குறுங்கதை : சுயமரியாதை

மே 16-31 - 2014

– க.அருள்மொழி

காஞ்சனாவின் வீட்டிலிருந்து கையைத் துடைத்தபடி வெளியே வந்த சரசுவை ஏய் சரசு இங்க கொஞ்சம் வாடி என்று கூப்பிட்டாள் பார்வதி. என்னக்கா என்று கேட்டபடியே பார்வதியின் அருகில் போனாள் சரசு.

என்னடி, நானும் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீயும் முடியாதுன்னே சொல்லிக்கிட்டிருக்கே? இவ்வளவு தூரம் காஞ்சனா வீட்டு வரைக்கும் வர்றே… அப்படியே என் வீட்டிலும் வேலை செய்து கொடுத்திட்டுப் போன்னா முடியாதுன்னு சொல்றியே? அவள் மட்டும் என்ன அதிகமான சம்பளமா கொடுத்திடுறா? என்றாள் பார்வதி.

இல்லைக்கா என்னால முடியாது என்று சொல்லிவிட்டு விருட்டெனக் கிளம்பிவிட்டாள் சரசு.

பார்வதிக்கு முகத்தில் அடித்ததுபோல் இருந்தது. அப்படி என்னதான் சொக்குப் பொடி போடுகிறாள் இந்தக் காஞ்சனா? நாலைந்து வருஷமாக காஞ்சனா வீட்டில் தொடர்ந்து வேலை செய்கிறாள் சரசு. பார்வதிக்கோ இரண்டு மாதம் கூட தொடர்ந்தாற்போல் யாரும் வேலை செய்வதில்லை.

காஞ்சனா வீட்டில் வேலை செய்துவிட்டு எங்கோ தூரத்தில் இருக்கும் ஒரு வீட்டிற்கு வேலைக்குப் போகும் சரசு, பார்வதியின் வீட்டுக்குப் போகமாட்டேன்கிறாள் என்பது புதிராகவே இருந்தது.

அடுத்தநாள் சரசு, காஞ்சனாவின் வீட்டுக்குள் போனதும் பார்வதியும் போனாள்.

பார்வதியை வரவேற்று உட்காரச் சொன்ன காஞ்சனா, சரசுவிற்கு வேலைகளைச் சொன்னாள்.  சரசு, இங்க பாருங்க, இதையெல்லாம் சுத்தம் செய்து விட்டு, இதையெல்லாம் வெளியே போட்டுடுங்க.

அந்தப் பாத்திரங்களையெல்லாம் அங்கே அடுக்கிடுங்க. காபி போட்டு உங்களுக்கு எடுத்துக்கிட்டு எங்களுக்கும் கொடுங்க என்றதும், சரிங்கம்மா சரிங்கம்மா என்று சொல்லிவிட்டு, சொன்னதையெல்லாம் வேகமாகச் செய்துவிட்டு வெளியேறினாள்.

பார்வதிக்குப் புரிந்துவிட்டது. காஞ்சனா போட்டது மரியாதைச் சொக்குப் பொடி என்று. சுயமரியாதை என்பது, தான் எதிர்பார்ப்பதையே மற்றவர்களுக்கும் தருவது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *