கேள்வி : மதக் கலவரங்கள் வட மாநிலங்களில் தலைதூக்கத் தொடங்கிவிட்ட நிலையில் மீண்டும் காங்கிரசுக்கு மூன்றாவது அணி ஆதரவு அளிக்குமா?
– இரா. சரவணா, திருநெல்வேலி
பதில் : தேர்தல் முடிவுகள் _ மே 16ஆம் தேதிக்குப்பின் வந்த பிறகே, ஓரளவுக்கு அடுத்த அரசு, அதற்கான பல்வேறு முயற்சிகள் பற்றி எதுவும் கூற இயலும்.
மதச்சார்பற்ற ஓர் அரசு அமைவதே சாலச் சிறந்தது; இந்தியா காணாமற்போகக் கூடும் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால் என்ற அச்சம் – பரவலாக பொதுவான அறிவு ஜீவிகள் முதல் அயல்நாடுகளின் அரசுகளிலும் பரவலாக உள்ள நிலையில், தேர்தலுக்குப்பின் மதவெறியும் பதவி வெறியும் ஓர் அணி, அது தடுக்கப்பட்டு மதச்சார்பின்மையும் சமூகநீதி, சமதர்மம் போன்றவைகளை முன்னிறுத்துவோரும் ஒன்றுசேர, தீயணைப்பதில் எப்படி வேறுபாடு இன்றி பலரும் சேருவரோ அப்படியே நடக்கவும் வாய்ப்பு உள்ளது.
கேள்வி : தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டைப் பின்பற்ற முடியாது என்று தனியார் பள்ளிகள் கூறியிருப்பது எதனைக் காட்டுகிறது? – க.கருணாமூர்த்தி, முடப்பள்ளி
பதில் : அவர்கள் கூறுவதை ஒரு பகுதியை மட்டும் ஏடுகள், ஊடகங்கள் செய்தித் தலைப்பாக்கி விட்டனர்; அவர்கள் எங்களுக்கு அதன்மூலம் அரசு தர ஒப்புக்கொண்ட பணத்தைத் தராவிட்டால் நாங்கள் ஒத்துழைக்க முடியாது என்ற அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளனர். பள்ளிக்கல்வி அமைச்சரும் உடனே அழைத்துப்பேசி முடிவுக்கு வந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. பொறுத்துப் பார்ப்போம்.
கேள்வி : கோவை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இளைஞர்களுக்கு நடத்தும் பயிற்சியைத் தடுக்க வழியே இல்லையா? – க.பாக்யா, ஆவடி
பதில் : ஏன் இல்லை; மனசு அரசுக்கு _ தமிழக அரசுக்கு இருந்தால் ஏன் முடியாது? சட்டங்கள் உள்ளனவே! Political Will என்ற அரசு உறுதிப்பாடுதான் தேவை.
கேள்வி : சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இரட்டைக் குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்கள் யாராக இருக்கக் கூடும்? இதன் விளைவு எப்படி இருக்கும்? – நா.பார்த்திபன், கொளத்தூர்
பதில் : யாராக இருந்தாலும் அவர்கள் மனிதகுல விரோதிகள். விளைவு…. அமைதியின்மை சமூக நல்லிணக்கம் கெட்டு, மதக் கலவரங்களுக்குத் தூபமிடுவதாக அமையும்.
கேள்வி : வாக்களிக்கும்போது தனது கட்சிச் சின்னத்தைக் காட்டியது, தேர்தல் விதிமுறைகளை மீறி மேடையில் ராமர் படத்தைப் போட்டது, ராமர் பற்றிப் பேசியது… என எந்தச் சட்டத்தையும் மோடி மதித்ததாகத் தெரியவில்லையே?
– அ. குமரேசன், முதுகுளத்தூர்
பதில் : பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள மோடி, சட்டத்தை எதிலும் மதிப்பதாகவே தெரியவில்லை; அரசியல் கண்ணியம் மீறிய தாக்குதல்களாகவும், அவருடைய தேர்தல் பேச்சுகள் அமைந்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது.
கேள்வி : பத்மநாபசாமி கோவில் பொக்கிஷங்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் செய்யாத குற்றத்திற்காக குடும்பமே வேதனைப்படுவதாக கூறியுள்ள கவுரி லட்சுமிபாயின் கூற்று? – ம. இந்திரஜித், கூடுவாஞ்சேரி
பதில் : சிரிப்புதான் வருகுதம்மா என்று பாடவேண்டிய பரிதாபநிலை!
கேள்வி : இந்திய அரசியலமைப்புச் சட்டம் இன்னமும் மனுநீதியின் மறுபதிப்பாகவே செயல்படுகிறது. இதனை மாற்ற என்ன வழி?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : மக்களின் இடையறாத விழிப்புணர்வுதான்.
கேள்வி : எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றால் எல்லா இழிவும் யாருக்கு?
– சின்னவெங்காயம், சென்னை _78
பதில் : நம்பிக்கையாளர்கள் பதில் அளிக்க வேண்டிய கேள்விதான் இது! (தனி மனித துதி கண்டிக்கப்படுகிறதே என்றும் கூறுவர்.)
கேள்வி : 28.4.2014 அன்று தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை மூலம் தமிழகத்தில் உள்ள முக்கியக் கோவில்களில் வருணஜெப பூஜைகளை நடத்தி இருப்பது சட்டப்படி சரியா?
– சா.கோவிந்தசாமி, பெரம்பூர்
பதில் : சட்டப்படி தவறு.! தவறு. விடுதலையில் இதுபற்றி கட்டுரையே வந்துள்ளது.
கேள்வி : இந்திய அரசியல் வரலாற்றில் நரேந்திர மோடியைப் போல் மிகவும் மலிவாக ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசிய அரசியல்வாதிகள் இதற்குமுன் உண்டா? – சா.வடிவேல், ஆவூர்
பதில் : 60 மாதங்களில் செய்யாததை 6 மாதங்களில் செய்து முடிப்பேன் என்பதே முதல் தரமான மோடி வித்தை அல்லவா?