– மதிமன்னன்
வயது ஆக ஆக, புத்தகங்களைக் கைக்கு எட்டிய தூரத்தில் பிடித்துக் கொண்டால்தான் படிக்க முடியும் என்கிற குறைபாடு (Presbyopia) ஏற்படுகிறது. கிட்டத்தில் இருக்கும் பொருள்களை அப்படிப் பார்த்தால்தான் மிகத் தெளிவாகக் காணமுடியும். ஒவ்வொரு கண்ணுக்கும் ஒவ்வொரு கண்ணாடி என்கிற வகையில் கிட்டப்பார்வைக்கு ஒன்றும், தூரப் பார்வைக்கு ஒன்றும் பயன்படுத்திய நிலை. இதை மாற்றி ஒரே கண்கண்ணாடியில் கிட்டப் பார்வைக்குப் பாதிக் கண்ணாடியும் தூரப் பார்வைக்குப் பாதிக் கண்ணாடியுமாக இரு கண்களுக்குமாக ஒரே கண் கண்ணாடியை வடிவமைத்தவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த அறிவியலாளரும் பகுத்தறிவாளருமான பெஞ்சமின் ஃபிராங்க்ளின் அவர்களாவார். (படிக்க: உலகப் பகுத்தறிவாளர்கள் எனும் நூல்) Bifosals எனப்படும் கண்ணாடி இரண்டு துண்டுகளால் ஆனது. இந்தப் பெயரைச் சூட்டியவர் ஜான் அய்சக் ஹாகின்ஸ் என்பவர். இவரே மூன்று துண்டுகளால் ஆன Trifocals எனும் கண்ணாடியையும் வடிவமைத்தார். நடுத்தரமான தூரத்தில் உள்ளவற்றைப் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டதால் இது பிரபலம் அடையவில்லை.
1950க்குப் பிறகு Varifocals எனப்படும் ஆடிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கட்டுரையாளர்கூட அம்மாதிரி மூக்குக் கண்ணாடியைத்தான் அணிந்திருக்கிறார்.
கண்ணாடி அணிவதை விரும்பாதோர் உள்ளனர். பார்வைக் குறைபாடுகளை அறுவை மருத்துவம் மூலம் சரி செய்து கொண்டு பார்க்கின்றனர். 1950இல் ஸ்பெயின் நாட்டவரான ஜோஸ் பாராகுவர் என்பவர் விழித்திரையைச் சீர்செய்யும் மருத்துவ முறையைக் கண்டார். ரஷிய கண் மருத்துவர் ஸ்வையடோஸ்லாவ் ஃபயோடொராவ் என்பவர் பாதிக்கப்பட்ட கண் காயத்திற்கு மருத்துவம் பார்த்தபோது பார்வைக் குறைபாடு முற்றிலும் சீர் செய்யப்பட்டதைக் கண்டார். 1973இல் இம்மருத்துவ முறையை உலகுக்கு அறிவித்தார். இதற்கான காப்புரிமையையும் பெற்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ரங்கசாமி சீனுவாசன் எனும் இந்திய இயற்பியலாளர் அல்ட்ராவயலட் லேசர் மூலம் பாதிப்பே இல்லாதவகையில் குறைபாட்டைச் சீராக்கலாம் என்பதைக் கண்டறிந்தார். இவ்வாறான கண்டுபிடிப்புகளையெல்லாம் கொண்டு, 1990இல் இத்தாலி நாட்டு லூகியோ புராட்டோ, மற்றும் கிரேக்க நாட்டு லோயான்னிஸ் பல்லிகாரிஸ் என்பவரும் சேர்ந்து கண்டுபிடித்துள்ள மருத்துவ லாசிக் (Lasik) அறுவை முறை இப்போது கடைப்பிடிக்கப்படுகிறது. காலவிரயமின்றி கண்பார்வை சீராக்கப்படுகிறது.
நம் ஊரில் சானேஸ்திரம் எனக் கூறப்படும் காட்டராக்ட் கோளாறு (Cataract)என்பதைக் கண்ணில் உள்ள லென்சின்மேல் புகைபடர்ந்த மாதிரியான ஒருவகைப் பொருள் உருவாகிப் பார்வையை மழுங்கச் செய்யும் கோளாறு. இதனைச் சீர்செய்திட, பழுதான லென்சை கரைத்திட (எமல்சிபிகேஷன்) முறையைப் பயன்படுத்தி உடைந்த நுண்ணிய துகள்களை அப்புறப்படுத்தினார்கள். தற்போது லேசர் மூலம் காட்டராக்டை அப்புறப்படுத்தலாம் எனக் கண்டுபிடித்தவர் பாட்ரிகா பாத் எனும் பெண் மருத்துவர். 1988இல் இதற்கான காப்புரிமையை அவர் பெற்றுள்ளார். அந்த முறையில் காட்டராக்டை அப்புறப்படுத்த முடியாது என்று தொடக்கத்தில் கூறப்பட்டது. அவர் மனந்தளராமல் முயன்று வெற்றி பெற்றுள்ளார்.
பிறப்பிலேயே பார்வைக்குறை, பார்வை தரும் உறுப்புகளே இல்லாத நிலை போன்ற பார்வை அற்றவர்களுக்குப் புதிய செயற்கை கண் பொருத்திடும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இல்லாத கடவுளும் கபோதிக் கடவுளாக இருப்பதால், வைக்காமல் போன உறுப்பை வைத்திட மனிதன் முயன்று வருகிறான். விரைவில் வெற்றி பெறுவான். அதுவரை, இடைக்கால ஏற்பாடாக, Bionic கண் பொருத்திடும் பணி நடைபெறுகிறது. இத்தகைய பயோனிக் கண்கள் அர்கஸ் II எனப்படுகின்றன. இவை 2007ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டன. கண் கண்ணாடிகளில் பொருத்தப்படும் நுண்ணிய கேமரா, உருவத்தையும் அசைவையும் அணிந்திருப்பவரின் மூளைக்குத் தெரியப்படுத்துகின்றன. 1950இல் பயன்படுத்தப்பட்ட பயோனிக் கண்கள், கிரியோலிட் எனப்படும் ஒருவகை அக்ரிலிக்கால் செய்யப்பட்ட வளைவான தாள் பழுதுபட்ட கண்ணுக்குமேல் ஒட்டப்படும். இடையில் பார்வையை இழந்தவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது. தொடக்கத்தில் இருந்தே இவ்வுறுப்பு இல்லாத குறை உள்ளவர்களும் பார்வை பெறும் காலம் விரைந்து வருகிறது. மனித மூளையின் ஆற்றலை அந்த அளவிற்கு ஆக்கப்பூர்வமாக அறிவியலாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பார்வையைப் பெறவே முடியாதவர்கள் எப்படிப் படிப்பது? வேலன்டின் ஹாய் என்பவர் பாரிஸ் நகரில் பள்ளி ஒன்றைத் தொடங்கி கல்வி கற்பித்தார். அரிச்சுவடி மரப்பலகையில் செய்யப்பட்டது. இதனைத் தடவிப் பார்த்து வடிவத்தைப் புரிந்து மாணவர்கள் படித்தனர். அப்படி அந்தப் பள்ளியில் படித்த சிறுவன் லூயி பிரெய்லி தனது 10 வயதில் பார்வையை இழந்தவன்.
1809ஆம் ஆண்டில் பிறந்த இச்சிறுவன் தனது 15ஆம் வயதில் பிரெய்லி எழுத்து முறையை உருவாக்கினார். தனது 12ஆம் வயதில் பள்ளிக்கு வந்த ராணுவ காப்டன் ஒருவர், கோகெள், புள்ளிகள் போன்ற குறியீடுகளால் உச்சரிக்க பாட்டுப்பாடப் பயிற்றுவித்ததைக் கொண்டு எழுத்து முறையை வடிவமைக்க உந்துதலைப் பெற்றார். உருவாக்கினார். புள்ளிகளைக் கொண்டு படிக்கவும் எழுதவும் இசையைக் கற்கவும் வழிமுறைகளைக் கூறும் அரிய நூலை எழுதி 1829இல் வெளியிட்டார். பலரும் படிப்பதற்கான வாய்ப்புக் கதவைத் திறந்துவைத்தார்.
கண்பார்வைக் குறைவாக இருந்தால் அதனைச் சரி செய்யக் கண்கண்ணாடிகள் அணிகிறார்கள். மூக்குத் தண்டின்மேல் அமர்ந்து இருப்பதால் அதனை மூக்குக் கண்ணாடி எனத் தமிழில் கூறுகிறோம். அதற்கும் மூக்குக்கும் தொடர்பில்லை.
கண்ணாடி வெளியே தெரியும்படி அணிவதால் யாரும் கூச்சப்படுவதில்லை. வெளியே தெரியாமல் கண்ணில் பொருத்திப் பார்வைக் குறைபாட்டைச் சரி செய்யும் கான்டாக்ட் லென்சுகளை அணிவதில் பெரும்பான்மையோர் ஆர்வம் காட்டுவது இல்லை, தோற்றத்தில் அக்கறை எடுத்துக் கொள்பவர்கள் கண்ணாடியை விரும்புவது இல்லை, பெரும்பாலும் மேட்டுக்குடிப் பெண்கள் நடிகைகள்.
ஆனால் கேட்கும் திறன் குறைவாக இருப்பவர்கள் அப்படி அல்ல. காது கேட்கும் கருவியை மறைத்துப் பொருத்திக் கொள்ளவே விரும்புகிறார்கள். ஆனால் காது கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டபோது அது மறைத்துவைக்க முடியாததாக இருந்தது. விலங்குகளின் காது மடல்கள் போலத் தோற்றம் அளித்த இக்கருவிகள் 1598இல் கண்டுபிடிக்கப்பட்டபோது மரத்தினால் செய்யப்பட்டன. விலங்குகளுக்குக் காது மிகவும் துல்லியமாகக் கேட்கும் என்பதால்அவற்றின் காதைப்போல் வடிவமைத்தார்களாம்! 1700இல் வடிவமைக்கப்பட்டவை ஒலி அலைகளை உள்வாங்கி, செவிக் குழாயின் உள்ளே செலுத்துகிற வகையில் பல்வேறு உருவங்களில் செய்யப்பட்டனவாம்.
போர்த்துகீசிய மன்னர் கோவா என்பவர் காது கேளாதவர். அவருக்காக 1819இல் வடிவமைக்கப்பட்ட காதுக்கருவி அவரது தலையில் மறைவாகப் பொருத்தப்படும் வகையில் இருந்தது. 1890இல் மின்சக்தியைச் சேகரித்து வைக்கும் பாட்டரிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றைக் கொண்டு காதுக் கருவிகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளை அறிவியலாளர்கள் செய்தனர். 1898இல் அகுலேலியன் (Akoulalion) கருவியை டாக்டர் மில்லர் ரீஸ் ஹட்சிசன் என்பார் கண்டுபிடித்தார். அதற்கான காப்புரிமையைப் பெற்றார். இதனை மேசைமேல் வைத்துதான் பயன்படுத்த முடியும். மிகவும் விலை கூடுதலானது. இருந்தாலும் 1902இல் இம்மாதிரி கருவியை எடுத்துக்கொண்டு லண்டன் போனார். கன்சார்ட் அலெக்ஸாண்ட்ரா எனும் இங்கிலாந்து அரசிக்குச் செவித்திறன் குறைந்துகொண்டு வந்ததால் அவருக்கு ஒரு கருவியைப் பரிசளித்தார். பின்னர் 1903இல் கையடக்கமான அகுலேலியனை அவரே உருவாக்கினார்.
அதன் பெயர் அகுஸ்டிகான் (Acousticon) என்று வைத்தார். அரசிக்கும் பிரச்சினை தீர்ந்தது. மக்களுக்கும் காது கேட்கும் கருவி கிடைத்தது டாக்டர் ஹட்சிசனால்!
(தொடரும்)