ஒரு புரட்சி இயக்கத்தின் வரலாறு

மே 16-31 - 2014

நூல்: திராவிடர் கழகம் கட்சி அல்ல; ஒரு புரட்சி இயக்கமே!
ஆசிரியர்: சு.அறிவுக்கரசு
வெளியீடு: விழிகள் பதிப்பகம்,
8/எம் 139, 7ஆம் குறுக்குத் தெரு,
திருவள்ளுவர் நகர்,
திருவான்மியூர் விரிவு, சென்னை-_41.
பக்கங்கள்:    256
விலை:    ரூ.160

இருபதாம் நூற்றாண்டில், பத்திரிகைகள் வலிமையும் கூர்மையும் வாய்ந்தனவாக வளர்ந்தன. இதில் பார்ப்பனர்கள் தொடக்கம் முதலே புகுந்து கொண்டு தமதாக்கிக் கொண்டனர். சைவம், வைணவம் முதலிய ஷண்மதங்களைப் (ஆறு மதங்கள்) பிரிவுகளாகக் கொண்டிருந்தவர்கள் ஹிந்து என்ற பெயரால் ஆங்கிலேய அதிகாரிகளால் 1801இல் குறிக்கப்பட்டனர். அதையே இவர்களின் மதப் பெயராக்கிக் கொண்டனர். தி ஹிந்து என்ற பெயரிலேயே பார்ப்பனர் ஒருவர் பத்திரிகையைத் தொடங்கி இன்றளவும் நடத்தி வருகிறார். இந்த வலிமையான பத்திரிகை ஆயுதத்தின் துணைகொண்டு, பார்ப்பனர் அல்லாதாரைத் தொடர்ந்து அடிமையாக வைத்திருக்கும் அவலம் நீடித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஆரிய ஆட்சி என்ற நூல் (Havell) ஹாவல் என்பவரால் எழுதப்பட்டது. மதச் சடங்குகளைச் செய்விக்கும் புரோகிதத் தொழிலில் பார்ப்பனர்கள் ஏகபோக உரிமை பெற்றனர். இதனால் சுரண்டிப் பிழைக்கவும் ஆபாசமான, காட்டு விலங்காண்டித்தனமான மூடநம்பிக்கைகளைப் பரப்பிடவும் முடிந்தது. மந்திரம் எல்லாவற்றையும் சாதிக்கும், போரில் வெற்றியோ தோல்வியோ மந்திர உச்சாடனத்தால் கிட்டும். தினப்படி நடக்கும் செயல்களிலும்கூட மந்திரத்தால் பலன் உண்டு என்றெல்லாம் பிரச்சாரம் செய்தனர் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். உலகம் கடவுளால், கடவுள் மந்திரத்தால், மந்த்ரம் பார்ப்பனர்களால். எனவே பார்ப்பனர்களே கடவுள் எனத் தகுதிபெற்றவர் என்ற பொருளில் தெய்வாதீனம் ஜெகத் சர்வம் மந்த்ராதீனம்…. எனும் பார்ப்பனரின் பாடல் வரிகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இவர்கள் ஏர் உழுது வேளாண் தொழிலில் ஈடுபடுவது, தாழ்வு என்கிறார்கள். ஆனால், சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம். அதனால் உழந்தும், உழவே தலை என்பது பார்ப்பனர் அல்லாதார் கொள்கை. 1921இல் தஞ்சை மாவட்டத்தில் உழவுத் தொழில் செய்த இரு பார்ப்பனர்களை ஜாதிப் பிரஷ்டம் செய்தவர் ஸ்மார்த்தப் பார்ப்பன மடத்தலைவர் கும்பகோணம் (காஞ்சி) மடாதிபதி சங்கராச்சாரியாரான சாமிநாதன் எனும் சந்திரசேகரேந்திரன்.

மானத்தை விட்டுக்கூட உயிர்வாழலாம் என்கிறது ஆரிய ஸ்மிருதி. ஆனால் மானம் ஒன்றே பிரதானம் என்று வாழ்ந்தவர் தமிழர். ஏற்பது இகழ்ச்சி எனப் பிச்சை பெறுதலை இகழ்ந்தனர் தமிழர். ஆனால் உஞ்சவிருத்தி எனும் பெயரில் பிச்சை எடுத்து வாழ்வதுதான் ஆரிய தருமம். பார்ப்பனரைத் தமிழர்கள் தவறாகக் கருதிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் கடவுள் சிவனைப் பிட்சாடனர் என்றே அழைத்தனர். பிச்சாண்டி என இதனைத் தமிழர் அழைக்கச் செய்துவிட்டனர்.

மேற்குநாட்டு ஆசிரியர்கள் சிலரின் துணைகொண்டு, ஆரியர்கள் அழகான, உயரமானவர்கள் என ஜெர்மனி நாட்டவரின் உதவியால் எழுதச் செய்தனர். இட்லர் காலத்தில் ஆரிய இனமே உயர்ந்தது எனவும் ஆளப்பிறந்த இனம் எனும் தற்பெருமை கொடிகட்டிப் பறந்தது. பிரான்சு நாட்டு ஆல்பின் இனத்தார் மூலமே ஆரிய இனம் அதன் மொழியும் நாகரிகமும் அய்ரோப்பாவில் பரவியது என பிரெஞ்ச் ஆசிரியர்கள் தற்பெருமை கொண்டாடினர். அய்ரோப்பாவில் ஆக்கிரமித்து நுழைந்த ஆரியர் காட்டு விலங்காண்டிகள் என்பது இத்தாலிய ஆசிரியர் செர்ஜி என்பார் கருத்து. எப்படியோ உயர்வு கற்பித்துக் கொண்ட ஆரியர் தம் அடிபணிந்து அவர்களின் ஆச்சாரங்களையும் விழாக்களையும் மதக் கொள்கைகளையும் பின்பற்றுவதாலும் ஆரியர் ஆதிக்கத்திற்குட்பட்ட கோயில்களுக்குப் பக்தியின் பெயரால் செல்வத்தை விரயம் செய்வதாலும் ஆரியர் ஆதிக்கம் வலுப்பெற்றது. திராவிடர் நிலை சிறுமையடைந்தது.

பார்ப்பனரை வெண்பாவால் பாடவேண்டுமாம். வெண்பா எனும் ஒண்பா இதன் சிறப்பை எடுத்துக்காட்டும். அதற்கு அடுத்த ஆசிரியப்பா அரசர்க்காம், கலிப்பா என்பது வணிகர்க்காம். சூத்திரர்க்கோ வஞ்சிப்பாவாம்! பாக்களைக் கலந்து கலம்பகம் பாடும்போது கடவுளுக்கு 100 பார்ப்பனருக்கு 95 அரசர்க்கு 90 அமைச்சருக்கு 70 வணிகருக்கு 50 உழைப்போராக இருக்கும் வெகு மக்களுக்கு 30 என்று விதித்திருக்கும் கொடுமை! ஆரியரின் மொழியல்லாத தமிழில் தமிழர் பாட்டு இயற்றுவதற்குப் பார்ப்பான் பண்ணையம் என்றால், என்ன கொடுமை! இதைக் கண்டித்தனரா புலவர் எனப்படுவோர்? பக்தியின் பெயரால், எதிர்ப்பது தெய்வ குற்றம் எனக் கூறி விட்டனர். ஆரியரும் தெய்வங்கள்தானே! எனவே எதிர்க்கத் துணிவில்லை!

பெரியார் ஒருவர்தான் எதிர்த்தார்! ஒரு கவிஞன் பாடியதுபோல அவர்தான் நாதியிலார் நாதிபெற நாப்படைத்தார்/நாற்பது கோடி மக்களுக்குமாய் உழைத்தார்! தமிழர்நிலை உயர்வை நோக்கிச் சென்றது. தமிழர்களின் நிலை, உயர்வுகளை நோக்கிச் சென்றிடத் தந்தை பெரியாரின் அரசியல் நிலைப்பாடுகள் உதவின. தமிழர் உயர்ந்தனர்.

இருபதாம் நூற்றாண்டில், ஆங்கில அரசின் கீழும் பின்னர் பிற்பகுதியில் வடவர் அரசின் கீழும் தமிழ்நாடு ஆளப்பட்ட காலகட்டங்களில் 1920 முதல் தமிழ்ச் சமுதாயம் அடைந்த உயர்வுகள் எண்ணிலடங்கா. அவை நிகழ்வதற்கு நேரிடையாகவும் பின்புலமாகவும் இருந்துசெயல்பட்டு கிரியா ஊக்கியாகச் செயல்பட்டவர் பெரியார்.

நாடகக் கொட்டகையில் கட்டணம் செலுத்தி நாடகம் பார்க்கப் பஞ்சமர்கள் எனப்பட்ட தாழ்த்தப்பட்ட சகோதரர்க்கு அனுமதி கிடையாது என விளம்பர நோட்டீசிலேயே அச்சிட்டு விளம்பரம் செய்த நிலை 1900ஆம் ஆண்டுவரை இருந்ததை மாற்றியது பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்.

மறவரும் வன்னியரும் 16 வயது வந்து விட்டால் காவல் நிலையத்தில் தினம்தினம் கையெழுத்திட வேண்டும் என்ற நிலையில் குற்றச் சமூகமாகக் கருதப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டதை ஒழித்ததும் முதன்முதலில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவரை அமைச்சராக்கியதும் நீதிக்கட்சிதான்.

தாழ்த்தப்பட்டோரின் நலனுக்காவும் மேம்பாட்டுக்காகவும் தனித்துறையை (லேபர் துறை) உருவாக்கி அமைச்சர் ஒருவரின் பொறுப்பில் வைத்ததும் நீதிக்கட்சிதான். இது இந்தியாவில் சென்னை மாகாணத்தில்தான் முதன்முதல் செய்யப்பட்டது.

பஞ்சமருக்குப் பேருந்தில் இடம் இல்லை என்று பயணச் சீட்டிலேயே அச்சிட்டிருந்த அவலத்தை 1935இல் ஒழித்து ஆணையிட்டவர் சுயமரியாதை இயக்கத் தலைவராகவும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக் குழுத்தலைவராகவும் இருந்த ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் என்பதும் வரலாறு.

பார்ப்பனர் வீடுகளில் கழிப்பறையைச் சுத்தம் செய்திட சூத்திரர்கள் பஞ்சமர்களுக்குப் பதில் நியமிக்கப்பட வேண்டும் என்று கும்பகோணம் பார்ப்பனர்கள் முயற்சிசெய்த திமிர்கொண்ட நிலைகூட இருந்ததே! புரதவண்ணார் ஜாதியினர் நெல்லை மாவட்டத்தில் பகலில் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்ற நிலை 1932ஆம் ஆண்டு வரை இருந்தது. ஒழிக்கப்பட்டதே நீதிக்கட்சியின் நிருவாகத்தில்தான்!

பகத்சிங் 1931இல் தூக்கிலிடப்பட்டபோது கண்டித்து அறிக்கை வெளியிட்டவர் பெரியார் மட்டுமே! காந்தியாரும் காங்கிரசும் வாயே திறக்காமல் அஞ்சிக் கிடந்தபோது பகத்சிங்கின் செயல்முறையை வெளிப்படையாக ஆதரித்து அறிவித்த அஞ்சாத நெஞ்சினர் பெரியார் ஆவார்.

இன்றைய அரசுப் பணியாளர் தேர்வாணையம்போல 1922ஆம் ஆண்டிலேயே ஸ்டாஃப் செலக்ஷன் போர்டு ஏற்படுத்தி, பார்ப்பனர் அல்லாதார் எல்லாப் பதவிகளிலும் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது நீதிக்கட்சி ஆட்சிதான்.

இப்படி எத்தனையோ!

அத்தனைக்கும் காரணமானவர் தந்தை பெரியார்!

ஆனால் அவருக்கான இடத்தை இந்த நாடும் பார்ப்பனர்களின் ஏடுகளும் வழங்கி முன்வரவில்லையே, ஏன்?

2,840 வளமான சதுர்வேதி மங்கலங்களைத் தானமாகப் பெற்று, விதைக்காது விளையும் கழனிகளான ஆரியம் கொட்டம் அடித்த கொடுமதியாளரின் நச்சுக் கொடுக்கை நறுக்கியவர் பெரியார்; அவரது சுயமரியாதை இயக்கம்; அவர் ஆதரித்த நீதிக்கட்சியின் நிருவாகம்! அதனால் ஏற்பட்ட அழுக்காறு காரணம்!

திருவாங்கூர் மகாராணி நன்கொடையாக அளித்த (1942இல்) ஓர் இலட்ச ரூபாயை சமக்கிருத மொழி வளர்ச்சிக்குச் செலவிடக்கூடாது எனப் போராடி மாணவர் விடுதி வளர்ச்சிக்குச் செலவு செய்ய வைத்ததன் வாயிலாகப் பெரியாரின் வடமொழி எதிர்ப்பு விளங்கும்.

1950இல் இந்திய ரூபாய் நாணயங்களிலும் கரன்சி நோட்டுகளிலும் இந்தி மொழி மட்டுமே அச்சிடப்பட்டிருந்ததை எதிர்த்துப் போராடி அகற்றச் செய்தவர் பெரியார். இந்தியை எதிர்ப்போரைச் சுட்டுத்தள்ள வேண்டும் என்று பார்ப்பன சத்தியமூர்த்தி பேசியபோதும் 1937இல் கட்டாய இந்தியை எதிர்த்து வென்று தமிழ்மொழி காத்தவர் பெரியார்.

சென்னையில் TNCC அலுவலகமாகிய தேனாம்பேட்டை காங்கிரசு மைதானத்தில் வ.உ.சிதம்பரனார் சிலை வைக்க முயன்றபோது பார்ப்பனரல்லாத தலைவரின் சிலையை வைக்கக்கூடாது என எதிர்த்தவர் இதே சத்தியமூர்த்தி அய்யர். பார்ப்பனர் ஆதிக்கத்தில் இருந்த காங்கிரசுக் கட்சியைப் பார்ப்பனர் அல்லாதார் கைப்பற்றிக் கொண்டு வந்திட உழைத்தவர் பெரியார்.

1925இல் காங்கிரசில் இருந்துகொண்டே, நீதிக்கட்சியின் அரசு கொண்டுவந்த இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரித்தவர் பெரியார். இது கட்சி எதிர்ப்புச் செயலா? 1927இல் காந்தியார் சிதம்பரத்திற்கு வந்தபோது, தாழ்த்தப்பட்டோருடன் நடராசன் கோயில் உள்ளே நுழைந்து விடுவார் எனப் பார்ப்பனர்கள் கோயிலின் நான்கு கதவுகளையும் மூடிவிட்டனர். நான்கு தேரோடும் வீதிகளிலும் பழைய செருப்புகளைத் தோரணமாகக் கட்டி அவரை அவமதித்தனர். அந்த நிலையில் 1927 முதல் திருச்சி, திருவண்ணாமலை, ஈரோடு போன்ற முக்கிய ஊர்களில் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியவர் பெரியார்.

தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டித் தலைவர் பதவி வகித்த நிலையிலும் கேரளாவில் -_ வைக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் தெருவில் நடக்கும் உரிமைக்காகப் போராடி, சிறை சென்று வெற்றி பெற்று வைக்கம் வீரர் எனப் பாராட்டப் பெற்றவர் பெரியார். இருந்தும்கூட அந்நிகழ்ச்சி பற்றிய வரலாற்றுக் குறிப்பில் அவர் பெயரைக் குறிப்பிடாமல் விட்டது காங்கிரசுக் கட்சியும் காந்தியாரும்! இதுதான் காங்கிரசின் கலாச்சாரம்!

1952 முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசை எதிர்த்துத் தோற்கடித்தவர் பெரியார். காங்கிரசு முதல் அமைச்சராக வந்த இராஜாஜி அரிசிக்கான 6 அவுன்சு ரேஷன் முறையை நீக்கினார். கைத்தறி நெசவாளர்களுக்கு நிவாரணம் தர சட்டம் இயற்றினார். உழவர்களின் பாதுகாப்புக்குச் சட்டங்கள் இயற்றினார் என்கிற நிலையில் அவரைப் பெரியார் ஆதரித்தார். ஆனால் அவரவர் ஜாதித் தொழிலை மட்டுமே செய்ய வேண்டுமே தவிர அரசுப் பணிக்கு ஆசைப்படக் கூடாது என்று 1952இல் பேசிய ஆச்சாரியார் பாதி நேரம் மட்டுமே படிப்பு, பாதி நேரம் அவரவர் ஜாதித் தொழில் கற்க வேண்டும் என்கிற கல்வித் திட்டத்தையே கொண்டு வந்தார். பெரியார் அதனை எதிர்த்துப் பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராகட்டும்; குறித்த நாளில் பார்ப்பனர் குடியிருப்புகளைக் கொளுத்துவோம். பார்ப்பனர்களைக் கத்தியால் குத்துவோம் என்ற போராட்ட அறிவிப்பை வெளியிட்டார். கால்நடைப் பிரச்சாரப் படையை அமைத்து நாடெங்கும் பிரச்சாரம் செய்து சென்னைக்குப் படை வந்து சேர்ந்த நாளில் ஆச்சாரியார் ராஜிநாமா செய்தார் என்பது வரலாறு.

பெரியார் நிலை மாறினாரா?

தமிழர் நிலையை மாற்றினாரா?

ஆச்சாரியாரை வீட்டுக்கனுப்பி காமராஜரை முதல்வராகக் கொண்டு வந்து குலக்கல்வித் திட்டத்தினை நீக்கினார். பெரியார் காமராசரை ஆதரித்தார். ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆம் கூறு திருத்தப்பட வேண்டும் என்கிற பெரியாரின் கோரிக்கையை நேருவும் காமராசரும் ஏற்காத நிலையில், பெரியார் சட்ட எரிப்புப் போராட்டத்தை அறிவித்தார். இது குற்றம் என எந்தச் சட்டமும் இல்லாத நிலையில், புதிய சட்டம் கொண்டுவந்து திராவிடர் கழகத்தவர் 3000 பேருக்குமேல் சிறைத் தண்டனை கொடுத்தது காமராஜ் ஆட்சி என்றாலும், கல்விக்கும் பதவி வாய்ப்புகளிலும் தமிழர் இனத்திற்குக் காமராசர் ஆட்சி செய்த நன்மைகளின் காரணமாக அவர் ஆட்சியை ஆதரித்தார்.

காமராசருக்குப் பின் முதல்வராக வந்த பக்தவத்சலம் ஆட்சியின் தமிழர் விரோத நடவடிக்கைகளினால் அவரை எதிர்த்தார் பெரியார். விடுதலை நாளேட்டைப் படித்தது குற்றம் எனக் கூறி மாஜிஸ்திரேட் ஒருவரை 1965இல் பணியிலிருந்து இடைநீக்கம் செய்தவர் இந்த பக்தவத்சலம். பெயருக்கு முன்னால் ஸ்ரீ என்றுதான் போடவேண்டும். திரு என்று எழுதக்கூடாது என்று வாதாடி ஆச்சாரியாருக்கு ஆதரவாக நின்றவர் இவர் ஒருவரே என்பது இவரது துரோக வரலாற்றின் மற்றொரு படலம். இந்தத் துரோகம் துடைக்கப்பட்டது அறிஞர் அண்ணாவின் ஆட்சியில் 1967இல்! பெரியார் நிலை மாறினாரா? தமிழர் நிலையை மாற்றினாரா?

1942இல் சென்னை மாநில முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வெள்ளைக்கார கவர்னரும் வைசிராயும் கேட்டுக் கொண்டபோதும் பதவிக்கு வர மறுத்தவர் பெரியார்! நீங்கள் முதல் அமைச்சராக வாருங்கள், நானும் வேண்டுமானாலும் மந்திரியாக இருந்து உங்களுக்கு உதவுகிறேன் என்று இராஜாஜி கூறியபோதும் மறுத்தவர் பெரியார்! ஒரேநாளில் 29 பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டுப் பொது வாழ்க்கையில் நுழைந்தவர் பெரியார்! பதவியை நாடாதவர். பதவியை நாடாமல், பதவியில் இருப்பவர்களிடம் வேலை வாங்கித் தம் இனத்தின் நிலையை உயர்த்திட உழைத்தவர் பெரியார்! தம் இயக்கத்தவரும் பதவியை நாடக்கூடாது என 1940இல் திருவாரூரில் நீதிக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிக் கடைப்பிடிக்கச் செய்தவர் பெரியார்! பொது வாழ்க்கையில் எந்தக் கொள்கைகளுக்காக 1917இல் நுழைந்தாரோ அந்தக் கொள்கைகளைக் (Principles) கடைசி வரையில் கைவிடாமல் உழைத்தவர், கழகத்தவரை உழைக்கச் செய்தவர் பெரியார்!

அந்தக் கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தமது நடைமுறைகளை, அணுகுமுறைகளை, செயல் திட்டங்களைச் (Policies) சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்துப் போராடியவர் பெரியார். அன்றைய தமிழ்ச் சமூகத்தின் நிலையை உயர்த்திட இந்தத் தந்திர உபாயங்களைக் கையாண்டார். சமூக நீதிக்காக _ பார்ப்பனர் அல்லாதார் சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்காக அவர்தம் செயல்முறைகள் மாற்றப்பட்டனவே தவிர _ உயர்வுகளை நோக்கிப் பார்ப்பனர் அல்லாத திராவிடர்களை அழைத்துச் செல்வதற்காக மாற்றினாரே தவிர _ அவர் மாறவே இல்லை!

நாதியிலார் நாதிபெற நாப்படைத்தார். நாற்பது கோடி மக்களுக்குமாய் உழைத்தார். பிறக்கும்போதே பெரியராய்த்தான் பிறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *