இன்னும்-எத்தனை-காலம்தான்-ஏமாற்றுவார்
மாசி – சித்திரை திருவிழா இரகசியங்கள்
சைவ மீனாட்சி-வைணவ கள்ளழகர் ஏமாறும் மக்கள்
தமிழகத்தில் சங்க காலத்தின் இறுதியில் வேதமதம் புகுந்ததை சங்கப்பாடல்கள் பலவற்றின் மூலம் அறியலாம். சங்ககாலத்தின் இறுதியில் வாழ்ந்த வள்ளுவனின் குறளில் கூட வேத மதத் தாக்கம் மேலோட்டமாகக் காணப்படும். ஆனால், இவ்வேத மதம் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் விழாக்களில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரவில்லை.
இயற்கையோடு இணைந்த தமிழர் விழாக்கள்
பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு கலாச்சார மாற்றங்களைக் கண்டபோதும் தமிழர்களின் வாழ்வியலுடன் கூடிய விழாக்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சைவம் காலூன்றிய 6-ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தின் வாழ்வியலுடன் கூடிய விழாக்கள் சைவ சமய விழாவாக மாற்றம் கண்டதே தவிர தொன்று தொட்டு வந்த விழா மரபுகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.
இதற்கு முக்கியக் காரணம், அதிகாரத்தில் உள்ள பாண்டிய, சோழ, சேர மன்னர்கள் தங்களின் சமயம் சார்ந்த வாழ்வியலை மாற்றினார்களே தவிர மரபுவழி விழாக்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. 12-ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் வீழ்ச்சியின் காரணமாக பாண்டியர்களின் ஆளுமை கிழக்குத் தமிழகத்தில் பரவியது. விளைவு, பரந்துவிரிந்த நிலப்பரப்பில் பல எதிரிகள் உள்ளுக்குள்ளேயே தோன்றி பாண்டியருக்குத் தலைவலியாக மாறத் தொடங்கினர்.
அந்நியரின் ஆதிக்கமும் கலாச்சார மாற்றமும்
இதே காலகட்டத்தில் சேரப்பேரரசின் ஆளுமைக்கு உட்பட்ட கொங்கணப்பகுதிகள் சாளுக்கியர்களின் கைவசம் செல்லத் தொடங்கின. விளைவு, சேரப்பேரரசும் மெல்ல மெல்ல தங்கள் பலம் இழந்தது. சேரநாட்டின் உட்பகுதி வரை துளுவ, கொங்கண, ராஷ்டிரகூடத்தாரின் நுழைவால் தமிழ் மொழி மாற்றம் கண்டு மலையாளமாகத் திரிந்தது. தொடர்ந்து வந்த காலகட்டத்தில் மூன்று பேரரசுகளும் அழியத் தொடங்கின.
புதிய எதிரி
அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் கபூர் என்பவர் தெற்கில் உள்ள ஆட்சியாளர்களுக்குப் புதிய எதிரியாகி பெரும் தலைவலியாக மாறினார். இவர் பிடியில் இருந்து மதுரையைக் காப்பாற்ற கிருஷ்ண தேவராயரின் உதவியை நாடினர் பாண்டியர். இதன் காரணமாக கிருஷ்ணதேவராயரின் கீழ் வரும் ராஜ்யத்தில் ஒன்றாக மதுரை மாறியது. விஜயநகரத்துப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தளபதி, மண்டலாதிபதி போன்ற பொறுப்புகளை வகித்தவர் நாகம நாயக்கர். இவருடைய மகன் விசுவநாத நாயக்கர். கிருஷ்ண தேவராயரிடம் பணிக்குச் சேர்ந்த விசுவநாத நாயக்கர் பேரரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார் . விஜயநகரப் பேரரசின் கீழிருந்த பாண்டிய மண்டலத்தில் குழப்பங்கள் தலைதூக்கின. அதனை அடக்குவதற்காக விசுவநாத நாயக்கர் படையுடன் அனுப்பிவைக்கப்பட்டார். எடுத்த பொறுப்பைச் செவ்வனே முடித்த விசுவநாத நாயக்கர், மதுரை மண்டலத்தின் நிர்வாகியாக அமர்த்தப்பட்டார். இவருடைய பரம்பரையினரே மதுரை நாயக்க மன்னர்கள் என அழைக்கப்பட்டவர்கள்.
இதுவரை அந்நியர்கள் நிரந்தரமாக நுழையாத தமிழகமண்ணில் நாயக்கர்களின் ஆட்சி இப்படியாக நிரந்தரமானது. நாயக்கர்கள் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதியையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தனர். இந்த நிலையில் 1600-களில் விஜயநகரம் வலுவிழக்கத் தொடங்கியது. மதுரையில் பலம்வாய்ந்த நாயக்க மன்னர்கள் விஜயநகரத்தின் கீழ் இயங்குவதை விட்டு தன்னிச்சையான நாயக்கப் பேரரசு என்று முத்துவீரப்ப நாயக்கர் அறிவித்தார்.
இதுதான் தமிழர்களின் வாழ்வியலில் பெரியமாற்றம் கொண்டுவர முக்கியக் காரணியாக விளங்கியது. 7ஆம் நூற்றாண்டில் இருந்து 11-ஆம் நூற்றாண்டு வரை வலுவாக இருந்த சைவம், வைணவத்தை மதுரைக்குத் தெற்கே வரவிடாமல் தடுத்து வைத்திருந்தது.
வைணவ மதம் சார்ந்தவர்களான நாயக்கர்கள் வைணவத்தைப் போற்றியவர்கள். அதே வேளையில் அவர்களின் ஆளுமையில் இருந்த மதுரை பெரும்பான்மை சைவர்களால் நிரம்பி இருந்தது. மதுரை மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்று ஊகித்துக் கொண்டனர். அப்போது கட்டுக்கதைகளுக்கு எளிதில் பலியாகும் மக்களிடம் சில புரட்டுக்களைப் பரப்பாமல் வைணவத்தை வளர்ப்பது எளிதல்ல என்று நினைத்து சில தந்திரச் செயல்களைக் கையாண்டனர். இவர்களின் இந்த ஏமாற்றுத் திட்டத்திற்கு முதல் படியாக அமைந்ததுதான் மதுரை சித்திரைத் திருவிழா.
மாசி மாதத் திருவிழா சித்திரைக்கு மாறிய கதை
இன்றுள்ள மீனாட்சி அம்மன் கோவில் சிறிய அளவில் இருந்த ஒரு வழிபாட்டுத்தலம். இதனை ஒட்டியே பாண்டிய அரண்மனையும் இருந்தது. நாயக்கர்கள் வந்த பிறகு தவிட்டுச் சந்தை மேடாக இருந்த பகுதியைச் சமப்படுத்தி தங்களுக்கு இருப்பிடம் அமைத்துக் கொண்டனர்.
பிற்காலத்தில் பாண்டியர் வசித்த அரண்மனையை முழுமையாக பெரிய கோவிலாக மாற்றிவிட்டனர். மீனாட்சி அம்மன் கோவில் நாயக்கர்களின் கைகளில் சென்றதும் பாண்டிய மன்னர்கள் வசித்த அடையாளங்கள் அழிக்கப்பட்டு, மெல்ல மெல்ல அப்பகுதி முழுமையான கோவிலாக மாற்றப்பட்டது. வரலாற்றில் இதற்குப் பல சான்றுகள் உள்ளன. அம்மன் மற்றும் சொக்கநாதர் சன்னதியுடன் இருந்த கோவில் விரிவுபடுத்தப்பட்டு கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238ஆம் ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்குக் கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும் கட்டப் பெற்றது. வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப்பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.
மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1563இ-ல் கட்டப் பெற்று 1570 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது.
திருமலை நாயக்கர் காலத்தில் கோவிலுக்கு வெளியே அரண்மனையாக இருந்த இடம் பெரிய கோவிலாக மாற்றப்பட்டதைப் பற்றி விரிவாக ஆய்வு செய்ய மதநம்பிக்கை பெரும் தடையாக இன்றும் உள்ளது. ஆகவே வரலாற்றின் பல உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியாமல் வெறும் கட்டுக்கதைகளை மட்டுமே நம்பி இருக்கவேண்டிய சூழலில் தற்போதைய தமிழகம் தள்ளிவிடப்பட்டது.
நாயக்கர்களின் வருகைக்கு முன்பு சைவத்தலமாக இருந்த மீனாட்சி அம்மன் கோவில் விழாக்கள் அனைத்தும் சமயக் குறவர்களின் வழிவந்த ஆதீனங்களின் கட்டளைப்படி நடந்து வந்தன. அதில் ஒன்றுதான் மாசி மாதத் திருவிழா.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முக்கியவிழா மாசிமாதம் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழாவிற்கு மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து அறுவடை முடிந்த பிறகு கட்டுச்சோறு கட்டிக்கொண்டு மாட்டுவண்டியிலேறியும் நடந்தும் குடும்பம் குடும்பமாக மாசி மாதத் திருவிழாவிற்கு வருகை புரிவார்கள். மாசி மாதம் மிதமான கோடைகாலம் என்பதால் நீண்டதூரப் பயணத்திற்கு உகந்த சூழல் நிலவும். அதாவது அவர்கள் கொண்டுவரும் உணவு இப்படி இயற்கையோடு இயைந்துதான் தமிழர் விழாக்கள் சிறப்புடன் அமைந்து இருக்கும்.
தை மாதம் அறுவடைக் காலமாகையால் மக்கள் செல்வச்செழிப்புடன் இருந்திருப்பர். எனவே அதனை அடுத்து வரும் மாசி மாதத்தில் ஓய்வு மற்றும் கேளிக்கை நிமித்தமாக மீனாட்சி கோவில் விழாவிற்கு வருகை புரிவார்கள். மீனாட்சி அம்மன் தேர் செல்லும் வீதிகள் தான் மாசிவீதிகள்(கிழக்குமாசி, வடக்குமாசி, தெற்குமாசி, மேற்குமாசிவீதிகள்) என்று அழைக்கப்பட்டன. இக்காலங்களில் அவர்கள் ஊர்கள் இருக்கும் திசைகளில் உள்ள வீதிகளில் தங்களுக்கென அமைக்கப்பட்ட சத்திரங்களில் இருந்து விழாக்களில் கலந்து கொள்வார்கள்.
நாயக்கர்களும் வைணவமும்
நாயக்கர்களின் ஆட்சிக்கு முன்பு சைவ, வைணவர்களின் சண்டையின் முக்கிய மய்யமாக மதுரை இருந்தது. மதுரைக்கு வடப்புறம் வைணவர்களின் ஆதிக்கமும் தென்புறம் சைவர்களின் ஆதிக்கமும் நிறைந்து இருந்தது. இந்த நிலையில் நாயக்கர்களின் ஆட்சி வந்த பிறகு சைவத்தலத்திற்கு உரிய முக்கியத்துவத்தைக் குறைக்கும் நோக்கில் வடமதுரையில் இருக்கும் வைணவத்தலங்களின் விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினர்.
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு அழகர்கோவிலைப் பிரபலமாக்க தங்களுடைய யுகாதி பண்டிகையை ஒட்டி எதிர்சேவை என்னும் அழகர் ஊர்வலத்தை உருவாக்கினார்கள். இதன்படி அழகரை மக்களிடம் அறிமுகப்படுத்தும் வகையில் ஆண்டிற்கு ஒருமுறை அழகர் மலையில் இருந்து அலங்காநல்லூர் வழியாக சோழவந்தான் தேனூர் சென்று வைகை ஆற்றில் இறங்கும் விழா முன்னெடுக்கப்பட்டது. வழியில் செல்லும் அனைத்து ஊர்களிலும் அழகருக்குச் சிறப்பு பூசைகள், வழிபாடுகள் செய்யப்பட்டன. ஆனால் வைணவக் கடவுளான அழகரை மதுரை நகருக்கு அருகில் வர சைவ மதத்தவர் கடுமையாக எதிர்த்தனர். ஆகையால் சோழவந்தான் தேனூரோடு தன்னுடைய எதிர்சேவையை முடித்து விட்டு மீண்டும் அழகர் கோவில் சென்றுவிடுவார். அழகர் கோவில் கட்டிய பதினைந்தாம் நூற்றாண்டு முதல் திருமலை நாயக்கர் காலம் வரை சுமார் நூற்றி அய்ம்பது ஆண்டுகள் மதுரை மக்களுக்கு எந்த ஒரு தொடர்புமின்றியே இருந்தது.
முன்பு கூறியது போல் மதுரை மக்கள் மாசி மாத மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். இந்த விழா மாசி மாதம் முழுவதும் நடக்கும் பெருவிழாவாக இருந்தது. மீனாட்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மக்கள் தங்களின் பரம்பரை வழிபடும் வைணவ தெய்வங்களுக்குக் கொடுக்கவில்லையே என திருமலை நாயக்கர் தன் இளம்பருவத்தில் இருந்தே நினைத்திருந்தார். எனவே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதுவரையில் சைவர்கள் ஆகிய பண்டாரங்களின் கைகளில் இருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பார்ப்பனர்கள் துணையுடன் அச்சுறுத்திப் பறித்துக் கொண்டார். திருமலை நாயக்கரின் இந்தத் திட்டத்திற்குப் பெரும் துணையாக நின்றவன் ராமப்பையன் என்ற பார்ப்பனத் தளபதியாவான்.
சோழவந்தானில் குளித்த அழகர் மதுரைக் கரைக்கு வந்ததெப்படி!
வைணவ ஆதரவாளராகிய திருமலை நாயக்கர் இராமப்பையனின் ஆலோசனையின் பேரில் வஞ்சகத் திட்டம் ஒன்றை வகுத்தார். அதனடிப்படையில் அழகர் மதுரைக்குள் வரவேண்டும். மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க, ஆற்றங்கரையில் உள்ள கருப்பண்ணசாமி என்ற குலதெய்வ கோவில்வரை அழகரைக் கொண்டு வரும் திட்டமும் தயாரிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டன.
பாய்ந்துவரும் வைகையாற்றில் இதுவரையில் சோழவந்தான் அருகில் உள்ள தேனூரில்தான் அழகர் ஆற்றில் இறங்கிக்கொண்டு இருந்தார். இனிமேல் மதுரையில் (தற்போது கோரிப்பாளையம் என்ற பகுதியில்) வைகையாற்றில் இறங்குவார். காரணம் அழகர் வேறு யாருமல்ல, மீனாட்சியின் அண்ணன்தான். மதுரையில் நடக்கவிருக்கும் தனது தங்கையின் திருமணத்திற்காக அழகர் மலையிலிருந்து வருகின்றார். வருகின்ற வழிநெடுக அவருக்குக் கிடைத்த வரவேற்பை எல்லாம் பெற்றுக்கொண்டு ஆங்காங்கே தங்கி ஓய்வெடுத்துக்கொண்டு வருகிறார்.
நகரில் மீனாட்சி சொக்கன் திருமண முகூர்த்த நேரம் நெருங்கிவிட்டது. சொக்கநாதனைத் (சிவனை) திருமணத்திற்கு வந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் தாலி கட்டச் சொல்லி அவசரப்படுத்துகின்றனர். ஆனால் மீனாட்சியோ எனது அண்ணன் அழகர் வந்து என்னுடைய கரத்தை எடுத்து சொக்கனிடம் தாரைவார்த்துக் கொடுக்கவேண்டும் என்று அடம்பிடிக்கிறாள். மீனாட்சியின் விருப்பத்தைக் கண்ட சிவபெருமான், உடனே அழகராக(விஷ்ணு) மாறுகின்றார். மீனாட்சியின் கைகளைப்பிடித்து சொக்கனிடம் கொடுக்கின்றார். அதாவது சிவனே ஒரு பக்கம் அண்ணனாகவும் இன்னொரு பக்கம் கணவராகவும் மாறி நிற்கிறார்!
(இதெல்லாம் ஆற்றின் அக்கரையில் கூப்பிடுதூரத்தில் உள்ள தல்லாகுளத்தில் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கும் கள்ளழகருக்குத் தெரியாதாம்.) மறுநாள் காலையில் தங்கை மீனாட்சி திருமணத்தை நடத்துவதற்காக தல்லாகுளத்தில் இருந்து கிளம்பி வைகை ஆற்றைக் கடப்பதற்காக ஆற்றில் இறங்குகிறார்.
இதற்காகவே திருமலை நாயக்கர் காலத்தில் தல்லாகுளத்தில் பெருமாள் கோவில் கட்டப்பட்டது. மன்னரின் அதிகாரத்தின் முன்பு மக்கள் ஒன்றும் செய்ய முடியாத காரணத்தால் அழகர் தல்லாகுளம் வரை கொண்டு வரப்படுகிறார். அதன் பிறகு கருப்பண்ணசாமி கோவில் அருகில் வைகை ஆற்றில் இறங்குகிறார். அப்பொழுதுதான் அவருக்கு மீனாட்சிக்குத் திருமணமாகிவிட்ட சேதி வருகிறது. தன்னைப்போல் உருமாறி இந்தச் சிவன் பித்தலாட்டம் செய்து தங்கையைத் திருமணம் செய்துவிட, ஆத்திரம் வந்த அழகர், அண்ணனைப் போன்று வேடமிட்டவனையே அடையாளம் தெரியாத இவளெல்லாம் ஒரு தங்கையா? என்று நினைத்து இனி இப்படி ஒரு தங்கையே தனக்குத் தேவையில்லை என வைகையாற்றில் தலைமுழுகி அப்படியே வண்டியூர் பக்கமாகப்போய், போகின்ற வழியில் கொக்கைச் சுட்டு தனது வைப்பாட்டியிடம் கொடுத்து, இரவு முழுவதும் அங்கு கூத்தடித்து மறுநாள் மாறுவேடத்தில் தல்லாகுளம் சென்றார் என்ற இந்தக் கதையினைச் சொல்லி அதுவரையில் மாசிமாதம் நடைபெற்றுக் கொண்டு இருந்த விழாவை தனது விருப்பப்படி சித்திரைக்கு மாற்றினார் திருமலை நாயக்கர். அதிகாரத்தின் காரணமாக ஏற்பட்ட மாற்றமாக இருந்தாலும் கடவுளர்கள் தொடர்பாக இருப்பதால் கேள்வி எழுப்பாமல் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கி அதனை முழுமையாக நம்பிவிட்டார்கள்.
அழகர் வரும் பாதையை பணம் வைத்திருப்பவர்களும் அதிகாரம் படைத்தவர்களும் மாற்றிவிடலாம் என்பதற்கு சமீபத்திய நிகழ்வுகளே சான்றாக உள்ளன. மூன்றுமாவடியில் கிளம்பும் அழகர் ஊர்வலத்தின் அடுத்த நிறுத்தம் தல்லாகுளம்தான். ஆனால் 1980-களில் குளங்களை அழித்து வருமானவரித்துறை அதிகாரிகளின் குடியிருப்புகள் கட்டப்பட்டன. அதன் பிறகு டி.ஆர்.ஓ காலனி மற்றும் ரிசர்வ்லைன் பகுதியில் மக்கள் தொகை அதிகமாகிவிட்டதால் அப்பகுதியில் உள்ள பிரமுகர்கள் அழகரின் பாதையைத் தங்களின் மண்டபப்படிகளுக்கு வரும்படி மாற்றினர். இதனால் அய்.டி.அய் நிறுத்தத்தில் இருந்து உள்ளே நுழைந்து டி.ஆர்.ஓ காலனி வழியாக ரிசர்வ்லைன் பகுதி கலெக்டர் பங்களா என புதிய பாதையில் அழகர் பயணிக்க ஆரம்பித்தார். வசதியும் அதிகாரமும் இருந்தால் அழகர் இழுக்கின்ற இழுப்பிற்கெல்லாம் சென்று திரும்புவார் என்பதற்கு இதுவே பெரிய எடுத்துக்காட்டாகும்.
பாழடைந்த சமணத்தலம் அழகர்கோவிலாக மாறியது
12ஆம் நூற்றாண்டில் வடக்கில் இருந்து சுல்தான்களின் படையெடுப்பு பயம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. கர்நாடகத்தில் பல கோவில்களில் சிலைகளைத் திருடிச் சென்றுவிட்டனர். திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதர் சிலை பகைவர்கள் கையில் செல்லும் அபாயம் இருந்தது. சிலைகள் இல்லை என்றால் கோவில்களுக்குள் மக்கள் வரமாட்டார்கள். எதை வைத்து பூசை புனஸ்காரம் செய்து வருவாய் பார்ப்பது என்று கருதி இந்தச் சிலைகளை எங்கே பதுக்கி வைப்பது என திகைத்திருந்த போது எண்பெருங்குன்றங்களில் ஒன்றான அழகுமலையில் கைவிடப்பட்ட சமணத்தலங்கள் பெரும் இடிபாடுகளுடன் காணப்பட்டன. யாரும் அங்கு செல்ல முடியாவண்ணம் பல்வேறு கட்டுக்கதைகளைப் பரப்பிவிட்டார்கள். மக்கள் யாரும் நெருங்க அஞ்சும் அந்த இடம்தான் சிலைகள் பாதுகாப்பாக வைக்க சரியான இடமானது.
இந்த நிலையில் திருவரங்கத்தில் போலியான ரங்கநாதர் சிலையை உருவாக்கி அவற்றுக்குப் பூசை செய்ய ஆரம்பித்தனர். திருவரங்கத்தில் முதலில் இருந்த ரங்கநாதர் சிலை அழகு மலையில் இருண்ட பாழடைந்த சமண குகைக்குள் இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் நாயக்கர்கள் வசம் மதுரை வந்த பிறகு திருவரங்கர் சிலையை அங்கேயே வைத்து கோவில் ஒன்றைக் கட்டுகின்றனர். இந்தக்கோவில்தான் அழகர் கோவில் என்று பெயர் சூட்டப்படுகிறது. எல்லா நாயக்கர்களும் தங்களது பங்கிற்கு அழகர் கோவிலைப் புதுப்பித்து விரிவுபடுத்தி வந்தனர்.
திருமலை நாயக்கர் காலத்தில் கோவிலைச் சுற்றி மதில்கள் கட்டப்பட்டன. கோபுரங்கள் மற்றும் மணிமண்டபம் அனைத்தும் கட்டப்பட்டன. அனைத்தையும் கல்வெட்டாக எழுதி வைத்திருக்கிறார்கள். நாயக்கர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சமணத்தலமாக இருந்த இடம் அழகர் கோவிலாக உருவானது பற்றி அறிந்தோம். நாயக்கமன்னர்கள் அழகர் கோவிலுக்கு பல ஏக்கர் நிலங்களைத் தானமாக வழங்கி கோவிலைப் புதுப்பித்தனர்.
வைணவச்சாமியாக மாறிய கருப்பண்ண சாமி
பெரியாறு அணை கட்டப்படாத காலகட்டங்களில் மேற்குத்தொடர்ச்சி மலையில் வெள்ளம் தோன்றி மதுரை நகரைக் காட்டாற்று வெள்ளம் அடிக்கடி தாக்கும். இதனால் மதுரையின் கரை தற்போதைய தல்லாகுளம் வரை இருந்தது. வைகை ஆற்றின் வெள்ளம் பாதிக்கும் இடம் வரை மக்களுக்கு அறிவிக்க அடையாளமாக எல்லையில் ஆங்காங்கே மண்டபங்களைக் கட்டி அங்கு காவல்தெய்வங்களை வைத்தனர். காரணம், இதற்கு அந்தப்பக்கம் குடியிருப்புகளைக் கட்டவேண்டாம் என்று அச்சுறுத்துவதற்காகவே. இப்படி கட்டப்பட்ட ஒன்றுதான் மதுரை கருப்பண்ண சாமி கோவில்.
6-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு சைவ வைணவ சண்டையிலும் மய்யமாக கருப்பண்ணசாமி கோவில் இருந்தது. அக்காலகட்டத்தில் வடபுறத்தோடு வைணவ மதத்தின் எல்லை முடிந்துவிடுகிறது என்பதற்கு அடையாளமாக கருப்பண்ணசாமி கோவில் மாற்றப்பட்டது. அதுவரையில் கேட்பாரற்றுக் கிடந்த கருப்பண்ண சாமிக்கு வைணவ நாமம் சாற்றப்பட்டது.
1. மதுரைப்பாண்டிய மன்னன் மலையத்துவசன் காஞ்சனமாலை (இப்படி ஒரு பெயரே பாண்டியமன்னர்கள் வரிசையில் இருந்தாக தெரியவில்லை) தங்களுக்கு குழந்தையில்லை என்று தவமாய் தவமிருந்து 100 அசுவமேத யாகம் செய்ததன் விளைவாய் 3 வயது சிறுமியாய் வந்த (அவர்களுக்கு பிறக்கவில்லை) மீனாட்சியைக் கண்டு மகிழ்வுற்றாலும் தனக்கு ஒரு மகன் இல்லையே என்று ஆண்டவனிடம் அழுதபோது இந்த மீனாட்சியே மதுரை மண்ணைச் சிறப்புடன் ஆட்சி செய்து உனக்கு ஆண்மகன் இல்லாத குறையைத் தீர்த்துவைப்பாள் என்று கூறியதாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. பிறகு அழகர் என்ற அண்ணன் எங்கிருந்து வந்தான்?
2. சைவ வைணவ ஒற்றுமை என்றால் தமிழர்கள் தொன்று தொட்டுக் கொண்டாடி வந்த மாசிமாதத்தில் வைக்காமல் அழகருடைய எதிர்சேவையை சித்திரையில் வைத்தது ஏன்? வெப்பமிகுந்த சித்திரைக்கு இவ்விழாவை மாற்றியதால் காய்ந்து கிடக்கும் வைகை ஆற்றில் மாநகராட்சி அல்லவா தண்ணீர் ஊற்றுகிறது!! அழகருக்கே மாநகராட்சி தான் தண்ணீர் தருகிறது என்றால் அழகர் பெரியவரா? மாநகராட்சி பெரியதா?
3. பழமையான கோவில் நாயக்கர்களின் காலத்தின் தான் விரிவுபடுத்தப்பட்டது, இதன்படிப் பார்த்தால் திருவிளையாடல் புராணங்களும் நாயக்கர் காலத்தில் தானே நடந்தேறி இருக்கவேண்டும்?
4. தல்லாகுளம் பெருமாள் கோவில் பற்றி கதை கட்டினார்கள், ஒருமுறை திருமலை நாயக்கர் குதிரையில் வந்தாராம், அவரது குதிரையின் முன்பு ஆஞ்சநேயர் சுயம்புவாகத் தோன்றினாராம் உடனே அவரது கனவில் திருப்பதி வெங்கடாசலபதி பிரசன்னமாகி கோவில் கட்டச்சொன்னாராம் உடனே திருமலை நாயக்கரும் கோவில் கட்டினாராம் நாயக்கருக்குப் பிரசன்னமானதால் அது பிரசன்னவெங்கடாசலபதி கோவில் எனப் பெயர்பெற்றதாம். மீனாட்சி ஏன் நாயக்கரின் கனவிலோ நினைவிலோ வந்து தனக்கு ஆற்றுக்கு இந்தப்பக்கம் மற்றொரு மீனாட்சி கோவில் கட்டச் சொல்லவில்லை?
5. வைப்பாட்டி வீட்டிற்குச் செல்வது, கொக்கு சுடுவது, யாருக்கும் தெரியாமல் மாறுவேடமணிந்து ஓடுவது, அழகரின் இந்தத் திருவிளையாடல்கள் மனிதர்கள் செய்வதை ஆண்டவன் செய்ததாகச் சொல்லி வைத்துள்ளார்கள்.
சான்றுகள் :
தினகரன் ஆன்மீக மலர் 10.11.2012.
தின இதழ் ஏப்ரல் 26.4.2014.
பார்ப்பனர் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும், (புலவர் கோ.இமயவரம்பன்).
சமணமும் தமிழும் (மயிலை சீனி. வேங்கடசாமி).
மதுரை அருங்காட்சியகத்தில் உள்ள நாயக்கர் கால கல்வெட்டுகள் (காந்தி மியூசியம்)
கூலியிலும் பேதம்
அழகர் எதிர்சேவை என்பது சில வைணவப் பார்ப்பனர்களும் பெருவாரியான பார்ப்பனரல்லாத இளைஞர்களும் சேர்ந்து நடத்தும் ஒரு விழாவாகும். சுமார் பத்து நாட்கள் அழகர் கோவிலில் இருந்து மதுரை வரை தூக்கிச்சென்று பிறகு மதுரையில் இருந்து அழகர் கோவில் வரை சுமந்து சென்று இறக்கி விட்டு வருவார்கள். தற்போது இழுவை ரதம் ஒன்று உள்ளது. ஆனால் 1960-வரை பல்லக்குதான். அதில் வைணவப் பார்ப்பனர்கள் அமர்ந்துகொள்வார்கள். அவர்களையும் தூக்கிச் சுமக்க வேண்டும். எதிர்சேவை நடைபெறும்போது 7 முதல் 10 பார்ப்பனர்கள் வரை உடனிருப்பார்கள். ஆனால் சுமார் 50க்கும் மேற்பட்ட பல்லக்கு தூக்கிகளாக பார்ப்பனர் அல்லாதார் உடன் வருவார்கள். தூக்கிச் சுமப்பவர்களுக்கு புண்ணியத்தைக் கொடுக்குமாம். இதன் காரணமாக தூக்குவதற்குப் போட்டா போட்டி.
அழகர் அழகுமலைக்குத் திரும்பியதும், பார்ப்பனர்களுக்கு பரிவட்டமும், பட்டாடைகளும் கிடைப்பதுடன் செல்வந்தர்கள் தரும் பாத்திரபண்டங்கள் மற்றும் அரிசி போன்றவை கிடைக்கும். தற்போது அனைவருக்கும் பணமாக வழங்கப்படுகிறது.
ஆனால் பார்ப்பனர் அல்லாதவர்களுக்குக் கிடைக்கும் பணம் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். அதாவது வழியில் கிடைத்த அனைத்துப் பணத்தையும் இரண்டு விரல்கள் மாத்திரம் செல்லும் ஒரு உண்டியல் போன்ற ஒன்றில் போட்டு விடுவார்கள். அழகரைச் சுமந்தவர்கள் விரல்களை விட்டு அதில் எவ்வளவு பணம் சிக்குகிறதோ அதை அவர்கள் வைத்துக்கொள்ள வேண்டும். அதிலும் ஒருவர் ஒருமுறை மட்டும்தான் இதனைச் செய்ய முடியும். இதில் அவர்களுக்கு பத்து ரூபாய் கிடைத்தாலும் நூறு ரூபாய் கிடைத்தாலும் அதுதான் அவர்களுக்கு அழகரைச் சுமந்து வந்ததற்கான கூலியாகும்.
– சோமு.சுரேஷ், மதுரை.