– கல்வெட்டான்
தோழர் சந்தானத்தின் சலூனில் அப்போதுதான் சற்று கூட்டம் குறைந்தது. பெரும்பாலும் மொட்டை போட வந்தவர்களின் கூட்டம் தான். மொத்த வாடிக்கையாளர்களும் கிளம்பியபின் சற்று ஓய்வாக அரசியல் பேச்சைத் தொடங்கி வைத்தார் தோழர் மகேந்திரன்.
என்ன தோழர், உங்க சலூன் கடையை தடை பண்ணப் போற தா கேள்விப்பட்டேனே, உண்மையா? என தோழர் சந்தானத்திடம் கேட்க,
அட நான் என்ன இந்தக் கடையில சலூன் தானே நடத்துறேன், இல்ல, வர்றவங்களுக்கு ஷேவிங்கோட பாடி மஸாஜும் பண்ணி விடறேன்னு சொல்லிட்டு எதாவது சைடு பிஸினெஸ் பண்றேனா? என்ன தோழர் குண்டைத் தூக்கிப் போடுறீங்க?
பின்ன எப்ப பார்த்தாலும் அரசியல் பேசுறதும், அதுவும் குறிப்பா ஆளும் மத்திய அரசுக்கு எதிரா பேசுறதும், இந்துத்வாவுக்கு எதிரா பேசுறதும், அப்பப்ப, தமிழக அரசை குறை சொல்றதும்னு இங்க நடக்குறதெல்லாம் தெரிஞ்சால் தடை பண்ணாமல் என்ன பண்ணுவாங்களாம்? என விளக்கம் தர,
என்ன நீங்களே போட்டுக் கொடுப்பீங்க போல! அப்படியெல்லாம் தடை பண்ணணும்னு நினைத்தால் மொத்த சலூன்கடையையும் தான் தடை பண்ணணும் தோழர்! சலூன் கடைல முடி வெட்டுறாங்களோ இல்லையோ, பல அரசியல் முடிவுகளை எடுக்குறது சலூன் கடையில! இன்னும் சொல்லப்போனால் மொத்த சலூன் கடைக்காரங்களும் சொல்லிவச்சு அரசியல் பேசினால் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்த முடியும்!
அடேங்கப்பா! இது போதாதா! சென்னை ஐஐடில பண்ணின மாதிரி, முதல் கடையா
உங்க கடைக்குத்தான் அரசியல் பேசக்கூடாதுன்னு தடை வரப் போகுது!
அதுசரி, இந்த சொத்துக்குவிப்பு வழக்குல உயர்நீதிமன்றத்தோட தீர்ப்ப பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க தோழர்?
நான் என்ன நினைக்கிறது, என்னோட நண்பன் ஒருத்தன் அதிமுக அனுதாபி. அவனுக்கே அந்த தீர்ப்பைக் கேட்டதும் அதிர்ச்சி தான். கீழ்க்கோர்ட்டுல அவ்ளோ தூரம் வாதாடி குற்றவாளின்னு தீர்ப்பு வந்த ஒரு வழக்குல இப்படி சட்டுபுட்டுன்னு அவசரகதியில் யாருமே குற்றம் பண்ணலன்னு வந்தத அவனால ஏத்துக்கவே முடியல தோழர்! எதாவது குறைந்தபட்ச தண்டனையாவது கொடுத்திருக்க வேண்டாமான்னு அப்பாவியா கேட்கிறான்.
இதுல என்னன்னா, நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் பாய்ந்த கதையா சசிகலா, சுதாகரன், இளவரசின்னு அத்தனை பேருமே குற்றம் பண்ணலன்னு விடுதலை பண்ணினாங்க பாருங்க! இதையும் யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.
அதுசரி! இனியாவது தமிழ்நாட்டுல மாமூல் வாழ்க்கை திரும்பினால் சரி!
என்னத்த மாமூல் வாழ்க்கை! உள்ள வச்சப்பவும் ஊரெல்லாம் வழிய மறிச்சு பேனர் வச்சு நீதியை கொன்னுட்டாங்களேன்னு கதறுனாங்க! அடுத்து, நீதி வென்றதுன்னு சொல்லி ஊரெல்லாம் பேனர் வச்சாங்க! அடுத்து உச்ச நீதி மன்றத்துல கர்நாடகா மேல்முறையீடு செய்யப்போறதால திரும்பவும், மொட்டை போட்டவங்க எல்லாரும் தாடியும் முடியும் வளர்க்கப் போறாங்க!
அதுசரி, உங்க கஷ்டம், மக்கள் தாடி வளர்க்குறதுல இருக்கு போல! அதுக்காவது விடுதலையாகணும்னு நினைப்பீங்க போல தோழர்!
சமீபத்துல முகநூல், ட்விட்டர், வாட்ஸ் அப்னு எல்லாத்திலும் கேலிக்கூத்தானது ரெண்டு விசயம் தான் தோழர். ஒன்னு அந்த நீதிபதியோட தீர்ப்பு. இன்னொன்னு பத்தாம்புத் தீர்ப்பு. பத்தாம்புத் தீர்ப்புனா அதாங்க பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட்.
ரிசல்டை ஒட்டி சில தனியார் பள்ளிகளால் வெளியிடப்பட்ட, பதினொன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை விளம்பரத்தில் தங்கள் பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் மாநில அளவில் ரேங்கிங் பெற்ற மாணவர்கள்னு வரிசையா புகைப்படங்களா போட்டு இருந்தாங்க. அந்த விளம்பரங்களில் ஒரு ஓரத்தில், பத்தாம் வகுப்பில் மாநில அளவில் ரேங்கிங் பெற்ற மாணவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமைன்னும் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் சலுகைன்னும் போட்டிருந்தாங்க. இது அப்பட்டமான ஏமாற்று வேலையா தெரியலையா தோழர்?
சரியாச் சொன்னீங்க தோழர். அப்படிப்பட்ட பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும் தோழர்..
எல்லாமே விளம்பரமயமான உலகத்தில் விளம்பரத்தை நம்பி ஏமாறும் மக்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரிச்சுக்கிட்டேதான் தோழர் இருக்குது.
ஆமா தோழர். சமீபத்துல வத்திராயிருப்பு அருகிலுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலையில காட்டாற்று வெள்ளத்துல எட்டு பேருக்கு மேல உயிரிழந்ததிலும்கூட ஆழமா பார்த்தோமானால் இந்த விளம்பரங்களோட விபரீதத்தை புரிஞ்சுக்கலாம்
அப்படியா தோழர்
ஆமா தோழர். அந்த மலைப்பகுதியில் பாதுகாப்பு வசதி குறைவுதான். மலைக்கு மேல ஏழு கிலோமீட்டர்கள் வரை நடந்துபோகணும். ஆனால் பாதை அவ்ளோ நல்லா இருக்காது. மலையேற்றத்தில் ஆர்வமுள்ளவர்களுக்குத்தான் அது சாகசப்பயணம் மாதிரி இருக்கும். அதுபோக அங்க மழைக்காலங்களில் அருவி, சுனை, நீர்ச்சறுக்குன்னு பொழுதுபோக்கலாம். அப்படிப்பட்ட மலையில சித்தர்கள் வாழ்றாங்கன்னு ஏகப்பட்ட விளம்பரங்கள், கட்டுக்கதைகள். இதை பரப்பி விடுறதுல டிராவல்ஸ் கம்பெனிகளோட வேலை இருக்கு. அதுமட்டுமில்லாமல் அந்த மலையடிவாரத்துல நிறைய திடீர் ஆசிரமங்கள், சாமியார்கள் முளைச்சு வந்துட்டாங்க! அவங்களோட பிழைப்பிற்காகவும் இந்த மாதிரி கட்டுக்கதைகளைக் கிளப்பிவிட்டு சதுரகிரி மலைக்கு ஏகப்பட்ட விளம்பரம்!
கொடுமைங்க தோழர்!
இந்த விளம்பரத்தை நம்பி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள்னு அத்தனைபேரையும் கூட்டிக்கிட்டு கூட்டம்கூட்டமா தினசரிமலையேறத் தொடங்கிட்டாங்க. இதுல மதுபானங்களைக் குடிச்சு கூத்தடிக்கிற கூட்டமும் அதிகம். ஆக, அந்த மலையேற்றத்தோட விபரீதம் தெரியாமல் போயி காட்டாற்று வெள்ளத்தில் மாட்டிக்கிட்டவங்க தான் சமீபத்தில் உயிரிழந்த மக்கள்.
போறபோக்கைப் பார்த்தால் இந்த சதுரகிரி மலையும் கேதாரிநாத் மாதிரி பேரழிவு பூமியாகிடும் போலயே!
கண்டிப்பா தோழர். இயற்கையை நாம எந்த அளவுக்கு சீண்டாமல் இருக்கிறோமோ அந்த அளவுக்குதான் நமக்கு பாதுகாப்பு. பின்ன, சிவனா இருந்தாலும் சரி, சுந்தரமகாலிங்கமா இருந்தாலும் சரி உருண்டு புரண்டு அவங்க சிலைக்கே பாதுகாப்பில்லாதபோது இந்த சித்தர்கள் கட்டுக்கதையை நம்பினால் அதோ கதிதான்!
சுந்தரமகாலிங்கம் சாமிய விடுங்க, நம்ம சுப்பிரமணியம்சாமி தாலியெடுத்துக் கொடுத்த கூத்தைப் பார்த்தீங்களா தோழர்?!
ஆமா ஆமா. அவரை சந்திரலேகா தடுக்காமலிருந்து அவரும் தாலி கட்டியிருந்தால் தாலி பற்றிய போலித்தன்மையை உடைச்சிருக்கலாம் தோழர். தாலி கட்டுனவன் யாராயிருந்தாலும் அவன்கூட தான் வாழணும்கற சென்டிமெண்ட் தப்புன்னு சுப்பிரமணியன்சாமியே பிரச்சாரம் பண்ண வேண்டியிருந்திருக்கும்! ஜஸ்ட் மிஸ்!
விளம்பரம்னு சொன்னதும் தான் இன்னொண்ணு நினைவுக்கு வருது தோழர்… மேகி நூடுல்ஸை இந்தியா முழுக்க தடை பண்ணிட்டு வர்றாங்க பார்த்திங்களா? நல்ல விசயம் தான தோழர்?
உலகமயமாக்கல் வந்தபிறகு எத்தனையோ கேடு விளைவிக்கும் எத்தனையோ பொருட்கள் நம்மூருக்கு வந்திடுச்சு… மேகின்னு மட்டுமில்லாமல் இன்னும் பல பொருட்களையும் தடை பண்ணியாகணும். இதுல என்னன்னா அந்த தயாரிப்பு கம்பெனிக்காரன் மேல நடவடிக்கை எடுக்குறதை பெரிதுபடுத்தாமல் விளம்பரத்தில் நடித்தவர்கள் மீது நடவடிக்கைன்னு சொல்லி தேவையில்லாத அனுதாபத்தைத்தான் ஏற்படுத்துறாங்க!
சரியா சொன்னீங்க! நாம தான் சிகரெட்டை தடுக்க மாட்டோம்.. ஆனால் சிகரெட்டு குடிக்கிறது தப்புன்னு ஸ்டிக்கர் விளம்பரம் மட்டும் பண்ணுவோமாச்சே!
அதே தான்! அடுத்ததா, மேகி, பிங்கோ, லேஸ், ஓரியோ பிஸ்கட்டுன்னு அம்புட்டு மேலயும் உடல் நலத்திற்கு தீங்குன்னு மட்டும் லேபிள் ஒட்டிட்டு விற்பனைக்கு கொண்டு வந்தாலும் கொண்டு வந்திடுவாங்க!
எல்லாஞ்சரி, அப்படியே சைக்கிள்கேப்புல, உப்புமாவிலும் உயிருக்கு கேடு விளைவிக்கும் கெமிக்கல் இருக்குன்னு சொல்லி தடை கொண்டு வந்தால் நல்லாயிருக்கும்! ஆ ஊன்னா உப்புமாவா போட்டு வீட்டுல கொல்லுறாங்க தோழர்!
ஹஹஹஹ! சிரிப்பொலியால் சலூன் கடையே அதிர்கிறது!