிய அதிர்ச்சிக்கு ஆளாகி விடுவது வழக்கமாகிவிட்டது.

இன்னும் ஒரு முக்கியமான சிறப்பு இந்தப் பழகு முகாமுக்கு உண்டு. அதாவது, இங்கு விளையாட்டைப் போல அறிவு புகட்டுவது. அறிவைப் புகட்டுவதுபோல, அவர்களுடன் பேசி விளையாடுவது என்ற இரண்டும் இங்கு உண்டு. அறிவு புகட்டுவது என்பதே பழகு முகாமைத் தவிர மற்ற இடங்களில் பொருள் வேறுபடும். இங்கு புத்தறிவு, புத்தரின் அறிவு, பெரியாரின் அறிவு பகுத்தறிவு, மனிதநேயம் என்பதுதான் பொருள்படும்.

வருகை தந்திருந்த 209 பேர்களில் ‘A’ பிரிவு (Adolescent)  ‘K’ பிரிவு  (Kits) என்று இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, இரண்டு தரப்பினருக்கு அவரவர் வயதுக்கு ஏற்ற வகையில் வகுப்புகள் அமைக்கப்பட்டன. முதல் நாளில் அடிப்படைப் பரிசோதனைகள் முடித்த பிறகு, பெரியார் பிஞ்சுகள் பெரியார் மணியம்மையார் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள (சிக்மண்ட்) பிராய்டு அரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் வருகை தந்திருந்து பழகுமுகாமைத் தொடங்கிவைத்து பெரியார் பிஞ்சுகளோடு அளவளாவினார். அப்பொழுது அவர், ஒரு முக்கியமான தகவலைச் சொல்லி, அந்தத் தகவலுக்காக பிஞ்சுகளிடம் பலத்த வரவேற்பையும் பெற்றார். அதாவது, புவிஈர்ப்பு விசை என்ற மகத்தான அறிவியல் உண்மையை நியூட்டன் கண்டுபிடித்தது, பள்ளியில் படிக்கும்போது அல்ல. உங்களைப் போன்று இப்படி விடுமுறையைக் கழித்த போதுதான் என்று குறிப்பிட்டதும் பிஞ்சுகள் ஒரு பொறி தட்டிய உணர்வுடன் கையொலி செய்தனர். அதைத் தொடர்ந்து பேசிய பொதுச் செயலாளர், வீ.அன்புராஜ், அதுபோல, உங்களையும் சிந்திக்கச் செய்யப்போகிறோம் என்று பிஞ்சுகளின் பொறிதட்டிய உணர்வுக்கு முத்தாய்ப்பு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் பர்வீன், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் பேரா. தவமணி, பதிவாளர் எஸ்.பி.கோவிந்தராசு, புதுவை சிவ.வீரமணி, பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக, பிஞ்சுகளுக்கு தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் கி.வீரமணி, அண்ணல் காந்தி, அறிவியல் அறிஞர் அப்துல்கலாம், கல்பனா சாவ்லா, பகுத்தறிவாளர் நேரு, அன்னை தெரசா, தாமஸ் ஆல்வா எடிசன், சட்டமேதை அம்பேத்கர் ஆகிய அறிஞர்களின் நிழல் படம் அமைந்த முகமூடி கொடுக்கப்பட்டது. அந்த முகமூடியுடனேயே 209 பேரும் மேடையேறி தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

பழகு முகாமில் பிஞ்சுகளுக்கு, தங்கள் பணிகளைத் தாங்களே செய்துகொள்ளும் வாய்ப்பு வாய்த்துவிடுகிறது. இன்னது செய்ய வேண்டும், இது கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு ஒரு ஒழுக்கமாகவே கற்றுத்தரப்பட்டு விடுகிறது. விளையாடுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் அறிவை வளர்த்துக் கொள்வது என்பதும் தகுந்த வகுப்புகள் மூலம் உணரச் செய்யப்பட்டு விடுகிறது. அவர்களுக்கு உகந்த பொழுதுபோக்குகள் கூட நகைச்சுவையுடன் கூடிய அறிவு வளர்ச்சிக்கே அடிகோலுகின்றன. உலகம் என்பது வீடும் பள்ளிக்கூடமும் மட்டுமல்ல, அதையும் தாண்டி ஏறக்குறைய தமிழ்நாடு முழுவதிலிருந்தும் வந்திருக்கின்ற புதுப்புது நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள் என்று புது உலகமும், நாளைய உலகம் நம் கையில் என்ற உணர்வுகளும் இயல்பாகவே உண்டாகி, பெற்றவர்களைக்கூட மறந்துவிடுவதும்கூட இங்கு வாடிக்கையாகிவிட்டது.

பழகு முகாமுக்கு வரும் ஒவ்வொரு பெரியார் பிஞ்சும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். சிலரை, தள்ளி இருந்து கவனித்தால் போதும், சிலரை பக்கத்தில்… இன்னும் சிலரை கூடவே இருந்து. இப்படிப் பலப்பல…. ஆனால், இங்கு வந்த பிறகு, ஏறக்குறைய பல குறைபாடுகள் கண்களுக்குத் தெரியாமலேயே களையப்பட்டு விடுகின்றன.

உதாரணத்திற்கு வேண்டுமானால் ஒன்றைச் சொல்லலாம். சென்னையிலிருந்து வந்திருந்த அருண்மொழிப் பாண்டியன் இளவயது பழகுமுகாம் பங்கேற்பாளர். தன்னை, தனக்குள்ளேயே வைத்துக் கொள்ளும் சின்னஞ்சிறு மலர். எப்போதும் ஒருவருடைய அருகாமையை எதிர்பார்க்கும் தன்மை. எதையும், யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத தளிர். அப்படிப்பட்டவர் தஞ்சையிலுள்ள சிவகங்கை பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பெரியார் பிஞ்சுகள் அனைவரும் பாதுகாவலர்களுடன்  (Volunteers) தண்ணீரில் இறங்கி கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தபோது, இவன் மட்டும் வரவே மாட்டேன் என்று அடம் பிடித்தான். அழக்கூட தயாராக இருந்தான்; வற்புறுத்தவில்லை. வேடிக்கை மட்டும் பார் போதும் என்று கேட்டு சம்மதிக்கச் செய்தோம். இதுதான் அவனுக்குத் தூண்டில்… சற்று நேரத்தில் மீன் புழுவைக் கடித்தது, பிறகு… வேறென்ன உயர நீர்ச்சறுக்கு, அகல நீர்ச்சறுக்கு, குறு அருவி, பெரு அருவி என்று கும்மாளம் அடித்துவிட்டு, நேரம் முடிந்து விசில் அடித்து மேலே அழைத்ததும், என்ன அதுக்குள்ள மேல வரச் சொல்றாங்க என்று கேட்டான். இதுபோல எத்தனையோ…

இந்த வயதில் மனது ஒரு சரியான நிலைக்கு வராமல் போனால், பிறகு பெற்றவர்களும்  வளர்ந்த பிள்ளைகளும் என்னென்ன பாடுபடுகிறார்கள் என்பதை நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். அதற்கெல்லாம் ஒரு மாற்றாக இருக்கிறது, பழகு முகாம். நோய்நாடி நோய் முதல் நாடியாக இருக்கிறது இந்தப் பழகு முகாம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நம் தமிழர் இனத்தின் பண்பாட்டுக்கான விதைகளாக இருக்கிறது இந்தப் பழகு முகாம்.

இந்த மாபெரும் சமூக மறுமலர்ச்சிக்கான பணியில், திராவிடர் கழகத்தின் தலைவரும் தமிழர் தலைவருமான கி.வீரமணி, பழகு முகாமின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், பொதுச் செயலாளருமான வீ.அன்புராஜ் தொடங்கி, பிரின்சு என்னாரெசு பெரியார், பேராசிரியர் பர்வீன், சிவ.வீரமணி, உடற்பயிற்சி ஆசிரியர் ஹேமலதா மற்றும் அழகிரி, பெரியார் வலைக்காட்சி சார்பாக ஒலி, ஒளிப்படக் கலைஞர்கள் மற்றும் PMU வாலண்டியர்ஸ், ஆசிரியர்கள், சமையல் கலைஞர்கள், ஓட்டுநர்கள் என்ற ஒரு படையே இந்தப் பழகு முகாமின் வெற்றிக்குப் பின்னணியில் இருந்து பணிபுரிந்துள்ளனர். இந்த ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பு வருங்காலத்திலும் தொடரும். இந்த அர்ப்பணிப்புக்கு காலம் தக்க பதில் சொல்லும்.

– உடுமலை வடிவேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *