சிறுகதை

மே 01-15

வேலையா வெட்டியா?

வெள்ளிக்கிழமை என்றாலே ஒரு பரபரப்பு கூடிவிடுகிறது.  நாம சிறிது அசந்துவிட்டாலும் அக்கம் பக்கம் விழித்துக் கொள்ளுகிறது.  வழக்கமான வேலைகளுடன் வீட்டைக் கழுவி வாசலைக் கழுவி, கோலம் போட்டு, செம்மண் இட்டு, சாமி சாமான்களைச் சுத்தம் செய்து பேப்பர் மாற்றி, போட்டோக்களைத் துடைத்து…. எங்கே, நிதானமாய்த் துடைக்க முடிகிறது.  சின்ன ஒட்டடைக் குச்சியில் லேசாய் ஒரு விசிறல்… சாமிக்கும் வலிக்கக் கூடாது.  தூசியும் விழ வேண்டும்.

அம்மா…. பூ… பூக்காரன் வீசாமல் எறியும் பூப்பந்தை கேச் பிடித்து வந்து… கழுவி… அது எதற்கென்று புரியவில்லை.  சுத்தமா?  தீட்டா?  எப்படியும் வைத்துக் கொள்ளலாம்.  இதையெல்லாம் யார் யோசிக்கிறா?  துண்டாய் நறுக்கிய பூவை ஒவ்வொரு சாமி தலைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக வைத்து, நடுவில் நிற்கும் சிவன் குலங்காக்கும் பழனி மலை முருகன் கோவணாண்டிக்குத் தலையில் கொஞ்சமும் வைத்து விட்டு எழுந்தாள் ஆனந்தி.

என்னா செய்யறது.  கோடை காலத்தில் மல்லி, முல்லை விலை மலிவு.  நூறு 2 ரூபாக்கூட விக்குது.  கட்டினா சாமி படம் முழுக்க மாலைதான்.  இப்ப பனிக்காலம்.  இந்தக் கதம்பமே முழம் அஞ்சாறு ரூபா.  இது இப்ப மலிவு என்பதனால்தான் இதக்கூட சாமிக்கு வைக்கிறோம்.  மாதக்கணக்கை பூவுக்குக்கூட ஒதுக்க வேண்டியிருக்கு…

மஞ்சள் பொடியில் துளி நீர் விட்டு ஆண்டவன் முதல் ஆண்டி, ஆத்தா என ஒவ்வொருவருக்கும் ஒருதுளி பொட்டு.  அதுக்கு மேல் சின்னதா குங்குமப் பொட்டு… ம்… இப்பதான் அம்சமா இருக்கு.  நிழவைத் துடைத்து இரண்டு பக்கமும் மஞ்சள் தடவி, மூணுபுறமும் மஞ்சள் மேல் (அதான் ஒருபுறம் சுவருக்குள் ஒழிந்து கொள்கிறதே) ஒரு பட்டை குங்குமமும் அப்புறம் ஒரு பொட்டு, திரும்ப ஒரு பட்டை.  ஒரு பொட்டு கடைசியில் ஒரு பொட்டு ஒரு குங்குமம் ஆக அலுப்பேயில்லாமல் ஒரு வாசற்படி ஒன்பது; ஒன்பது பொட்டு வைத்துக் கொள்கிறது.

காலையில் அவசரமாய்த் துடைத்துப் பொட்டிட்டுப் பத்த வைத்த கேஸ் அடுப்பில் காய்ந்துவிட்ட தோசை மாவைச் சுரண்டி எடுத்து திரும்பத் துடைத்துவிட்டு… அப்பாடா… மணி பத்து.

எழுந்தது முதல் பிள்ளைங்க ஸ்கூல் போறவரை ஒரு பரபரப்பு. அவர் அலுவலகம் போறவரை மறு பரபரப்பு… அவசரம்… அவசரம்… எதையும் நிதானமாய்ச் செய்ய முடியல… இப்பவாவது ஆர அமரச் செய்து முடிக்கலாம்னு நினைச்சா… இந்த வயிறு முன்னமாதிரிப் பொறுத்துக்கறதில்லை.  நேரம் ஆக ஆக இரைச்சல் போட ஆரம்பிச்சிருது…

ஆனந்திக்கு வயிறு படுத்தும் பாட்டைச் சகிக்க நிதானம் தேவைப்பட்டது.  கழுவி வைத்த சாமி சாமான்களைத் துடைத்து அடுக்கில் அடுக்கி, விளக்கிற்குத் திரி சுருட்டிப் போட்டு கூட்டெண்ணெய் விட்டு, திரியை நனைத்துவிட்டு, மடமடவென பெட்டிக்கடைக்கு ஓடி ஒரு கட்டி கற்பூரமும், ஊதுபத்தி எட்டணா, வெற்றிலை ஒரு அசோகப் பாக்கு… அதிலேயே துளி சுண்ணாம்பு தடவி வந்து சாமி தட்டில் வைத்தாள்.

எப்படியாவது வாரா வாரம் தேங்காய், பழம் இருப்பில் வைத்து விடுகிறாள்.  திரும்ப ஒருமுறை வீட்டையெல்லாம் கூட்டிவிட்டு, விடியும் முன் குளித்து முடிந்த தலையை உதறி நுனியில் கோடாலி முடிச்சிப் போட்டுவிட்டு, கை, கால் கழுவி விட்டு வந்தாள்.  எல்லாம் சரியாக இருக்கிறதா?  என்று பார்த்தாள்.  அட, மஞ்சள், குங்குமம் தட்டில் வைக்க மறந்திட்டோமே.  எடுத்து வைத்தாள்.  பழனி ஆண்டவர் திருநீறு பாக்கெட்டிலிருந்து கொஞ்சமாய் பித்தளைத் தட்டில் கொட்டி வைத்தாள்.  இதைச் சின்னவன் பார்த்தால் அவ்வளவுதான்…

அரோகரா, முருகனுக்கு அரோகரா என்று கூவியபடி வாரி வாயில் போட்டுட்டுப் போயிடறான்.  அதில் ஒரு தனி ருசி.  அதுக்காகக் கொட்டி வைக்க முடியுமா?  அடுத்த முறை பழனிமலை போய்வரும் வரைக்கும் இது ஆண்டு வரணுமே…..

மணி பதினொன்று…. நாய்க்கு வேலை இல்லை.  நிக்க நேரமில்லையாம்… தனக்குள் சிரித்தாள். மதியம் சமையலுக்கு அரிசியை ஊற வைத்து, காய்களை அரிந்து, பருப்பைக் களைந்து குக்கரை அடுப்பில் வைத்து விட்டாள்.  இதோ!  இறக்கியும் விட்டாள்.  வயிற்றின் கதகதப்பு.  தொண்டை வரை தெரிந்தது.  ஒரு டம்ளர் பாலாவது குடிச்சிருக்கலாம்.  ம்…. பாலுக்குத் தோசமில்லை.  பால் என்றதும் நியாபகம் வந்து விட்டது.  இன்று கும்பிடறதே நாகாலம்மாவிற்கு, பாலை மறந்து விட்டோமே!  எடுத்து வைத்த பாலை சாமி முன் கொண்டு வந்து வைத்தாள்.  ஒரு சொம்பு நிறைய தண்ணீர், தேங்காய் உடைக்க குண்டாங்கல், நீர் விளாவ சின்ன செம்பு, கிளாசில் துளசித் தீர்த்தம்.

சரி, மணி என்னாச்சி… பதினொன்று அம்பத்தைஞ்சி.  ஆனந்தி ஓடிப்போய் வெளியே எட்டிப் பார்த்தாள்.  யாரும் தெரியவில்லை.  எல்லோரும் கும்பிடறாங்கோ போல் இருக்கு… மடமடவென உள்ளே வந்து விளக்கைக் கொளுத்தி ஊதுபத்தியைப் பத்தவைத்து, வாழைப்பழத்தில் சொருகிவிட்டு அதன் நுனியைக் கிள்ளி விட்டாள்.  வாய் ஓம் சக்தி, ஓம் சக்தியென ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தது.  கற்பூரத்தைக் கொளுத்தி, தேங்காயை அதற்குக் காட்டி கல்லில் தட்டினாள்.  அப்பாடா… சீராய் உடைந்து விட்டது.  அதை சாமியின் இருபுறமும் வைத்துவிட்டு, அவசரமாய் ஒரு கையில் மணியை ஆட்டியபடி தீபாராதனை காட்டினாள்.  இதோ!  மணி 12 ராகுகால பூஜை நடக்கிறது.  பக்கத்து வீடுகளிலும் மணி சத்தம் ஊதுபத்தி.  வாசனைக்கு முன்வருகிறது.  நீர் விளாவும் போதுதான் சாம்பிராணி போட நெருப்பு எடுத்து வைக்க மறந்து விட்டோமே என ஆனந்திக்கு நியாபகம் வந்தது.

இப்ப என்னா… தலையா முழுகிப் போச்சி?  இரண்டு கொட்டாங்குச்சியத் தட்டி மண்ணெண்ணெய் ஊற்றிப் பத்த வைத்தாள்.  கொட்டாங்குச்சி நெருப்பாகும் முன் சாம்பிராணி போட்டாள்.  நெருப்பு ஜூவாலையுடன் புகையையும் சாமி பிடித்துக் கொண்டது.

ஓம்சக்தித் தாயே!  காப்பாற்று என்று தீபம் அணையும் முன் விழுந்து கும்பிட்டுவிட்டு, திருநீற்றைக் கண்ணாடி பார்த்து வைத்துக் கொண்டாள்.  எடுத்து வைத்த நாலைந்து துண்டுப் பூவோடு மஞ்சள் குங்குமத் தூக்கைத் தூக்கிக் கொண்டுபோய் முதல் ஆளாய் பக்கத்தாருக்குக் கொடுத்துவிட்டு வந்தாள் ஆனந்தி.
அய்யோ!  நாம வச்சிக்க மறந்துட்டோமே.  துளிக்கீற்று குங்குமத்தை எடுத்துப் போய் திரும்ப கண்ணாடி முன் நின்று ஒட்டுப் பொட்டின் கீழ் துளி கீறலாய் வைத்துவிட்டு மிச்சத்தை நேர்வகிடில் தடவிக் கொண்டாள்.  இதைப் பார்க்கும் போதெல்லாம் அவள் அம்மா சொல்லுவாங்க… இந்தப் பழக்கம் எல்லாம் நம்மாளுடையது இல்லை.  நெற்றியில் அழகுக்காய் பொட்டு வைப்பதாய்ச் சொல்லுகிறோம்.  அதுக்குக் கீழே ஒரு கோடு வகிடில் கொஞ்சம், இதெல்லாம் வடக்கு வழக்கம்.  எதையெதைக் காப்பியடிக்கிறதுனே வகையில்லாமப் போச்சி… ஓ, இப்ப அதையெல்லாம் யோசிக்க எங்க நேரம்… வயிறு பறக்குது.

பிள்ளைகளுக்குச் சோறு எடுத்து வைக்கணும் என்ன… இதோ வந்துட்டாங்க… அட அவரும் வந்திட்டார்.

செருப்பைக் கழட்டும்போதே, சொம்பில் தண்ணி கொடுக்கணும்.  தட்டில் சோறு ஆறி இருக்கணும்.  அதுக்காகவே அவர் ரோட்டில் வரும்போதே சோத்தைப் போட்டு ஆற விடுவாள்.  தவறி சோறு சூடா இருந்திச்சி… அவ்வளவுதான்.  அவரும் சூடாகி விடுவார்…. ஆனந்திக்கு ஆறினதே பிடிக்காது.  அதனால்தானோ என்னவோ, அவர் விட்ட தட்டில் எவ்வளவு சோறு இருந்தாலும் சாப்பிட மாட்டாள்.  அந்தப் பழக்கமே இல்லை.

அவர் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பும்போது…மெல்ல பயத்துடன் கரண்ட் பில் கட்ட வேண்டும் என்ற தகவலைச் சொன்னாள்.

அவர் திரும்பிப் பார்த்தார்.  இந்தப் பார்வைக்குத்தான் ஆனந்தி பயந்து சாகிறாள்.

ஏன்?  நீ போய் கட்டிட்டு வரக்கூடாதோ?  நேத்து பட்டனைத் தைக்கலையான்னு கேட்டா… கோதுமை சுத்தம் செஞ்சேன், மிளகாய்த் தூள் அரச்சிட்டு வந்தேனு சொன்னே… விட்டுத் தொலை.  முந்தா நாள் என்னடானா… ஒரு மூட்டைத் துணி துவைச்சேனு சாக்குச் சொன்னே… இன்னைக்கு என்னாத்தக் கிழிச்சே…

ஆனந்தி வாயைத் திறக்காமல்…. சாமி அறைக்குச் சென்று திருநீறுத் தட்டை எடுத்து வந்தாள்.

ம்…. என்றவர், ஆனந்தி நீட்டிய தட்டிலிருந்து திருநீற்றை எடுத்துப் பட்டையாய்ப் பூசிக் கொண்டார்.  உன்னையெல்லாம் வீட்டுல வச்சி சோறு போடறேன் பாரு.  அந்தத் திமிரு… ஏதுடா மனுசன் ஓடா உழைச்சிட்டு வர்றாரே. நாம இந்த மேல் வேலையச் செய்யலாம்னு தோணுறது இல்லையே?

_ அவர் பேசப் பேச ஆனந்தி மெல்ல உள்ளே போகத் திரும்பினாள்.

பாவம், நீ என்னா… செய்வே, வேளா வேளைக்கு நல்லாக் கொட்டிக்கிட்டுத் தூங்க வேண்டியது.  ஊளசதையைப் போட்டுட்டு நடக்க மாட்டாம… உயிர வாங்குறது.

என்னா… முழிக்கிறே!  அந்தக் கார்டையும் பணத்தையும் கொடுத்துத் தொலை.  கவுண்ட்டர் மூடுறதுக்குள்ளே போறேன்.  நீ இறுக்கமா கதவைச் சாத்திட்டு நிம்மதியாப் படுத்துத் தூங்கு….

கார்டைக் கையில் வாங்கியவர், எருமை என்று முனங்கிவிட்டு, கதவை அறைந்து சாத்திவிட்டுச் சென்றார்.

ஓம் சக்தித் தாயே!  இதையெல்லாம் தாங்கிக்கற பலத்தைக் கொடும்மா என்றபடி சாப்பிடத் தட்டைப் போட்டாள்.

காலையிலிருந்து சுரந்து, சுரந்து ஒட்டிக்கொண்ட குடல்.  சோற்றைக் கண்டதும் சுண்டி இழுத்து வலித்தது.  ஈரங்காய்ந்த தொண்டையும் விழுங்க மறுத்தது.  கொஞ்சம் முன்னால் கேட்ட வார்த்தை ரணம் உடம்பெல்லாம் பற்றி எரிந்தது.  தட்டில் கையைக் கழுவிவிட்டு எழுந்தவள்…. மறுநாள் காலை டிபனுக்கு மாவரைக்க உரலைக் கழுவினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *