நாத்திக அறிவியலாளர் விக்டர் ஜே. ஸ்டெஞ்சர்

மே 16-31 - 2014

–  நீட்சே

விக்டர் ஜான் ஸ்டெஞ்சர் (Victor J.Stenger) என்னும் அமெரிக்கர் ஒரு துகள் இயல்பியல் அறிவியலாளரும் (Particle Physicist), தத்துவ இயலாளரும், ஆசிரியரும், கடவுள், மத நம்பிக்கை அற்றவரும் ஆவார். துகள் இயல்பியல் அறிவியல் துறையில் ஓர் ஆராய்ச்சி அறிவியலாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய இவர் இன்று புதிய நாத்திகம் என்ற அமைப்புடன் தொடர்பு கொண்டிருப்பது மட்டுமன்றி, புகழ் பெற்ற அறிவியல் நூல்கள் பலவற்றை எழுதியும் வருகிறார்.  இயல்பியல்,  சிறுஅளவிலான மின்காந்த ஆற்றல் இயந்திரவியல், விண்வெளி ஆய்வு, தத்துவம், மதம், நாத்திகம், போலி அறிவியல்கள் ஆகிய 12 நூல்களை இவர் எழுதி இதுவரை பதிப்பித்துள்ளார்.

 

இவரது நூல்களுள், கடவுள் – தோல்வியடைந்த கருதுகோள் : கடவுள் என்ற ஒருவர் உண்மையில் இல்லை என்பதை அறிவியல் எவ்வாறு விளக்கிக் காட்டுகிறது?(God – The Failed Hypothesis. How Science shows that God does not exist?)’’  என்ற நூல் அதிக பதிப்புகள் விற்று சாதனை படைத்தது. அண்மையில் இவர் எழுதி வெளியிட்டுள்ள நூல்  கடவுளும் அணுவும் : டிமோக்ரிடஸ் முதல் ஹிக்ஸ் பாஸன் வரை (God and Atom : From Democritus to the Higgs Boson)” 2013 இல் வெளியானது. ஹஃபிங்டன் போஸ்ட் (Huffington Post) என்னும் பத்திரிகைக்கு அறிவியல் கட்டுரைகளைத் தவறாமல் எழுதி வருபவர் இவர். அறிவியல் ஆராய்ச்சி,  வணிக பொருளாதாரச் செயல்பாடுகள்,  அரசியல் முடிவுகள் எடுக்கும் நடைமுறை ஆகியவற்றின் மீதான கடவுளின் செல்வாக்கை, ஆதிக்கத்தை நீக்க வேண்டும் என்று பலமாக வலியுறுத்தி வருபவர் இவர். புகழ் பெற்ற அறிவியல் உங்களை நிலவுக்கு அழைத்துச் செல்கிறது; ஆனால் மதமோ உங்களைக் கட்டிடங்களுக்குள் செலுத்துகிறது என்ற சொற்றொடரை இவர்தான் உருவாக்கினார்.

1935 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதி பிறந்த விக்டர் ஜான் ஸ்டெஞ்சர், அமெரிக்க நாட்டின் நியூஜெர்ஸி மாநிலத்தின் பயோனி நகரின் தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில் வளர்ந்தார். அவரது தந்தை லிதுவேனியா நாட்டிலிருந்தும், அவரது தாய் ஹங்கேரி நாட்டிலிருந்தும் குடிபெயர்ந்து வந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் ஆவர்.

கல்வியும் வேலையும்: பயோனியில் அரசு பள்ளிகளில் தனது கல்வியைத் தொடங்கிய ஸ்டெஞ்சர்,  தற்போது நியூஜெர்ஸி தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் என்று அறியப்படும் நிவார்க் பொறியியல் கல்லூரியில் மின்பொறியியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஹக்ஸ் விமான நிறுவனத்தின் படிப்புதவித் தொகையைப் பெற்ற இவர் லாஸ் ஏன்ஜெல்சுக்குச் சென்று 1958ஆம் ஆண்டில் லாஸ் ஏன்ஜெல்ஸ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் முதுகலைப் பட்டம் பெற்றார்.  1963ஆம் ஆண்டில் இயல்பியல் துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார்.

ஜெர்மனியில் உள்ள ஹெய்டன்பர்க் பல்கலைக்கழகம், இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு அழைப்பின் பேரில் சென்று  பேராசிரியராகப் பணியாற்றியதுடன்,  இங்கிலாந்தில் உள்ள லூதர்போர்ட் ஏப்பிள்டன் சோதனைச் சாலையிலும்,  இத்தாலி நாட்டில் உள்ள பிராஸ்காட் தேசிய அணு இயல்பியல் சோதனைச் சாலையிலும், ப்ளாரன்ஸ் பல்கலைக்கழகத்திலும்  அழைப்பின் பேரில் சென்று ஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ளார். தற்போது ஹவாய் பல்கலைக்கழகத்தில் இயல்பியல் எமிரிடஸ் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

அறிவியலாளராக:  ஸ்டெஞ்சரின் முதல் ஆராய்ச்சிக் கட்டுரை 1964இல் வெளியிடப்பட்டது தொடங்கி ஆய்வுப் பணி 2000ஆம் ஆண்டில் இவர் ஓய்வு பெறும் வரை தொடர்ந்தது. அணுவின் மிகச் சிறிய துகள், விந்தையான துகள்கள் மற்றும் நியூட்ரினோ ஆகியவற்றின் பண்புகளை, பகுதிகளைத் தீர்மானிக்கும் ஆராய்ச்சிகளை இவர் மேற்கொண்டார். நியூட்ரினோ விண்வெளி ஆய்வு, மிக உயர்ந்த ஆற்றல் படைத்த காமா கதிர்கள் பற்றிய ஆய்வுகளுக்கு ஸ்டெஞ்சர் ஒரு முன்னோடியாக விளங்கினார். ஜப்பான் நாட்டில், நிலத்தடியில் மேற்கொள்ளப்பட்ட காமிகாண்டா சோதனையில் சோதனை இயல்பியலாளராக இவர் பங்கெடுத்துக் கொண்டதுவே ஓய்வு பெறுவதற்கு முன் இவர் மேற்கொண்ட இறுதியான ஆய்வுப் பணியாகும். நியூட்ரினோவுக்கும் எடை உள்ளது என்பதை இச் சோதனை நிலைநாட்டியது. இச்சோதனைத் திட்டத்தின் தலைவரான ஜப்பான் நாட்டு அறிவியலாளர் மாஸாடோஷி இயல்பியலுக்கான 2002ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசினை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார். விண்வெளி இயல்பியல் துறையில், குறிப்பாக விண்வெளி நியூட்ரினோக்களைக் கண்டுபிடிக்கும் பணியில் முன்னோடியாகப் பங்களித்தமைக்காக இந்த நோபல் பரிசு இவருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

தத்துவ ஞானியும், கடவுள் மறுப்பாளரும்: தத்துவ அடிப்படையிலான இயல்புத் தன்மை, கடவுள் மறுப்பு, நாத்திகக் கோட்பாடு ஆகியவற்றைப் பலமாக ஆதரிப்பவர் என்பதற்காகவே முக்கியமாக ஸ்டெஞ்சர் இன்றளவும் அறியப்பட்டுள்ளார். அறிவார்ந்த படைப்பாளி கடவுளே என்ற கருத்தையும், மனித இனத் தோற்றம் மற்றும் வளர்ச்சிக் கொள்கையை மறுப்பவர்களையும்  கடுமையாக எதிர்ப்பவர் இவர். தன் உணர்வும், சுய விருப்பமும் இருக்குமேயானால்,  அறிவியல்பூர்வமாக அவை விளக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது இயற்கையை மீறிய ஆற்றலையோ, புரிந்து கொள்ள முடியாத தெய்வீக, ஆன்மீக ஆற்றல்களையோ  வெளிப்படுத்தவோ, மெய்ப்பிக்கவோ இல்லை. சிறுஅளவிலான மின்காந்த ஆற்றல் இயலில் உள்ள குழப்பங்களின் துணையுடன்  அறிவியல் ரீதியாக விளக்கப்பட முடியாத விந்தையான நிகழ்வுகள், இயற்கையை மீறிய கோட்பாடுகள் ஆகிய கற்பனைகளுக்கு வடிவம் கொடுப்பதை இவர் கடுமையாக விமர்சித்துக் கண்டித்துள்ளார். தற்கால போலி அறிவியல் துறைகளாக ஜோதிடம், வாஸ்து சாத்திரம் ஆகியவற்றின் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டும் பல நூல்களையும், கட்டுரைகளையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

திறமை மிகுந்த சொற்பொழிவாளரான ஸ்டெஞ்சர், கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் கடவுள் மறுப்பு சங்கத்தினரால் 2008 இல் நடத்தப்பட்ட உயிரினத் தோற்ற மாநாட்டில்  , வில்லியம் லேன் கிரெய்க், ஹக் ராஸ், டேவிட் பார்த்தலோமி ஆகிய அறிவியலாளர்களுடனும் பங்கெடுத்துக் கொண்டு, நான்சி மார்பி, லியோனார்ட் சஸ்கைண்ட் ஆகிய கிறித்துவ மதப் பரப்புரையாளர்களுடன் கடுமையான விவாதங்கள் செய்துள்ளார். ஊரி கெல்லர் என்னும் மதப் பரப்புரையாளர் தனது அற்புத ஆற்றல்களைக் கேள்வி கேட்ட காரணத்துக்காக,  40 லட்சம் டாலர் இழப்பீடு கோரி ஸ்டெஞ்சர் மற்றும் புரமோதிஸ் பதிப்பகத்தின் மீது 1992இல் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், வழக்குச் செலவுகளை ஊரி கெல்லர் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

பத்திரிகையாளராக:  ஸ்கெப்டிக் என்குயரி கமிட்டியின் காலாண்டு செய்திப் பத்திரிகைக்காக உண்மை நிலையைச் சோதித்துப் பார்த்தல் என்னும் ஒரு தொடர் கட்டுரையை 1998 முதல் 2011 வரை ஸ்டெஞ்சர் எழுதியுள்ளார்.

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *