உற்சாக சுற்றுலாத் தொடர் – 10

ஜூன் 16-30

இயற்கையின் இன்ப ஊற்று

– மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன்

விமானத்தில் ஏறிய எங்கட்கு மகிழ்ச்சியான அதிர்ச்சி !

சேலை கட்டிய மாந்தரின் புன்னகை! பணிப்பெண்கள் சேலையுடனும் ஆண்கள் தலைப்பாகையுடனும் வரவேற்றனர். வெள்ளையர்கள் இந்திய உடையிலே!

ஆப்ரிக்க டான்சானியா

அக்டோபர் 23 ம்தேதி ஆக்ராவிலிருந்து சுமார் 8 மணி நேரம் விமானப்பயணம் செய்து டான்சானியாவின் கிலிமஞ்சாரோ விமானநிலையம் வந்தடைந்தோம். விமானநிலையத்தில் சிற்றுண்டி உண்டபின் சிறிய விமானங்களில் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து செரங்கெட்டி (Serangeti National Park) வந்தடைந்தோம்.

செரங்கெட்டி உலகிலேயே மிகவும் நன்றாக இயற்கை சூழ்நிலையில் மிருகங்கள் உலாவும் பெரிய பூங்காக்களில் முக்கியமானது.இந்த விமானப்பயணத்தின் போது ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பரப்பளவு உள்ள பசுமையான திறந்த வெளியையும் , சிறு குன்றுகளையும் ‘மாசா’ என்ற ஆப்பிரிக்க இனத்தினரின் கோழி கூண்டுகள் போன்று வட்டமாக அமைக்கப்பட்டிருந்த குடிசைகள் நிறைந்த குக்கிராமங்களையும் பார்த்தோம். இந்த விமானப் பயணத்திற்குப் பிறகு 4 பேர்கள் அமரும் ஊர்தியில் (Jeep) ஏறி நடு காட்டில் அமைக்கப்பட்ட உல்லாச விடுதிக்கு சென்றோம்.  ஆப்பிரிக்க விலங்குகள் இவ்விடுதியைச் சுற்றி சுதந்திரமாக அலைகின்ற சூழ்நிலை.

மாசா இனத்து இளைஞர்கள் 24 மணி நேரம் இவ்விடுதியைச் சுற்றி காவல் காக்கிறார்கள். இவர்கள் பார்ப்பதற்கு கருமை நிறத்துடன் ஒல்லியாக உயரமாக உள்ளனர். எளிமையான தோல் செருப்பு அணிந்து கொண்டு, வலிமையான நெடிய குச்சியை ஆயுதமாக வைத்துக்கொண்டு, சிவப்பு வேட்டி அணிந்து கம்பீரமாக இருந்தார்கள். உதவி தேவை என்றால் புன்முறுவலுடன் செய்தார்கள்.

விடுதி அறை மிக அழகாக ஆப்பிரிக்க கலைப்பொருட்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. கொசு வலை படுக்கைகளில் பொருத்தப்பட்டிருந்தது.

உணவுக்கூடத்தில் ஒரு மகிழ்ச்சி கலந்த ஆச்சரியம் காத்திருந்தது. அங்கு ஒரு இந்திய சமையல் நிபுணர் மேலதிகாரியாக ( Supervisor) இருந்தார்.

சிறு வயதாக இருந்தாலும் திறமை மிக்கவராக இருந்தார். எங்களுக்கு இரண்டு நாட்கள் இனிமையான சாப்பாடு. விடுதியில் சிறிது நேரம் இளைப்பாறி விட்டு ஊர்தியில் விலங்குகளையும் இயற்கை எழிலையும் காணச் சென்றோம். பைனாக்குலர்  (ஙிவீஸீஷீநீறீணீக்ஷீ) எனப்படும் நல்ல தொலைநோக்குக் கண்ணாடி கொடுத்தார்கள். இந்த மாதிரி  வாய்ப்பு எங்களுக்கு பெரியார் காமராசர் பெற்றோர் மற்றும் எங்கள் கல்விக்கு உதவி செய்த உற்றோர்களையும் நன்றியுடன் நினைவு படுத்தியது.

இந்த அகண்ட பசுமை வெளியில் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக ‘வில்லபி’ என்ற விலங்குகள் ஓடிக் கொண்டிருந்தன. ஊர்திக்கு முன்பு பல தடவை எதிர்கொண்டோம். இவ்விலங்குகளின் முகம் மாடுபோலவும் உடல் குதிரை போலவும் இருந்தன. இயற்கையின் அதிசயம் தான். இந்த வில்லபி தான் அங்குள்ள பல மிருகங்களுக்கு அடிப்படை உணவு! நீர் யானைகள் நீரோடைகளில் உல்லாசமாக விளையாடிக் கொண்டும் , சண்டை போட்டுக் கொண்டும் இருந்தன. சில நீரை விட்டு வெளியே வந்து மரங்களில் உராய்ந்து கொண்டிருந்தன.

எனக்கு மிகவும் பிடித்த விலங்கு ஒட்டகச்சிவிங்கி. அவை கூட்டமாக குழந்தைகளுடன் மனிதர்களை கண்டு பயமில்லாமல் எங்களை கடந்து சென்று கொண்டிருந்தன.

எங்கள் பயண உதவியாளர் ஒட்டகச்சிவிங்கி பற்றி எதிர்பாராத செய்தி சொன்னார். அது என்னவெனில், குழந்தை பிறந்தவுடன் தாயை விட தந்தை தான் குழந்தையை கவனித்துக் கொள்ளுமாம். தாய் உணவு உண்ண வேண்டுமே!

மேலும், காட்டெருமை கூட்டங்கள் எங்களை தாக்க வருவது போல் பார்த்தன. அவை பக்கத்தில் யாரும் போனால் உடனே கொம்பை ஆட்டிக் கொண்டு முட்ட வரும் என்று எங்களுடன் வந்த கைடு (tour guide) சொன்னார்.வரிக்குதிரைகள் மந்தை மந்தையாக யாரைப்பற்றியும் கவலைப்படாமல் அலைந்து கொண்டிருந்தன.

யானைகள் கூட்டம், மின்னல் வேகத்தில் தாவி ஓடும் கெசல் (Gazelle) என்ற பெயருள்ள மான்கள், நூற்றுக்கணக்கான குரங்குகள் , நீளப் பற்கள் கொண்ட காட்டுப்பன்றிகள் பார்த்தோம். மரத்தில் ஏறும் சிருத்தை, சிங்கம் இவற்றைப் பார்த்து ஆரவாரம். என்ன தான் படங்களில் பாரத்திருந்தாலும் நேரே பார்ப்பது போல் இருக்காதல்லவா?.

இரண்டாம் நாள் மதிய நேரத்தில், Jeep  ல் போகும் போது ஒரு சிங்கக்கும்பல் மரத்தடியில் எங்கள் ஊர்திக்கு 10 அடி தூரத்தில் தூங்கி கொண்டிருந்ததைப் பார்த்தோம். இவ்வளவு பக்கத்தில் 20காட்டு ராசாக்களையும் , ராணிகளையும் பார்ப்பதற்கு கிடைத்த வாய்ப்பை நினைத்து மலைத்து போனேன். கழுதைப்புலி என்று அழைக்கப்படும் ஓநாய் குடும்பத்தை சேர்ந்த விலங்குகள் சிரிப்பது போல் சத்தம் போட்டுக் கொண்டு ஓடுவதை பார்த்தோம். பல வகை பறவைகள் கண்களுக்கு விருந்தளித்தன. மதிய உணவிற்கு நடுக்காட்டிலே நாற்காலி மேசை விரிப்புடன் அங்கே கொண்டு வரப்பட்ட கரி அடுப்புகளில் ( பார்பிக்கு) சுடச்சுடத் தயாரித்த வித விதமான உணவுகளும், பழங்களும் கொண்ட உல்லாச விருந்து ! பணம் நடுக்காட்டிலும் உணவுமழை பெய்ய வைத்தது! எங்களுக்கு ஒரே ஒரு குறை காண்டாமிருகத்தை காணமுடியாதது தான்.

பெரிய அய்ந்து என்பவை யானை, சிங்கம், சிறுத்தை, எருமை, காண்டாமிருகம்

ஏன் என்று கேட்டதற்கு அவை ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதிக்கு குடி போய் விட்டதாகத் சொன்னார்கள். இனி மேல் 5 மாதங்கள் கழித்து மழை கால பருவத்தில் திரும்பி வருமாம்.

இரண்டாம் நாள் மாசா இளைஞர்கள் குச்சிகளை வைத்து கொண்டு குதித்து குதித்து நடனம் ஆடினார்கள். பிறகு உலகப்புகழ் பெற்ற தொல் பொருள் ஆராய்ச்சியாளர் மகள் லூயிஸ் லீக்கி உலக முதல் மனிதனின் எலும்புக்கூட்டை எவ்வாறு அவர் தந்தை கண்டு பிடித்தார் என்பது பற்றி ஆராய்ச்சி சாதனங்களுடன் சொற்பொழிவு ஆற்றினார்.ஏதோ நாங்களே நேரிலேசென்று அந்த முதல் மனிதனின் எலும்புக்கூட்டைக கண்டுபிடித்த மாதிரி பெருமைப் பட்டோம்.

எங்களுடன் வந்த சில பயணிகள் நகோரோங்கோரோ பள்ளத்தாக்கு  (Ngorongoro Crater) என்ற உலகத்திலேயே பெரிய எரிமலை பள்ளத்தாக்கைப் பார்க்கச் சென்றனர். அது பத்து மைல்கள் அகலம் உள்ளது. அந்த பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கில் ஆப்பிரிக்க மிருகங்கள் திரிகின்றனவாம். அந்த பயணிகள் மாசாய் கிராமங்களையும் பார்த்து வந்தனர்.

கனவா,நனவா என்று எண்ணித் தெளிய நேரங்கொடுக்காமல் அடுத்து ஒரு பழைய நாகரீகக் கோட்டையை அடைந்தோம்.
தயாராகுங்கள் சந்திப்போம் .

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *