– தந்தை பெரியார்
இன்றைக்கும் பார்ப்பனர்களும், வைதிகர்கள் என்ற காட்டுமிராண்டிகளும், பார்ப்பனப் பக்தர்களும் மற்றும் அக்கிரகாரம் பொறுக்கும் அன்னக்காவடிகளும் பகுத்தறிவாளர்களுக்கு ஒரு நல்ல பெயர் இட்டு அழைக்கின்றனர். அதுதான் நாஸ்திகன் என்று கூறப்படுவதாகும். பகுத்தறிவைக் கொண்டு ஆராய்வதற்கு நாஸ்திகம் என்றும், ஆராய்ச்சி செய்பவனுக்கு நாஸ்திகன் என்றும் பெயரிட்டு அழைக்கப்படுகிறது. பகுத்தறிவு என்றாலே நாஸ்திகம் என்றுதான் பொருள். நாஸ்திகம் பகுத்தறிவு இரண்டும் ஒன்றேயாகும்.
அதாவது மதம், சாஸ்திரம், புராணம் இவை என்னென்ன சொல்லி இருப்பதாகக் கூறப்படுகிறதோ, அவற்றை அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து நல்லது, கெட்டது உணர்வதற்குத்தான் நாஸ்திகம் என்று பெயர். மற்றவர்கள் சொன்னதைக் கொண்டு ஒரு முடிவுக்கு வராமல், தன் சொந்தப் புத்தியை உபயோகித்து, ஆராய்ந்து பார்த்து, அதன்மூலம் ஒரு முடிவுக்கு வருவதுதான் நாஸ்திகத்தின் நோக்கமாகும்.
இவ்விதம்தான் வடமொழி அகராதியிலும் நன்றாகத் தெளிவாக எழுதியிருக்கிறது.
ஆனால், இங்குள்ள பார்ப்பனர்கள் உண்டாக்கிய அகராதியைப் பார்த்தால், நாஸ்திகம் என்றால் கடவுள் இல்லை என்று எழுதி இருக்கும். இதன்மூலம் அகராதி எழுதுபவன் எல்லாம் அறிவாளி இல்லை என்பதை உணர்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது.
ஒருவன் அகராதி எழுதிவிட்டானாகில் அவன் அறிவாளி என்று கூற முடியுமா? அவனுக்குத் தெரிந்ததைக் கொண்டு அகராதியில் எழுதி இருப்பான். அவனுடைய மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதை விளம்பரம் செய்ய அகராதியின் மூலம் முயற்சிக்கிறான். அவனுக்குக் கடவுள், மதம் இவற்றின் மேல் எவ்வளவு தூரம் நம்பிக்கை உண்டோ, அதைப் பொறுத்தது அகராதியில் காணப்படும் பொருள்கள். அவன் எழுதுகிற காலத்தில் எவற்றிற்குச் செல்வாக்கு உள்ளதோ, அவற்றை அடிப்படையாகக் கொண்டு அவற்றிற்கேற்ற வண்ணம் பொருள் எழுதி இருப்பான்.
இப்படியே அந்தந்தக் காலத்தில் எவற்றிற்கு செல்வாக்கு உண்டோ அவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதியவைகளில் கை வைக்காதே, ஆராய்ந்து பார்க்காதே. அப்படியே நம்பு; இல்லையேல் நீ நாஸ்திகன் என்று கூறினால் எவ்வளவு அயோக்கியத்தனம் என்பதை ஒருவரும் உணருவதில்லை.
ஏன் இன்றைக்குத்தான் எத்தனையோ கலைஞர்களும், புலவர்களும், நாவலர்களும், பாவலர்களும் நாளுக்கு நாள் புதிது புதிதாக முளைக்கிறார்களே, அவர்களுக்கெல்லாம் திடீரென்று ஞானம் பிறந்து எல்லா விஷயங்களையும் உணர்ந்து உலக அனுபவமும், ஆராய்ச்சியும் அடைந்தவர்கள் என்று கூற முடியுமா? எனவே, இப்படித்தானே அப்போதும் இருந்திருக்க வேண்டும்? அவர்கள் மூடர்கள் எழுதியவற்றில் கை வைக்காதே, ஆராய்ந்து பார்க்காதே என்று கூறுகிறார்கள்.
மேலும் நாஸ்திகம் என்பதை இன்னமும் ஆராய்ந்து பார்த்தால் அது நமக்கு உரியதே இல்லை. முதலில் நாஸ்திகம் என்ற சொல் தமிழ்ச் சொல் அல்ல; அது வடசொல்.
பொதுவாக நம் மொழியில் கடவுள் உண்டு, கடவுள் இல்லை என்பதற்குத் தனியான ஒரு சொல்லே கிடையாது. நானும் எத்தனையோ புலவர்களுடன் பழகி இருக்கிறேன். பல புலவர்கள் எழுதிய நூல்களைப் படித்திருக்கிறேன்
. தமிழ் நாகரிகம் பொதிந்த பண்டைய இலக்கியங்களை ஆராய்ந்திருக்கிறேன். அவற்றின் ஒன்றின் மூலம் கூட கடவுள் இல்லை என்பதற்கு ஒரு சொல் தமிழ் மொழியில் இருப்பதாகக் கிடைக்கவே இல்லை. இன்றைக்கு யாரும் எந்தப் புலவர்களாலும் தமிழில் கடவுள் இல்லை என்பதற்கு ஒரே சொல் இருக்குமானால் கூறட்டும். ஏதோ நிரீச்சுரவாதம் என்று மற்றொரு வார்த்தை கூறுகிறார்கள். இந்த வார்த்தையும் பச்சைப் பார்ப்பன (வட) மொழி. இதை அன்றி, தமிழ் மொழியில் சொல் கிடையாது.
அன்றியும், தமிழ் மொழியில் கடவுள் இல்லை என்பதற்கு ஒரு சொல் தேவையே இல்லை. அப்படி தேவைப்பட்டிருக்குமானால், முன்பே ஏற்பட்டிருக்கலாம். எவ்வளவோ தமிழ் இலக்கியங்களும், தமிழில் பெரும் புலவர்களும் இருந்திருக்க இதற்கு ஒரு வார்த்தை ஏற்படுத்த முடியாமலா போய்விட்டது? இதற்கு அவசியமே இல்லை. அதனால் ஏற்படுத்தவில்லை. ஏனெனில், நமக்குக் கடவுள் என்பது என்றே கிடையாது. அப்படியிருக்க, கடவுள் உண்டு _- இல்லை என்ற பிரச்சினையும் தேவையில்லை. அதனால் இதற்கு வார்த்தையும் தேவை இல்லாது போய்விட்டது.
பார்ப்பனர்கள் வந்த பிறகுதான் இத்தொல்லையெல்லாம் நமக்கு விளைந்தது. கடவுளையும், மதத்தையும் உண்டாக்கி இதுவரை நம்மை முட்டாள்களாக்கி வந்தனர். ஆனால், அவை என்றாவது ஒருநாள் வெளியாகும் காலம் வந்துதானே தீரும். கடவுள், மதம், சாஸ்திர, புராணம் இவற்றின் சூழ்ச்சிகள் வெளிப்பட்டவுடன் அவை அத்தனையும் ஒழிக்க வேண்டும் என்ற பிரச்சினை ஏற்பட்டது. அதை அடக்குவதற்குத்தான் நாஸ்திகம் என்ற சொல்லை ஏற்படுத்தும் அவசியம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அப்படி நாஸ்திகம் என்ற சொல் முதன் முதலில் ஏற்படுத்தியவர்கள் அதற்கு, கடவுள் இல்லை என்ற பொருளைப் புகுத்தவில்லை.
மேலே கூறியபடி, நாஸ்திகம் என்றால் மதம், கடவுள், சாஸ்திர -_ புராணங்களைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்வதற்கு நாஸ்திகம் என்று கூறி இருக்கிறார். அதைப் பார்ப்பனர்கள் தங்கள் கை ஆயுதமாக அமைத்துக் கொண்டு அதற்கு கடவுள் இல்லை என்ற பொருளைப் புகுத்தி விட்டனர். இதற்கு நேர்மாறானது ஆஸ்திகம் என்பது. ஆஸ்திகன் என்றால் நாஸ்திகனுடைய பண்புக்கும், குணத்திற்கும் நேர் மாறானவன். அதாவது கடவுள், மதம், புராணம், சாஸ்திரம் இவற்றில் சொல்லப்படுகின்றவைகளை அப்படியே நம்புகிறவன் _- சொந்தப் புத்தியில்லாதவன். எப்படி நாஸ்திகன் (பகுத்தறிவாளி) முன்பாக எதையும் எதிர்க்கவோ, மறுக்கவோ முடியாதோ, அதற்கு நேர்மாறாக ஆஸ்திகனிடத்தில் அறிவுக்குப் பொருத்தமற்றவைகள்தான் மலிந்து கிடக்கும். பகுத்தறிவுக்கு நிற்காதவைகள் அத்தனையும் கொண்டவன்தான் ஆஸ்திகன்.
ஆஸ்திகம் என்பது எடைக்கும் நிற்காது; உரைக்கும் நிற்காது; வெறும் காற்று. அதன் அர்த்தமற்ற கருத்துகள் அத்தனையும் பகுத்தறிவின் முன் நிற்காது -_ பறந்து விடும். ஆனால், அப்படிப்பட்ட குணம் கொண்டவனுக்குத்தான் மதிப்புக் கொடுக்கப்படுகிறது.
இப்படிப்பட்டவர்கள் நம்நாட்டு மக்களின் அறிவைப் பாழ்படுத்தி விட்டனர். நாட்டு மக்கள் முன்னேற வழியின்றி செய்துவிட்டனர். போதிய அளவு அறிவு வளர்ச்சியடைய முடியாது எல்லாத் துறைகளிலும் பற்பல முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி விட்டனர்.
நமக்குப் பகுத்தறிவு உள்ளதென்றால் ஒரு சில வழிகளில் அதை உபயோகப்படுத்துகிறோமே தவிர, போதிய அளவு பயன்படுத்துவதில்லை. சாப்பிடுகிறோம், படிக்கிறோம். விளையாடுகிறோம்; இவைகளிலெல்லாம் பகுத்தறிவை உபயோகித்து நல்லது கெட்டது உணர்ந்து நடக்கிறோம். ஆனால், முக்கியமாக மனித முன்னேற்றத்திற்கு எவை தேவையோ அவற்றில் பகுத்தறிவை உபயோகப்படுத்துவதில்லை. மனிதன் நாகரிகமுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையானவற்றில் அறிவைத் தடையின்றி உபயோகிக்க உரிமை இல்லாது செய்துவிட்டனர். சில காரியங்களில் சிந்திக்கலாம்; சிலவற்றில் சிந்திக்கக் கூடாது என்ற நிபந்தனையை ஏற்படுத்திவிட்டனர்.
(23.11.1955 அன்று மதுரை தியாகராயர் கல்லூரியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரையிலிருந்து… -விடுதலை 30.11.1955)