அய்.அய்.டி. சிக்கலுக்கு இடஒதுக்கீடு ஒன்றே தீர்வு! – போராட்ட மாணவர் தலைவருடன் ஒரு நேர்காணல்

ஜூன் 16-30

மத்தியில் மதவாத பி.ஜே.பி. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, மதசார்பற்ற தன்மையை குழித்தோண்டிப் புதைக்கும் வகையில் தங்களது மறைமுகக் கொள்கைகளை (பிவீபீபீமீஸீ கிரீமீஸீபீணீ) மக்களிடம் திணிக்க முற்படுவதும், எல்லா தளங்களிலும் எதிர்ப்பு ஏற்பட்டவுடன் தந்திரமாக அதை பின்வாங்கிக் கொள்வதும், பிரதமர் மோடி அவர்கள் இவற்றைக் கண்டும் காணாமல் இருப்பதும் கடந்த ஓராண்டாகவே நடந்து வருகிற ஒன்று. பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்ட நிலை இது.

ஆனால், இன்னமும் சமத்துவம், சமூக நீதி, மதச்சார்பற்ற தன்மை ஆகியவைகளுக்குக் கட்டுப்படாமல், இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக இருக்கக்கூடிய அமைப்புகளும் உண்டு. அதில் இந்தியாவில் இருக்கக்கூடிய அய்.அய்.டி.களும் ஒன்று. குறிப்பாக சென்னை அய்.அய்.டி.யில் இந்த பாகுபாடுகளை களையும்வண்ணம் வசந்தா கந்தசாமி போன்ற தகுதியுள்ளவர்கள் உள்ளிருந்தும், வெளியிலிருந்து பல முற்போக்கு சக்திகளும் போராடி வந்திருந்தாலும், அண்மையில் அங்கு படிக்கும் மாணவர்கள் மூலம் அவர்கள் தொடங்கி நடத்திவரும் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் மூலம் அய்.அய்.டி.யும் இந்துத்துவாக்களும் அம்பலப்பட்டுப் போயிருக்கின்றன.

மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அ.இ.அ.தி.மு.க., பி.ஜே.பி. தவிர மற்ற எல்லா அரசியல், சமூக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்து வருகின்ற சூழலில், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் – அமைப்பைச் சேர்ந்த ரமேஷ் – என்ற மாணவரிடம் உண்மை – இதழுக்காக உரையாடினோம்.

இதோ நமது கேள்விகளும், அவரின் பதில்களும்.

கேள்வி: அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் 2014ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதற்கான காரணம் என்ன?

பதில்: இதற்கான காரணம் அய்.அய்.டி. நிர்வாகமும், அய்.அய்.டிக்குள் இருக்கக்கூடிய அந்தப் பார்ப்பனீயம் சார்ந்த புற சூழ்நிலைகளும் தான். அந்தப் பின்புலத்திலிருந்துதான் ஆறேழுபேர் சேர்ந்து இப்படி செய்யலாம் என்று யோசித்துச் செய்தோம். இதனுடைய வரலாறு என்று சொல்லும்போது, பொதுவாகவே அய்.அய்.டி.யின் உள்ளே இருக்கக்கூடியவர்களின் சமூகப் பொருளாதாரக் கண்ணோட்டம் எல்லாம் எப்படி இருக்கிறது என்றால், இந்துத்துவாவுக்கு ஆதரவானதாகவும், கார்ப்பரேட்டுக்கு ஆதரவானதாகவும்தான் இருக்கிறது.

கேள்வி: அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் இப்போது பளிச்சென்று தெரிகிறது. அந்த வளாகத்தினுள்ளே வேறு என்னென்ன அமைப்புகள் இருக்கின்றன?
பதில்: நிறைய அமைப்புகள் இருக்கின்றன. விவேகானந்தா வாசகர் வட்டம். இவர்களின் வேலை என்னவென்றால், வாராவாரம் பகவத் கீதை நிகழ்ச்சி நடக்கும். அரே ராமா அரே கிருஷ்ணா என்கிற குழு ஒன்று உள்ளது. இவர்கள் பகவத் கீதை புத்தகத்தை விற்பார்கள். அதுமட்டுமில்லாமல், ஆசிரமங்கள், கோயில்கள், ஓய்வு நேரங்களில் வீடுவீடாகச் சென்று பகவத் கீதை குறித்து பேசுவது என்று எல்லாமே இருக்கும். வாராவாரம் ஒரு குறிப்பிட்ட கிழமைகளில்  பஜனையை தொடர்ச்சியாக நடத்துவார்கள். அய்.அய்.டி. வளாகத்துக்கு உள்ளே ஒரு கோயில் இருக்கிறது. அவர்களுக்கு நிரந்தரமாகவே இடம் உண்டு. விடுதிகளிலும் பஜனை நடத்துவார்கள். அடுத்து வந்தே மாதரம் என்கிற பெயரில் ஒன்றை இப்போதுதான் ஆரம்பித்துள்ளார்கள். இப்போதுள்ள அரசுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள். அவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் இணைந்து இலவச முகாம்களை நடத்துவார்கள். வியாசர் வாசகர் வட்டம், அங்குதன் சங்குதன் என்கிற (இந்துத்துவா ஆதரவு அமைப்புதான்) அமைப்பு இருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி, அய்.அய்.டி. நிர்வாகத்தினரை இலவச முகாம்களுக்கு அழைத்துக் கொண்டு வருவார்கள். மதம் சம்மந்தமான கூட்டம் எல்லாம்கூட நடக்கும்.  பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்களை  இக்கூட்டங்கள் முன்னெடுப்பதாகவே இருக்கும். எப்படியும் வாரத்தில் இரண்டு மூன்று முறை நடக்கும்.

கேள்வி: இந்துத்துவா அமைப்புகள் தவிர வேறு அமைப்புகள் குறித்து…?

பதில்: இதுவரை சொன்னவை இந்துத்துவா பக்கம் உள்ளவை. இன்னொரு பக்கத்தில் நாங்கள் (அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம்) இருக்கிறோம். அடுத்தாற்போல் பிருந்தா…. என்று ஒரு சிறிய குழு உள்ளது. பிறகு கொஸ்ட் எனும் அமைப்பு இருக்கிறது.  இவர்கள் எல்லாம் பொதுவாக சமகாலப் பிரச்சினைகளைப் பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். இதைத்தாண்டி பல அமைப்புகள் உள்ளன.  இதுமட்டுமன்றி இசுலாமிய வாசகர் வட்டம் உண்டு. இவைகளில் ஆதிக்கம் செலுத்துபவையாக இருப்பவை குறிப்பாக   இந்துத்துவா  அமைப்புகள்தான் அதிகம். அதற்கு அடுத்தாற்போல் கார்ப்பரேட்டுகளின் கூட்டங்கள் நடத்தப்படுவது அதிகம். சோதிட அறிவியல்  என்கிற விஷயம் நிறைய நடக்கும்.

கேள்வி: இதுபோன்ற இந்துத்துவா அமைப்புகளுக்கு, நீங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களா?

பதில்: கூட்டங்களுக்கு சென்று கேள்விகள் கேட்டதெல்லாம் உண்டு. ஆடிட்டர் குருமூர்த்தி அடிக்கடி அய்.அய்.டி.க்கு பேசுவதற்காக வருவார். அவர் கூட்டத்துக்கு சென்று கேள்விகள் கேட்பதுண்டு. ரொம்ப மோசமாகப் போனால், நிறுவனத்தில் புகார்கள் அளிப்போம். அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் மாணவர்களிடம் விவாதங்கள் செய்வது, கேள்விகள் கேட்பது என்று நிறைய நடந்து இருக்கிறது. குறிப்பாக அரவிந்தன் நீலகண்டன் வந்து பேசியிருக்கிறார். அவருக்காகவே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்கள். அய்.அய்.டி நிறுவனத்தின் சார்பில்கூட அவர் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. இதுதான் அய்.அய்.டியின் நிலை. நிறுவனம் முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது.

கேள்வி: மற்ற அமைப்புகளுக்கும், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்துக்கும் நிர்வாகம் காட்டிவரும் பாரபட்சம் என்னென்ன?

பதில்: எங்களுடைய பிரச்சினையின் மய்யமே அதுதான். விவேகானந்தா வாசகர் வட்டம் எங்கள் (அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம்) அமைப்பைப் போன்றே சிறு குழுவாக இருந்தது. அவர்களுக்காக கூட்டம் நடத்துவதற்கென்று தனியே அரங்கு உண்டு. அது நிரந்தரமாக உள்ளது. அவர்கள் எப்போதும் அதில் கூட்டம் நடத்திக் கொள்ளலாம். விடுதியில் அவர்களுக்கென்று தனியான நூலகம் இருக்கிறது. அய்.அய்.டியின் இணைய வலைத்தளத்தில்  அவர்களுக்கென்று விவேகானந்தா வாசகர் வட்டம் என்கிற இணைப்பு இருக்கும். இதேபோன்று நிறைய வசதிகள் அவர்களுக்கு உண்டு. அய்.அய்.டி. நிறுவனப் பணியாளர்கள் நிறைய இருக்கிறார்கள். நிறுவனத்தில் எங்கு பார்த்தாலும் மேல் ஜாதிக்காரர்கள்தான் இருப்பார்கள். அண்மைய புள்ளிவிவரம்கூட அதுதான். 87 விழுக்காட்டினர் (திஷீக்ஷீஷ்ணீக்ஷீபீ சிணீமீ) அவர்கள்தான் இருக்கிறார்கள். மாணவர்களும் கிட்டதட்ட அதே நிலையில்தான் இருக்கிறார்கள். ஆகவே, இயல்பாகவே அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்துகொள்கிறார்கள்.

கேள்வி: எந்தெந்த வகுப்பினர் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கூறமுடியுமா?
பதில்: அண்மையில் நான்கு வாரத்துக்கு முன்பாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, ஆசிரியர்களில் 87 விழுக்காட்டினர் பார்ப்பனர்கள், மேல்ஜாதிக்காரர்கள். இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 11 விழுக்காட்டினர். 2 விழுக்காட்டினர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள்.

இங்கு முதலில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதே கிடையாது. மாணவர்களில் முதுகலைப்பிரிவு மாணவர்களைத் தேர்வு செய்யும்போது, இடஒதுக்கீட்டைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும். ஆனால், அதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்றால், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவருக்கும் கட்ஆப் மதிப்பெண் கொடுப்பார்கள். அந்த மதிப்பெண்ணுக்குக் கீழே இருந்தால் யாரையும் எடுக்க மாட்டார்கள். அதனாலேயே தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் குறைவாகவே இருப்பார்கள். அப்படி ஒரு தந்திரத்தை கடைபிடிப்பார்கள்.

ஆய்வு மாணவர்கள் (எம்எஸ், பிஎச்டி) தேர்வு செய்வதில் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றுவதே கிடையாது. அதில் மேல்ஜாதிக்காரர்கள்தான் கிட்டதட்ட 64 விழுக்காட்டினர் உள்ளனர். அதில் இட ஒதுக்கீடே கொஞ்சம்கூட கிடையாது.

கேள்வி: இடஒதுக்கீடு, மண்டல் அறிக்கை எல்லாம் இருக்கும் போது, தொடர்ந்து இட ஒதுக்கீடு இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணத்தை சொல்கிறார்கள்?

பதில்: இருக்கக்கூடிய பிரச்சினையே இதுதான். பார்ப்பனர்கள் என்ன விஷயத்தை முன்வைக்கிறார்கள் என்றால், இட ஒதுக்கீட்டைக் கொடுத்தோம் என்றால், இதனுடைய தகுதி (மெரிட்) போய்விடும் என்பதுதான் அவர்கள் வைக்கின்ற வாதம். மெரிட் போய்விடும் என்று அவர்கள் கூறுவது பொய்யானது. தங்களுடைய ஜாதியில் இருக்கக்கூடியவர்கள், அதாவது மேல்ஜாதியினர் மட்டுமே வேலைக்கு வரவேண்டும் என்பதற்காக உருவாக்கிய செயல்திட்டம் அது. அய்.அய்.டி. நிறுவனத்தில் இடஒதுக்கீட்டை ஒத்துக்கொள்வதில்லை என்று செனட் விதியை ஏற்படுத்தி உள்ளது. அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மனிதவளத்துறை அமைச்சராக அர்ஜுன்சிங்  இருந்தபோது,  இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது அய்.அய்.டியில் உள்ள மாணவர்கள் குறிப்பாக சென்னை அய்.அய்.டியில் அதற்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். (சீஷீலீ யீஷீக்ஷீ ணிஹீணீறீவீஹ்) யூத் ஃபார் ஈகுவாலிட்டி என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி, இங்குள்ள மாணவர்கள் எல்லோரையும் திரட்டி, (அதில் ஆசிரியர்களும் ஆதரவு) அதன்மூலம் அய்.அய்.டிக்கு உள்ளே 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கொண்டுவரக்கூடாது. அர்ஜுன்சிங் கொண்டுவந்தது தப்பு என்று அதற்கு எதிராக கடுமையாகவேப் போராடி இருக்கிறார்கள். தங்களுடைய ஜாதியினர், இங்கிருக்கக்கூடிய எல்லோருமே பார்ப்பனர்களில் மத்தியத்தர வர்க்கத்துக்கு மேல் இருப்பவர்கள்தான் வேலையிலேயேகூட இருப்பார்கள். இதற்குக் காரணம் ஒன்று பார்ப்பனீயம், அடுத்தது தரகு முதலாளி. இந்த இரண்டுபிரிவினரின் கலவையாக அய்அய்டி நிறுவனம் இருக்கிறது. மிக எளிதாக சம காலத்தில் வரக்கூடிய மாற்றங்களை தங்களுக்கு ஏற்ப  மாற்றிக்கொள்வார்கள். குறிப்பாக இவர்கள் அகில இந்திய அளவில் தொடர்பு வைத்திருப்பவர்கள். கூடுதலாக தங்களுடைய ஜாதியை நிலைநாட்டுவதற்காக, அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் போராடுவார்கள் என்பார்கள்.

கேள்வி: இதற்கு சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறதா?

பதில்: இருக்கிறது. இதுகுறித்து முழுவிவரமும் பேரா.வசந்தா கந்தசாமியிடம் இருக்கிறது. அவருக்கு முழுமையாகத் தெரியும். எனக்குத் தெரிந்தவரை வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இவர்கள் எல்லாம் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதாக இல்லை. இவ்வளவு பெரிய போராட்டம் வெளியே நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் எதையுமே மதிக்காமல், உள்ளே வேறு வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாரையும் மதிக்க மாட்டார்கள். அதுதான் பார்ப்பனிய புத்தி. கேள்வி: உங்களது பிரச்சாரம் அந்த மாணவர்கள் மத்தியில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறதா?

பதில்: அய்.அய்.டி. என்பது இந்துத்துவா ஆதரவு மற்றும் கார்ப்பரேட் ஆதரவு சூழல்கள் உள்ள பகுதி. என்றாலும், இதுகுறித்த விவாதங்கள் உருவாகி உள்ளது. இதுபற்றி உள்ளேயும் விவாதங்கள் உருவாகியிருக்கிறது. அய்.அய்.டி.க்கு வெளியே குறிப்பாக பார்த்தீர்களானால்,  பொதுவாகவே இந்த இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக வெளிப்படையாகப் போராடுவதற்கு மாணவர்களுக்கு பெரிய ஒரு தளம் உருவாகி உள்ளது. சரியாக சொல்வதானால், எல்லாக் கல்லூரிகளிலும் அம்பேத்கர் பெரியார் பெயரில் அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். எல்லா அய்.அய்.டி. நிறுவனங்கள் உள்பட. பெரிய பெரிய மத்திய அரசின் நிறுவனங்களில்  அம்பேத்கர், பெரியார் வாசகர் அமைப்பு உருவாகி வருகிறது. மாணவர்கள் மத்தியில், மற்ற செய்திகள் படிப்பவர்கள் மத்தியிலே, மதவாதக் கருத்துகளுக்கு எதிரான ஓர் அலை உருவாகி உள்ளது. இந்துத்துவவாதிகள் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப்போய் இருக்கிறார்கள்.  அதில் குறிப்பாக அம்பேத்கர் இந்தியா முழுமைக்கும் தெரிந்த ஒரு தலைவராக இருக்கிறார். இப்போது அம்பேத்கர் போலவே இந்தியா முழுமைக்கும் அனைத்து பகுதிகளுக்கும் பெரியார் பெயர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் அய்.அய்.டி நிறுவனத்துக்குள் அனைத்து நிலைகளிலும் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தாலே மாபெரும் மாற்றம் இயல்பாகவே ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

இதற்கிடையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியிடம் செய்தியாளர்கள் அய்.அய்.டி._பற்றி கேள்வி எழுப்பினர். அப்போது அவர், அது அய்யர், அய்யங்கார் டெக்னாலஜி. ஆகவே, அது அவ்வளவு எளிதாக அசைந்து கொடுக்காது. ஆனாலும் மக்கள் அதை அசைப்பது உறுதி _ என்று நறுக்குத் தெறித்தார்போல பதில் கூறினார். ரமேஷின் எதிர்பார்ப்பும் மாணவர்களின் போராட்டம் மற்றும் மக்களின் ஆதரவு மூலம் விரைவில் நிறைவேறும் என்பது உறுதி.

– உடுமலை வடிவேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *